உலகத் தமிழ் மின் நூலகம் - பழ. நெடுமாறன் அச்சிடுக
சனிக்கிழமை, 16 மார்ச் 2019 13:34

2003ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஆறாவது உலக தமிழ் இணைய மாநாட்டிற்கு முன்னாள் குடியரசு தலைவர்  ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் மின் நூலகம் அமைப்பது குறித்து கீழ்க்கண்டுள்ள கருத்துகளை வழங்கினார்.

"நமது தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பழம்பெருமை பேசுவது  அல்ல. 21ஆம்  நூற்றாண்டில் ஒரு மொழியின்  தேவை என்பதைக் கண்டறிந்து அதனை  21ஆம்  நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றவேண்டும். ஆங்கிலத்தில் தேடுதல் சாதனம் வழியாக உலகின் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் நாம் தெரிந்துகொள்கிறோம். இந்த வாய்ப்பு தமிழ்மொழிக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். அதற்கு நவீன முன்மாதிரியான தமிழ் மின்நூலகத்தை உருவாக்கவேண்டும். அப்போது உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு உலக அறிவுச் செல்வங்கள் அனைத்தும் அவரவர்கள் வீடு தேடிச் சென்றடையும். தமிழ்மொழிக்கு உலகமொழி என்ற பெருமை கிடைக்கும். இதுவே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நாம் செய்யத்தக்க மிகப் பெரிய தொண்டாகும்.
கணினியிலிருந்து இணைய இணைப்பு மூலமாக எந்தவிதமான தகவல்களையும், விஞ்ஞான நிகழ்ச்சிகளையும், தொழில்நுட்ப அறிவுத்தாள்களையும், எண்ணக் களஞ்சியங்களையும் தேடுதல் சாதனம் மூலமாக ஒரு சில வினாடிகளில் ஆங்கிலத்தில் அறிய முடிகிறது.
ஆங்கிலத்தில் கிடைக்கக்கூடிய தகவல்கள் ஆங்கிலம்  தவிர சில மேற்கத்திய மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீஸ், ரஷ்யன் ஆகியவற்றில் மட்டுமே எந்திர மொழி பெயர்ப்பு மூலம் கிடைக்கிறது.  
நாம் எந்த மொழியில் "தரவுத் தளம்" தயாரிக்கிறோமோ அதே மொழியில்தான் நாம் தகவலைப் பெற முடியும்.
இதே போல், ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் தகவல் களஞ்சியங்கள் கிடைப்பதைப் போல் தமிழர்களுக்குத் தமிழிலேயே கிடைக்கவேண்டும்.
அதற்கு, தமிழ் சார்ந்த இணைய மென்பொருள்களை தமிழ்மொழியில் ஒருங்குறி மூலமாக வடிவமைக்க வேண்டும்”.
சிறந்த நூலகர் என இந்திய அரசின் தேசிய விருது பெற்றவரும், உலகில் பத்து சிறந்த  நுலகர்களில் ஒருவர் என பாராட்டப் பெற்று அனைத்துநாட்டு விருதும் பெற்றவருமான பாலம் கல்யாணசுந்தரம் உண்மையான மக்கள் தொண்டர் என்பது அனைவரும் அறிந்ததே.  "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற நாவுக்கரசரின் அடியொற்றி வாழ்பவர். இத்திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும், அதற்கான ஒரு திட்ட வரைவையும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் நேரில் அளித்து இத்திட்டத்தின் பயன்பாடு பற்றியும் விளக்கிக் கூறினார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆசியாவிலேயே சிறந்த மின் நூலகம் அமைப்பது  தொடர்பான சிறப்புமிக்கத் தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்தில் 27-09-2005இல்  நிறைவேற்றினார்.
ஆனால், இத்திட்டத்தை நிறைவேற்ற உலகில் உள்ள அனைத்து தகவல்களையும் கொண்ட தகவல் தளத்தை தமிழில் கொண்டு வரவேண்டும். இதற்கு பிறமொழிகளில் உள்ள தகவல்களை மொழிபெயர்க்க, தளப்படுத்தத் தேவையான மென்பொருள்களை உருவாக்கவும், இப்பணி தொய்வின்றி செயல்படுத்தப்படவும், நிதி ஒதுக்கீடும், நிறுவனப்படுத்துதலும் அவசியமாகும். ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பிறகு மறுமுறையும் முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா அவர்கள் ஏற்றபோது இத்திட்டம் புத்துயிர் பெற்றது. 2014ஆம் ஆண்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில் இந்த மின்  நூலகத்தை சென்னையில் அமைப்பது என முடிவு செய்தார். அதற்கு  முதல்கட்டமாக கல்விப் பூங்கா ஒன்றை உருவாக்கவும், அதில் நடுநாயகமாக மின்  நூலகம் அமைக்கவும் அவர் முடிவு செய்தார். பல்வேறு காரணங்களினால் இத்திட்டம் நிறைவேற்றப்படுவது தாமதமாயிற்று.
இத்திட்டத்தை அரசோ, பெரிய நிறுவனமோ, செல்வந்தர்களோதான் நிறைவேற்ற முடியும். இத்திட்டத்தை அரசு துவக்கினால் அதற்கு தேவையான உதவிகளை இலவசமாக அளிக்க, எச்.சி.எல்., மைக்ரோ சாப்ட் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்று பாலம் கல்யாணசுந்தரம் கூறுகிறார்.  இந்த உதவியைப் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு முன்வரவேண்டும்.  
ஏற்கெனவே, தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒரு மின்நூலகத்தை ஏற்படுத்தி, சங்ககாலம் முதல் தற்காலம் வரையுள்ள நூல்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், கலைச் சொற்கள், சுவடிக் காட்சியகம், பண்பாட்டுக்காட்சியகம் போன்ற பகுதிகளுடன் இயங்கி வருகிறது.
தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் ரூ. 12.26இலட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட ஒரு புதிய இணைய தளத்தை 12-10-17 அன்று இன்றைய முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் கல்வித் திட்டங்கள், நூலகம், கணினித் தமிழ், ஆய்வு  உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும். மேலும் தமிழ் இணைய கல்விக் கழகத்தால் ரூ. 59இலட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இணையம் மென்பொருள்-2 என்பதையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதுதவிர தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப் படுத்தப்பட்டவற்றை தொகுத்து முதல் கட்டமாக ரூ. 20இலட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தகவல் ஆற்றுப்படை என்னும் இணைய தளம், தமிழ் மின்உலகம் என்ற இணைய தளம் ஆகியவற்றையும் அவர் தொடக்கி வைத்தார்.   
தற்போது தமிழ், தமிழர், தமிழ்மொழி, இலக்கியங்கள், கலைகள், தமிழ்நாட்டின் நிலவியல், வரலாற்றுச் சிறப்புமிக்க  ஊர்கள், ஆறுகள், மலைகள், தமிழகத் திருவிழாக்கள், பண்டையப் பெயர்கள், தமிழக மரம், செடி, கொடி, விலங்கினங்கள், கோயில்கள், சிற்பங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் தகவல் தளங்களாக உருவாக்க தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் கூட்டாக முயன்று வருகின்றன. இதற்கென அரசு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இணைய கல்விக் கழகத்தின் இயக்குநர் 30-05-2012இல் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "மின்நூலகப் பணிகளில் அனுபவமுள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்தி இத்திட்டத்தை நிறைவேற்றலாம்.  ஆனால், இதற்கு தமிழ் இணைய கல்விக் கழகம் ஒரு முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படவேண்டும். அப்போதுதான் மின்நூலகப் பணிகளுக்கென ஒரு தனித்துறை உருவாக்கி அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைத்து தமிழ் மின்நூலகத்தை உருவாக்கும் பணியை மேற்கொள்ள முடியும். அல்லது தமிழக அரசின் உயர் கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை  ஆகியவற்றின் கீழ் புதிதாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி அவற்றின் மூலம் செயல்படுத்தலாம். அல்லது இப்பணியை நிறைவேற்ற  தகுதிவாய்ந்த  நிறுவனங்களையோ, தனியார்களையோ கண்டறிந்து அவர்கள் மூலமும்  இத்திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்கு அரசு தேவையான நிதி ஆதரவை நல்கலாம்” எனப் பரிந்துரைத்துள்ளார்.
எனவே தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் மின்நூலகம் அமைக்கும் இத்திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ள தனியார் அளிக்கும் நிதி, தொழில்நுட்ப உதவி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்வதோடு இந்நூலகத்தை உருவாக்க கணினிப் பொறியாளர்கள், பல்துறை அறிஞர்கள், நூலக அறிவியலாளர்கள், தமிழ் அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள்  மற்றும் இத்திட்டத்தோடு தொடர்புடைய அரசுத்துறைகளின் செயலாளர்கள் ஆகியோரை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு உலகத் தமிழ் மின் நூலகத்தை அமைப்பதின் மூலம் நமது தமிழ்மொழியை உலக மொழியாக உயர்த்த முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
முன்னாள் முதல்வரின் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதின் மூலம் "ஆசியாவிலேயே நவீன முன்மாதிரியான நூலகமாக இது இருக்கும்,  உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இதனைப் பயன்படுத்த முடியும், தமிழகத்தில் சமூக, கல்வி, பொருளாதாரத் துறைகளில் விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்தும், உலக அறிவுக் களஞ்சியங்கள் அனைத்தையும் உடனுக்குடன் வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், படிக்காதவர்கள்கூட இந்நூலகத்தைப் பயன்படுத்த முடியும், இந்நூலகத்தின் மூலம் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், அலைப்பேசி, நூலகம், கணினி ஆகிய ஐந்தின் பயனை ஒருங்கே பெறலாம். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு மிக விரைவாக வளர்ச்சிப் பெற்று வருகிறது. அதன் உச்சக்கட்ட சாதனையாகவும், 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முதலாவது மின் நூலகமாகவும், தகவல் தொழில் நுட்பத்துறையில் ஒரு மைல் கல்லாகவும் இந்நூலகம் திகழும். இந்த மின் நூலகத்தால் தமிழ் மொழிக்கு பன்னாட்டு மொழி என்ற பெருமை கிடைக்கும்; அதனால் உலகெங்கிலும் தமிழ் ஒலிக்கும்; தமிழன் தலைநிமிர்வான்.
"வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!”
என பாரதி கண்ட கனவை நனவாக்குவது தமிழக  அரசின் தலையாய கடமையாகும்.