தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார் அச்சிடுக
திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2007 13:44
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டுமென்றும், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்றும்.. இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.
1983-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 24 ஆண்டு காலமாக 300-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் எல்லை மீறி வந்து சுட்டுக் கொன்றிருக்கின்றனர்.
தங்களை யார் சுட்டார்கள் என்பதை தமிழக மீனவர்கள் வெளிப்படையாகக் கூறியுள்ளார்கள். ஆனால் நமது மீனவர்களின் குற்றச்சாட்டை நம்பாமல், சிங்கள கடற்படை தளபதியின் கூற்றை நம்பி இந்திய கடற்படை தலைமை தளபதி விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சிங்கள கடற்படையினரின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படையின் கையாலாகத்தனத்தை மூடி மறைக்கவே இந்திய கடற்படை தளபதி விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார்.
குமரிக் கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், மற்றும் அவர்களுடன் கடலில் சென்று உயிர் தப்பி மீண்டவர்களிடம் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா நேரில் வந்து விசாரணை நடத்த தயாரா என நான் அறைகூவல் விடுக்கிறேன்.