நாம் வீர மரபினர் - தமிழர்களே உணர்வீர்! -பழ. நெடுமாறன் அச்சிடுக
ஞாயிற்றுக்கிழமை, 01 செப்டம்பர் 2019 11:21

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் வாளோடு முன்தோன்றி மூத்த குடி” என புறப்பொருள் வெண்பா மாலைக் குறிப்பிடுவது மிகையன்று. வரலாற்றின் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழர் தனது வீரத்தை நிலைநிறுத்தி வந்துள்ளனர்.

சங்க கால மூவேந்தரான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இமயம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னர்களை வென்றடக்கியச் செய்திகளைச் சங்கப் புலவர்கள் தாம் பாடிய பாடல்களில் பதிவுச் செய்துள்ளனர்.
சங்க கால சேர மன்னனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயமலையில் சேரர்க் குடிச்சின்னமான வில்லைப் பொறித்து விட்டு மீண்டான் என பதிற்றுப்பத்து நூலின் பதிகம் கூறுகிறது. இமயம் நோக்கி படையெடுத்துச் சென்றவன் அங்கேயிருந்து தன் நாட்டை நோக்கி திரும்பிய வழியிலும் நெடுஞ்சேரலாதன் பல மன்னர்களுடன் பொருது வென்றான். இந்த வெற்றிகளில் ஆரியர்களை அடிபணியும்படி இவன் புரிந்த வீரச்செயல் பதிகத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து பாடல்களிலும் இந்த வெற்றிச் செய்திகள் கூறப்பட்டுள்ளன.
இமயத்தில் இவன் வில்லைப் பொறித்தச் செய்தியை கூறும் பதிகம் அப்பகுதியில் தனது ஆட்சியை நிலைநாட்டியதை  "தமிழகம் விளங்கத் தன் கோல் நிறீஇ” எனப் பாடுகிறது. (பதிற். பதி. 2:5-6)  எனவே இவன் இமயம் முதல் குமரி வரை வென்றான் என்பதும், எல்லையற்ற அளவுக்கு இவன் நாடு விரிந்து பரந்து இருந்தது எனப் பாடல்கள் கூறும் செய்திகள் வரலாற்று உண்மைகளாகும்.
இவனின் மகன் சேரன் செங்குட்டுவன் ஆவான். பதிற்றுப்பத்து குறிப்பிடும் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் கூறும் செங்குட்டுவனும் ஒருவனே். தனது தந்தையைப் போல இவனும் பல மன்னர்களுடன் போர் புரிந்து வென்றடக்கியப் பெருவீரனாகத் திகழ்ந்தான்.
இவனது வடநாட்டுப் படையெடுப்பு மூன்று முறை நிகழ்ந்தது. இம்மூன்று படையெடுப்பிலும் ஆரிய மன்னர்களை வென்றடக்கினான். தென் தமிழ்ப் பாவை என சிலப்பதிகாரம் போற்றிய கண்ணகிக்கு கோட்டம் கட்டுவதற்கு இவன்முடிவு செய்தபோது, பத்தினி தெய்வத்தின் படிமம் உருவாக்கு வதற்கான கல்லை இமயத்திலிருந்து எடுப்பதெனத் திட்டமிட்டான். இவனது வடநாட்டு மூன்றாம் படையெடுப்பு அதற்காகத்தான் தொடங்கியது. இவனது படைத் தலைவனாக வில்லவன் கோதை திகழ்ந்தான்.
சேரன் செங்குட்டுவனின் படை கங்கையாற்றைக் கடக்க சதகர்ணி என்னும் மன்னர்கள் உதவினர். சிலப்பதிகாரம் இவர்களை நூற்றுவர் கன்னர் என அழைக்கிறது.
வடநாட்டு ஆரிய மன்னர்கள் ஒன்றுதிரண்டு கனகவிசயர் தலைமையில் செங்குட்டுவனின் படையை எதிர்த்தனர். கடும் போர் நிகழ்ந்தது. ஆனால் 18-நாழிகைப் பொழுதில் (சுமார் 7 மணி நேரம்) பகைப்படையை முறியடித்து சேரர் படை வென்றது. கனகவிசயரும் மற்றும் 52 ஆரிய மன்னர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
தனது முன்னோர்களைப் போலவே இமயத்தில் வில்லைப்பொறித்ததோடு கல்லெடுத்து கனகவிசயர் தலையில் ஏற்றிக் கங்கையில் நீராட்டி சேரநாடு கொண்டு வந்து கண்ணகிக்கு சிலை நாட்டி கோவில் கட்டி வழிபாடு செய்தான். இந்த விழாவில் தமிழ்நாட்டு அரசர் உள்பட குடகநாட்டு கொங்கர், மாளுவநாட்டு வேந்தர், இலங்கை அரசர் கயவாகு ஆகியோரும் கலந்துக் கொண்டனர். தத்தமது நாடுகளிலும் கண்ணகி கோவில்கள் கட்டுவதாக அவர்கள் உறுதி கூறினர். கனகவிசயரையும் அவர்களுடன் சிறைப்பட்ட ஆரிய அரசர்களையும் செங்குட்டுவன் விடுதலை செய்து திருப்பி அனுப்பினான் என சிலப்பதிகாரம் இவனை வியந்துப் போற்றுகிறது.
சோழன்
பொற்கோட்டு இமயத்துப் புலி பொறித்து ஆண்ட சங்ககாலச் சோழன் திருமாவளவன் என புலவர்களால் போற்றப்பட்டவன் கரிகாற்சோழன் ஆவான். இவனதுச் சிறப்பினை சங்ககாலப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை விரிவாகக் கூறுகிறது. ஏழு மன்னர்களை இவன் வென்றடக்கினான் என பட்டினப்பாலைப் பாடுகிறது.
இவனிடம் பெரும் கடற்படையும் இருந்தது. இலங்கையின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டு அரசனை வென்றடக்கி 12-ஆயிரம் சிங்களரைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்து காவிரி ஆற்றின் இருகரைகளையும் கட்டினான். இந்த நிகழ்ச்சியை இலங்கையின் கால்வழிச் செய்திக்கோவை ஒன்று குறிப்பிடுகிறது. இதே நிகழ்ச்சியை கரிகாற்சோழன் வழிவந்தவர்கள் என தங்களைக் கூறிக்கொள்ளும் தெலுங்கச் சோழர்களின் கல்வெட்டுகளும் கூறுகின்றன.
பாண்டியன்
சங்ககாலப் பாண்டியர்களில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் சிறந்தவன். சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பாண்டியன் நெடுஞ்செழியன் இவனே. கோவலனை கொலை செய்து நீதி தவறியதை உணர்ந்து அரசு கட்டிலில் அமர்ந்த நிலையிலேயே இவன் உயிர் துறந்ததைச் சிலப்பதிகாரம் சிறப்பித்துப் பாடுகிறது.  
ஆரியப்படை கடந்த என்னும் அடைமொழிப் பெற்ற இவனும் புறநானூற்றைத் தொகுத்தவர் குறிப்பிடும் ஆரியப்படை கடந்த என்னும் தொடரும் ஒன்றாக அமைவதால் இவ்விருவரும் ஒருவரே என அறிஞர் மயிலை சீனி.வெங்கடசாமி கருதுகிறார்.
மன்னர்களின் வீரத்தைப் பற்றி மட்டுமல்ல, மக்களின் வீரத்தையும் சங்ககாலப் புறப்பாடல்கள் விதந்து போற்றுகின்றன. களங்களில் வீரத்தை நிலைநிறுத்தி உயிரை ஈகம் செய்து அழியாத புகழ்பெற்ற வீரர்களுக்கு நடுகல் நாட்டி மக்கள் வழிப்பட்டனர். இவ்வீரர்களுக்குப் புலவர்கள் புகழ்ப் பாமாலைகள் சூட்டினர்.
முதல் நாள் போரில் பெற்ற தந்தையையும், அடுத்த நாள் போரில் உடன் பிறந்தானையும், மறுநாள் போரில் தனது கைப்பிடித்த காதல் கணவனையும் இழக்க நேர்ந்தபோதிலும், கொஞ்சமும் கலங்காது மறுநாள் போருக்குத் தனது மகனான சிறுவனின் கையில் வேல் தந்து உச்சிமுகர்ந்து போர் முனைக்கு அனுப்பிய வீரத் தாயையும், முதுகில் புண்படாமல் மார்பில் வேல் பாய்ந்து மாண்டு கிடந்த மகனைக்கண்டு பொங்கியெழும் துயரத்திற்கும் அப்பால் மகிழ்ச்சிக் கொண்ட தாயைப் பற்றியும் புறநானூற்றுப் பாடல்கள் பதிவு செய்துள்ளன.
இத்தகைய வீரத்தாய்மார்கள் வழிவந்த கண்ணகி, மண்மகள் மீது தனது சீரடி படியாமல் பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். தனது கணவன் கோவலனோடு பிழைப்புத் தேடி சோழ நாட்டைத் துறந்து பாண்டிய நாடு சென்றாள். பாண்டியன் தலைநகரான மதுரையில் தனது கால் சிலம்பை விற்று வரச் சென்ற தனது கணவன் கோவலன் கள்வன் என பொய்க் குற்றச்சாட்டுக்குள்ளாகி கொலையுண்டான் என்பதை அறிந்தவுடன் பொங்கி எழுந்தாள்.  தான் இருப்பது அந்நிய நாடு என்பதைப் பற்றி கவலைப்படாமல் பாண்டிய நாட்டின் மன்னனை நேரில் கண்டு நீதிக்கேட்க அவள் சென்ற திறத்தினை சிலப்பதிகாரம் வியந்து பாடுகிறது.
தலைவிரிக்கோலத்துடனும் கனல் பறக்கும் விழிகளுடனும் பாண்டிய மன்னன் அவையில் புகுந்து அவனுக்கு நேர் நின்று
"தேரா மன்னா செப்புவ துடையேன்            
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்              
வாயிற் கடைமணி நடுநா நடுங்க                  
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெற்ற புதல்வனை ஆழியின் மடித்தோன்                                                  
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்”
என நெஞ்சத்துணிவுடனும், சற்றும் அஞ்சாமலும் களன்றாள்.  நீதியை நிலை நிறுத்தியதோடு தான் ஒரு வீரமகள் என்பதை கண்ணகி நிலை நாட்டினாள்.
வடவரை விரட்டியவரை வென்றத் தமிழர்
வடநாட்டுப் பேரரசனான அர்ச வர்த்தனன் தென்னாட்டையும் கைப்பற்ற வேண்டும் என பெரும்படைக் கொண்டு வந்த போது நர்மதை ஆற்றின் கரையில் சளுக்கிய பேரரசின் மன்னனான இரண்டாம் புலிகேசி அவனுடன் பொருது தோற்கடித்து விரட்டியடித்தான்.
பல்லவ பேரரசனான நரசிம்மவர்மனின் படைத் தளபதியான பரஞ்சோதி வாதாபி மீது படை எடுத்துச் சென்று இரண்டாம் புலிகேசியுடன் போராடி அவனை வென்று தமிழரின் வீரத்தை நிலைநாட்டினான். அர்ச வர்த்தனைத் தோற்கடித்த புலிகேசியை தமிழனான பரஞ்சோதி வென்று அடக்கினான்.
இதற்கு முந்தியக் காலகட்டத்தில் அசோகப்பேரரசன் கலிங்கநாட்டின் மீது படை எடுத்தான். ஆனால் கலிங்கப்படை வீரர்கள் வீரத்துடன் போராடி மடிந்த காட்சி அசோகனைச் சிந்திக்க வைத்துத் திரும்ப வைத்தது.
பேரரசனான அசோகனால் வெல்ல முடியாத கலிங்கத்தை முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமான் வென்ற செய்தியை செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியாகப் பாடினார்.
பிற்காலச் சோழர் ஆட்சியில் புகழ்ப்பெற்ற பெருவேந்தனாகத் திகழ்ந்த பெருமைக்குரியவன் முதலாம் இராசராச சோழன் ஆவான். (கி.பி. 9985-1014) இவனது மெய்கீர்த்தி இவன் வென்ற நாடுகளின் பட்டியலைக் கூறுகிறது. பாண்டியநாடு, சேரநாடு, தொண்டைமண்டலம், கங்கமண்டலம், கொங்குமண்டலம், நுளம்பப்பாடிநாடு, கலிங்கநாடு, ஈழநாடு ஆகியவற்றைப் போர்ப்புரிந்துக் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். தென்னாடு முழுவதிலும் இலங்கை உள்பட எங்கும் புலிக்கொடிப் பறந்தது.
இவனது மகன் முதலாம் இராசேந்திரன் பேராற்றல் பெற்றப் பெருவீரனாகத் திகழ்ந்தான். இவன் ஆட்சியில் மேலைச் சளுக்கியர்களின் ஆட்சிக்குட்பட்ட இடைத்துறைநாடு, வனவாசி, கொள்ளிபாக்கை, மண்ணைக்கடக்கம் ஆகியவற்றை இராசேந்திரன் கைப்பற்றினான். ஈழநாட்டை முழுமையாகக் கைப்பற்றி சிங்கள மன்னர் குலத்திற்கு உரிமையாக இருந்த சிறந்த முடியினையும், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இராசசிம்மப் பாண்டியன் இலங்கையின் வேந்தனிடம் அடைக்கலமாகக் கொடுத்துச் சென்ற பாண்டிய முடியையும், இந்திரன் ஆரத்தையும் இவன் கைப்பற்றினான். சேரநாட்டிற்கு உட்பட்ட முந்நீர் பழந்தீவையும் கைப்பற்றினான். பின்னர் வடநாடு நோக்கிப் படையெடுத்துச் சென்று இன்றைய மத்தியப்பிரதேசத்தில் உள்ள வத்ச இராச்சியம், ஒட்டரதேசம், கோசலநாடு ஆகியவற்றைக் கைப்பற்றினான். இன்றைய வங்காளத்தில் உள்ள தண்டபுத்தி, தக்கணலாடம், உத்திரலாடம் ஆகியவற்றையும் இவனின் படைகள் வென்றன. வங்காளத்தை ஆண்டு வந்த பால அரசுக் குலத்தைச் சேர்ந்த மகிபாலன் என்னும் பேரரசனையும்  தோற்கடித்து, தோல்வியுற்ற மன்னர்களின் தலைகளில் கங்கை நீர் நிரம்பிய குடங்களை ஏற்றி வைத்து சோழநாட்டிற்குக் கொண்டு வந்தான். இந்த பெரு வெற்றியின் காரணமாக கங்கை கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டான்.
இராசேந்திரன் தன்னுடைய கடற்படையின் மூலம் கடல் கடந்த நாடுகளான கடாரம், சிரீவிசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வலைபங்கூர், தக்கோலம், தமாலிங்கம், இலாமுறிதேசம், நக்கவாரம் ஆகிய நாடுகளையும் கைப்பற்றினான். மேற்கண்ட அனைத்து நாடுகளும் இன்றைய மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பல்வேறு பகுதிகளாகும். நக்கவாரம் என்பது இப்போது நிக்கோபார் என வழங்கப்படுகிறது
கடல்கடந்து பல நாடுகளையும் வென்றடக்கி சோழப் பேரரசை தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரை விரிவாக்கிய பெருமை முதலாம் இராசேந்திரனுக்கு மட்டுமே உண்டு. இந்திய நாட்டில் பேரரசர்களாக விளங்கிய அசோகச் சக்கரவர்த்தி, அக்பர் சக்கரவர்த்தி போன்றவர் கூட கடல் கடந்த நாடுகளை வென்றவர்கள் அல்லர். கடல் கடந்த நாடுகளை அடக்கியாண்ட மாபெரும் மன்னனாகத் திகழ்ந்தப் பெருமை முதலாம் இராசேந்திரனுக்கு மட்டுமே உண்டு.
மன்னராட்சிக்கு எதிரான முதல் புரட்சிக்குரல்
மறவழியில் களத்தில் போராடுவது மட்டுமே வீரமல்ல. அறவழியில் போராடுவதற்கும் நெஞ்சுரம் வேண்டும். அதுவும் தமிழருக்கு இருந்தது. உலக முழுவதிலும் மன்னராட்சிக்கு எதிரான புரட்சிகள் மிகப் பிற்காலத்தில் தான் வெடித்தெழுந்தன. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டு மன்னனுக்கு எதிராக பிரஞ்சுப் புரட்சி வெடித்தது. கி.பி. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் ஜார் மன்னனுக்கு எதிரான அக்டோபர் புரட்சி மூண்டது.
ஆனால் தமிழ்நாட்டில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலேயே உலகத்தில் மன்னராட்சிக்கு எதிரான முதல் புரட்சிக்குரல் எழுந்தது. சமணராக இருந்த திருநாவுக்கரசர் சைவராக மாறியவுடன் சமணத்துறவிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்லவ மன்னனான மகேந்திரவர்மனிடம் முறையிட்டார்கள். மன்னனும் தனது படைவீரர்களை ஏவினான் தன் முன் வந்து நின்ற காவலர்களிடம்
்நாமார்க்குங் குடியல்லோம்: நமனை யஞ்சோம்:
நரகத்தி லிடர்ப்படோம்; நடலை யில்லோம்;
ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோ மல்லோம்;                               
இன்பமே; யெந்நாளும் துன்ப மில்லை;”
என நெஞ்சுரத்துடன் கூறினார்.
உலகில் மன்னராட்சிக்கு எதிராக முதன்முதலில் புரட்சிக்கொடியை உயர்த்திய பெருமை தமிழரான நாவுக்கரசரையே சாரும்.
அந்நிய ஆட்சிக்கு எதிரான போராட்டம்
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றை ஐரோப்பிய அரசுகள் தமது படை வலிமையால் கைப்பற்றி அடிமை நாடுகளாக்கி ஆண்டன. இந்தியாவும் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டது. அந்நிய அடிமைத்தளையை தகர்த்தெறிவதற்காக 1857-ஆம் ஆண்டில் நடைபெற்றச் சிப்பாய்க்கலகம் முதல் சுதந்திரப் போராட்டமாகச் சித்தரிக்கப்படுவது வரலாற்றுப் பிழையாகும். இந்தியாவில் ஏன்? ஆசியாவிலேயே முதன்முதலாக ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக போர்க் கொடியை உயர்த்திய பெருமை தமிழருக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் முத்துராமலிங்க சேதுபதி, பூலித்தேவன், மருது சகோதர்கள், அரசி வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பலரும் ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போர்தொடுத்து வீரமுடன் போராடி இறுதியாக தங்கள் உயிர்களை ஈகம் செய்தார்கள்.
அறப்போராட்டம்
வெள்ளையரின் நிறவெறி ஆட்சிக்கு எதிராகக் காந்தியடிகள் தலைமையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அறப்போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தமிழர்கள் உயிர் ஈகம் செய்தனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்றவர்கள் உயிர் ஈகம் செய்தனர்.
தமிழன் தந்த திட்டம்
நாஞ்சில் நாட்டு தமிழனான செண்பகராமன் செர்மனிக்குச் சென்று இந்தியாவின் விடுதலைக்கான அமைப்பை நிறுவி புரட்சிக்காரர்கள் பலரை ஒன்றுத் திரட்டி முதலாவது சுதந்திர இந்திய அரசை நிறுவினான். அந்த அரசில் அங்கம் வைத்தவர்களுடன் மாஸ்கோ சென்று சோவியத் ஒன்றியத்தின் தலைவர் லெனின் அவர்களைச் சந்தித்து இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவி புரியுமாறு வேண்டினான்.
பிற்காலத்தில் செர்மனியில் தன்னைச் சந்தித்த சுபாசு சந்திர போசு அவர்களுக்கு இந்திய தேசிய இராணுவம் ஒன்றை அமைத்துப் போராட வேண்டும் என்ற அறிவுரையை வழங்கினான். அதன்படியே அவரும் அமைத்தார் என்பது வரலாறு ஆகும். தமிழனான செண்பகராமன் கூறியபடி நேதாஜி அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் அங்கம் வைத்தவர்களின் பெரும்பாலானோர் தமிழர்களே. அவர்களில் பலர் போராடி மாண்டனர் என்பதும் வரலாற்று உண்மைகளாகும்.
இந்திய தேசிய இராணுவத்தில் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றிய மலேயா கணபதி பிற்காலத்தில் மலேசியாவில் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்த தமிழர், மலேசியர், சீனர் ஆகிய அனைவரையும் ஒன்றுத் திரட்டி வலிமை வாய்ந்த தொழிற் சங்கத்தை அமைத்து வெள்ளை முதலாளிகளுக்கு எதிராகப் போராடினான். அதற்காக அவனை வெள்ளையர்கள் தூக்கில் இட்டனர்.
மொழிக் காக்கும் போர்
தமிழ்நாட்டில் 1939-ஆம் ஆண்டில் இந்திமொழி திணிக்கப்பட்ட போது அதற்கு எதிராக நடைப்பெற்ற தமிழ்மொழி காக்கும் போராட்டத்தில் சிறைப்புகுந்த நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறையிலேயே உயிர் துறந்தனர். மொழிப்போரில் முதன்முதலாக உயிர்த் தியாகம் செய்த பெருமை இந்த இரு தமிழர்களுக்கே உண்டு.
1965-ஆம் ஆண்டில் மூண்டெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கீழப்பழுவூர், சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை இராசேந்திரன், சத்திய மங்கலம் முத்து, ஐயம்பாளையம் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகிய தமிழ் மறவர்கள் தீக்குளித்து தங்கள் உயிரை ஈகம் செய்தனர்.
ஈழத்தமிழருக்கு ஆதரவு
சிங்கள இராணுவ வெறியர்களால் 2009-ஆம் ஆண்டில் 1,50,000த்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் பதறப்பதற படுகொலைச் செய்யப்பட்டப் போது மனம் பொறாது தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்துக்குமார், சீனிவாசன், அமரேசன், மாரிமுத்து, பாலசுந்தரம், எழில்வளவன், ஆனந்த், அப்துல் இரவூத், ஸ்டீபன் செகதீசன், தமிழ்வேந்தன், சுப்பிரமணி, இரவி, இராசசேகர், சிவானந்தம், கோகுலகிருட்டிணன், இரவிசந்திரன், இராசா, கிருஷ்ணமூர்த்தி, முருகதாசன், சிவபிரகாசம் ஆகியோர் தமிழரைக் காக்கத் தீக்குளித்து உயிர் ஈகம் செய்தனர்.
வீர மரபை நிலைநிறுத்திய பிரபாகரன்
அந்நிய ஆட்சிக்கு எதிராக முதன்முதலாக ஆயுதம் தாங்கிப் போராடிய வீரத்தமிழர்களைத் தூக்கிலிட்டு வெள்ளையர்கள் கொன்று ஒழித்தப் பிறகு தமிழர்கள் ஆயுதம் தூக்கியதாக வரலாறு கிடையாது. தமிழன் மரபு வீர மரபாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்த மறவழி போராட்டத்திலும் அறவழி போராட்டத்திலும் தங்களின் வீரத்தையும் ஈகத்தையும் நிலைநிறுத்திய வீரமரபிற்கு உரியவர்கள் தமிழர்களே என்பதை மீண்டும் நிலைநாட்டுவதற்கு தமிழீழ மண்ணில் பிரபாகரன் என்னும் வீர இளைஞன் தோன்றினான்.
சிங்கள இராணுவ வெறியர்களின் ஒடுக்கு முறையிலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பதற்கு ஆயுதம் தூக்கிய போராட்டத்தைத் தொடங்கினான். மிக இளம் வயதில் தன்னையொத்த இளைஞர்களைத் திரட்டி ஆமைகளாக, ஊமைகளாக அடங்கி கிடந்த தமிழர்களைத் தட்டி எழுப்பினான். பிறந்த பொன்னாட்டை விடுவிப்பதற்காக உயிர் ஈகம் செய்வதே உன்னதமான தொண்டு என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தொடங்கினான்.
எந்த ஒரு நாட்டின் அல்லது இனத்தின் விடுதலைப் போராட்டமும் ஏதாவது ஒரு நாட்டின் அல்லது நாடுகளின் ஆதரவின்றி வெற்றிக் காண்பது எளிதன்று. ஆனால் உலகின் எந்த ஒரு நாட்டின் துணையோ அல்லது  அரசின் ஆதரவோ இல்லாத நிலையில் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் சிறு சிறு உதவிகளைப் பெற்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தப் பெருமை பிரபாகரனுக்கு உண்டு.
தமிழீழ மண்ணின் பெரும்பகுதியை தங்களது வீரத்தினாலும், ஈகத்தினாலும் விடுதலைப் புலிகள் மீட்டு தனியாட்சியை அமைத்தனர். இதனைக் கண்டு உலகம் வியந்தது. ஆனால் இதற்கொரு சோதனை ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது பிரிட்டீசு இந்தியப் படையில் வீரர்களைச் சேர்ப்பதற்காக வீரமரபினர் என்ற பட்டியலை உருவாக்கினர். சீக்கியர்கள், பட்டாணியர்கள், கூர்க்கர், வங்காளியர்கள், இராசபுத்திரர்கள் போன்றவர்களே வீரமரபினர் என்றும் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்தது. இந்த பட்டியலில் தமிழர்கள் இடம் பெறவில்லை. சுதந்திர நாட்டிலும் இதே மரபு தொடர்ந்தது.
தலைமையமைச்சராக இருந்த இராசிவ்காந்தி சிங்கள அதிபரான செயவர்த்தினாவுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டு விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதற்காக அமைதிப் படை என்ற பெயரில் இந்தியப்படையை அனுப்பினார்.
இந்தியா விடுதலைப்பெற்ற போது ஐதராபாத் சுதேச அரசு இந்தியாவுடன் இணைய மறுத்தது. இராசாக்கர்ப்படை என்ற படையை ஐதராபாத் மன்னரான நிசாம் அமைத்தார். ஆனால் இந்திய படை மூன்றே நாட்களில் இராசாக்கர் படையை முறியடித்து இந்தியாவுடன் இணைத்தது. 1972-ஆம் ஆண்டில் வங்க தேசப் போராட்டத்தின் போது அமெரிக்க ஆயுதங்களைத் தரித்த பாகிஸ்தான் படையை 12-நாட்களில் ஒடுக்கி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வீரர்களைக் கைது செய்த பெருமை இந்தியப்படைக்கு உண்டு. வீர மரபினருக்கு முன்னிடம் கொடுத்து சேர்க்கப்பட்ட இந்தியப் படையின் 1,25,000 வீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்.
"2000- பையன்களை மட்டுமே கொண்ட புலிப்படையை சிலநாட்களில் ஒடுக்கிக் கைது செய்து சிறையில் அடைப்போம்” என தலைமையமைச்சர் இராசீவ் ஆணவத்துடன் கூறினார். ஆனால் 2-ஆண்டு காலம் படாதப் பாடுபட்டு டாங்கிப்படை, பீரங்கிப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய சகல படைகளையும் பயன்படுத்தியும் கூட பிரபாகரனின் இருப்பிடத்தின் அருகே கூட இப்படையால் நெருங்க முடியவில்லை.
உலகின் 5-ஆவது பெரியவல்லரசான இந்தியாவின் படை படுதோல்வி அடைந்து இந்தியாவுக்குத் திரும்பிய போது விடுதலைப் புலிகளின் வீரத்தை உலகம் வியந்து பாராட்டியது. புலிகளின் வீரத்தினாலும், தியாகத்  தினாலும் தமிழர்கள் வீரமரபினர் என்ற பெருமை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. தமிழினம் இயற்கையாகவே தனது குருதியில் வீரமும், ஈகமும் கலந்து ஓடும் இயல்பினைப் பெற்றது என்பதை பிரபாகரன் தலைமையில் புலிகளும், ஈழத் தமிழர்களும் நடத்தியப் போராட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டியது.
தமிழர்களாகிய நமது மரபணுக்களில் இயற்கையாகவே வீரமும், ஈகமும் படிந்துள்ளன என்பதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. நமது வரலாற்று நெடுகிலும் வீரத்தையும், ஈகத்தையும் நிலைநிறுத்தியே வந்திருக்கிறோம். நமது நாடெங்கிலும் பரவிக் கிடக்கிற நடுகற்களும், மெய்க்கீர்த்திக் கல்வெட்டுகளும் என்றும் அழியாத சான்றுகளாக நின்று நிலவி தமிழரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைய தமிழர்கள் இவற்றை உணராமல் மயங்கிக் கிடக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி விழித்தெழவைக்கும் கடமை நமக்கு உண்டு. அந்தக் கடமையை நிறைவேற்றுவோமாக.
(28-07-19 அன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற உலகத் தமிழ்க் கழகப் பொன்விழா மாநாட்டில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையின் கட்டுரையாக்கம்.)