தலை நிமிர்ந்த தமிழ்த் தேசியம் நெருப்பாற்றைக் கடந்த நாற்பது ஆண்டுகள் - மதுரையில் மாநாடு அச்சிடுக
சனிக்கிழமை, 16 நவம்பர் 2019 14:48

வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது
10-11-2019 ஞாயிறு அன்று மதுரையில் தமிழர் தேசிய முன்னணி அலுவலகத்தில் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலையில் துணைத் தலைவர் எம்.ஆர். மாணிக்கம் தலைமையில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் கூட்டம் மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

தமிழர் தேசிய முன்னணி கடந்த 40 ஆண்டு காலத்தில் கொடிய அடக்குமுறைகள், கடும் சிறை வாசங்கள், தடைகள், மற்றும் ஒடுக்குமுறைகள் அத்தனையையும் கொஞ்சமும் அஞ்சாமல் ஏற்று கடந்துவந்த பாதையையும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பழ. நெடுமாறன் ஆற்றிய உரைக்குப் பிறகு மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பது குறித்து விரிவான கலந்தாய்வு நடைபெற்றது. பேரா. வேலன், வழக்கறிஞர் செளந்தரபாண்டியன், சி.சி. சாமி, ஜி.எஸ். வீரப்பன் உட்பட பலரும் பேசினார்கள். அதற்குப் பிறகு வரவேற்புக்குழுவின் நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்களைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரவேற்புக் குழுவின் தலைவராக மதுரையின் நகர் மாவட்டத் தலைவர் வெ.ந. கணேசன் அவர்களும், துணைத் தலைவர்களாக நெல்லை மாவட்டத் தலைவர் பொ. இளஞ்செழியன், மதுரை மாவட்டத் தலைவர் இரா. பாலசுப்பிரமணி, தேனி  மாவட்டத் தலைவர் மயிலை இரா. இரவி, இராமநாதபுர மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன் ஆகியோரும் செயலாளர்களாக சிவகங்கை மாவட்டத் தலைவர் அருணாசுந்தரராசன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தமிழ்மாறன் ஆகியோரும் பொருளாளராக மரு. கண்ணன் அவர்களும் ஒரே மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரவேற்புக்குழு உறுப்பினர்களாக திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டினையொட்டி தலைநிமிர்ந்த தமிழ்த் தேசியம் நெருப்பாற்றைக் கடந்த 40 ஆண்டுகள் என்ற தலைப்பில் இயக்கத்தின் 40 ஆண்டு கால போராட்ட வரலாறு, மாநாடுகள், கருத்தரங்குகள், சந்தித்த  அடக்கு முறைகள், நடத்திய பரப்புரைப் பயணங்கள் ஆகிய அனைத்தையும் தொகுத்துச் சிறப்பு மலராக வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது.
மாநாட்டிற்குக் கீழ்க்கண்டவர்கள் நிதியளிக்க முன்வந்தனர். காரைக்குடி சா. இராமன், ரூ. 25,000/-, எஸ். ஆறுமுகம் ரூ. 10,000/-  வழக்கறிஞர் செளந்தரபாண்டியன் ரூ.  5,000/-, திண்டுக்கல் பாபு ரூ. 5,000/- ஆகியோர் அளிப்பதாக வாக்களித்தனர். பேரா. கு. வேலன் ரூ. 5,000/-, சங்கவள்ளி மணாளன் ரூ. 1,000/- உடனடியாக தலைவரிடம் நேரில் அளித்தனர். அவர்கள் அனைவருக்கும் தலைவர் பழ. நெடுமாறன் நன்றி தெரிவித்தார்.