வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது! அச்சிடுக
சனிக்கிழமை, 16 மார்ச் 2019 13:51

2015ஆம் ஆண்டில் இலங்கை குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற சிறீசேனா "இலங்கையில் நடைபெற்ற போரின்போது மனித உரிமை  மீறல்கள் நடைப்பெற்றது தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்படும்" என்ற உறுதியை அளித்திருந்தார்.

அதையேற்று ஐ.நா. மனித உரிமை ஆணையமும், போர்க்கால அத்துமீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை நடத்தும்படி ஆணைப் பிறப்பித்தது.
2 ஆண்டு காலமாக அதற்கான நடவடிக்கைகள் எதிலும் சிறீசேனா ஈடுபடத் தவறினார். மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் அளிக்கும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஆணையமும் அனுமதித்தது.
இந்நிலையில் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள்  ஆணையத்தின்  40ஆவது  கூட்டம் 2019 மார்ச்  22, 23 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு  நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் சிறீசேனா தனது முடிவிலிருந்து திடீரென பின்வாங்கியுள்ளார்.  கடந்த 4ஆண்டு காலமாக போர்க்  குற்றங்கள் குறித்து எத்தகைய விசாரணையும் நடத்த முன்வராத அவர், "சர்வதேச அளவிலான தலையீடு  இல்லாமல் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவேண்டியுள்ளது. பழைய நிகழ்ச்சிகளையும், காயங்களையும் மீண்டும் கிளரவேண்டாம் என கேட்க இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இம்முறையாவது ஐ.நா. மனித  உரிமை ஆணையம் சிறீசேனாவின் வேண்டுகோளை ஏற்க  மறுத்து, பன்னாட்டு நீதி விசாரணைக்கு ஆணைப் பிறப்பிக்க முன்வரவேண்டும். கடந்த காலத்தில் இலங்கை அரசுக்கு கால நீட்டிப்புக் கொடுத்ததை ஆதரித்த இந்திய அரசு, இந்தத்  தடவையாவது போர்க்குற்ற நீதி  விசாரணையை ஆதரிக்கவேண்டும் என  உலகத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.