இதயம் திறந்து பாருங்கள் - பேரறிவாளன் அச்சிடுக
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:08

மீண்டும் எங்கள் பிரச்சினையைத் தம் பிரச்சினையாகக் கருதி தமிழ்ச் சமூகம் பேச ஆரம்பித்திருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு இந்த மடலை எழுதத் தொடங்குகிறேன்.

எங்கள் விடுதலைக்காக இது நாள் வரை பேசிய பலரையும் டிசம்பர் 2 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்தச் சங்கடத்துக்கான காரணம் இதுதான்: இந்த விடுதலையை எந்த வகையில் சாத்தியப்படுத்துவது?

முக்கியமாக, இந்த விடுதலையைச் சாத்தியப் படுத்துவதற்கான அதிகாரம் இன்னமும் தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறதா?

இதற்கான தெளிவான, உறுதியான பதில்: ஆம்.

விடுதலைக்கான வழி என்ன?

1. மரண தண்டனையைப் பொறுத்தளவில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 432 மற்றும் 433(ஏ)-ன் கீழ் மாநில அரசுக்குத் தண்டனைக் குறைப்பு அதிகாரம் உள்ளது. பிரிவு 434-ன் கீழ் மத்திய அரசுக்கும் மரண தண்டனையைக் குறைக்க அதிகாரம் தரப்பட்டுள்ளது. அதே நேரம், ஒரு வழக்கில் 432 (7) (ஏ)-ன்படி "உரிய அரசு' மத்திய அரசு எனத் தீர்மானிக்கப்பட்டுவிட்டால், மரண தண்டனையானாலும் பிரிவு 432 மற்றும் 433(ஏ)-ன் கீழ் மாநில அரசு தண்டனையைக் குறைக்க முடியாது - - தலையிட முடியாது - உரிமை இல்லை. எடுத்துக்காட்டாக, வீரப்பன் வழக்கில் "தடா' சட்டப் பிரிவின் கீழ் மரண தண்டனை பெற்றுவிட்ட நால்வரின் தண்டனையைக் குறைக்க 432(7) (ஏ)-ன்படி மத்திய அரசு மட்டுமே "உரிய அரசாக' கருத முடியும். இதுவே 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் "தடா'வின் கீழ் மரண தண்டனை பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

2. ராஜீவ் கொலை வழக்கில் தடா சட்டம் பொருந்தாது என உச்ச நீதிமன்றம் 1999-லேயே தீர்ப்பு கூறிவிட்டது. எங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ்தான் தண்டனை அளிக்கப்பட்டது. ஆகையால், அரசியல் சாசனம் சட்டப் பிரிவு 162-ன் கீழ் இது முழுக்க முழுக்க மாநில அதிகாரம் நீளும் எல்லைக்குட்பட்ட வழக்கு. ஆகையால்தான், அரசியல் சட்ட சாசனப் பிரிவுகள் 161 மற்றும் 72-ன் கீழ் மரண தண்டனையைக் குறைக்கக் கேட்டு, எங்களால் மனு அளிக்க முடிந்தது. ஆகையால், எங்கள் வழக்கைப் பொறுத்த அளவில் மாநில அரசே "உரிய அரசு'.

3. அரசியல் சட்டப் பிரிவு 161-ன்படி, மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட எந்த வழக்கிலும், தொடர்புடைய எந்தத் தண்டனையையும் (மரண தண்டனை உட்பட) மன்னிப்பளிக்கவோ, குறைக்கவோ, மாற்றி அமைக்கவோ, நிறுத்தி வைக்கவோ மாநில ஆளுநருக்கு (மாநில அரசின் ஆலோசனைப்படி) அதிகாரம் உண்டு.

இந்த மூன்று விஷயங்கள் அளிக்கும் தெளிவின் படியே நாங்கள் இப்போது மீண்டும் கருணை மனு அளித்திருக்கிறோம்.

தேவையற்ற ஒரு குழப்பம்

தமிழக அரசு இப்படியொரு முடிவை நோக்கி நகரும் முன், சிலர் தெரிவிக்கும் ஒரு கருத்து, தேவையற்ற குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்தக் கருத்து இதுதான்: ்பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் அரசியல் சட்டப் பிரிவு 161-ன் கீழான அதிகாரத்தையும், சட்டப் பிரிவு 72-ன் கீழான அதிகாரத்தையும் ஏற்கெனவே பயன்படுத்திவிட்டார்கள். எனவே, மீண்டும் ஒருமுறை கருணை அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு கேட்பதற்குச் சட்டத்தில் வழியில்லை.

இது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கும் ஒரு கருத்து. மேலும், தேவையற்ற குழப்பமும்கூட.

எல்லையற்ற அதிகாரம்

அதிகாரம் என்று வரும்போது முறையீடு, மேல்முறையீடு எனவோ, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்றோ மேல் கீழ் அடுக்குகளாக (அல்லது) அதிகார மையங்களாக அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 161 மற்றும் 72-ன் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகார வரம்பை வகைப்படுத்த முடியாது. இரண்டும் தனித்துவமான, சமமான அதிகாரங்கள் கொண்டவை. கட்டற்றவை, நீதிமன்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இதை மருராம் வழக்கிலிருந்து இன்று டிசம்பர் 2 தீர்ப்பு வரை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்திவிட்டது.

அதேபோல், மரண தண்டனையைக் குறைக்கக் கோரும் சட்டப் பிரிவுகள் 161 மற்றும் 72 ஆகியவற்றின் கீழ் ஒரு முறைக்கு மேலும் கருணை மனு செய்ய சட்டத்தில் இடமுண்டு என்பதை யும் மருராம், திரிவேணி பென், கிருஷ்டா கவுடா மற்றும் பூமைய்யா, கிருஷ்ணா வழக்கு கள் எனப் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

தற்போது டிசம்பர் 2 தீர்ப்பிலும் உச்ச நீதிமன்றம் இதையே உறுதிப்படுத்தியுள்ளது. தீர்ப்பு பத்தி 110-ல் மத்திய அரசின் வழக்குரை ஞர் சட்டத்தின் இந்த நிலைப்பாட்டை, "அதாவது, பிரிவுகள் 161 மற்றும் 72-ன் கீழ் ஒரு முறைக்கு மேலும் மனு செய்யலாம்' என்பதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனை பெற்றுவிட்ட ஒரு சிறைவாசிக்கு உரிய அரசாக மாநில அரசு மட்டுமே சட்டப் பிரிவு 161-ன் கீழ் இருக்க முடியும்.

72-ன்படி குடியரசுத் தலைவருக்கான தண்டனைக் குறைப்பு அதிகாரம் மத்திய அரசு ஆளுகைக்கு உட்பட்ட வழக்குகளில் மட்டுமே உரிமை உண்டு.302-ன் கீழ் ஆயுள் சிறைவாசிக்குத் தண்டனைக் குறைப்பு வழங்க சட்டப் பிரிவு 72-ன் கீழ் வாய்ப்பு இல்லை.

ஓர் உதாரணம்

எடுத்துக்காட்டாக சட்டப் பிரிவு 72-ன் கீழ் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்பு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஸ் (9 பேர் கொலை வழக்கு) என்பவருக்கு சட்டப் பிரிவு 161-ன் கீழ் 1996-ம் ஆண்டு அறிஞர் அண்ணா பிறந்த நாளின்போது 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இதயத்தைத் திறந்து பாருங்கள்

தமிழக அரசு, அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், ஊடகங்கள் எல்லாவற்றுக்கும் மேல் தமிழ் மக்கள் முன் இறுதியாக எனது புதிய கருணை மனுவுக்கான காரணங்களை, புதிய சூழலைத் தர விரும்புகிறேன்.

1. 17.10.1999 அன்று நான் அளித்த பிரிவு 161-ன் கீழான கருணை மனுவிலும், 26.04.2000 அன்று அளித்த பிரிவு 72-ன் கீழான கருணை மனுவிலும் மரண தண்டனைக் குறைப்பு வேண்டியே மனு அளித்திருந்தேன். ஆனால், தற்போது நான் விண்ணப்பித்திருப்பது ஆயுள் சிறைத் தண்டனைக்கான கழிவு கேட்டு.

2. சட்டப் பிரிவு 161-ன் கீழ் மனு அளித்து 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.

3. 18.02.2014 அன்று எனது தண்டனையைக் குறைத்த உச்ச நீதிமன்றம், எனக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குமாறு "உரிய அரசுக்கு' பரிந்துரை செய்துள்ளது.

4. தற்போது 25 ஆண்டுகால தண்டனை காலத்தை அனுபவித்துவிட்டேன். பிணை, பரோல் இல்லாமல் - தனிமைச் சிறையில்.

5. இந்தியாவில் உள்ள எந்தச் சிறைவாசியைக் காட்டிலும் சிறப்பான முறையில் எனது நன்னடத்தையை நான் நிரூபித்திருக்கிறேன்.

6. வயதான காலத்தில், நோயோடு போராடும் எனது பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய ஒரே பிள்ளை - மகன் - நான் மட்டுமே.

7. நீண்ட தனிமைச் சிறையினால் பல்வேறு நோய்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.

8. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 22.11.2013 அன்றும் 25.07.2015 அன்றும் நான் நிரபராதி என்பதை வெளிப்படுத்தி தியாகராசன், ஐபிஎஸ் அளித்த பேட்டியினையொட்டி நான் நிரபராதி என நிரூபிக்க எனக்குள்ள ஒரே வாய்ப்பு அரசியல் சாசனம் சட்டப் பிரிவு 161 மட்டுமே.

இனி என் வாழ்க்கை உங்கள் கையில்
அன்புடன்
பேரறிவாளன், கைதி எண்: 13906
வழக்கறிஞர் மூலமாக... (நன்றி : "தமிழ் இந்து' 23-1-16)