மூடத்தனத்தின் உச்சக்கட்டம் - பழ. நெடுமாறன் அச்சிடுக
சனிக்கிழமை, 02 பெப்ரவரி 2019 11:21

* மகாபாரதத்தில் வரும் கெளரவர்கள் நூறு பேரும் சோதனைக் குழாய் குழந்தைகள். நூறு மண்பானைகளில் நூறு கரு முட்டைகள் வைக்கப்பட்டு அவை வளர்ந்து நூறு குழந்தைகள் பிறந்தன என மகாபாரதம் கூறுகிறது.

இவையெல்லாம் சோதனைக் குழாய் குழந்தைகள்தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சோதனைக் குழாய்கள் மூலம் குழந்தைகளைப் பிறப்பிக்கும் முறையை நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.
* இலங்கை அரசனான இராவணன் விமானப் படையே வைத்திருந்தான். அவனிடம் புஷ்பக விமானம் மட்டுமல்ல, 24 வகையான போர் விமானங்கள் இருந்தன. விமானத் தளங்களையும் அவன் அமைத்திருந்தான். விமானம் மூலம்தான் சீதையைத் தூக்கி வந்தான்.
* பழங்காலத்திலேயே ஏவுகணை, தொழில்நுட்பம் நமது முன்னோர் களுக்குத் தெரிந்துள்ளது. மகாவிட்டுணு கையிலிருந்த சுதர்சன சக்கரம் பகைவர்களைத் தாக்கிவிட்டுத் திரும்பவும் அவர் கரத்திற்கே வந்து சேர்ந்துவிடும். இத்தகைய சக்தி வாய்ந்த ஏவுகணைகள் பல இருந்துள்ளன.
* இராமனிடம் அஸ்திரங்கள் என்ற பெயரில் பலவகையான பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன. இராம-இராவணப் போரில் அவற்றைப் பயன்படுத்திதான் இராமன் வெற்றி பெற்றான்.  
 * சார்லசு டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை புதிதல்ல. விட்டுணுவின் பத்து அவதாரங்களும் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. தண்ணீரில் முதல் உயிரினம் தோன்றியதை குறிக்கும் வகையில் (மச்ச) மீன் அவதாரத்தில் மகாவிட்டுணு தோன்றினார். அடுத்து கூர்மாவதாரம். நீரிலும், நிலத்திலும் வாழும் ஆமை வடிவத்தில் மகாவிட்டுணு  தோன்றினார். அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து மிருகமும், மனிதனும் இணைந்த நரசிம்மவதாரம் தோன்றியது. கடைசியாக வாமனர் என்னும் அவதாரமாக சிறிய மனித வடிவில் தோன்றியது.
* இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பிரம்மாவுக்குத் தெரியாமல் உலகில்  எதுவும் தோன்றவில்லை. எவரும் அறிவதற்கு முன்பே டயனோசர்கள் உலகில் இருப்பதை பிரம்மா அறிந்திருந்தார். இந்தியாதான் டயனோசர்கள் நிறைந்திருந்த இடமாகும். இந்தியாவைச் சேர்ந்த ஒரு வகையான டயனோசரை இராச அசுரா என்ற பெயரில் அழைத்தார்கள்.  வேதங் களிலிருந்துதான் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் டயனோசர் என்ற சொல்லை உருவாக்கினார்கள். வேதங்களை எழுதிக்  கொண்டிருந்தபோது பிரம்மா ஒருமுறை தன்னுடைய கண்களை மூடினார். அந்த நொடி இமைப்பொழுதில் டயனோசர்கள் அழிந்துவிட்டன.
   மேற்கண்டவாறு உளறியிருப்பவர்கள் கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகள் அல்லர். அவர்கள்  கூட இத்தகைய பகுத்தறிவிற்குப் பொருந்தாத கருத்துக்களைச் சொல்லியிருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த ஜனவரி 3ஆம் நாள் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரசு மாநாட்டில்தான் இத்தகை அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. பேசியவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர்.  கல்வித்துறையில் பெரும் பதவிகளை வகிப்பவர்கள்.ஆந்திரப்பல்கலைக்கழகதுணைவேந்தர்  ஜி. நாகேசுவரராவ் அவர்கள் உதிர்த்த முத்தான கருத்துக்கள்தான் மேலே கண்டவையாகும். உலகமே எள்ளி நகையாடத் தக்க வகையில் இத்தகைய கருத்துக்களை வெளியிட்ட இவரின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் நினைக்கும்போதே பெரும் கலக்கம் ஏற்படுகிறது. அவர்களின் எதிர்காலம் என்னவாகுமோ என நமது உள்ளம் பதைக்கிறது. பழைய கற்காலத்திற்கும் முந்திய காட்டுமிராண்டித்தனமான காலத்திற்கு மாணவர்கள் உந்தித் தள்ளப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இவரை மிஞ்சும் விதத்தில் கண்ணன் சகதளா கிருட்டிணன் என்பவர் பேசியுள்ளார்... "நியூட்டன், ஐன்சுடீன் போன்றவர்களின் கோட்பாடுகள் தவறானவை. இவர்களின் அனைத்து இயற்பியல் கோட்பாடுகளையும்  முற்றிலுமாக மாற்றியமைக்கப் போகிறேன். இதற்காக நான் எழுதியுள்ள ஆய்வறிக்கைகளை 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன். எனது ஆய்வறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுமானால் புவிஈர்ப்பு விசைக்கு நரேந்திர மோடி அலைகள் என்றும், ஈர்ப்பு விசை ஒலி விளைவுக்கு மத்திய அமைச்சர் அர்சவர்தன் விளைவு என்ற பெயர்களைச் சூட்டுவேன். எதிர்காலத்தில் அப்துல்கலாமைவிட மிகப்பெரிய அறிவியல் அறிஞராக அமைச்சர் அர்சவர்தன் உருவெடுப்பார்” என்று கூறியுள்ளார்.
இந்திய அறிவியல் காங்கிரசு மாநாடுகளில் உலக அறிவியல் அறிஞர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு நடுவே முற்றிலும் அறிவியலுக்கெதிரான கருத்துக்களை அதிலும் எவ்வித ஆதாரமும் இல்லாத மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு பேசுவது என்பது வெட்ககரமானது மட்டுமல்ல, உலகத்திற்கு முன் நம்மை தலைகுனிய வைப்பதாகும்.
சிந்துசமவெளி நாகரிகத்தைக் கண்டறிந்த சர் சான் மார்சல் பின்வரும் கருத்தைத் தெரிவித்தார்.  "ரிக்வேத காலம் கி.மு. 1500க்குப் பிற்பட்டது. அதாவது சிந்து நாகரிகத்தின் அழிவுச் சின்னங்கள் மறைந்து 1000 ஆண்டுகளுக்குப் பின்னரே வேத நாகரிகம் தோன்றியது என்பதால் ஆரியர்களுக்கும், சிந்து நாகரிக மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை”.
எனவே கி.மு. 1500க்குப் பிற்பட்ட ஆண்டுகளில் இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களிடம் வாய்மொழி இலக்கியங்கள்தான் இருந்தன. அவை சுருதி அதாவது காதால் கேட்கப்படுவது என அழைக்கப்பட்டன. அத்தகைய சுருதிகள்தான் ரிக், சாம, யசுர், அதர்வண வேதங்களாகும். வேதம் என்ற சொல் வித் (அறிதல்) என்ற சமஸ்கிருத வேர்ச்சொல்லிலிருந்து கிளைத்த ஒரு சொல்லாகும். இந்த வேதங்கள் சம்கிதைகள் (திரட்டு) என்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியாக பிரம்மாணங்களும், ஆரண்யகங்களும், உபநிடதங்களும் தோன்றின. இவையெல்லாவற்றுக்கும் சேர்த்து மந்திரங்கள் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவற்றிற்குப் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் இராமாயணமும், அதற்குப் பின்னர் மகாபாரதமும் எழுதப்பட்டன. தொடர்ந்து பல ஆண்டுகளில் பல கதைகள் இணைக்கப்பட்டு அவை விரிவு படுத்தப்பட்டன என்பதுதான் வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்த உண்மைகள் ஆகும்.
உண்மை என்ன?
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் உண்மைகளின் அடிப்படையில் மேற்கண்ட கூற்றுகளை அணுகி நாம் பார்போம்.
கி.மு. 1500க்கும் கி.மு. 1200க்கும் இடைப்பட்ட காலத்தில் ரிக் வேதம் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று செர்மானிய அறிஞர் மாக்சுமுல்லர் கருதுகிறார். ஏனைய வேதங்கள் கி.மு. 1200க்கும் 1800க்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.  கி.மு. 800க்கும் கி.மு. 600க்கும் இடையில் பிராமணங்கள் எழுதப்பட்டன. அதற்குப் பின்னரே உபநிடதங்கள் உருவாகின. இவற்றில் எதிலுமே மகாபாரதப் போர் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியில் புகழ்பெற்ற அறிஞரான முனைவர் சி.சி. சர்க்கார் "மகாபாரதப்  போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறியுள்ளார். இதற்கு அவர் கீழ்க்கண்ட காரணங்களை முன் வைக்கிறார்.
1. வேத சாகித்யத்தில் எங்குமே மகாபாரதப் போர் பற்றிக் கூறப்படவில்லை.
2. பவுராணிகர்களுக்குக் கூட மகாபாரதப் போர் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை.
3. கி.மு. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்னருள்ள எந்தவோர் இலக்கியத்திலும் மகாபாரதப் போர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
4. மகாபாரதப் போர் நடந்ததாகக் கூறப்படும் குருசேத்திரம் ஒரு போர்க்களமாக வேதங்களில் எங்கும் கூறப்படவில்லை.
மற்றொரு புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான எச்.டி. சங்காலியா என்பவரும் டாக்டர் சர்க்கார் கூறிய கருத்துக்களை ஆதரிக்கிறார்.  அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
"மகாபாரதப் போர் நடந்த காலமாக கி.மு. 3100, கி.மு. 1400, கி.மு. 900 எனப் பல காலகட்டங்களை அறிஞர்கள் தருகின்றனர். இவ்வாறு கூறுபவர்கள் பெரும்பாலும் சமசுகிருத அறிஞர்களே. இந்த வருடங்களில் ஏதேனும் ஒன்றை நாம் அங்கீகரிப்பதற்கு முன்னர் அதனால் விளங்கும் பொருள் என்னவென்பதை அறிய வேண்டியிருக்கிறது. இப்போதைய அரியானா, பஞ்சாப், சிந்து, குசராத், சவுராஷ்டிரம், கட்ச், உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், காசுமீர் ஆகிய இடங்களில் அக்காலத்தில் பெரிய நாடுகள் இருந்தனவென்று நாம் கருதவேண்டிவரும். அதுமட்டுமல்ல, இந்த இடங்களிலெல்லாம் நாகரிகமும் கலாச்சாரமும் சிறந்தோங்கி இருந்திருக்க வேண்டும். அங்கிருந்த அரசர்களுக்கு நிரந்தரமான பெரிய படைகளும் இருந்திருக்கவேண்டும். அவற்றின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால், அவை அக்காலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை”.
மொகஞ்சதாரோவிலும், அரப்பாவிலும் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை. கி.மு. 3000த்திலோ, கி.மு. 4000த்திலோ மகாபாரதப்போர் நடந்தது என்று வைத்துக்கொண்டால், அவர்கள் இரும்பாலான ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லையென ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்றும் டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகின்றார். ஆனால், மகாபாரதப் போரில் இரும்பாலான ஆயுதங்கள் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் இந்த மகா யுத்தத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை யென்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட வரலாற்றுச் சான்றுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை முற்றிலுமாக மறைத்துவிட்டு கற்பனை மிக்கக் கட்டு கதைகளையும், உண்மைகளுக்கு மாறான திரிபுகளையும் அறிவியலாளர்கள் கூடியுள்ள மாநாட்டில் எவ்விதக் கூச்சமின்றிக் கூறுவது மூடத்தனத்தின் உச்சக் கட்டமாகும்.
 பா.ச.க. ஆட்சி இந்தியாவில் ஏற்பட்டப்  பிறகு நடைபெற்ற அறிவியல் மாநாடுகளில் அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத இத்தகைய உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவற்றைக் கண்டு மனம் வெறுத்துப்போன நோபல் பரிசுப் பெற்ற அமெரிக்க வாழ் இந்திய அறிவியலாளர் வெங்கட்ராமன் இராமகிருட்டிணன் இனிமேல் அறிவியல் காங்கிரசு மாநாடுகளில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவினை 2016 ஆம் ஆண்டிலேயே எடுத்துவிட்டார். "அறிவியலை அடியோடுப் புறக்கணித்துவிட்டு மத மூடநம்பிக்கைகளுக்கும், இந்துத்துவா சார்ந்த அரசியலுக்கும் மட்டும்தான் அறிவியல் மாநாட்டில் முதன்மை அளிக்கப்படுகிறது. எனவே இம்மாநாடுகளில் கலந்துகொள்வது வீணாகும்” எனக் கூறியுள்ளார்.
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரான  கே. விசயராகவன் "புகழ்பெற்ற ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தற்போது இருக்கும் ஒருவர் அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத வகையில் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடமிருந்து புகார் பெற்று அந்த துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேந்தர் முன்வரவேண்டும். மேலும் மற்ற அறிவியல்  அறிஞர்களும் இணைந்து  இதுபோன்ற உளறுபவர்களைக் கண்டிக்க முன்வரவேண்டும்”எனக் கூறியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான மனித உரிமை அமைப்பு அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத இத்தகைய பேச்சுக்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "அறிவியலின் தரத்தைக் குறைக்கும் போக்கு மட்டுமல்ல, இது அறிவியல் முன்னேற்றத்தை அடியோடு தகர்த்துவிடும். இத்தகைய நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்" என வலியுறுத்தி  உள்ளது.
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பு இது தொடர்பாகக் கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
"சிறுவர்களின் அறிவியல் மாநாடு உள்பட எத்தகைய அறிவியல் மாநாடுகளிலும் பங்கேற்பவர்கள் முன்னதாகவே தங்களது உரையின் பிரதியை அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்புக்கு அனுப்பவேண்டும். போலித்தனமான அறிவியல் கருத்துக்கள் எதேனும் ஒரு உரையில் காணப்படுமானால் அதை அகற்றுவதோடு அத்தகையவரை பேசவும் அனுமதிக்கக் கூடாது. மேலும், அறிவியல் கருத்தரங்குகளில் யாரேனும் போலி அறிவியல் கருத்துக்களை பேசத் தொடங்கினால் அவர்களை மேடையிலிருந்து அகற்றவேண்டும்”.
மானிட இனம் படிப்படியாகப் பட்டறிவின் மூலம் கண்டறிந்த உண்மைகளின் விளைவாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. அந்த வளர்ச்சி நாளுக்குநாள் பெருகி வளர்வதுதான் அறிவியலாகும்.  அது மேலும் வளர்ந்து மானிட சமுதாயத்திற்கு நலன் பயக்கவேண்டும். இத்தகைய அறிவியல்  சிந்தனையை வளர்ப்பதற்குப் பதில் மூடத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் புகுத்தி வளர்ப்பது சமுதாயத்தைப் பின்னோக்கிச் செலுத்திவிடும். ஆனால், இந்துத்துவா அரசுக்கு அதைப் பற்றிய கவலை கிடையாது. பகுத்தறிவுக்குச் சற்றும் பொருந்தாத சிந்தனையோட்டத்தை வளர்த்து மக்களிடம் மடமையைப்  பெருகச் செய்வதின் மூலமே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஆட்சிப்  பீடத்தில் தொடர்ந்து இருக்கவும் முடியும் எனக் கருதுகிறது. இத்தகைய போக்குக்கு எதிராக மக்கள் திரண்டெழவேண்டும்.