நெஞ்சில் நிலைத்த நிகழ்வுகள் - பழ. நெடுமாறன் அச்சிடுக
வெள்ளிக்கிழமை, 08 நவம்பர் 2019 12:07


 வாடகை வீட்டில் வாழ்ந்த பெருந்தலைவர்
சென்னை தியாகராய நகரில்  உள்ள திருமலைப் பிள்ளை சாலையில் 8ஆம் எண் வீட்டில் பெருந்தலைவர் காமராசர் குடியிருந்தார்.

 

மாத வாடகை ரூ. 250 மட்டுமே. தமிழ்நாடு காங்கிரசு குழுத் தலைவராக இருந்தபோதும், தமிழக முதலமைச்சராக இருந்த போதும், அகில இந்திய காங்கிரசுத்  தலைவராக இருந்த போதும், எவ்விதப் பதவியில் இல்லாத போதும் இந்த வீட்டில்தான் அவர் வாழ்ந்தார். இங்குதான் அவர் மறைந்தார். இந்த வீட்டில் குடியேறியது பிற்காலத்தில்தான்.
சென்னை அண்ணா சாலையில் நரசிங்கபுரம் தெருவில் இருந்த ஒரு சிறு கட்டடத்தில்தான் அப்போது  தமிழ்நாடு காங்கிரசு குழுவின் அலுவலகம் இருந்தது. தலைவர் காமராசர் அங்கேதான் பல ஆண்டு காலம் தங்கியிருந்தார்.
தியாகராய நகர் வீட்டின் உரிமையாளர் கோவிந்தராசு அதற்கடுத்த 9ஆம் எண் வீட்டில் குடியிருந்தார். இரண்டு வீடுகளின் பேரிலும் அவர் ஏராளமாகக் கடன் வாங்கியிருந்தார். எனவே கடன்காரர்கள்  அவருக்கு அனுப்பும் கடிதங்கள் மற்றும் வழக்கறிஞர் முன் அறிவிப்புகள் ஆகியவை தலைவர் வீட்டிற்கும் வந்து சேரும். மேலும் எதிர்பாராததும் வேண்டாததுமான ஒரு நிகழ்ச்சியும் நடைபெற்றுவிட்டது. கோவிந்தராசுக்குக் கடன் கொடுத்த பாப்பாலால் எனும் மார்வாடி தனது பணத்தைத் திரும்ப வாங்குவதற்காக வழக்குத் தொடுத்து அவர் பக்கம் தீர்ப்பாகி வீடுகள் ஏலத்திற்கு விடப்படுவதற்கு முன் அறிவிப்பாக தலைவர் குடியிருந்த வீட்டிற்கு முன்னால் தமுக்கடித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விவரத்தைத்  தலைவரின் நெருங்கிய நண்பரான தியாகி தாமோதரன் அவர்களுக்கு உதவியாளர் வைரவன் தெரிவித்தார். அவர் உடனே தலைவர் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து பாப்பாலால் அவர்களுக்குத் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
"பாப்பாலால் நீங்க நோட்டீசு அனுப்பிய சென்னை திருமலைப்பிள்ளை சாலை எட்டாம் எண்  வீட்டில் ஒரு பெரிய தலைவர் குடியிருக்கிறார். பிழைக்கத் தெரியாத தலைவர். அவரிடமே பேசுங்கள்” என்று தொலைப்பேசியை தலைவரிடம் கொடுத்துவிட்டார்.
தலைவர் வேறுவழியில்லாமல் வாங்கிப் பேசினார். அந்த பாப்பாலாலை தலைவருக்குத் தெரியும். தலைவர் மீது அவருக்கு அதிக மதிப்பு உண்டு. தலைவர் "நான் காமராஜ் பேசுறேன். பாப்பாலால் எப்படி இருக்கீங்க” என்றார். அவ்வளவு தான். பாப்பாலால் அதிர்ந்துபோய் விட்டார். அவருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. தவித்தார், துடித்தார்.
"தலைவரே நீங்கள் இருக்கிற வீடுன்னு எனக்குத் தெரியாது. தொலைப்பேசியில் நீங்கள் ஏன் பேசினீர்கள் நான் நேரில் வாரேன்” என்று அழாத குறையாகச் சொன்னார். இக்கட்டான நிலையை உணர்ந்த தலைவர், "அதெல்லாம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தொலைப்பேசியை தாமோதரனிடம்  நீட்டினார்.
"தலைவர் வீட்டுக்கா தமுக்கு அடிக்க வைத்தேன். அந்த வீட்டை ஒரு காசு போட்டு பத்திரம் போடுங்கள். நான் கையெழுத்துப் போட்டுவிடுகிறேன்" என்று கூறி இருக்கிறார், பாப்பாலால்.
தாமோதரன் அதைத் தெரிவித்தபோது தலைவர் மறுத்துவிட்டார்.
தான் குடியிருந்த வீட்டின் முன்னால் தண்டோரா போடப்பட்டது. தலைவருக்குப் பிடிக்கவில்லை.எனவே, அந்த வீட்டை உடனடியாகக் காலி செய்துவிட்டு வேறு வீட்டிற்குச் சென்றுவிட எண்ணினார். எனவே, தமிழ்நாடு காங்கிரசு நிர்வாகிகளிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து வேறு  வீடு பார்க்கும்படி கூறினார். நீண்ட காலமாகத் தலைவர் வாழ்ந்த அந்த வீடு வரலாற்றுச் சிறப்புமிக்கது. எத்தனையோ உள்நாட்டு, வெளிநாட்டுத் தலைவர்கள் வந்துசென்ற இடம் எல்லாவற்றுக்கும் மேலாக அவரது தொண்டர்களும் மக்களும் அவரைத் தேடி வந்த  இடம். எனவே, அந்த வீட்டைத் தமிழ்நாடு காங்கிரசு கட்சியே விலைக்கு வாங்கிவிடலாம் என நாங்கள் கருதினோம். அப்போது அந்த வீட்டின் விலை இரண்டு இலட்சத்து பத்தாயிரம் மட்டுமே தான். இந்த யோசனையை நாங்கள் தெரிவித்த போது தலைவர் அதை ஏற்கவில்லை.
தலைவருக்கு மிக நெருக்கமான திருச்சி தாப்பா செட்டியார் வீட்டை விலைக்கு வாங்கி தலைவருக்குப் பிறந்த நாள் பரிசாக அளிப்பதாகக் கூறினார். அதையும்  தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.
பிறகு தாமோதரன் அவர்கள் தலைவரை ஒருநாள் தனியாகச் சந்தித்துப் பேசி நவசக்தி இதழ் சார்பில் நிதி திரட்டி அந்த வீட்டை வாங்குவதற்கு எப்படியோ தலைவரைச் சம்மதிக்க வைத்துவிட்டார். ஆனால், இந்தத் திட்டம் நிறைவேறுவதற்குள் தலைவர் மறைந்துவிட்டார்.
கடைசிவரை வாடகை வீட்டில் வாழ்ந்த ஒரே தலைவராக காமராசர்  மட்டுமே விளங்கினார். ஆனால் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சிக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் பெறுமான சத்தியமூர்த்தி பவன், தேனாம்பேட்டைத் திடல், கட்டிடங்கள் ஆகியவற்றைச் சேர்த்து வைத்தார்.
பெருந்தலைவர் காமராசர் மறைந்த முதலாண்டு நினைவாக 1976ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் நாள் சிலைத் திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சென்னை கடற்கரையில் கூடியிருந்த மாபெரும் மக்கள் திரள் நடுவே தமிழக ஆளுநர் மோகன்லால் சுகாதியா காமராசரின் சிலையைத் திறந்து வைத்தார். அப்போது அவர் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். சென்னை தியாகராய நகர், திருமலைப்பிள்ளை சாலையில் காமராசர் வாழ்ந்து வந்த இல்லத்தை வாங்கி அதை நினைவு சின்னமாகப் பாதுகாத்து வருவதென தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். மக்கள் மகிழ்ச்சியோடு கரவொலி எழுப்பி அதை வரவேற்றனர்.
எம்.ஜி.ஆர். மன நெகிழ்ச்சி
1987ஆம் ஆண்டு சூலை 29 ஆம் நாள் அன்று இந்தியத் தலைமையமைச்சர் ராஜீவ்-இலங்கை குடியரசுத் தலைவர் செயவர்த்தனா ஆகியோர் செய்துகொண்ட உடன்பாடு கையெழுத்திடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எம்.ஜி.ஆரும் கலந்து கொள்ள  வேண்டுமென்று பிரதமர் ராஜீவ் வற்புறுத்தினார். உடல்நலக் குறைவைக் காரணமாகக் காட்டி எம்.ஜி.ஆர். அந்நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. அதற்குப் பிறகு மூன்று நாட்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று எம்.ஜி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருந்தார்.
ஆனால், காங்கிரசுக் கட்சியின் சார்பில்  ராஜீவைப் பாராட்டுவதற்காக ஒரு கூட்டம்  அவசர அவசரமாக அதே நாளில் ஏற்பாடு செய்யப்பட்டது.உடன்பாட்டில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்ளாததால் இந்தப் பாராட்டு விழாவில் அவரை கலந்துகொள்ள வைத்து அதன்மூலம் இந்த உடன்பாட்டிற்கு  அவரது  ஆதரவு  உண்டு என்பதை வெளிக்காட்டுவதற்காக இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டது. வெளிநாடு செல்லும்  எம்.ஜி.ஆரை வழியனுப்புவதற்காக  விமான நிலையத்தில் பெருந்  திரளான மக்கள் கூடிவிட்டார்கள். ஆனால் அவரது  பயணத்தை  ரத்து செய்யும்படி கட்டாயப்படுத்தி பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை ராஜீவ் ஏற்படுத்தினார். அந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர். எதுவும் பேசவில்லை.
இந்தச் சூழ்நிலையில் அவரைச் சந்தித்து உடல்நலம் விசாரிப்பதுடன்,  இந்த உடன்பாடு குறித்தும் அவருக்கு விளக்கவேண்டுமென திராவிடர் கழகத்  தலைவர் கி. வீரமணி அவர்களும், நானும் முடிவு செய்தோம்.  அதற்கிணங்க ஆகஸ்டு 4ஆம் நாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களை அவருடைய தோட்டத்தில் நானும்  வீரமணியும் சந்தித்தோம். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது அவருடைய உடல்நிலை சீர்கெட்டு இருப்பதைப் பார்த்துப் பதறிப் போனோம். எங்களைப் பார்த்த அவரும் உணர்ச்சிவசப்பட்டார். என்ன விசயம்? எனச் சைகை மூலம் அவர் கேட்டபோது விவரங்களைக் கூறினோம். அத்துடன் இந்திய&இலங்கை உடன்படிக்கையில் உள்ள குறைபாடுகளையும் விளக்கி, இந்தியாவின் பிராந்திய நலன்களைக் காப்பதற்காகவே இந்த உடன்பாடு செய்யப் பட்டிருக்கிறதே தவிர ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க இந்த உடன்பாடு செய்யப்படவில்லை என்பதை எடுத்து விளக்கிக் கூறினோம்.
இறுதியாக அவரிடம் "கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் தமிழகத் திரைப்படத் துறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் சிறந்து விளங்கியிருக்கிறீர்கள். இது மட்டுமே வரலாற்றில் நிலையான இடத்தை உங்களுக்குப் பெற்றுக் கொடுத்துவிடாது. உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் பல நடிகர்கள் புகழ் பெற்றிருக்கிறார்கள். பெறக்கூடும். உங்களுக்கு முன்னர்ப் பலர் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். உங்களுக்குப் பின்னும் பல முதலமைச்சர்கள் வருவார்கள். ஆனால் உங்களுக்கு முன்னர் முதலமைச்சர்களாக இருந்தவர்களுக்கோ உங்களுக்குப் பிறகு முதலமைச்சர்களாக வருபவர்களுக்கோ கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. உங்கள் காலத்தில் ஈழத் தமிழர்கள் விடுதலை பெறப் போராடியபோது நீங்கள் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து தமிழீழம் அமைய உதவினீர்கள். உலக வரலாற்றில் தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு முதன்முறையாகக் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள் என்பதுதான் வரலாற்றில் என்றுமே அழியாத இடத்தை உங்களுக்குப் பெற்றுக் கொடுக்கும். இதைச் சொல்லவே வந்தோம்” என நான் கூறினேன்.
நான்  பேசப்பேச அவர் நெகிழ்ந்தார். ஏதோ பதில் கூற முயன்றார். அவரால் இயலவில்லை. எனவே, அருகே அமர்ந்திருந்த எனது கைகளை இழுத்துப் பிடித்து அவருடைய நெஞ்சில் வைத்துக்கொண்டு மற்றொரு கையால் தன் நெஞ்சில் அவர் தட்டிக்காட்டினார். இவ்வாறு  அவர் செய்தபோது அவர் கண்கள் கசிந்தன. எனக்கும் வீரமணிக்கும் அதைப்போலவே கண்கள் பனித்தன.
அவர் என்ன சொல்ல முயன்றார் என்பது எங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும் ஓரளவு புரிந்தது. தமிழீழ விடுதலைக்குத் தான் என்றும் ஆதரவாக இருப்பேன் என்பதுதான் அவர் கூற விரும்பிய செய்தியாகும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். நிலைமைகளை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார் என்ற மனநிறைவுடனும் அதே வேளையில் அவரது உடல் நிலையைப் பற்றிய கவலையுடனும் நாங்கள் விடைபெற்றோம்.
முதல்வர் செயலலிதாவின் கேள்வி
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களும் நானும் இணைந்து 30&12-95 அன்று சென்னைப் பெரியார் திடலில், ஈழத் தமிழர் படுகொலைக் கண்டன மாநாடு ஒன்று நடத்துவது என்று முடிவு செய்தோம். அம்மாநாட்டுக்குக் கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரையும் அழைப்பது எனத் தீர்மானித்தோம். அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி செயலலிதா அவர்களை நேரில் சந்தித்து அழைப்பதற்காக நானும் வீரமணி அவர்களும் சென்றோம். அமைச்சராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்.
முதலமைச்சர் அவர்களைச் சந்திக்க நாங்கள் சென்றபோது அன்புடன் வரவேற்று அமரும்படிக் கூறினார். மாநாடு பற்றிய பேச்சினை வீரமணி தொடங்கினார். ஆனால் முதலமைச்சர் இடைமறித்து, "மாநாடு குறித்துப் பின்னர்ப் பேசுவோம். இப்போது நெடுமாறனிடம் சிலவற்றை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் எதை வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்” எனப் பதில் அளித்தேன்.
"வேலூர்க் கோட்டையில் புலிகளை நன்குதான் வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் சிறையிலிருந்து தப்பி விட்டார்கள். அப்படித் தப்பிச் சென்றவர்கள் யாழ்ப்பாணம் சென்றவுடன் பிரபாகரன் அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டதாகச் சொல்கிறார்களே-இது சரிதானா? விடுதலைப் போராட்டம் என்பது இதுதானா?” எனக்  கேட்டார்.
நான் நிதானமாகப் பின்வருமாறு கூறினேன். "நீங்கள் முதலமைச்சர் என்ற முறையில் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களேயானால் பதில் எதுவும் கூறமாட்டேன். ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் கேட்பீர்களேயானால் சகக் கட்சித் தலைவரின் சந்தேகத்தைப் போக்க வேண்டியது எனது கடமை என்கிற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன்” என்று நான் ஆரம்பித்த போது அவர் ஒன்றும் புரியாமல் திகைத்த வண்ணம் என்னைப் பார்த்தார்.
"வேலூர்க் கோட்டையிலிருந்து நான்கு பெண்கள் உட்பட 43புலிகள்  15&08&1995 அன்று தப்பிச் சென்றனர். அவர்கள் என்ன நோக்கத்திற்காகத் தப்பினார்களோ அந்த  நோக்கத்தை இனிது நிறைவேற்றச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் தாயகத்தை மீட்கவேண்டிய போராட்டத்தில் ஈடுபட முடியாமல் சிறைக்குள் அடைந்து கிடக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்காகவே தப்பினார்கள். இப்போது தாயக விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்குக் கிடைத்த தகவலில் கொஞ்சம்கூட உண்மையில்லை. பிரபாகரன் அவர்களைச் சுட்டுக்கொல்ல உத்தரவிடவும் இல்லை. அவர்கள் சாகவும் இல்லை” என்று நான் பதில் கூறினேன்.
அம்மையாருக்கு இருந்த சந்தேகம் தீரவில்லை. "மத்திய உளவுத் துறை எனக்கு அளித்த தகவல் இது.  அப்படி இருக்கும்பொழுது அதை எப்படி நீங்கள் உறுதியாக மறுக்கிறீர்கள்?” என்ற கேட்டார்.
"மத்திய உளவுத்துறையினரோ மாநில உளவுத் துறையினரோ யாழ்ப்பாணம் செல்ல முடியாது. சிங்கள உளவுத் துறை அளிக்கும் தகவலை இவர்கள் கிளிப்பிள்ளை போலக் கூறுகிறார்கள். இதே தகவல் அந்த நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டிலும் வெளிவந்திருந்தது” என்று நான் கூறினேன்.
"அப்படியானால் ஏன் அதற்கு நீங்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை?” என முதலமைச்சர் கேட்டார்.
"மறுப்புத் தெரிவித்திருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்து  புலிகள் தப்ப உதவியதாகக் குற்றம் சுமத்தி வழக்குப் போட்டிருக்கும்” என்று நான் கூறினேன். புலிகள் தப்பிய நோக்கத்தையும், அதற்கேற்பத் தாயகம் திரும்பிக் களப்பணிகளில் ஈடுபட்டு வருவதையும் விளக்கினேன்.
அதிர்ச்சி கலந்த  வியப்புடன் என்னை ஒரு முறை பார்த்த அவர் பிறகு ்அப்படியா? எல்லோரும் நலமுடன் இருக்கிறார்களா? அந்த நான்கு பெண்கள் நன்றாக இருக்கிறார்களா எனக் கேட்டார். அனைவரும் நன்றாக இருக்கிறார்கள்” எனப் பதில் கூறினேன். இதுதான் அவரை நான் நேரில் சந்தித்துப் பேசிய முதலாவதும் இறுதியுமான சந்திப்பாகும்.
எங்களுக்குப் பயிற்சி தந்த பிரபாகரன்
1990ஆம் ஆண்டில் நான் இலங்கைக்குச் சென்று பிரபாகரன் அவர்களுடன் பல நாட்கள் தங்கியிருந்தேன். அப்போது ஒருநாள் புலிகள் சுட்டுப் பழகுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு என்னையும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களையும் பிரபாகரன் அழைத்துச் சென்றார். அவருடைய மெய்க்காவலர்களும் எங்களுடன் வந்தனர்.
சற்றுத் தொலைவில் மரத்தினால் செய்யப்பட்ட மனித உருவம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் மார்பில் பல வட்டங்கள் வரையப் பட்டிருந்தன. நடுமையத்தில் உள்ள சிறிய வட்டத்தை நோக்கிக் குறி தவறாமல் சுடவேண்டும்.  அதுதான் புலிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியாகும்.
கைத்துப்பாக்கியை வைத்துப் பிரபாகரன் சுட்டபோது நடுமையத்திலிருந்த வட்டத்தில் குண்டு பாய்ந்தது. ஒவ்வொரு முறை சுடும்போதும் குறி தப்பவில்லை. அதை நாங்கள் பார்த்து வியந்தவண்ணம் நின்ற போது பிரபாகரன்  என்னை  அழைத்து என் கையில் அந்தக்  கைத்துப்பாக்கியைக் கொடுத்தார்.என்ன வென்று புரியாமல் நான் திகைத்தபோது "அண்ணா, நீங்களும் சுட்டுப்பழக வேண்டும் என்று கூறினார்.
"எனக்கு எதற்காக  இந்தப் பயிற்சி? என நான்மறுத்தபோது அவர் விடவில்லை. வலது கையில் கைத் துப்பாக்கியைப் பிடித்த வண்ணம்இடது கையைக் கொண்டு வலது கையைத் தாங்கிப் பிடித்துக் குறி பார்த்துச் சுடவேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்லியபடியே நான் குறி பார்த்துச் சுட்டபோது நடு மையத்திற்கு அடுத்த வட்டத்தில் குண்டு பாய்ந்தபோது சுற்றிலும் நின்ற புலிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
"அண்ணா, முதல் தடவையிலேயே கிட்டத்தட்ட சரியாக  குறியைப் பார்த்துச் சுட்டுவிட்டீர்கள்” எனப் பிரபாகரன் பாராட்டியபோது நான் வெட்கமடைந்தேன். "இல்லை இல்லை, குருட்டுப் பூனை விட்டத்தில் தாவியது என்ற பழமொழிக்கு ஏற்ப எதிர்பாராத விதமாகக் குண்டு அதில் பட்டுவிட்டது” என நான் கூறினேன்.
அதைப்போலக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் சுடுவதற்குப் பிரபாகரன் பயிற்சி அளித்தார்.
உலகின் மிகச் சிறந்த தளபதி எனப் பாராட்டுப் பெற்றிருக்கிற பிரபாகரன் கையால் சுடுவதற்கு நாங்கள் பெற்ற  பயிற்சி என்றென்றும் எங்களால் பெருமையாக நினைக்கப்படும் ஒன்றாகும்.
- நன்றி - ஆனந்தவிகடன்.