காவிரியின் வெள்ளப் பெருக்கினைத் தேக்குவதற்கு மேட்டூர் அணையின் உயரத்தை 10 அடி உயர்த்துக! (பொறிஞர். அ. வீரப்பன், பொறிஞர் ஆர். செயபிரகாசம் (ஓய்வு), தநா.பொப.து) அச்சிடுக
சனிக்கிழமை, 16 நவம்பர் 2019 14:38

தமிழ்நாட்டில் காவிரி நதியில் வெள்ளக் காலங்களில் வரும் முழு நீரையும் (ஒரு சிறிதும் கடலில் கலக்க விடாமல்) பயன்படுத்திட பல்வேறு கருத்துரைகள் பலராலும் தெரிவிக்கப்படுகின்றன.

 முக்கியமாக அரசுத் துறைகள் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்கள் பல கோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர்.
குறிப்பாக, தஞ்சை விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. பி. ஆர். பாண்டியன் அவர்கள் காவிரி ஆற்றில் ஒகேனக்கல்லுக்கு மேலே கர்நாடகா  -  தமிழ்நாடு எல்லையிலுள்ள ராசி மணல் என்ற இடத்தில் ஒரு நீர்த் தேக்கம் கட்டி உபரி நீரைத் தேக்கிட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறார். இதை சில தொலைக்காட்சி ஊடகங்களும் செய்தி இதழ்களும் அப்படியே வெளியிட்டு மக்களிடையே தெரிவித்து வருகின்றன.
இதன் அடிப்படையில் ராசிமணல் பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்று கட்டுவதில் உள்ள நீரியல் - பொறியில் சாத்தியக் கூறுகளை தமிழ்நாடுப் பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுத் தகவல்கள்
1. கர்நாடகா - தமிழ்நாட்டு எல்லையில் காவிரி ஆறு ராசிமணல் என்ற பகுதியில் மிகவும் குறுகலாக - உள்ளது . அங்கே காவிரி ஆற்றின் அகலம் சுமார் 150மீ முதல் 450மீ வரை உள்ளது.
வலது கரை கர்நாடகா  மாநில எல்லையிலும் இடது கரை தமிழ்நாட்டின் எல்லைக் கோட்டிலும் அமைந்துள்ளது.
2. இரு கரைப் பகுதிகளும் அடர்ந்து வனப்பகுதியில் உள்ளன. தொழில்நுட்பரீதியில் ஆற்றின் குறுகிய அகலம் 150 மீட்டர் அளவுள்ள இடத்தை தேர்வு செய்து நீர்த்தேக்கம் கட்டக் கருதப்பட்டது.
3. இந்த  நீர்த் தேக்கத்தின் உயரம் 10 மீட்டர் உயரத்திற்குள் கட்டவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.
4. நீர்த் தேக்கத்தின் உயரத்தை 10 மீட்டருக்கு மேலே அதிகப்படுத்தினால் நீர் தேக்கப் பரப்பு கர்நாடக மாநில வனப்பகுதிக்குள் செல்லுகிறது. நீர்த்தேக்க நீர் பிடிப்புப் பகுதி  - எல்லையிலேயே காவிரி ஆற்றில் சுமார் 5.00கி.மீ. தொலை வரை பரவுகிறது.
5. இவ்வாறு வடிவமைக்கப்படும் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு (கணக்கின்படி)
=37,71,477 கன மீட்டர் = 3,77து106 கனமீட்டர்
(அல்லது) 133.19து106 கன அடி =133.19மி..கன அடி =0.1332 டி.எம்.சி.
கட்டுமான மொத்தச் செலவு (சுமார்) = ரூ. 500 லட்சம் = ரூ. 5.00கோடி.
இந்த 133 மில்லியன் கன அடி என்பது ஒரு சிறிய ஏரியின் கொள்ளளவுக்குச் சமம்.  =0.133 டி.எம்.சி.
எனவே காவிரியில் வெள்ளக்  காலங்களில் கூடுதலாக வரும் 20 முதல் 50  டி.எம்.சி. தண்ணீரை இந்த அணையில் தேக்கி  வைக்க முடியாது. எனவே இந்த ராசி மணலில் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தை (குறைந்தது 1 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது) அமைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை.
மாற்றுக் கருத்துரை: மேட்டூர் அணையின் உயரத்தை மேலும் 10 அடி உயர்த்துதல்:
மேட்டூர் அணையினை வடிவமைத்த ஆங்கிலேயப் பொறியாளர் டபிள்யு.எம். எல்லிஸ் அவர்கள் மேட்டூரில் 124 அடிக்கு மேலே மேலும் 10 அடி உயரத்திற்குத் தண்ணீரைத் தேக்கும் வகையில் அமைத்துள்ளார். இதனால் மேட்டூர் அணையின்  இன்றைய கொள்ளளவான 93.50 டி.எம்.சி.யினை கூடுதலாக 14 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இருபதாண்டுகளுக்கு முன்னரே இப்படியொரு திட்டத்தைத் தமிழ்நாடு தீட்டியது. உடனடியாக நிதி கிடைக்காமையால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை இப்போதாவது செயற்படுத்த முனையலாம். இதைத் தவிர காவிரியாற்றிலே மேட்டூருக்குக் கீழே மேலணை (முக்கொம்பு) வரை 10 கி.மீ. தூரத்திற்கு ஒன்றாகச் சிறிய தடுப்பணைகளையும் கட்டி, நீரைத் தேக்கிச் சேமிக்கலாம். இத்துடன் நிலத்தடி நீரையும் செறிவூட்டலாம்.