தமிழைப் புறக்கணிக்காதீர்! அழிவுக்கு வழிவகுக்காதீர்! - புதுமைப் புலவின் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:24

உலகெங்கும் உள்ள நாடுகளில் 7,000 மொழிகள் தற்போது பேசப்படும் மொழிகளாகப் பதியப்பட்டுள்ளன. ஆனால், 2100ஆம் ஆண்டுக்குள் அம்மொழிகளில் 90%மொழிகள் மறைந்துவிடும் என மொழியியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஒரு மொழி அழிவதற்கு முன் அம்மொழியின் வலிமை  குன்றுதல் படிப்படியாக நடைபெறும். ஒரு மொழியைப் பேசுபவர்கள் அதில் மற்றொரு மொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும், எழுதுவதும் எந்தளவுக்கு மிகுதியாகிறதோ அந்த அளவுக்கு அந்த மொழியின் சொற்கள் மறைந்து அந்த மொழி சிறிதுசிறிதாக தனது வலிமையை இழக்கும். இந்தப் போக்கின் உச்சக்கட்டம் என்பது அந்த மொழியின் அழிவில் போய் முடியும்.
ஒரு மொழி அதன் இலக்கியம், ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் பண்பாடு ஆகியவை அம்மொழிப் பேசுகிற மக்களின் நீங்காத அடையாளங்களாகும். பிற மொழிச் சொற்களை தனது மொழியில் கலந்துபேசுகிறவன் தனது அடையாளத்தைத் தானே அழித்துக் கொள்கிறான். இன்றைய தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி ஆகியவற்றில் ஆங்கிலமே பயிற்சி மொழியாக பெரும்பாலும் உள்ளது. இங்கு பயிலும் நமது மாணவர்கள் தங்களுக்குள் பேசும்போது ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். கிராமப்புறங்களில் வாழும் பாமர மக்களின் பேச்சு வழக்கில் கூட ஆங்கிலச் சொற்கள் இடம்பெறுவதை  நாம் காண்கிறோம். நமது பிள்ளைகள், நமது மொழியில் கொச்சையாக மட்டுமே பேசத் தெரிந்தவர்கள். அவர்களுக்குத் தமிழைச் சரிவரப் படிக்கத் தெரியாது.
இதற்குக் காரணம் என்ன? "வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டுமானால் அதற்கு தமிழ் பயன்படாது. ஆங்கிலம் கற்றால்தான் நமது பிள்ளைகள் முன்னேற முடியும். வேலை வாய்ப்புகளைப் பெற முடியும் எனக் கருதும் பெற்றோரின் ஆங்கில மயக்கமே இதற்குக் காரணமாகும்". எனவே அவர்கள் பெரும் பணத்தை செலவழித்து ஆங்கில வழிப் பள்ளிக் கூடங்களுக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்கள். இதன் விளைவாக தமிழ்வழி அரசு பள்ளிக் கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்படுகின்றன. இந்த நிலைமை நீடித்துத் தொடருமானால் இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழ்மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை விரைவாகக் குறையும். இறுதியில் மொழி அழியும் நிலை உருவானால் வியப்பதற்கில்லை.
18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆப்பிரிக்க, அரேபிய, ஆசிய நாடுகளில் பலவற்றைக் கைப்பற்றித் தங்களின் குடியேற்ற நாடுகளாக உருவாக்கினார்கள். பிரித்தானிய பேரரசில் கதிரவன் ஒருபோதும் மறைவதில்லை என ஆங்கிலேயர்கள் மார்தட்டிக்கொண்டனர். இதன் விளைவாக இந்நாடுகளில் ஆங்கிலேயர் ஆட்சி இரு நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தது. ஆங்கிலம் ஆட்சிமொழியாகத் திகழ்ந்ததினால் இந்நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஆங்கிலம் கற்கவேண்டிய இன்றியமையாமை உருவாயிற்று. அதனால், ஆங்கிலம் உலக மொழியானது. ஆனால், உண்மையில் ஆங்கில மொழி என்பது இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் என்ற மூன்று மொழிகளின் கூட்டு கலவையால் பிறந்த மொழியே தவிர, தமிழ்மொழி போல தனித்தன்மையும், தொன்மையும் வாய்ந்த செவ்வியல் மொழியல்ல. பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டு தனது சொற்களாக ஆக்கிக் கொள்கிறது. மொழி வளம் குறைவாக இருப்பதால் ஆங்கில மொழிக்கு வேறு வழியில்லை.
ஆனால், ஆங்கிலம் உலக மொழியான பிறகு இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்து போயிருக்கின்றன. ஒரு மொழி அழிவதற்கு பல காரணங்கள் உண்டு. இன்றைய தலைமுறையினரும், அடுத்தத் தலைமுறையினரும் தங்களது தாய்மொழியைப் படிக்கவோ, எழுதவோ விருப்பம் காட்டாமை அம்மொழியின் அழிவுக்கு தலையாய காரணமாகும். தமிழ்நாட்டில் இன்று அத்தகைய நிலைமை விரைவாகப் பரவி வருகிறது. ஆங்கில மயக்கம் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் பேசுவதும், எழுதுவதும் தொடர்கிறது. தமிழிலேயே சிந்திப்போம், தமிழிலேயே பேசுவோம்,  தமிழிலேயே எழுதுவோம் என்ற உணர்வை ஒவ்வொரு தமிழனும் பெற்றாலொழிய நமது மொழியைக் காக்க முடியாது.
தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பேசிய, எழுதிய தமிழ்மொழியை இன்று நாமும் பேசுகிறோம், எழுதுகிறோம் என்பதுதான் நமக்குப் பெருமை தருவதாகும். உலகில் வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை கிடையாது. காலத்திற்கேற்ப எழுத்து வடிவங்கள் அவ்வப்போது மாறியிருக்கின்றனவே தவிர, தமிழ் ஒருபோதும்  மாற்றமடையவில்லை. "சீரிளமைத் திறன் குன்றாதத் தமிழ்” என சுந்தரனார் பாடினார். அவர் பாடியது நின்று நிலைக்கவேண்டுமானால் தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகப் படிப்பு வரை தமிழ்வழிக் கல்வி கொண்டுவரப்படவேண்டும்.
அதற்கான வளமும், திறனும் நமது மொழியில் நிறைந்திருக்கின்றன. வளமில்லாத மொழிகள் வேண்டுமானால் பிறமொழிச் சொற்களைத் தேடிப் பெறலாம். ஆனால், நமக்கு அது தேவையில்லை. நாளும் வளர்ந்துவரும் அறிவியலில் கூட புதிய கண்டுபிடிப்புகளுக்கான தமிழ்ச் சொற்களை நமது மொழி அறிஞர்கள் எளிதில் உருவாக்கித் தருகிறார்கள். ஆங்கிலத்திற்கு இணையாக மின்னியல் துறையில் தமிழ் ஏற்றம் பெற்றிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் இந்த மாபெரும் சாதனையைச் சாதித்துள்ளனர். தமிழில் கூறமுடியாத கருத்து என எதுவும் இல்லை. நமக்குத் தேவை இந்த உண்மையை உணர்ந்து தாய்மொழிக் கல்வியை ஏற்பதுதான் நமது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நமக்கே நம்மீது நம்பிக்கையும், நமது மொழியின் மீது பற்றும் ஏற்படாவிட்டால் நமது மொழியின் அழிவுக்கு நாமே பொறுப்பாவோம் என்பதில் ஐயமில்லை.  
நமது தாய்மொழியான தமிழ் இப்போது உலகளாவிய மொழியாகத் திகழ்கிறது. உலக நாடுகள் பலவற்றில் தமிழர்கள் பரவி செல்வாக்குடன் திகழ்கிறார்கள்.
 இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு, ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் பெருமளவிலும் மற்றும் இதர தென்கிழக்காசிய நாடுகளிலும் ஆசுதிரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, மேற்கிந்தியத்  தீவுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அரேபிய நாடுகளிலும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள்.                                               
உலகில் ஆங்கிலேயருக்கு அடுத்தபடியாகப் பல நாடுகளில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தமிழர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு உள்ளது.  இந்திய ஒன்றிய அரசில் அமைச்சர்களாகவும், கேரளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், உயர் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு, ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் தமிழர்கள் அரசு பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் குடியரசு தலைவராகவே ஒரு தமிழர் பதவி வகித்தார். பல நாடுகளில் அமைச்சர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், பொறுப்பு வாய்ந்த பதவி வகிப்பவர்களாகவும் தமிழர்கள் இருந்த போதிலும் தமிழினத்திற்குரிய மதிப்பு உலக அரங்கில் இல்லை.
பிரிட்டிஷ், கயானா, மொரீசியசு, ரீயூனியன், மேற்கிந்தியத் தீவுகள் போன்றவற்றில் வாழும் தமிழர்கள் தங்கள் மொழியை முற்றாக மறந்த நிலையிலும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்க விரும்பாத தவிப்புடனும் வாழ்கிறார்கள். அவர்களுக்கேற்பட்ட இந்த நிலை தமிழ்நாட்டுத்  தமிழர்களிடமும் விரைந்து பரவி வருகிறது. தமிழ்நாட்டில் தமிழ் ஏற்றம் பெற்றாலொழிய பிற நாடுகளில் வாழும் தமிழர்களும், தமிழும் ஒருபோதும் ஏற்றம் பெற முடியாது.