அழிவின் விளிம்பில் தமிழ் - பழ. நெடுமாறன் அச்சிடுக
சனிக்கிழமை, 16 நவம்பர் 2019 14:33

 ஒரேயொரு மொழிப் பேசும் மக்களைக் கொண்ட நாடு என்பது உலகத்தில் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் பிறமொழிகளைப் பேசும் சிறுபான்மையினர் உள்ளனர். வணிகம், தொழில் ஆகியவை உலகளாவிய அளவுக்கு வளர்ந்திருக்கின்றன.

இதன் காரணமாக பிற மொழிக் கலப்பு என்பது அனைத்து மொழிகளிலும் உள்ளது. பழந்தமிழகத்தில் பூம்புகார் போன்ற நகரங்களில் 18 மொழிகளைப் பேசுவோர் இருந்தனர் எனச் சங்க நூலான பட்டினப் பாலை கூறுகிறது. ஆனால், ஒரு மொழியின் வளர்ச்சியில் பிறமொழிச் சொற்களின் கலப்பு என்பது தவிர்க்க முடியாதது. ஆயினும், அதற்கொரு எல்லை வகுத்துக் கொண்டாலொழிய அம்மொழியின் தூய்மையைக் காக்க இயலாது போகும். பிறமொழிச் சொற்களின் கலப்பு என்பது நாளடைவில் அம்மொழியைத் திரித்துவிடும். எனவேதான், தொல்காப்பியர் "வடசொற்களை தமிழ்ப்படுத்தும் முன் வடமொழி ஒலிகளை நீக்கி தமிழ் எழுத்துக்களோடு அச்சொற்களை அமைக்கவேண்டும்” என வேலி அமைத்தார்.
சங்கப் புலவர்கள் முதல் கம்பர் வரை தொல்காப்பியர் வகுத்துத் தந்த நெறியை வழுவாது பின்பற்றினர். எடுத்துக்காட்டாக, கம்பர் படைத்த காப்பியத்தில் தசரதன் என்னும் வடசொல்லை தயரதன் என்றும், கெளசல்யா என்னும் வடசொல்லை கோசலை என்றும், லெட்சுமணா என்னும் வடசொல்லை இலக்குவன் என்றும் திருத்தி அமைத்து இராமாயணத்தைப் படைத்தார். நூல் நெடுக இவ்வாறே வடசொற்களையும், வர்க்க எழுத்துக் களையும் அறவே தவிர்த்தார் கம்பர். சீவகசிந்தாமணி, குண்டலகேசி ஆகிய காப்பியங்களைப் படைத்தத் திருத்தக்கத்தேவரும், நாதகுத்தனாரும் வடமொழிகளைக் கதைகளைத் தமிழாக்கம் செய்த போதும், தொல்காப்பியர் வகுத்த நெறியைப் பின்பற்றியே படைத்தனர். இதை விரிக்கின் பெருகும்.  
உலகின் மிக மூத்த மொழியான தமிழ்மொழிக்கு வேலி அமைத்துக் காத்தார் தொல்காப்பியர். சங்கப் புலவர்களும், இளங்கோவடிகள், சாத்தனார் போன்ற காப்பியப் புலவர்களும், தேவாரங்களையும், பாசுரங்களையும் பாடி பத்தி இலக்கியத்தைப் படைத்த நாயன்மார்களும், ஆழ்வார்களும், பின்னர் தோன்றிய திருத்தக்கத்  தேவரும், சேக்கிழாரும், கம்பரும், தொல்காப்பியர் தமிழுக்கு அமைத்த வேலியைக் காத்து நமது மொழிக்கு மேலும் அரண் செய்து காத்தனர்.
தமிழ்நாட்டில் அந்நியர்களின் ஆட்சிகள் ஏற்பட்ட காலகட்டத்தில் பிற மொழிச் சொற்களின் கலப்பு என்பது தங்குதடையின்றிப் பெருகிற்று. தொல்காப்பியர் அமைத்துத் தந்த வேலியைக் காப்பதற்குத் தமிழர்கள் தவறினர்.  மணியும், பவளமும் கலந்த மணிப்பிரவாள நடை என்ற பெயரில் தமிழில் வடசொற்களும், வர்க்க எழுத்துக்களும் வலிந்து திணிக்கப்பட்டன. இந்தப் பேரழிவிலிருந்து  தமிழைக் காக்க மறைமலையடிகள் தோன்றி தனித்தமிழ் இயக்கத்தின் மூலம் தமிழைக் காத்தார். அவர் ஊட்டிய விழிப்புணர்ச்சி பாவாணர், பெருஞ்சித்திரனார், இலக்குவனார், சாலையார், சாலினியார் மற்றும் பல தமிழறிஞர்களால் நாடெங்கும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால், ஆங்கிலேயர்  ஆட்சி நமது நாட்டைவிட்டு அகற்றப்பட்டாலும் ஆங்கிலத்தின் மேலாண்மை நாளுக்குநாள் பெருகிக்கொண்டே உள்ளது. அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஆங்கில வெறி தலைவிரித்தாடுகிறது. 10ஆம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழியாகவும், ஆங்கிலம் ஒரு பாட மொழியாகவும் மட்டுமே  இருந்த நிலை மாறி, ஆங்கிலமே பயிற்சி மொழியாக அரசோச்சும் நிலை வளர்ந்தோங்கி நிற்கிறது. குக்கிராமங்களில்கூட ஆங்கில வழிப் பள்ளிகள் புற்றீசல்கள் போல பெருகிவிட்டன.  அரசுப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. அந்த இடங்களில் ஆங்கில வழிப் பள்ளிகள் முளைத்தெழுகின்றன.
தமிழக அரசு மட்டுமல்ல, தமிழ்நாட்டுப் பெற்றோர்களும் இந்த இழிநிலைக்குப் பொறுப்பாளராவார்கள். தாங்கள் ஆங்கிலம் அறியாவிட்டாலும், தங்களின் குழந்தைகள் ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என பாமரத் தமிழரும் நம்புகிறார்கள். நமது  குழந்தைகள்  தாய்மொழியான தமிழும் சரிவரத் தெரியாமலும், ஆங்கிலமும் புரியாமலும் இரண்டு கெட்டான் குழந்தைகளாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. இதனால் நமது மொழிக்கும், பண்பாட்டிற்கும், நாட்டிற்கும் விளையப்போகும் பேரழிவை யாரும் புரிந்துகொண்டதாகத்  தெரியவில்லை.
  ஆங்கிலம் நமது தமிழைப் போல தனித்து இயங்கும் மொழியோ அல்லது செவ்வியல் மொழியோ அல்ல. வணிக - தொழில் மொழியாக உலகின் பல நாடுகளில் அது பரவியதற்குக் காரணம், கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதிலும் பல நாடுகளை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி ஆண்டதேயாகும். தங்களது ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் ஆங்கிலத்தை ஆட்சியிலும் மற்றும் பல்வேறு துறைகளிலும் கட்டாயப்படுத்தித் திணித்தார்கள். ஆங்கில மொழி உலகளாவிய மொழியான பிறகு இதுவரை உலகில் 250க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்திருக்கின்றன. ஆங்கிலமொழி பிறமொழிகளை அழிக்கும் வல்லாண்மைப் படைத்த மொழியாகும்.
ஒரு மொழி என்பது, பிறரோடு கருத்துப் பரிமாற்றத்திற்கான வழி மட்டுமல்ல, ஒரு மொழியும் அதன் அடிப்படையில் அமைந்த பண்பாடும் ஒரு இனத்தின் அழிக்க முடியாத அடையாளங்களாகும். மொழி அழிந்தால் நமது பண்பாடு அழியும். இனமும் அழியும். ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்று சொன்னால், ஆயுதம் தாங்கி அந்த இனத்தைப் படுகொலை செய்யவேண்டியதில்லை. இதற்குப் பதில் அந்த இனம் பேசுகிற மொழியை அழித்தாலே போதும். இனம் அழிந்து போகும். இதை எத்தனை தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள்? என்ற கேள்விக்குக் கிடைக்கும் பதில் நம்மை அதிரவைக்கும் என்பதில் ஐயமில்லை.  
உலகில் தற்போது 7,000த்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் மொழிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளன. 2100ஆம் ஆண்டிற்குள் அவற்றுள் 90% மொழிகள் அழிந்துபோகும் என்று மொழி  அறிஞர்கள் கூறுகிறார்கள். தமது மொழி தங்களது வாழ்க்கையின் ஏற்றத்திற்குப் பயன்படாது எனக் கருதும் மக்கள், தமது தனித்தப் பண்பாட்டு அடையாளமும் தேவையற்றது எனக் கருதும் நிலைக்கு ஆளாவார்கள். அதன் விளைவாக அந்த மொழியைப் பேசும் மக்கள் நடுவே சமுதாயச் சீர்குலைவு, மனத்தளர்ச்சி, தற்கொலை, போதைப் பொருள் பழக்கம் போன்றவை பெருகும் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
சங்ககாலச் சான்றோர்கள் கூறிய அறம், மனிதநேயம் போன்ற நற்பண்புகள் சீர்கெடத் தொடங்கிய காலகட்டத்தில் வள்ளுவர் தோன்றி கொல்லாமை, தீவினை அச்சம், ஒழுக்கமுடைமை, வாய்மை, வினைத்தூய்மை போன்றவற்றை வலியுறுத்தியதோடு, சூது, கள், பரத்தமை, பிறனில் விழைதல் போன்ற தீய பண்புகளை கடிந்தும் அறநூல் யாத்தார். அவரைப் பின்பற்றி பிற பதினெண் கீழ்க்கணக்கு அற நூல்கள் படைக்கப்பட்டன. உலகத்தில் மனித சமுதாயம் எத்தகைய நன்னெறிகளைப் பின்பற்றி வாழ்வாங்கு வாழவேண்டும் என நமது அற இலக்கியங்கள் கூறிய அளவுக்கு உலகில் வேறு எந்த மொழியிலும் கூறப்படவில்லை.  
டால்ஸ்டாய், ஜி.யு.போப், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற பிற நாட்டு அறிஞர்கள் குறள் கூறிய கருத்துகளைப் போற்றிப் புகழ்ந்து தங்கள் நாட்டு மக்களிடையே அவற்றைப் பரப்பினார்கள். ஆனால், வள்ளுவன் வழிவந்த நாம் எந்தளவுக்கு அவர் தந்த அறப் பண்புகளைப் பின்பற்றுகிறோம் என்று பார்த்தால் வெட்கித் தலைகுனியவேண்டியிருக்கும். நமது தாய்மொழியான தமிழையே புறக்கணிக்கத் துணிந்துவிட்ட நமக்கு அந்த மொழியில் படைக்கப்பட்ட குறள் போன்ற இலக்கியங்கள் எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
ஒரு மொழி மறைவதற்கு முன் அந்த மொழியின் வலிமை குன்றும். ஒரு மொழியைப் பேசுபவர்கள் அதில் பிறமொழிச் சொற்களை கலந்து பேசுவதும், எழுதுவதும் எந்தளவுக்கு மிகுகிறதோ அந்தளவுக்கு அந்த மொழியின் வலிமை குறைந்துகொண்டே போகும். அம்மொழி தனது இயற்கை ஆற்றலை இழக்கும். அதன்  உச்சக்கட்டமே அந்த மொழியின் மறைவாகும்.  
தமிழ்நாட்டில் உயர்கல்விப் பயிலும் மாணவர்களும், அவர்களுக்குக் கல்விப் புகட்டும் ஆசிரியர்களும், பேராசிரியர்களும், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கிற அதிகாரிகளும், நடுநிலை கோடாது நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், அவர்களுக்கு முன் வாதாடும் வழக்கறிஞர்களும் ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். வீட்டிலும் குடும்பத்தினரிடையே பேசும்போதும் ஆங்கிலத்தில் அல்லது ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடுகிறார்கள். சிற்றூர்களில் வாழும் மக்களிடையேகூட அவர்களின் பேச்சுமொழியில் ஆங்கிலச் சொற்கள் இடம்பெறுவது நாளுக்குநாள் பெருகிக் கொண்டே போகிறது.
நமது ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் ஆங்கிலச் சொற்களும் மற்றும் பிறமொழிச் சொற்களும் கலக்கும் நிலை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. ஆங்கிலச் சொல் கலப்பு மட்டுமல்ல, நமது நடையுடை பாவனை அனைத்துமே ஆங்கிலமயமாகத் திகழ்கின்றன. நமது இசை, நடனம் போன்ற நுண்கலைகள் அந்நியமயமாக்கப்பட்டுவிட்டன.
தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டுப் பழக்கவழக்கங்களும், உணவுகளும் அடியோடு மாறிக்கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக நமது உடைகளில் அந்நியத்தனம் புகுந்து நமது அடையாளமே அடியோடு மாறிவிட்டது. கடைவீதிகளில் உள்ள பெயர்ப்பலகைகள் ஆங்கிலமயமாக உள்ளன. தமிழ்நாட்டுக் கடைத்தெருவா? அல்லது இங்கிலாந்து நாட்டின் கடைத்தெருவா? என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்தப் போக்கு தொடருமேயானால் 2100ஆம் ஆண்டிற்குள் மறையப்போகும் மொழிகளுள் தமிழ் முதன்மைப் பெற்றால் வியப்பதற்கில்லை.