குடி மராமத்து முறையைச் செயல்படுத்துக - முனைவர் பழ. கோமதிநாயகம் - பெ. பாலசுப்ரமணிய அச்சிடுக
புதன்கிழமை, 16 ஜனவரி 2019 13:03

மனித நாகரிகத்தின் வரலாற்றில் வேளாண்மையும், பாசன வளர்ச்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழக மக்களின் முக்கியமான தொழிலாக வேளாண்மை விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் பண்டைக் காலத்திலிருந்தே நெல், கரும்பு, வாழை, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறிகள், கடுகு, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரிட்டனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

தமிழ்நாட்டின் பாசன வளர்ச்சி வரலாற்றில்  வேளாண்மை உற்பத்தியும், வேளாண்மை முன்னேற்றமும் உள்ளடங்கி இருப்பதை நாம் காணலாம். சங்க இலக்கியங்களிலே கண்மாய் அமைத்தல், கால்வாய்கள் வெட்டுதல், காவிரி கழிமுகப் பகுதியின் பாசன அமைப்புகள் ஆகிய வேலைகள் நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
பாசன ஆதாரங்களை உருவாக்கினால் மட்டும் போதாது. அவை சரிவர பராமரிக்கப்பட்டால்தான் பாசன ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்ற உண்மையை நமது முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர்.
காடுவெட்டி
பாசன ஆதாரங்களை உருவாக்கும் வேலை பல காலங்களாக நடந்து வந்து இருக்கின்றன. ஒரு தனி மனிதனுடைய முயற்சி கிணற்றுப் பாசனத்தை ஏற்படுத்தப் போதும். அவ்வாறே அந்தக் கிணற்றைப் பராமரித்து அவருடைய வயல்களுக்கும் பாசனம் செய்ய முடியும். ஒரு குளத்தை எடுத்துக்கொண்டால் குளத்தை உருவாக்க ஒரு சமுதாய ஒத்துழைப்புத் தேவை. குளத்து நீரைப் பங்கீடு செய்வதற்கும் அந்தச் சமுதாயக் கூட்டமைப்புத் தேவை. அதே போல் ஒரு பெரிய நதியை எடுத்துக் கொண்டோமேயானால் அந்த ஆற்று நீரைப் பங்கீடு செய்யவும், பல குளங்களுக்கு முறைப்படி வாய்க்கால்கள் மூலமாகக் கொண்டு செல்லவும், பல கிராமங்கள் மூலமாக அந்த நீரை வழங்க செய்யவும் ஒரு பெரிய சமுதாய அமைப்புத் தேவை. பண்டைய தமிழக அரசர்கள் பாசன ஆதாரங்களை உருவாக்கியதோடு மட்டுமின்றி, அவற்றைப் பராமரிக்கத் தகுந்த அமைப்புகளையும் அதற்கான செலவினத்திற்காக வருவாயையும் ஏற்படுத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. பல்லவ அரசு காலத்திலிருந்து அதாவது, கி.பி. 600 ஆண்டுகளில் இதற்கான கல்வெட்டுக்களையும் நாம் காணலாம். அந்தக் காலத்தில் உருவான பாசனக் கால்வாய்களும், குளங்களும் இப்போதும் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டின் வட பகுதிகளில் பாசன வளர்ச்சிக்காகப் பல்லவப் பேரரசு சிறந்த  முயற்சி எடுத்துக் கொண்டது. தமிழ்நாட்டின் மத்திய பகுதிகளில் சோழர்கள் பாசன அமைப்புகளைச் செய்தனர். இதேபோல் தமிழ்நாட்டின் தென்பகுதியில் பாண்டிய மன்னர்கள்தான் பாசனக் கட்டுமானங்களைப் பெரியதாக அமைத்தனர். சோழர்களுக்கும், பல்லவர்களுக்கும் "காடுவெட்டி” என்பதாக ஒரு பட்டம் இருந்தது.  இதன்மூலம் அவர்கள் அதிகக் காடுகளைவெட்டி விளை நிலங்களை உருவாக்கினர் என்று அறியப்படுகிறது. பாசனக் குளங்களை உருவாக்கும்போதே பல்லவர்களும்,  சோழர்களும் அந்தப் பாசன ஆதாரங்களைப் பராமரிப்பதற்காக தகுந்த ஏற்பாடுகள் செய்தனர். முற்றிலுமாக இந்தப் பாசனப் பராமரிப்பு வேலையைப் பாசனத்தைப் பயன்படுத்தும்  வேளாண் பெருமக்களே செய்வதற்கான  ஏற்பாடுகள் நடந்தன.
கிராம அவையும் - பாசனக் குழுவும்
பல்லவ அரசில் கிராமங்களில் சிறிய ஆட்சிப் பகுதிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமமும் தனித்தனி அவையை இயக்கின. இந்த அவையில் கிராமத்தில் உள்ள எல்லா ஆண்களும் பெரியவர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களே இந்தக் கிராம நடவடிக்கைகளுக்கு  முழுப் பொறுப்பு வகித்தனர். அரசு தரப்பில் இருந்து எந்தவித உத்தரவு இல்லாமலும், அரசை எதிர்பாராமலும் இவைகள் தன்னிச்சையாகவே இயங்கின.
பல்வேறு வேலைகளைக் கவனிக்க இந்தக் கிராம அவைகள் தனித்தனிக் குழுக்களை அமைத்தன. அவைகளில் ஒரு குழுதான் "ஏரி வாரியம்" என்று கூறப்பட்டது. வாரியம் என்னும் வார்த்தை வாரம் அல்லது பங்கு என்ற வார்த்தைகளிலிருந்து மருவி  வந்தது. ஆகையால் வாரியம் என்றால் பங்குதாரர்களின் குழு என்று பொருள்படும். இந்த "ஏரி வாரியம்" வாய்க்கால்கள், குளங்கள், கால்வாய்கள், மதகுகள் ஆகியவற்றைப் பராமரித்து வந்தன. வாய்க்கால்களை வெட்டி மண்ணை அப்புறப்படுத்தி சீர்செய்யும் வேலைகளையும், குளங்களிலிருந்து வண்டலை அகற்றும் வேலைகளையும் உடனுக்குடன் இந்த வாரியங்கள் செய்து வந்தன. சில சமயங்களில் பெரிய குளங்களில் ஓடங்களைப் பயன்படுத்தி வண்டல் மண்ணை அகற்றி குளத்தின் கரைகளில் போடப்பட்டு வந்ததையும் குறிப்பேடுகளில் காண முடிகின்றது. நிலங்களில் சாகுபடி செய்த சில வேளாண் கிழார்கள் அந்த நிலங்களுக்கு உரிய பராமரிப்புத் தொகையை கிராம அவைக்குச் செலுத்தத் தவறியதால் அந்த நிலங்களை ஏரி வாரியமே எடுத்துக்கொண்டு சாகுபடி செய்து அந்தப் பயனைக் கொண்டு வயிர மேக தடாகம் என்ற குளத்தை சீர் செய்ததை ஒரு பல்லவர் காலக் கல்வெட்டு விரிவாகக் கூறுகிறது. இந்தக் குளம் உத்திரமேரூரில் உள்ளது. இதன்மூலம் கிராம அவைக்கு உள்ள அதிகாரமும், கிராம அவைகள் எவ்வாறு வேலை செய்தன என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகிறது.
சுதந்திரத்திற்கு முன்
இந்தக் கிராம அவைகள் ஏரி வாரியங்கள் தமிழ் மன்னர்கள் காலத்தில் இயங்கி வந்தபோதிலும் காலம் செல்லச் செல்ல அந்தத் தமிழ் அரசுகள் அழிந்தபோது அவைகளும் அழிந்துவிட்டன. மொகலாயர்களும், பின்னர் ஆங்கிலேயர்களும் நாட்டை ஆண்டபோது மக்களின் வாழ்க்கையில் பல மாறுதல்கள் தென்பட்டன. ஆங்கிலேயர்கள் பாசன வேலைகளை மூன்று பிரிவாகப் பிரித்து நடத்தி வந்தனர். பெரிய பாசன வேலைகளான காவிரிப் படுகை வளர்ச்சி, பெரியாறு அணைத் திட்டம் போன்றவைகள் மன்னரின் நிதியிலிருந்து நடத்தப்பட்டன. சிறிய ஆறுகளிலுள்ள அணைக்கட்டுகள், குளங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க மாகாண நிதியிலிருந்து செலவிடப்பட்டது. ஆனால், கிராமங்களிலுள்ள சிறிய குளங்கள், கால்வாய்கள் பராமரித்தல் போன்றவற்றிற்கு எந்தவிதமான நிதிகளும் ஒதுக்கப்படவில்லை. பெரிய குளங்கள் பொதுப் பணித்துறை மூலமாகவும், சிறிய குளங்கள் வருவாய்த்துறை மூலமாகவும் பராமரிக்கப்பட்டன. கிராம  அவைகளும், ஏரி வாரியங்களும் மறைந்த போதிலும் அவைகள் செய்த பராமரிப்பு வேலைகளை வேளாண் பெருமக்களே செய்யவேண்டும் என்பது ஒரு மரபாக ஆகிவிட்டது. இந்த வேலைகள் குடிமராமத்து என்னும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தது. இக்குடிமராமத்து வேலைகளைச் செய்ய விவசாயிகள் ஒவ்வொருவரும் தம் பங்கிற்கான உழைப்பை அளிக்க வேண்டும். அவ்வாறு உடல் உழைப்பைத் தர இயலாதவர்கள்,  அதற்குண்டான கூலித் தொகை போல் வரி ஒன்றை பணமாகத் தரவேண்டும். இவ்வாறு கிடைத்த பணம், மற்றவர்கள் உழைப்பு இவற்றின் மூலம் குடிமராமத்து வேலைகளை கிராம மக்களே கவனித்து வந்தனர். ஆனால், பின்னர், காலக்கட்டத்தில் இந்த வேலைகளும் மறைந்து போய்விட்டன. இதனை மறுபடியும் செயற்படுத்த ஒரு புதிய சட்டம் ஆங்கில அரசால் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு "சென்னை கட்டாய வேலையாள்கள் சட்டம் 1858" என்று பெயர். குடிமராமத்து வேலைகளைச் செய்வதற்கு ஆள்களைத்  தரவும்.,  அவசர காலத் திட்டங்களில் தேவையான ஆள்களைத் திரட்டவும் இந்தச் சட்டம் உதவியது. இந்தச் சட்டத்தின் 6ஆவது பிரிவு கீழ்க்கண்டவாறு கூறுகிறது. ஏதாவது ஒரு பாசன வேலை கிராம சமுதாயத்தின் கூட்டு வேலையாகச் செய்ய வேண்டியிருந்தால், வேலையாள்களைக் கொடுத்துதவ எந்த நபராவது மறுத்தால், தாசில்தாரின் கீழ் இயங்கும் கிராமத் தலைமை அலுவலர் அவருக்குத் தண்டனை விதிப்பார். அந்த நபர் கொடுக்கவேண்டிய வேலையாள்கள் ஊதியத்தின் இரு மடங்குத் தொகையைத் தண்டமாகச் செலுத்த வேண்டும். ஆகையால், அந்தக் காலகட்டத்தில் குடிமராமத்து வேலை கட்டாயத்தின் மூலம் செய்யப்பட நேர்ந்தது என்று தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இந்தக் கட்டாய வேலையாள்கள் சட்டம் காலப்போக்கில் செயல்படுத்தப்படவில்லை. இருந்த போதிலும், கிராமங்களில் தங்களுடைய பாசனப் பராமரிப்பு  வேலைகளைச் செய்வதற்காக கிராமக் குளங்களை மீன் குத்தகைக்கு விட்டு அந்த வருமானத்திலிருந்து செலவு செய்து வந்தனர் என்று தெரிகிறது. ரயத்துவாரி அமைப்பு ஏற்பட்டதன் பின்னால், மீன் பாசி குத்தகை மூலம் விவசாயிகளே பாசன ஆதாரங்களைப் பராமரித்தல் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலையாக மாறியது, இன்றும் தொடர்ந்து செயல்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பின்
சுதந்திரம் வந்த பிறகு, உணவு உற்பத்தி செய்வதில் அரசு முனைப்பாக இருந்ததால் எல்லாவித பாசனப் பராமரிப்பு வேலைகளையும் அரசு நிதியிலிருந்து செய்து வந்தது. 1957ஆம் ஆண்டு குடிமராமத்து வேலை பற்றிக் கவலைப்படாமல் பெரிய வேலைகள் நடந்தன. இதனால் வேளாண் பெருமக்கள் எல்லா வேலைகளுக்கும் அரசையே நம்பும் நிலை வந்தது. 1974ஆம் ஆண்டு இந்த நிலைமையைச் சீர்செய்யும் வகையில் அரசு ஓர் ஆணை இட்டது. சிறிய கால்வாய்கள் ஒரு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டு இருந்தால் அவற்றிற்கான குடிமராமத்து வேலைகளை அவைகளே செய்யவேண்டும் என்றும் இந்த வேலைக்கான செலவினத்தில் 4/7 பங்கு அரசு  மானியமாகவும், மீதி 3/7 பங்கு வேளாண் பெருமக்களிடம் பங்குத் தொகையாக வாங்க  வேண்டுமென்றும் அந்த ஆணை கூறியது. இம்முறை பின்பு கைவிடப்பட்டது. பஞ்சாயத்திடம் கொடுக்கப்பட்ட சிறு பாசன வேலைகளை அவைகளால் செய்ய முடியவில்லை. ஆகையால், அரசே நடவடிக்கை எடுத்து, தனியான பராமரிப்பு வேலைகளைத் துவக்கி சிறிய கால்வாய்களைச் செப்பனிட்டு வந்தது. சரியான முறைப்படி குடிமராமத்து வேலைகள் செய்யப்படாமல் வந்ததால் பாசனப் பராமரிப்பு வேலை நலிவடைந்து வந்தது.
மீண்டும் குடிமராமத்து
கிராமங்களில் ஏற்கெனவே கிராம சங்கங்கள் பல பொது நோக்கங்களைக் கொண்டு முறைப்படுத்தப்படாமல் வாய்மொழி நெறிகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்களைப் பாசன நோக்குடன் முறைப்படுத்தி நெறிகளை  நியமித்து கிராமப் பாசனதார் சங்கங்களாக அமைத்து அந்தச் சங்கங்கள் மூலமாக குடிமராமத்துப் பணி கவனிக்கப்படவேண்டும்.
கிராமப் பாசனதார் சங்கங்களில், நீரைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் சங்கத்தின் உறுப்பினர்களாகவும், அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்களாகவும் விளங்குவர். ஏக்கருக்கு                                   ரூ. 100/-  வீதம் பாசனதார்களிடம் திரட்டி இந்த மொத்தத் தொகை ஒரு வைப்புத் தொகையாக வங்கியின் சங்க நிர்வாகிகள் பொறுப்பில் செலுத்தப்படும். இந்த மொத்தத் தொகைக்கு இணையான ஒரு தொகை 50:50 என்ற விகிதாச்சாரத்தில் அரசால் ஈடு செய்யப்பட்டு அந்த வைப்புத் தொகை கணக்கில் செலுத்தப்படும். சங்க நிர்வாகிகள் எக்காரணம் கொண்டும் இந்த வைப்புத் தொகையைச் செலவழிக்க முடியாது. இந்த  வைப்புத் தொகை வங்கியில் ஒரு நிரந்தர வைப்புத் தொகையாக ஆண்டுதோறும் வட்டி மட்டும் சங்கத்திற்கு ஈட்டுக் கொடுக்கும் வகையில் மாற்றப்படும். இந்த ஈட்டிய வட்டித் தொகையை மட்டிலுமே சங்க நிர்வாகிகள் வங்கியில் இருந்து எடுத்துச் செலவழிக்கலாம். அதன் மூலம் குடிமராமத்து வேலைகள் செய்யப்படும். இதனால்,
1. கிராமப் பாசனதார் சங்கத்திற்கு நிரந்தர முதலீடு கிடைக்கிறது.
2. ஆண்டுதோறும் பாசனதாரர்களிடம் திரட்டி செய்து குடிமராமத்து வேலைகள் செய்ய அவசியமில்லை.
3. ஆண்டுதோறும்  அரசை எதிர்நோக்கிச் செயல்படத் தேவையில்லை.
4.வேளாண் பெருமக்கள் கூட்டாக அவர்களே  குடிமராமத்து  வேலைகளை அரசை எதிர்நோக்காமல் செய்ய வழிவகை பிறக்கும்.
தமிழ்நாட்டில் பாசன ஆதாரங்கள் முழுவதுமாக உருவாக்கப்பட்டு விட்டன. அவைகளை முழுமையாகப் பயன்படுத்த சரியான பராமரிப்பு தேவை. பாசன ஆதாரங்களைப் பராமரிப்பதில் குடிமராமத்து வேலைகளை மீண்டும் கொண்டு வருவது ஒரு முக்கியப் பணியாகும். அரசு முழுமனத்துடன் குடிமராமத்து வேலைகளை மீண்டும் செயலுக்குக் கொண்டுவர முழு முயற்சி எடுக்கவேண்டும். இல்லையேல், தற்போதுள்ள பாசன திட்டங்கள் சீர் செய்ய முடியாத அளவு அழிந்துபோகும் நிலை ஏற்படும். இதை ஒரு அவசரக் கடமையாக, விவசாயிகளும் அரசும் கருதவேண்டும்.