அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் படம் மட்டுமே இடம்பெறவேண்டும் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 31 மே 2019 14:33

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மாநாட்டில் பழ. நெடுமாறன் வேண்டுகோள்
"உலகம் முழுவதிலும் செயல்பட்டுவரும் திருக்குறள் அமைப்புகளின் உறவு பாலமாக, வழிகாட்டி அமைப்பாக - தமிழ், இனம், மொழி, பண்பாடு மற்றும் தமிழ்மண் பாதுகாப்பு இயக்கமாகத் திகழும் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு திருக்குறள் சமுதாயத்தைப் படைத்திட வேண்டும் என்ற உயர் நோக்கத்தைத் தனது குறிக்கோளாகக் கொண்ட அமைப்பாகும்.

மிகக் குறுகிய காலத்தில் நாடெங்கிலும் உள்ள திருக்குறள் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு ஒன்று திரட்டியுள்ள நிர்வாகிகளை மனமாறப் பாராட்டுகிறேன். அவர்களின் தொண்டிற்கு உலகத் தமிழர் பேரமைப்பு உறுதுணையாக இருக்கும் என உறுதி கூறுகிறேன்".
வடமொழியின் தாக்கம் தமிழில் படிவதைத் தொல் காப்பியர் தடுத்து நிறுத்தினார். வடவரின் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழரின் தனித்தப் பண்பாட்டை அழியாமல் காத்தவர் திருவள்ளுவர். நூற்றுக்கணக்கான புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே சங்க இலக்கியமான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டுமாகும். இவையாவும் தொகை நூல்களே. ஆனால், தனியொரு புலவரால் படைக்கப்பட்ட முழுமையான முதல் தமிழ் இலக்கியம் திருக்குறளேயாகும்.
தொல்காப்பியமே வள்ளுவருக்கு மேல்வரிச் சட்டமாயிற்று. தொல் காப்பியம் கூறும் நான்கு வகை பாவினங்களும் அறம், பொருள், இன்பம் முதலிய மூன்று பொருட்கண்ணே அமையவேண்டும் என தொல்காப்பியம் கூறுகிறது. அதைப் பின்பற்றி அறம், பொருள், இன்பம் என முப்பாலாக தனது இலக்கியத்தை வள்ளுவர் எழுதினார். வீடு அல்லது மோட்சம் என்னும் நான்காம் உறுதிப் பொருள் குறித்து தொல்காப்பியமோ, திருக்குறளோ எதுவும் கூறவில்லை. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூற்பயன் என 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் முதன்முதலாகக் கூறுகிறது. சைவத் திருமுறைகளிலும், வைணவ திவ்வியப் பிரபந்தங்களிலும் நாற்பால்  குறித்துப்  பேசப்படுகிறது.  தமிழில் முப்பாலோடு வீடு இணைந்த நாற்பால் என்னும் கருத்தியல் 7ஆம் நூற்றாண்டுக்கு முன் இல்லை.
தனது நூலை திருவள்ளுவர் தமிழில் எழுதினார். ஆனால், தமிழர்களுக்காக மட்டும் எழுதவில்லை. உலகம் முழுவதிலும் வாழும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலான அறக் கருத்துக்களை வலியுறுத்தினார். அதனால்தான் உலகப் பொதுமறை என்ற பெருமையினை திருக்குறள் பெற்றிருக்கிறது.  2050 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் வாழ்ந்த வள்ளுவர், தான் வாழ்ந்த நாட்டின் மலைகள், ஆறுகள், இயற்கை வளங்கள் ஆகியவற்றை அடையாளம் காட்டும் எவ்விதமான சொற்களையும் மறைமுகமாகக் கூட தனது நூலின் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அவர் இயற்றிய 1330 அருங் குறட்பாக்களில் எந்தவொரு இடத்திலும் மொழி, இனம் மற்றும் சமயம் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் உலகு, உலகம் என்றே குறிப்பிடுகிறார். 20க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சொற்களை எடுத்தாளுகிறார்.  
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு - திருவள்ளுவர் 2050 ஆம் ஆண்டு விழா மாநாடு
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த 2050ஆம் ஆண்டு விழா மாநாடு 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று கன்னியாகுமரி விவேகாநந்தர் மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.  
இம்மாநாட்டில் மூத்த தலைவர் நல்லகண்ணு, மூத்த தமிழறிஞர் இளங்குமரனார், தவத்திரு மருதாசல அடிகளார், தவத்திரு குமரகுருபர அடிகளார், தமிழறிஞர்  சிவ பத்மநாபன்,  மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோருக்கு திருக்குறள் சான்றோர் விருதுகள் வழங்கப்பட்டன. உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் இயக்குநர் வி. சேகர், பொருளாளர் செவ்வியன், பொதுச் செயலாளர் ஆதிலிங்கம், ஒருங்கிணைப்பாளர் புலவர் சி. பன்னீர்செல்வம் ஆகியோர் திருக்குறள் சான்றோர்களுக்குப் பொன்னாடைகள் போர்த்தியும், விருதுகள் வழங்கியும், நூல்களை அளித்தும் சிறப்புச் செய்தனர்.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திரளான திருக்குறள் அன்பர்களும், திருக்குறள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். விழா மலரை பழ. நெடுமாறன் அவர்களும், திருக்குறள் கூட்டமைப்பின் கொள்கை விளக்கம் மற்றும் நெறிமுறைகளை நல்லகண்ணு அவர்களும், உறுப்பு அமைப்பினர்களின் முகவரி கையேட்டினை குமரி அனந்தன் அவர்களும், திருக்குறள் நெறிகரணங்கள் தமிழ் மரபு இல்லற நிகழ்வு முறைமை நூலினை தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும், திருக்குறள் அரசு திங்கள் இதழினை தவத்திரு குமரகுருபர அடிகளாரும் வெளியிட சான்றோர் பலர் பெற்றுக்கொண்டனர்.
இதை தொடர்ந்து மறுநாளும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அறிஞர் பெருமக்கள் பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
முடியாட்சி நிலவிய காலத்தில் வள்ளுவர் வாழ்ந்திருக்கவேண்டும். எனவே, அரசனுக்கும், அவரின் அமைச்சர்களுக்கும் உரிய நல்லாட்சி முறைகள், கடமைகள் ஆகியவைக் குறித்து வள்ளுவர் விரிவாகக் கூறுகிறார். முடியாட்சிக்கு அவர் கூறிய அறவுரைகள், இன்று குடியாட்சி நடைபெறும் இக்காலகட்டத்திற்கும் முற்றிலும் பொருந்தும் வகையில் அமைந்திருப்பது அவரது தொலைநோக்கிற்குச் சான்றாகும்.
திருக்குறளுக்குப் பல்வேறு பெயர்களைப் பிற்காலச் சான்றோர்கள் சூட்டினார்கள். மணிமேகலை காப்பியம் பாடிய சீத்தலைச்சாத்தனார் "அறம் பாடிற்றே” எனத் திருக்குறளை அறம் என்ற பெயரால் குறிப்பிடுகிறார். புத்த சமயத்தைச்  சார்ந்த சீத்தலைச்சாத்தனார் அவர்கள் திருக்குறளை அறநூல் எனப் போற்றுவது சிறப்பானதாகும். அனைத்துச் சமயத்தினரும் ஏற்கத் தக்க நூலே திருக்குறளாகும்.
உலகச் சான்றோர் பலராலும் ஒருங்கே பாராட்டப்பெற்ற ஒரே நூல் திருக்குறளேயாகும்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
எனப் பாரதி செம்மாந்து பாடினார். அத்தகைய சிறப்புமிக்க வள்ளுவரைவிடத் தமிழருக்குச் சிறந்த அடையாளம் வேறு யாரும்  இல்லை.
தொன்மைமிக்க தமிழினத்தின் பேரடையாளமாகவும், மிகச்சிறந்த வழிகாட்டியாகவும் திகழும் திருவள்ளுவரை நாள்தோறும் நெஞ்சார நினைத்துப் போற்றும் வகையில் நாம் செயல்பட்டாகவேண்டும். உலகளவில் தமிழுக்கும், தமிழருக்கும் பெருமைத் தேடித்தந்த வள்ளுவப் பெருந்தகைக்கு நமது நன்றியினை செலுத்த வேண்டியது நமது  தலையாய கடமையாகும்.
 இம்மாநாட்டில் பெருந்திரளாகக் கூடியிருக்கும் திருக்குறள் தொண்டர்கள் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன்.
"தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு தொடர்பான கட்டடங்கள், நீதிமன்றங்கள் போன்ற சகல கட்டடங்களிலும் திருவள்ளுவர் படம் மட்டுமே மாட்டப்படவேண்டும். தமிழ், தமிழர் ஆகியோரை அடையாளப்படுத்த திருவள்ளுவர் ஒருவரே போதும். அவர் படத்தை மாட்டுவதின் மூலம் நமக்கு நாமே பெருமைத் தேடிக் கொள்கிறோம். அவரைவிடச் சிறந்த தலைமையோ அல்லது தகைமையோ தமிழருக்கு வேறு யாரும் கிடையாது".
தற்போது அரசு தொடர்பான கட்டடங்கள் அனைத்திலும் முதலமைச்சர் யாரோ அவரின் படம் மட்டுமே காட்சியளிக்கின்றன. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேர்தலில் புதிய முதல்வர் பொறுப்பேற்றால் அப்போது முன்னாள்  முதல்வரின் படங்கள்  அகற்றப்பட்டு புதிய முதல்வரின் படங்களை மாட்டப்படுகின்றன. இது ஒருவகையில் முன்னாள் முதல்வருக்கு இழைக்கப்படும் அவமானமாகும். தேவையற்ற இந்த பழக்கம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் தொடங்கியது. இங்கிலாந்தின் அரசர் அல்லது அரசி ஆங்கியோரின் படங்கள் அரசுக் கட்டடங்களில் இடம்பெற்றன. அந்நியர் ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த பழக்கம் நாடு விடுதலைப் பெற்றப்பிறகும் நீடித்தது. மன்னருக்குப் பதில் முதல்வர், குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றன.
பண்டைய தமிழகத்தில் மன்னாதி மன்னர்களாக  விளங்கிய இராசராசன், இராசேந்திரன் போன்றோரின் ஓவியங்களோ அல்லது சிலைகளோ அவர்கள் எழுப்பிய கோவில்களில் இருகரம் கூப்பி இறைவனை வழிபடுவதுபோல் அமைக்கப்பட்டிருந்தன. வேறு எங்கேயும் அவர்களின் ஓவியங்களோ, சிலைகளோ அமைக்கப்படவில்லை.
ஆங்கிலேயர் புகுத்திய வேண்டாத பழக்கம், மக்களாட்சி நடைபெறும் இக்கால கட்டத்தில் நமக்குத் தேவைதானா? இதை மாற்றுவது நமது தலையாய கடமையல்லவா?