படரும் சனநாயக சர்வாதிகாரம் - பழ. நெடுமாறன் அச்சிடுக
புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020 14:37

கரோனா என்னும் கொடிய தீ நுண்மி நோய் உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்களைக் காவுகொண்டு வருகிறது. இந்திய நாட்டில் இதுவரை 43000-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில்  5000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்து இருக்கிறார்கள்.

நாடெங்கும் ஊரடங்கு மற்றும் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளுக்குள் மக்கள் வாழ வேண்டிய நிலை நீடிக்கிறது. நாளுக்கு நாள் நோயின் பரவல் கூடிக்கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலை போர்க்காலச் சூழ்நிலையைப் போன்றதாகும். பகை நாட்டின் படையெடுப்பை எதிர் கொள்ள அரசும், எதிர்க்கட்சிகளும், மக்களும் இணைந்து செயல்பட்டால் ஒழிய பகையை வெல்ல முடியாது. அதைப்போல கரோனாவின் தாக்குதலுக்கு எதிராக கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட்டுப் போராடவேண்டியது மிக மிக இன்றியமையாததாகும்.
இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகள் மீது இட்லரின் செர்மனி போர் தொடுத்தது. நெருக்கடியான அந்த வேளையில் பிரிட்டனின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற வின்சுடன் சர்ச்சில் அனைத்துக் கட்சியினரையும் கொண்ட தேசிய அமைச்சரவையை அமைத்தார். எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் அட்லியை தனக்கு அடுத்த அமைச்சராக நியமித்தார். கன்சர்வேட்டிக்கட்சி,தொழிலாளர் கட்சி, லிபரல் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்கப்பட்டது. கன்சர்வேட்டிக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை இருந்த வேளையிலும் எதிர்கட்சிகளை அரவணைத்து இணைத்துக் கொண்டால்தான் வரலாறு காணாத பெரும்போரை எதிர்கொண்டு வெற்றியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து சர்ச்சில் செயல்பட்டதால் 2-ஆம் உலகப்போரில் பிரிட்டன் மாபெரும் வெற்றி பெற முடிந்தது.
1947-இல் இந்தியா விடுதலைப்பெற்ற போது நாட்டின் நிலைமை மிக நெருக்கடியாகயிருந்தது. பாகிசுதான் பிரிக்கப்படுவதற்கு முன்பு நாடெங்கும் மூண்டெழுந்த மதக்கலவரங்களின் விளைவாக இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள். பல்லாயிரம்கோடி ரூபாய் பெறுமான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இரு நாடுகளிலிருந்தும் கோடிக்கணக்கான பேர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர். எதிர்காலம் இருள் சூழ்ந்து காணப்பட்ட வேளையில் விடுதலை விடியல் பிறந்தது. இந்திய நாட்டின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற நேரு, துணைத் தலைமையமைச்சர் வல்லபாய்பட்டேல் ஆகியோர் காந்தியடிகளின் அறிவுரையை ஏற்று அனைத்து தரப்பினரையும் கொண்ட தேசிய அமைச்சரவையை அமைத்தனர். அம்பேத்கர், சியாமபிரசாத் முகர்சி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், என்.ஜி.கோபாலசாமி ஐயங்கார், சான்மத்தாய் போன்ற மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த சிறந்த அறிஞர்களையும் தனது அமைச்சரவையில் நேரு இணைத்துக் கொண்டார். இதன் விளைவாக மூண்டெழுந்த பெரும் பிரச்சனைகளையெல்லாம் வெற்றிகரமாகக் கடந்து நாடு நிமிர முடிந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவில் 700-க்கும் மேற்பட்ட சுதேச சமசுதானங்கள் இருந்தன. வெள்ளையர் வெளியேறும் போது சமசுதான மன்னர்கள் தங்களின் விருப்பம் போல இந்தியாவுடனோ அல்லது பாகிசுதானுடனோ இணைந்துக் கொள்ளலாம் எனக் கூறி தங்கள் பொறுப்பைக் கைகழுவி விட்டனர். ஆனால் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய்பட்டேல் அவர்கள் தனது திறமையால் மிக பெரும்பாலான சமசுதானங்களை இந்தியாவுடன் இணைத்தார். ஆனால் மிக பெரிய ஐதராபாத் சமசுதானத்தின் மன்னர் நிசாம் தனது நாடு சுதந்திர நாடாக விளங்கும் என அறிவித்தார். உடனடியாக இந்திய அரசு தனது படையை அனுப்பி ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. இது குறித்து ஐ.நா. பேரவையில் பாகிசுதான் புகார் செய்தது. அப்போது ஐ.நா.வில் இந்தியாவின் தூதுக்குழுவினருக்குத் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவருமான சர்.ஏ. இராமசாமி முதலியாரை பட்டேல் தேர்ந்தெடுத்து அனுப்பினார். ஏனெனில் 1945-ஆம் ஆண்டில் ஐ.நா. பேரவை அமைக்கப்பட்ட வேளையில் இந்திய வெள்ளை அரசின் சார்பில் பிரிதிநிதியாக அதில் கலந்துக்கொண்டு ஐ.நா.-வின் கொள்கைப்பட்டயத்தை உருவாக்கும் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் சர். ஏ. இராமசாமி முதலியார் ஆவார். இத்தகைய சிறப்புப் பின்னணியைக் கொண்டவர் அவர். ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இராமசாமி முதலியார் வாதாடும் போது ்இந்தப் புகாரை இங்கு எழுப்புவதற்கு ஐதராபாத்துக்கு எவ்வித தகுதியும் இல்லை. அது ஒரு சுதந்திர நாடு அல்ல ஐ.நா. வின் உறுப்பினரும் அல்ல. இந்திய நாட்டின் ஒரு பகுதியான அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் அபாயம் ஏற்பட்ட சூழ்நிலையில் இந்திய அரசு காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டதே தவிர இது இராணுவ நடவடிக்கை அல்ல” என வாதாடினார். அதை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புக்குழு அந்த புகாரைத் தள்ளுபடி செய்தது.
இந்தியத் தலைமையமைச்சராக பி.வி. நரசிம்மராவ் இருந்த போது  காசுமீரில் இந்தியப்படையின் அத்து மீறல்கள் குறித்து ஐ.நா.வில் பாகிசுதான் பிரச்சனையை எழுப்பிற்று. அப்போது எதிர்க்கட்சித் தலைவராகயிருந்த வாஜ்பாய் அவர்களை இந்தியக்குழுவின் தலைவராக நியமித்து ஐ.நா. வில் வாதாடச் செய்து பாகிசுதானின் முயற்சியை முறியடித்தார்.
 கரோனா நெருக்கடியை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுப்பட்டுப் போராட வேண்டிய காலகட்டத்தில் ஆளுங்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், மோதல் போக்கைக் கையாண்டு வருகின்றன. நோயினாலும் அதையொட்டிய கடும் பொருளாதார நெருக்கடியினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ள வேளையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையை மறந்து கட்சிகள் தன்னலத்துடன் செயல்படும் அவலம் மிக மிக வருந்தத்தக்கதாகும்.
மிகுந்த பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டிய நிலையில் மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து  மத்திய அரசு  அவ்வபோது அறிவித்து வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொற்று நோய்கள் தடுப்புச்சட்டம் மாநில அரசுக்கே அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. தொற்று நோய்கள் பரவும் காலகட்டத்தில் அதை தடுக்கவும், மக்களைக் காக்கவும் மாநில அரசுகளால் மட்டுமே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதில் மத்திய அரசின் பங்கு என்பது மிக குறைவானதாகும். மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகள், மருத்துவ உதவிகள் ஆகியவற்றை அளிக்க வேண்டிய அதிகாரம் மட்டுமே அதற்கு உண்டு. இந்த சட்டத்தின்படி வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைச் செய்யவும், பல்வேறு கட்டுபாடுகளை விதிக்கவும் மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இச்சட்டத்திற்கு பதில் 2005-ஆம் ஆண்டு பேரழிவுகள் நிர்வாகச் சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகளைக் கலந்து கொள்ளாமலும் கொஞ்சமும் மதிக்காமலும் ஊரடங்கு உத்தரவுகள், தொழிற்சாலைகள், வணிக நிலையங்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல் போன்ற எல்லாவற்றுக்கும் மத்திய அரசே அவ்வபோது ஆணைகளை வெளியிட்டு வருகிறது. கரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வண்ணப் பகுதிகளாகப் பிரித்து மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் அவ்வப்போது மத்திய அரசின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்பி மாநில அரசின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது. உண்மையில் தனது அதிகார எல்லையைக் கடந்து மாநில அரசின் உரிமைகளையும், அதிகாரங்களையும் அடியோடு பறித்துவிட்டு தன்னிச்சையாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
கரோனா நெருக்கடியினால் நாடாளுமன்றமோ, சட்டமன்றங்களோ, கூடமுடியாத நிலையில் அதைப்பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசும், மாநில அரசுகளும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன. சனநாயக நெறிமுறைகள் அடியோடு மீறப்படுகின்றன.
ஆளுநர்களின் குறுக்கீடு
அரசியல் அமைப்பு சட்டம் வகுக்கப்பட்டக் காலத்தில் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் குறித்து அரசியல் அமைப்பு அவையில் விவாதம் நடைபெற்றது. மாநில சட்டமன்றத்தினால் ஆளுநர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும், மாநில அரசின் ஒப்புதலுடன் ஆளுநர் நியமிக்ககப்பட வேண்டும், மாநில சட்டமன்றம் பரிந்துரைக்கும் பெயர்களைக் கொண்ட பட்டியலிருந்து ஒருவரைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பவை போன்ற யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. சட்ட அமைச்சரான அம்பேத்கர் அவர்கள் பதில் அளிக்கையில் "ஆளுநர் பெயரளவுக்கு மட்டுமே மாநிலத்தின்  நிர்வாகத் தலைவராக விளங்குவார். அவருடைய அதிகாரங்கள் மிகவும் கட்டுபடுத்தப் பட்டவை. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்றே அவர் செயல்படுவார்” என்று கூறினார். அரசியல் சார்பற்றவர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள்  போன்றவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை தலைமையமைச்சர் நேரு தெரிவித்தார். ஆனால் காலப்போக்கில் மத்திய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், தேர்தலில் தோற்றவர்களும், அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும், ஆளுநர் பதவிகளில் நியமிக்கப்பட்டார்கள். எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் இந்த வேண்டாத போக்கில் எந்த மாறுதலும் இல்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்படும் மாநிலங்களின் வேறு கட்சி ஆட்சி இருக்குமானால் ஆளுநர்கள் அதற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக மேற்கு வங்க ஆளுநர் மாநில முதல்வருக்கு எதிரானக் குற்றச்சாட்டுகளை நாள்தோறும் அடுக்கி வருகிறார். அதிகாரிகளுக்கு தன்னிச்சையான உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார். இவ்வாறு செய்வது  அரசியல் சட்டத்திற்கும், சனநாயக மரபுகளுக்கும் எதிரானதாகும். இவரைக் கண்டிக்க வேண்டிய குடியரசுத் தலைவரும் பாராமுகமாக இருந்து வருகிறார்.
அரசியல் சட்டப்படி தமிழக அமைச்சரவைக் கூடி 7-பேர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. சட்ட மன்றத்திலும் இந்த தீர்மானம் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் கடந்த 2-ஆண்டு காலமாக ஆளுநர் அதன்படி செயல்படாமல் அத்தீர்மானங்களைக் கிடப்பில் போட்டு இருக்கிறார்.
காசுமீருக்கு சிறப்புரிமை அளிக்கும் 370-ஆவது பிரிவு அரசியல் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு அம்மாநிலம் 3-பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மத்திய ஆட்சிக்குட் பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசியல் சட்டப்பிரிவு 3 மற்றும் 4 ஆகியவற்றின் கீழ் புதிய மாநிலத்தை அமைக்கவும், இருக்கும் மாநிலத்தைப் பிரிக்கவும், மாநிலங்களின் பெயர்களை மாற்றவும் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அதற்கு முன்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அப்படி இயற்றப்படும் சட்டம் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்தினால் ஏற்கப்பட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், காசுமீர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு  அதன் ஒப்புதலைப் பெறவேண்டிய அவசியமில்லாமல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்த நடவடிக்கையை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?  
இன்று காசுமீருக்கு ஏற்பட்ட நிலை நாளை தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம். தமிழ்நாட்டை இரண்டாக, மூன்றாகப் பிரித்து புதுச்சேரியைப் போல மத்திய ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களாக்கி விட முடியும்.
மாநில அரசுகள் கலைப்பு
1967-ஆம்  ஆண்டிற்கு பிறகு  அனைத்து மாநிலங்களிலும் மத்திய ஆட்சியிலும் காங்கிரசு கட்சியே இருந்த நிலை மாறியது. பல மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. 1977-ஆம் ஆண்டு மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சனதா தளம் பதவிக்கு வந்தது. ஆனாலும் 2-ஆண்டுகளுக்கு மேல் அது நீடிக்கவில்லை அக்கட்சி பிளவுப்பட்டு பல துண்டுகளாக உடைந்தது. அதற்கு பிறகு மத்தியில் பல கட்சிகளின் கூட்டணி ஆட்சிகள் ஏற்பட்டன. அவைகளும் நிலைக்கவில்லை.
மாநிலங்களில் பிற கட்சியின் அரசுகள் அமைந்தபோது அரசியல் சட்டத்தின் 356-ஆவது பிரிவினைப் பயன்படுத்தி மத்திய அரசு அவற்றைக் கலைக்கும் போக்குத் தொடங்கியது. 1950 முதல் 1966-ஆம் ஆண்டு வரை 10-முறையும் 1967 முதல் 1986 வரை 70-முறையும் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. தலைமையமைச்சர்களான நேரு காலத்தில் 6-முறையும், இந்திராகாந்தி காலத்தில் 50-முறையும், மொரார்ஜி காலத்தில் 9-முறையும், ராஜிவ்காந்தி காலத்தில் 6-முறையும், வி.பி.சிங் காலத்தில் 2-முறையும், சந்திரசேகர் காலத்தில் 4-முறையும், நரசிம்மராவ் காலத்தில் 11-முறையும், தேவகவுடா காலத்தில் 2-முறையும், வாஜ்பாய் காலத்தில் 2-முறையும் ஆட்சிகள் கலைக்கப்பட்டன.
1999-ஆம் ஆண்டில் கர்நாடக மாநில முதல்வராகயிருந்த எசு.ஆர். பொம்மை அரசு கலைக்கப்பட்ட போது உச்சநீதி மன்றம் தலையிட்டு ்மாநில ஆட்சியைக் கலைப்பதற்கு முன்னால் நாடாளுமன்ற மக்களவை, மேலவை ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்றபின்பே 356-ஆவது விதியைப் பயன்படுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்தது. இதற்கு பிறகு மாநில ஆட்சிகளைக் கலைப்பதற்குப் பதில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி, பணம் ஆகியவற்றைக் கொடுத்து கட்சி மாறச்செய்து ஆட்சிகளைத் தோற்கடித்து தங்களின் ஆட்சியைக் கொண்டு வரும் முறை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் காங்கிரசுக்கும், பா.ச.க-வுக்கும் வேறுபாடில்லை. இரண்டு கட்சிகளுமே சனநாயகத்திற்கு எதிராக வழிமுறைகளைக் கையாளுவதில் ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கர்நாடகம், மத்தியப்பிரதேசம், இராசசுதான் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி பெரும்பான்மைப் பெற்று ஆட்சி அமைத்தது. கோவா மாநிலத்தில் காங்கிரசுக்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறாவிடினும் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஆனால். சுயேட்சை உறுப்பினர்கள், பிறகட்சி உறுப்பினர்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பா.ச.க ஆட்சியை அமைத்தது. கர்நாடகத்தில் காங்கிரசு கூட்டணியிலிருந்து சிலரை இழுத்து ஆட்சியைக் கவிழ்த்து பா.ச.க. ஆட்சி அமைத்தது. சனநாயகத்திற்குப் புறம்பான இதே முறையைக் கையாண்டு மத்தியபிரதேசத்திலும் காங்கிரசு ஆட்சியைக் கவிழ்த்து பா.ச.க. ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. இராசசுதானிலும் இருகட்சியினருமே இதே முறையைக் கையாண்டனர். பகுசன் சமாசக்கட்சியைச் சேர்ந்த 6-உறுப்பினர்களைக் காங்கிரசுக்கட்சியில் இணைத்து தனது கட்சியின் எண்ணிக்கையை  காங்கிரசு முதல்வர் அசோக் கெலாட் பெருக்கிக் கொண்டார். துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் 19-காங்கிரசு உறுப்பினர்களுடன் பிரிந்து நிற்கிறார். பா.ச.க சனநாயகத்திற்கு எதிரான முறைகளைக் கையாண்டு தனது ஆட்சியை வீழ்த்த முயலுவதாக முதல்வர் கெலாட் குற்றம் சாட்டுவது நகைப்பிற்குரியதாகும். இந்த பிரச்சனை இப்போது உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது.
பா.ச.க, காங்கிரசு ஆகிய கட்சிகள் குதிரைபேர அரசியலைத் தொடர்ந்து கையாளுவதில் சிறிதளவுக்கூட வெட்கப்படவில்லை. மற்றக்கட்சிகளும் அதிகாரத்தைக் கைப்பற்ற எத்தகைய இழிவான முறைகளையும் கையாளக் கொஞ்சமும் தயங்குவதில்லை. பணத்தை வைத்து பதவி, பதவியை வைத்துப் பணம் என்பது தான் இக்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. கொள்கை வழி அரசியல் குழித் தோண்டிப் புதைக்கப்பட்டு அதிகாரவழி அரசியல் மேலோங்கியுள்ளது.
மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்த தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பல மாநிலக் கட்சிகள் அகில இந்தியக்கட்சிகளான காங்கிரசு, பா.ச.க போன்றவற்றுடன் கூட்டணி சேருவதற்கோ, மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவியைப் பெறுவதற்கோ, கொஞ்சமும் தயங்கவில்லை. மத்திய அமைச்சரவையில் அங்கம் வைத்த போதிலும் அதைப்பயன்படுத்தி மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் பெறுவதற்கு                             இக்கட்சிகள் சிறிதளவுக் கூட முயலவில்லை. இந்தியத் தேர்தல்களில் அமைக்கப்படும் கட்சிகளின் கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணிகளாகவே அமைக்கப்படுகின்றன. கொள்கை வழிக் கூட்டணி என்பது ஒருபோதும் அமையவில்லை. இதன் மூலம் இக்கட்சிகள் சனநாயகத்தையே கொச்சைப்படுத்திவிட்டன.  
அதிகாரக் குவிப்பு
இந்திய அரசியல் சட்டப்படி நிதிக்குழு தான் அமைக்க முடியும். மத்திய வரித்தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுக்கவேண்டிய நிதியின் அளவு, மானியங்களின் அளவு, கடனளவு இவற்றை முடிவு செய்து அளிக்க வேண்டியது நிதிக்குழுவின் கடமையாகும். குடியரசுத் தலைவரே இதை நியமிக்கிறார். இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும் ஆனால் 1950-ஆம் ஆண்டு திட்டக்குழு என்ற பெயரில் ஒரு அமைப்பினைத் தலைமையமைச்சராக இருந்த நேரு தனது ஆணையின் மூலம் உருவாக்கினார். மாநில அரசின் திட்டங்களின் அளவையும், வடிவையும் முடிவு செய்வது, அவற்றுக்கான நிதியை ஒதுக்குவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் திட்டக்குழுவிற்கு அளிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராகயிருந்த சான்மத்தாய் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மத்திய அமைச்சரவைக்கு மேற்பட்ட உயர் அமைச்சரவையாக இது திகழும் என எச்சரித்தார். ஆனால் அதை நேரு ஏற்காத நிலையில் சான்மத்தாய் பதவி விலகினார். அவர் கூறியபடியே பிற்காலத்தில் நடந்தது. திட்டக்குழுவிற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் கிடையாது. மத்திய அரசின் நிர்வாக ஆணையின்படி அது அமைக்கப்பட்டது ஆனால் அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட நிதிக்குழுவைவிட அதிக அதிகாரம் படைத்ததாகத் திட்டக்குழு நாளுக்கு நாள் வளர்ந்தது.
தலைமையமைச்சர்  மோடியின் அரசு திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு நிதி அயோக் என்ற பெயரில் மற்றொரு குழுவை அமைத்துள்ளது. மாநில அரசுகளின் நிதி அதிகாரத்தைக் கட்டுபடுத்தும் குழுவாக இது திகழ்கிறது.
2015-ஆம் ஆண்டில் 14-ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதாகக் கூறிய தொகைக்கும் மத்திய அரசு வழங்கிய தொகைக்கும் இடையே சுமார் 7-இலட்சம் கோடி ரூபாய் இடைவெளியுள்ளது.
இந்திய அரசுக்குத் துணைபுரிய அமைச்சரவைச் செயலகம் ஒன்று செயலாளர் ஒருவர் தலைமையில் உருவாக்கப்பட்டது. தலைமையமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பிற அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்படும் அமைப்பாக இது ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 1970-ஆம் ஆண்டில் தலைமையமைச்சராக இந்திராகாந்தி இருந்த போது தலைமையமைச்சரின் செயலகம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது. 200-க்கு மேற்பட்ட அதிகாரிகளையும், 20-க்கு மேற்பட்ட துணைச்செயலாளர்களையும் கொண்ட இதனுடைய அதிகாரம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. அமைச்சரவை செயலகத்தை விட அதிக அதிகாரம் படைத்ததாகத் தலைமையமைச்சரின் செயலகம் விளங்குகிறது. தலைமையமைச்சரின் முதன்மை செயலாளர் அமைச்சரவைச் செயலாளரையும் மத்திய அமைச்சர்களையும் ஆட்டிப்படைப்பவராக விளங்குகிறார்.  தலைமை யமைச்சர்களான மொரார்ஜி தேசாய் முதல் மோடி வரை தலைமையமைச்சரின் செயலகத்தின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதே தவிர கொஞ்சமும் குறையவில்லை.
இயற்கை வளம் - அன்னியர் சூறை
தலைமையமைச்சராக பி.வி. நரசிம்மராவ், நிதியமைச்சராக மன்மோகன்சிங் ஆகியோர் இருந்த காலத்தில்  பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. உலகமயமாக்கல் கொள்கை ஏற்கப்பட்டது.  இதன் விளைவாக தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் தொழில் – வணிகத்துறைகளில் ஈடுபடுத்தப்பட்டன. அவற்றை ஊக்குவிப்பதற்காக சலுகைகள் என்ற பெயரால் மத்திய அரசு தொடர்ந்து நேர்முக, மறைமுக வரிகளை குறைத்துக் கொண்டே வருகிறது. மாநில அரசுகளுக்கு வரி வருவாய் வழியாகப் பகிர்ந்து அளிக்க வேண்டிய நிதியின் பங்கும், அளவும் குறைந்துக்கொண்டே வருகிறது. அதே வேளையில் வெளிநாட்டு மூலதனத்தையும் தொழில் முதலீடுகளையும் ஈர்ப்பதற்கு மாநில அரசுகள் மின்சாரம், சாலைகள், குடியிருப்புகள் போன்ற கட்டமைப்பு வசதிகளைச் செய்யவேண்டியுள்ளன. இதன் விளைவாக மாநில அரசுகளின் நிதிச் சுமைக் கூடுகிறது.
தனது அதிகாரங்களை மாநில அரசுகளுக்குப் பகிர்ந்துக் கொடுக்க மறுக்கிற மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் அதைப் பகிர்ந்து அளிக்கிறது. மத்திய அரசின் அதிகாரப்பட்டியலில் இடம் பெற்றுள்ள துறைமுகம், வான்வழிப் போக்குவரத்து, அஞ்சல், தொலைப்பேசி, ஒலி-ஒளி பரப்பு நிலையங்கள், சுரங்கங்கள், வங்கிகள், காப்பீட்டுக்கழகங்கள், பங்குச் சந்தை, காப்புரிமை தொடர்பான துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளைப் பெருக்கி வருகின்றன. மன்மோகன்சிங் முதல் மோடி அரசு வரை இது தொடர்கிறது. இவ்வகை முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயை அந்நிறுவனங்கள் தங்களின் நாடுகளுக்கு எடுத்துச் செல்லுகின்றன.
நமது நாட்டின் இயற்கை வளஆதாரங்களை தனியார் நிறுவனங்கள் சுரண்ட அனுமதிப்பதுதான் உலகமயமாக்கல் கொள்கையின் நோக்கமாகும். இதன் விளைவாக சுற்றுப்புறச்சூழல்கள் பாதிப்பிற்கு உள்ளாகி மக்கள் துயரத்திற்கு ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் அரசுக்குக் கவலையில்லை. காங்கிரசு ஆட்சியில் தொடங்கி பா.ச.க ஆட்சியிலும் இந்நிலை தொடர்கிறது.
மாநிலங்களின் எல்லைக்குள் கிடைக்கும் இயற்கை மற்றும் கனிம வளங்களை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பயன்படுத்தி பிறதொழில்களுக்குத் தேவையான இடுபொருள்களை உற்பத்திச் செய்கின்றன. ஆனால் இவற்றிற்குரிய உரிமத்தொகையை மாநிலங்களுக்கு உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர மறுக்கிறது. நெய்வேலி அனல்மின் நிலையத்திலும் மற்றும் எண்ணூர், கூடங்குளம் அணுமின் நிலையங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 20% மட்டுமே தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படுகிறது. மற்றவை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அண்டை மாநிலங்கள் தங்களின் மிகை நீரை தமிழகத்திற்குத் தர மறுக்கின்றன.
வெற்றிகரமாக இயங்கி வரும் அரசுத்துறையின் பொதுநிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் துறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. புதிய பொதுத்துறைக் கொள்கையை மத்திய நிதியமைச்சர் அண்மையில் அறிவித்துள்ளார். இதன்படி அரசின் துறைகள் பட்டியலிடப்பட்டு ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும் அல்லது ஒன்றாக இணைக்கப்படும். இதன்மூலம் அதிகபட்சமாக 4- பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இருக்கும். இவற்றின் கீழ் வராத பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியார் மயமாக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
வெள்ளையர்களால் நடத்தப்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் நேரு அவர்களின் காலத்தில் தேசிய மயமாக்கப்பட்டன. ஏழை எளிய மக்களின் பயணத்திற்கு இது வழிவகுத்தது. இன்று வரையிலும் இலாபகரமாக இயங்கி வரும்  இத்துறையிலும் தனியார் முதலீட்டிற்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்துறைக்குச் சொந்தமான தடங்கள், நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகள் பாதுகாப்பு, தினசரி பராமரிப்புப் பணிமனைகள் ஆகியவற்றை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
தொடர்வண்டி பெட்டிகள் மட்டும் தனியாருக்குச் சொந்தமாக இருக்கும். மற்றபடி அவர்கள் வேறு எதற்கும் முதலீடு செய்யத் தேவையில்லை. பல கோடானு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான தண்டவாளங்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தையும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் பயணிகள் கட்டணத்தைத் தனியாரே முடிவு செய்து கொள்வார்கள். இதில் அரசுக்கோ அல்லது தொடர்வண்டித் துறைக்கோ எவ்வித பங்களிப்பும் இருக்காது. இதன் மூலம் கட்டணங்கள் பலமடங்கு உயரும். ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களும் அந்நியப்படுத்தப்படுவார்கள்.
மின் உற்பத்தி, வழங்குதல் ஆகியவற்றை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் பாதிப்புக்கு உள்ளாகும். மின்சாரத் துறையில் செய்யப்படவிருக்கும் சீர்திருத்தங்கள் மக்களைப் பெருமளவுக்குப் பாதிக்கும் மாநில அரசுகளின் நிதிச் சுமை அதிகரிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்புத்துறை தொழிலில் 74% அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு செய்துள்ள முடிவு நாட்டின் பாதுகாப்பிற்கே அபாயம் விளைவிக்கக் கூடியதாகும்.
உள்கட்சி சனநாயகம்
நாடு விடுதலைப்பெற்ற போது காந்தியடிகள் காங்கிரசுக் கட்சியைக் கலைக்குமாறு கூறினார். ஆனால் அதை மற்ற தலைவர்கள் ஏற்கவில்லை. சனநாயக நெறிமுறைகளைக் கட்சிக்குள் பின்பற்றுவது நாளுக்கு நாள் குறைந்தது. நாட்டின் தலைமையமைச்சரே கட்சியின் தலைவராக விளங்கும் நிலை உருவாயிற்று. 1969-ஆம் ஆண்டு காங்கிரசுக் கட்சி பிளவுப்பட்ட போது இந்திரா காந்தி அவர்கள் தலைமையமைச்சராகவும், கட்சித் தலைவராகவும் விளங்கினார். சனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி கட்சியமைப்புகளை உருவாக்கும் முறைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது. மாநில முதல்வர், மாநில காங்கிரசுத் தலைவர் போன்றவர்கள் டெல்லியிலிருந்து நியமனம் செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவர்களும் அவர்களுக்கு கீழுள்ள வட்டாரத் தலைவர்களும் கூட நியமிக்கப்பட்டவர்களே. சனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரான இந்த முறை மற்றக் கட்சிகளுக்கும் பரவியது. அநேகமாக இன்று இந்தியாவில் உள்ள அகில இந்திய கட்சிகளும், மாநிலக் கட்சிகளும், சர்வதிகாரத் தலைமைகளையே கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கட்சிகளில் வாரிசுமுறை பின்பற்றப்படுகிறது.
உள்கட்சி சனநாயகம் என்பது எந்த கட்சியிலும் இல்லை. இதன் விளைவாக அக்கட்சிகளில் சர்வதிகாரத் தலைமை உருவாகியுள்ளது. கட்சிக்குள்  சனநாயகம் நிலவாவிட்டால் ஆட்சியிலும் நிலவாது. சர்வாதிகாரமே மேலோங்கும்.
இதன் விளைவாக நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக வருபவர்கள் சனநாயக தத்துவத்தின் அடிப்படையை உணராதவர்களாக  உள்ளார்கள். நாடாளுமன்றத்தின் கூச்சல், குழப்பம் இல்லாத நாளில்லை. இவை அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன. காங்கிரசு கட்சி ஆட்சியில் இருந்தபோது நேருவின் காலத்தில் கூட எந்த காலகட்டத்திலும் பதிவான வாக்குகளில் 50% வாக்குகளைப் பெற்று பதவிக்கு வரவில்லை. 1984-ஆம் ஆண்டில் மட்டும் இந்திராகாந்தியின் படுகொலையின் விளைவாக உருவான அனுதாப அலையின் காரணமாக ராசீவ்காந்தி பதவிக்கு வந்தபோது 48% வாக்குகளை காங்கிரசு பெற்றது. மற்ற எல்லாக்கட்சிகளுமே அதற்கும் குறைந்த வாக்குகளையே பெற்றன.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 37.76% வாக்குகளையும், மொத்த வாக்காளர்களில் 25.16% வாக்குகளை மட்டுமே பெற்று மோடி ஆட்சிக்கு வந்தார். என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். விகிதாச்சாரத் தேர்தல்முறை கொண்டு வரப்பட்டாலொழிய இத்தகைய போக்கினைத் தடுக்க முடியாது.
பணநாயகம்
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும் மிரட்டியும் எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற போக்கு வளர்ந்து உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் இந்த உண்மைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் உள்ள 544-உறுப்பினர்களில் 475-பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.  இவர்களில் பா.ச.க-வைச் சேர்ந்த 301- உறுப்பினர்களில் 265-பேர் (88%) கோடீசுவரர்கள்,  காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 51-உறுப்பினர்களில் 43-பேர் (96%) கோடீசுவரர்கள், தி.மு.க-வைச் சேர்ந்த 23-உறுப்பினர்களில் 22-பேர் (96%) கோடீசுவரர்கள் இதைப்போலவே மற்றும் பல்வேறு  கட்சிகளைச் சோ்ந்தவர்களில் பெரும்பாலோனர் கோடீசுவரர்களே. அனைத்துக் கட்சிகளுமே கோடீசுவரர்  களையே தனது வேட்பாளர்களாக நிறுத்துவதின் நோக்கம் பணத்தை வாரி இறைத்து எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதேயாகும். இப்படி தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தாங்கள் செலவழித்த பணத்தை விட பன்மடங்கு பணத்தை தங்களது பதவிக் காலத்தில் சேர்ப்பது கட்டாயமாகி விடுகிறது. அப்போதுதான் அடுத்த தேர்தலில் வெற்றிபெற முடியும். ஏழைகளுக்கு எட்டாத கனிவாக நமது தேர்தல் முறை ஆக்கப்பட்டுவிட்டது. சந்தர்ப்பவாத அரசியல் மேலோங்கியிருக்கும்  சூழலில் ஆட்சியில் இலஞ்சமும், ஊழலும் பரவுவது இயற்கை.
சனநாயகத்திற்கு மற்றொரு பெரும் கேட்டினையும் இக்கட்சிகள்  ஏற்படுத்தி விட்டன. 2019-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற 233 (43%) நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பின்னணியைக் கொண்டவர்கள். இவர்களில் 159-பேர் கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற கொடிய குற்றவழக்குகளில் சிக்கியவர்கள். 301-பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினர்களில் 265 (88%) பேர்கள் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த 43 (84%) பேர்கள் மீதும் கொடிய குற்றச்சாட்டுகள் உள்ளன. மற்ற மாநிலக் கட்சிகளில் பலரும் குற்றப்பின்னணியைக் கொண்டவர்களே.
மக்களுக்கு எதிரான கொடிய குற்றப்பின்னணிக் கொண்டவர்களும், அரசியலையே பிழைப்பாகக் கொண்டு கோடி கோடியாகப் பணம் குவித்தவர்களும் மட்டுமே  நமது நாட்டுத் தேர்தல் முறையில் வெற்றிபெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. சனநாயக முறைத் தேர்தலுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டாகிவிட்டது. சர்வதிகாரம் தோன்றுவது இத்தகைய சூழ்நிலையில் தவிர்க்கப்பட முடியாததாகும். சுகாதாரக் கேடுபெருகினால் நோய் பரவுவது இயற்கையேயாகும்.
அரசியல் சட்டப்படி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் உள்ளாட்சி முக்கியமானதாகும். ஆனால் 1994-ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சியின் போது அரசியல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு உள்ளாட்சி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மத்திய அரசில் உள்ளாட்சி துறை ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நேரடியாக நிதி உதவிகள் அளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
அதைப்போலவே மாநிலப்பட்டியலில் இருந்து கல்வித்துறை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு மத்திய அரசு குறிப்பாக உயர் கல்வித்துறையில் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாகவே  நீட் தேர்வு, புதிய தேசியக் கல்வித்திட்டம் போன்றவைக் கொண்டுவரப்பட்டு மாநிலங்களின் மீது திணிக்கப்படுகிறது.
மாநில மக்களின் மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகள் கல்வித்திட்டங்களை வகுக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இந்தியா முழுமைக்குமான ஒரே கல்வித்திட்டத்தைத் திணிக்கும் முயற்சி தொடர்கிறது. மாநில அரசுகளின் கல்வித்திட்டத்தில் இடம்பெற்றிருந்த குடியுரிமை, தேசிய இனவுணர்வு, மதச்சார்பின்மை, கூட்டாட்சி முறை, ஐந்தாண்டு திட்டங்கள் ஆகிய பாடங்களை மத்திய அரசு பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டது. இத்தகைய உணர்வுகளே மாணவர்களுக்கு ஊட்டப்படக் கூடாது என மத்திய அரசு கருதுகிறது. கரோனா காலத்தில் நாடாளுமன்றம் கூட முடியாத நிலையைப் பயன்படுத்திப் புதிய தேசியக் கல்வித்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  மும்மொழித்திட்டம் என்ற பெயரில் இந்தி, சமற்கிருதம் ஆகியவற்றைக் கட்டாயப்பாடமாக்கவும் பிற பண்பாடுகளைத் திணிக்கவும் வரலாற்றைத் திரித்துக் கூறவும் புதிய கல்வித்திட்டம் முயலுகிறது.
கரோனா காலக்கட்டத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை மத்திய – மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் தொழிலாளர் சட்டங்களை 3-ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அம்மாநில அரசு அவசரச்சட்டம் ஒன்றினைக் கொண்டு வந்துள்ளது. அதைப்போலவே மத்தியப் பிரதேசம், கர்நாடகம், குசராத் ஆகிய மாநிலங்களிலும்  தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அவசரச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடாளுமன்றமோ, மாநில சட்டமன்றங்களோ கூட முடியாத நிலைமையைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து முதலாளிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் முயற்சிகளை இந்த அரசுகள் மேற்கொண்டுள்ளன. இவைகுறித்து சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு கடும் கண்டனத்தை இந்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
கிராமப்புற உழவர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் உதவுவதற்காக மாநில அரசுகள் கூட்டுறவு வங்கிகளை அமைத்துள்ளன. மாநில அரசுகளின் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் அவைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் கரோனா காலத்தைப் பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளையும் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் உழவர்களும் கிராமப்புற மக்களும் தங்களின் விவசாய வேலைகளுக்கும் மற்றும் அவசரத் தேவைகளுக்கும் பெற்றுவந்த கடன் உதவிகள் இனி தொடர்ந்து கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களின் நலனுக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் அந்த வங்கிகள் பெரும் முதலாளிகளுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கடனாக வழங்குவதும் சிறிது காலம் கழித்து அவைகளை வாராக்கடன்கள் எனத் தள்ளுபடி செய்து வருவதும் அனைவரும் அறிந்ததே. கூட்டுறவு வங்கிகளும் பெரும் மிட்டாமிராசுகளுக்கு உதவும் வங்கிகளாக மாறும் காலம் அதிக தூரத்தில் இல்லை.
நமது நாட்டிலுள்ள உழவர்களில் சுமார் 90% சிறு, குறு அளவிலேயே வேளாண்மைச் செய்பவர்கள் ஆவார்கள். தங்களின் உற்பத்தி பொருட்களைப் பெரிய அளவில் சந்தைப்படுத்துதலை இவர்களால் மேற்கொள்ள முடியாது. தங்கள் உற்பத்தியை உடனடியாக விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய நெருக்கடியான  சூழலில் இடைத்தரகர்களும், வணிகர்களும் பயன்படுத்தி குறைந்த விலையில் அவற்றை வாங்கும் போக்கைக் கட்டுபடுத்த வேளாண் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்குழுச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்களின் கீழ் உழவர்கள் தங்களது விலைப்பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட சந்தைப் பகுதிகள் அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமே விற்க முடியும். இதன் மூலம் வேளாண் சந்தையில் நிலவி வந்த முறைக்கேடுகள் ஒரளவுக்கு களையப்பட்டன. ஆனால் இந்த விற்பனைக்குழு சட்டங்களை நீர்த்துபோகச் செய்யும் வகையில் 'வேளாண் விலைப்பொருள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம் – 2020, உழவர்கள் விலை மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த அவசரச்சட்டம் – 2020” ஆகிய அவசரச்சட்டங்களை கடந்த சூன் மாதத்தில் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்பாக மாநில அரசுகளை மத்திய அரசு கலந்து ஆலோசனைச் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அவசரச் சட்டங்களின் மூலம் சட்ட விரோதமான சந்தைப்படுத்துதல் சட்டப் பூர்வமானதாக ஆக்கிவிடும். இந்த சூழல் தரகு வணிகர்களின் கை ஓங்குவதற்கே வழிசெய்யும்.
கரோனா காலத்தைப் பயன்படுத்தி மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சனநாயக வாதிகள் ஆகியோர்க்கு எதிராக தேசத் துரோகச் சட்டங்களைப் பயன்படுத்திக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. புகழ்பெற்ற மனிதஉரிமை போராளிகளான வரவரராவ் பேராசிரியர்கள் சாய்பாபா, ஏனிபாபா போன்ற அறிஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் கூட அவர்கள் மீது எத்தகைய விசாரணையும் நடத்தப் படவில்லை. இதற்குக் கண்டனம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற நூற்றுக் கணக்கானவர்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டியிருக்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட இராச துரோகச் சட்டத்தை ஆங்கிலேயர் வெளியேறிய பிறகும் சுதந்திர நாட்டில் எதிர்க்கட்சிகளை ஒடுக்க தொடர்ந்து பயன்பட்டு வருவதைப் போன்ற வெட்ககேடு வேறிருக்க முடியாது.
கரோனா காலத்தில் மோதல் சாவுகள், காவல்நிலைய சாவுகள் ஆகியவை நாடெங்கும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இவைக்குறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலைக் காவல் துறையினரும் அரசுகளும் சிறிதளவுக் கூட மதிப்பதாகத் தெரியவில்லை.
கரோனாவை முன்நிறுத்தி நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவை முடக்கப்பட்டுவிட்டன. பத்திரிகைகளும், ஊடகங்களும் பல்வேறு நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. பத்திரிகைகளைக் கடைகளுக்கு அனுப்பி விற்க முடியாத நிலைமையில் பல பத்திரிகைகளின் விற்பனை பெருமளவுக்குச் சரிந்துள்ளது. படிப்போரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் தொடர்ந்து  அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அவசரச்சட்டங்களைப் பிறப்பிப்பதின் மூலம் ஆட்சியாளர்கள் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதற்கு எதிராக குரல் எழுப்புவோர்கள் தேசத் துரோகிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். சனநாயக அமைப்புகள் அனைத்தும் மீளா உறக்க நிலையிலேயே தொடர்ந்து  வைக்கப்படுகின்றன. அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் தன்னிச்சையான போக்கிலேயே தறிக்கெட்டு ஓடிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக சனநாயகம் என்ற போர்வையில் சர்வாதிகாரம் கோலோச்சுகிறது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் இராணுவச் சர்வாதிகாரம் அல்லது வேறுவகையான சர்வாதிகாரம் ஏற்கனவே தலைவிரித்து ஆடுகின்றன. நமது நாட்டிலும் இந்த நிலை தொடருமானால் அண்டை நாடுகளில் ஏற்பட்டது நமக்கும் ஏற்படும்.
மக்கள் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் ஒத்துழைப்புடன் கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசின் ஆணைகளின் மூலம் அதை ஒழித்துவிட முடியாது. என்பதை அரசு உணர வேண்டும். கரோனா எதிர்ப்புப் போரில் நாம் வெற்றிபெற மக்கள், மருத்துவ துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய அனைவரின் முழுமையான ஒப்புதலுடன் போராடினால் ஒழிய இந்தக் கொடிய நோயை ஒழித்து விட முடியாது.
சனநாயக நெறிமுறைகளை அரசும் அரசியல் கட்சிகளும் சற்றும் மதிக்காதப் போக்கில் செயல்படுமேயானால் சர்வாதிகாரம் நிலைநிறுத்தப்பட்டுவிடும். மத்திய - மாநில அரசுகள் செயல்படும் முறை சனநாயகத்தைச் சிதைத்து வருகிறது. சனநாயகத்தின் பெயரால் கடைப்பிடிக்கப்படும் சர்வாதிகார நடைமுறைகள் தொடருமேயானால் சமுதாயத்தில் கொந்தளிப்புகள் தோன்றுவதைத் தடுக்க முடியாது. அவற்றின் விளைவாக மக்கள் புரட்சி வெடிக்கும்.