கச்சத்தீவை மீட்க வாய்ப்பு! வழிகாட்டும் அனைத்து நாட்டு நீதிமன்றத் தீர்ப்பு! - பழ. நெடுமாறன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:17

கடந்த 25-02-2019 அன்று அனைத்து நாட்டு நீதிமன்றம் மிகமிக முதன்மையான தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. மொரீசியசு நாட்டுக்கு சொந்தமாக இருந்த சாக்கோசு தீவுத் தொகுப்பை 50ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியா அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

இத்தீவுத் தொகுப்பில் ஒன்றான டிக்கோ கார்சியா தீவில் மிகப்பெரிய கடற் படைத்தளத்தை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி அளித்தது. பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து மொரீசியசு விடுதலை பெறுவதற்கு நிபந்தனையாக சாக்கோசு  தீவுத் தொகுப்பினைப் பிரிட்டன் எடுத்துக்கொண்டது. அன்று தொடங்கி மொரீசியசு அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இத்தீவுக் கூட்டத்தை தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென பிரிட்டனை வலியுறுத்தி வருகிறது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஐ.நா. பேரவை இத்தீவுத் தொகுப்பின் உரிமைப் பிரச்சனைக் குறித்து சட்டப்பூர்வமாக ஆராய்ந்து முடிவு கூறுமாறு அனைத்து நாட்டு நீதிமன்றத்தை வேண்டிக்கொண்டது. அதற்கிணங்க இப்போது அந்நீதிமன்றம் அளித்தத்  தீர்ப்பில் "பிரிட்டனின் நடவடிக்கை சட்டத்திற்கு எதிரானது என்றும், உடனடியாக இந்த தீவுக் கூட்டத்தினை எவ்வளவு விரைவில் மொரீசியசு நாட்டிற்கு அளிக்கவேண்டுமோ அவ்வளவு விரைவில் அளிக்குமாறு” ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், டிக்கோ கார்சியா தீவில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்பட்டிருப்பது அனைத்து நாட்டு சட்டத்திற்கும் எதிரானது என்றும் கண்டித்துள்ளது.
மொரீசியசு நாட்டிடமிருந்து பிரிட்டனால் பறிக்கப்பட்ட சாக்கோசு தீவுக் கூட்டத்தை மீண்டும் மொரீசியஸ் நாட்டிற்கு அளிக்கவேண்டும் என்ற அனைத்து நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஐ.நா. வரலாற்றிலும்,  நாடுகளுக்கு இடையேயுள்ள பிரச்சனை தொடர்பான வரலாற்றிலும் எடுத்துக்காட்டான தீர்ப்பாகும். மொரீசியசு நாட்டிற்கு வழங்கப்பட்ட நீதி, தமிழ்நாட்டிற்கும் எல்லாவகையிலும் பொருந்தும். தமிழ்நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவு இந்திய அரசால் பறிக்கப்பட்டு இலங்கைக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. கடந்த 44 ஆண்டுகாலமாக தமிழகம் இந்த அநீதியை எதிர்த்துப் போராடி வருகிறது.  
கச்சத் தீவின் வரலாறு
கி.பி. 1480ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய கடல் கொந்தளிப்புப் புயலின் விளைவாக தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் கடல்நீர் புகுந்து இராமேசுவரம் தீவு உள்பட 12 தீவுகள் உருவாயின. தமிழகத்தின் நிலப்பரப்பிலிருந்து இத்தீவுகள் கடலால் துண்டிக்கப்பட்டன. இத்தீவுகள் அனைத்தும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன. இத்தீவுகளில் ஒன்றுதான் கச்சத் தீவு ஆகும். இராமேசுவரத்திலிருந்து 18கி.மீ. தொலைவிலும், இலங்கையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் கச்சத் தீவு அமைந்திருக்கிறது. கச்சத் தீவுப் பகுதியில் உள்ள கடல் ஆழம் நிறைந்தவை. எனவே இத்தீவு கடற்படைத் தளம் அமைப்பதற்கு ஏற்றத் தீவாகும். இத்தீவுப் பகுதியில் எண்ணெய் வளம் உள்ளது என தேசிய எண்ணெய் ஆய்வு ஆணையம் கூறியுள்ளது.
இராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இத்தீவில் தங்கி ஓய்வு எடுப்பது வழக்கம். இலங்கையின் தமிழ் மீனவர்கள் தங்களின் தமிழக உறவுகளைக் காண இத்திருவிழாவிற்கு வருவதுண்டு. ஆனால் சிங்கள் மீனவர்கள் இங்கு வருவதில்லை. மேலும் தமிழக மீனவர்கள் தாங்கள் வழிபட இத்தீவில் புனித அந்தோணியார் கோவிலை உருவாக்கி உள்ளனர். இத்தீவில் உள்ள மூலிகைச் செடிகள், வேர்கள் ஆகியவற்றைக் கொண்டுவரவும், முத்துக்குளிக்கவும், மீன்பிடித் துறையாகப் பயன்படுத்தவும் எவரேனும் விரும்பினால் சேதுபதி மன்னரின் இசைவினைப் பெற்றாகவேண்டும். சேதுபதி ஆட்சி இத்தீவினை குத்தகைக்குவிட்டு வருவாய் பெற்றது என்பதற்கு ஏராளமான ஆவணங்களும், சான்றுகளும் உள்ளன.
1822ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனம் சேதுபதி மன்னருடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படிதான் இத்தீவைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையைப் பெற்றது. பிரிட்டனின் பேரரசியான விக்டோரியாவின் காலத்தில் இத்தீவு இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல, இலங்கையின் எல்லைகளைக் குறிப்பிடும்போது கச்சத்தீவை அதில் அவர் குறிக்கவும் இல்லை. மற்றும் ஏராளமான சான்றுகளின் மூலம் இத்தீவு தமிழ்நாட்டிற்கே சொந்தமானது என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஆனால், 1974ஆம் ஆண்டு இந்திய தலைமையமைச்சர் இந்திராகாந்தி இலங்கை தலைமையமைச்சர்  சிறீமாவோ பண்டாரநாயகா ஆகியோர் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் இத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஆனால், இந்த உடன்பாட்டில் கையெழுத்து  இடுவதற்கு முன்னால் சம்பிரதாயத்திற்குக் கூட தமிழக அரசிடம் இந்திய அரசு தெரிவிக்கவும் இல்லை, அனுமதி கேட்கவும் இல்லை. இந்த உடன்பாட்டிற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தன. நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் கண்டித்தனர்.
அதற்குப் பிறகு இருநாடுகளின் அதிகாரிகளுக்கிடையே மீன்பிடி உரிமை பற்றி கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. இந்த கடிதங்களே 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம்  உடன்பாடுகளாக ஏற்கப்பட்டன. இதன் விளைவாகக் கச்சத் தீவுப் பகுதிக்குத் தமிழக  மீனவர்கள் செல்லவும் கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது எனக் கட்டுப்படுத்தப்பட்டார்கள். இதைத் தொடர்ந்துதான் 1983ஆம் ஆண்டிலிருந்து  தமிழக  மீனவர்களை இலங்கைக் கடற்படை வேட்டையாடத் தொடங்கியது. 1000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டப் பிறகும் இன்னமும் சிங்களரின்  அட்டூழியம் தொடர்கிறது. தமிழக மீனவர்களின் படகுகள் தாக்கப்படுவதும், மீனவர்கள் சிறைப்பிடிக்கப் படுவதும் தொடர் நிகழ்ச்சிகளாகிவிட்டன.
1991ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் அன்று தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை தமிழக மீனவர்களின் நலன்காக்க இந்திய அரசு எதுவும் செய்ய முன்வரவில்லை. இப்போது அனைத்து நாட்டு நீதிமன்றம் சாக்கோசு தீவுத் தொகுதி மொரீசியசு நாட்டிற்கே சொந்தமானது. அதை பிரிட்டன் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாகும். எனவே இத்தீர்ப்பினைப் பயன்படுத்திக் கச்சத் தீவை இலங்கை அரசிடமிருந்து திரும்பப் பெறவேண்டும் என இந்திய அரசை தமிழக அரசும், அனைத்துக் கட்சியினரும் இணைந்து நின்று வலியுறுத்தவேண்டும். கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதின் மூலமே இராமேசுவரம் மீனவர்களுக்கு  இழைக்கப்படும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.