காந்திய நாட்டில் காலனி ஆட்சிச் சட்டம் நீடிக்கலாமா? அச்சிடுக
திங்கட்கிழமை, 03 ஜனவரி 2022 10:34

பா.ச.க அரசு மேற்கொள்ளும் மக்கள் எதிர் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் எழுத்தாளர்கள், அறிஞர்கள் போன்றவர்கள் மீதெல்லாம் தேசத் துரோகச் சட்டம் ஏவப்படுகிறது.

உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில்கூட வெளிவர முடியாமல் ஆண்டுக் கணக்கில் சிறையில் கிடந்து உழலுகிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அதாவது, 1870ஆம் ஆண்டு இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்திய குற்றவியல் சட்டத்திலும் இது சேர்க்கப்பட்டது. இந்திய அரசுக்கு எதிராக எழுத்து, பேச்சு அல்லது வேறு வகையில் வெறுப்பைத் தூண்டுபவர்களை கைது செய்து ஆயுள் காலம் முழுவதும் சிறையில் வைப்பதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.

இந்திய மக்களை அடிமைப்படுத்தி ஆளவும், நாட்டின் வளங்களை சூறையாடவும் இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மீது இராசத் துரோகம் என்னும் தேசத் துரோகச் சட்டத்தை ஏவினர். ஆனால், இந்தியா விடுதலை பெற்றப் பிறகும் இந்தக் கொடுமையான சட்டம் தொடர்கிறது.

இச்சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் பெரும்பாலம் மெய்ப்பிக்கப்படுவதில்லை; விடுதலை செய்யப்படுகிறார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையான 3சதவீதம் பேர்கள் மட்டுமே தண்டனைக்குள்ளாகிறார்கள். ஆனால், பல ஆண்டுகள் சிறையில் சொல்லொண்ணாதத் துன்பங்களுக்கு ஆளாகி நலிகிறார்கள்.

மனித உரிமைகளை நிலைநிறுத்தவேண்டும். இதற்கு எதிராகச் செயல்படுபவர்களை தண்டிக்க வேண்டும் என உலகெங்கும் பெரும்பாலான நாடுகளில் கருத்தோட்டம் பரவியிருக்கும் காலகட்டத்தில் இந்தச் சட்டம் இனியும் தொடரவேண்டுமா?

கௌதம புத்தரும், மகாவீரரும், காந்தியடிகளும் அன்பு நெறியைப் புகட்டினர். அறவழியை மேற்கொள்ளவேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தினர். ஆனால், இம்மண்ணில் வாழும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. கொடும் சிறையில் தள்ளப்பட்டு வாடப்படும் நிலை நீடிப்பது மேலே கண்ட தலைவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.