ஆளுநர் நியமனம் - அன்று காங்கிரசு – இன்று பா.ச.க. - பழ. நெடுமாறன் கண்டனம் அச்சிடுக
வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021 13:59

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஐ.பி உளவுத்துறை அதிகாரியான ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கல்வித்துறையினர், முன்னாள் நீதியரசர்கள் போன்ற அரசியல் சார்பற்றவர்களே மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுவார்கள் என அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட காலத்தில் நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சரான அம்பேத்கர் வாக்குறுதி அளித்தார். 1967ஆம் ஆண்டிற்குப் பிறகு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடித்தபோது, அங்கெல்லாம் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்கு வளரத் தொடங்கியது. மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியின் போது அங்கு ஆளுநராக ஐ.பி. உளவுத்துறையின் முன்னாள் தலைவர் எம்.கே. நாராயணன் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இந்திய உள்துறையின் செயலாளராக இருந்த சுந்தர் லால் குரானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஒன்றிய ஆட்சியில் காங்கிரசு இருந்தபோது பின்பற்றிய இந்த வேண்டாத பழக்கத்தை பா.ச.க. ஆட்சியும் பின்பற்றுகிறது.

சனநாயக மரபுகளுக்கு எதிராகவும், மாநில ஆட்சிகளைக் கண்காணிப்பதற்கும் முன்னாள் அதிகாரிகளை ஆளுநராக நியமிக்கும் போக்குக்கு எதிராக அனைவரும் இணைந்து கண்டனக் குரல் எழுப்ப முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.