உயர்நீதிமன்றத் தீர்ப்பு மக்கள் உணர்வின் எதிரொலி அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2019 15:03

சேலம் – சென்னை 8வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் உணர்வை எதிரொலிப்பதாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பில் கீழ்க்கண்டவற்றை  நீதியரசர்கள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி  சுப்பராயன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-சேலம் - சென்னை இடையே மூன்று நெடுஞ்சாலைகள் இருக்கும்போது புதிதாக 8  வழிச்சாலையின் தேவை என்ன?
-    ரூபாய் 10,000 கோடி செலவிலான இத்திட்டத்தை செயற்படுத்தும் முன்பாக நடுவண்  அரசு அதிக கவனம் எடுத்திருக்கவேண்டும். ஆனால், வெறும் 60 நாட்களில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சாதக, பாதகங்கள் முற்றிலுமாக ஆராயப்படவில்லை.
-    இத்திட்டத்தால் அடர்ந்த வனப்பகுதிகளும், அங்கு வாழும் அரிய பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும். இச்சாலை செல்லும் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகளில் அரியவகை கனிமங்கள் உள்ளன. அவை சூறையாடப்படுவதற்கும், மரக்கடத்தலுக்கும் வழிவகுக்கப் பட்டுவிடும்.
-    குளங்கள், குட்டைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள், வேளாண்மை நிலங்கள், பண்ணைகள், குடியிருப்புகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.  வேளாண்மையை நம்பி வாழும் மக்களைச் சட்டரீதியாகப் பாதுகாக்கவேண்டும். வளர்ச்சி என்ற பெயரால் வேளாண்மை அழிவதற்கு இடம் கொடுக்க முடியாது. நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கையும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்துள்ளதால் அதை வகைமாற்றம் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நிலத்தைத் திருப்பிக்கொடுக்கவேண்டும்.
-    சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெறவில்லை. பொது மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை.  
-    எத்தகைய விதிமுறைகளையும் பின்பற்றாமல் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அறிவிப்பாணை வெளியிட்டது சட்டத்திற்குப் புறம்பானதாகும்.
இத்தீர்ப்பை மதிப்பதுடன் உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து  மேற்கொள்ளவேண்டும். இச்சாலை எதிர்ப்புப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவேண்டும்.                               -நெ.