காவல்துறை – மக்களைக் காக்கவா? அரசைக் காக்கவா? - - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஜூலை 2020 19:37

அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய புலவரின் பெயர் சாத்தனார் என்பதாகும். அத்தகைய புத்தரின் பெயரால் அமைந்த சாத்தன்குளம் என்னும் ஊரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு வணிகர்கள் சித்ரவதையின் காரணமாக உயிரிழந்த கொடுமை நிகழ்ச்சி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாத்தன்குளத்தில் மட்டுமல்ல நாடெங்கும் இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமையில் கௌதம புத்தரும் காந்தியடிகளும் பிறந்த நாடு என தம்பட்டம் அடிப்பதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது.

 

 

Saathankulam

2019-ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் காவல் நிலையங்களில் 1,731 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன என தேசிய மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 2012-ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் உயிரிழப்பது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் தமிழகத்தில் 135 பேர்களின் உயிர்கள் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 70 விழுக்காட்டினர் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட குற்றப் புள்ளி விவரங்களில் விசாரணைக் கைதிகள் சாவுப் பட்டியலில் குசராத் மாநிலம் முதலாவதாகவும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

 தமிழக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ. பி. ஷா அவர்கள் இந்நிகழ்ச்சிக் குறித்து கூறும் போது “தமிழக காவல்துறை பல்லாண்டு காலமாக சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது என்ற பெயரில் சித்ரவதைகள் செய்வதற்கு பெயர் பெற்றதாக விளங்கி வருகிறது. இது தொடர்பான பல வழக்குகள் என் முன்னிலைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன”  என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையின் சட்டப் புறம்பான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளும் அவ்வப்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உலகப் புகழ் பெற்ற சுகாட்லாந்துயார்டு காவல்துறையுடன் ஒப்பிடும் அளவுக்கு மதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக் காவல் துறையின் இன்றைய நிலை அத்துறைக்கு என்றும் அழியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தையோ அல்லது மனித உரிமை ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களையோ காவல்துறை மதித்துப் பின்பற்றுவது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இத்தகைய நிகழ்ச்சிகள் காவல்துறையின் செயல்பாட்டையே நிலைகுலையச் செய்துவிடும். மக்கள் மத்தியில் அத்துறைக்குரிய மதிப்பு சரிந்து போகும். மக்களின் உயிர்களுக்குக் காவலர்களாக இருக்க வேண்டியவர்கள் உயிர்களைப் பறிக்கும் கொலையாளிகளாக மாறக் கூடாது.

சாத்தன்குளத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னும் தங்களது கடையை அடைக்கவில்லை என்பதற்காக தந்தையும் மகனுமான இரு வணிகர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு மறுநாளே சிறையிலும் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் சிறையிலிருந்து பிணங்களாக வெளிக் கொண்டுவரப் பட்டிருக்கிறார்கள். உயிர்களைப் பறிக்கும் அளவுக்கு அவர்கள் இழைத்தக் குற்றம் என்ன? குறித்த நேரத்தில் கடையை அடைக்கவில்லை என்பதற்காக எச்சரிக்கை செய்திருக்கலாம். அதிகப் பட்சமாக வழக்குத் தொடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் கைது செய்யப்படும் அளவுக்கு அவர்கள் மீது எத்தகையக் குற்ற வழக்கும் இல்லை. இரு வணிகர்கள் மீதும் குற்றவியல் சட்டப் பிரிவு 188, 269, 204 – பி, 353, 506 – பிரிவு 2 ஆகியவற்றின் கீழ்தான் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் கூட அதிகபட்சமாக 3 மாத தண்டனை தான் விதிக்க முடியும். ஆனால் அவர்கள் தங்கள் உயிர்களையே பறி கொடுக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஆணை 722-இன்படி ஏழாண்டுகள் வரை சிறை தண்டனை பெறக் கூடிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யக் கூடாது என மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 1994-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் கொலை, கொள்ளை, வழிப்பறி, மானபங்கம் ஆகிய வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது. இவற்றின்படி பார்த்தால் சாத்தன்குளம் காவல்நிலைய அதிகாரிகள் இந்த விதிமுறைகள் எதையுமே மதிக்காது செயல்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. மேற்கண்ட இருவரையும் கைது செய்தது முதல் தவறு. வழக்குப் பதிவுக்குப் பின் காவல்நிலைய பிணையில் அவர்களை விடுவிக்காதது இரண்டாவது தவறு. அன்று இரவு முழுவதும் காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து சித்ரவதை செய்தது மிகப் பெரியக் குற்றமாகும். மறுநாள் அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர்கள் உடல் நலமுடன் இருப்பதாக சான்றிதழ் கொடுத்தது காவலர்களின் தவறுக்கு உடந்தையானக் குற்றமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக சாத்தன்குளம் நீதிமன்ற நடுவர் அவர்களை சிறிதளவு கூட விசாரிக்காமல் சிறையில் அடைக்க ஆணைப் பிறப்பித்தது மன்னிக்க முடியாத தவறாகும். அவர்களை விசாரித்திருந்தால், சித்ரவதைக்கு உள்ளாகி இருப்பது தெரிந்திருக்கும். உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்க்கும்படி ஆணைப் பிறப்பித்திருக்கலாம். ஆனால் மிக மோசமான உடல்நிலையில் அவர்கள் சிறைக்குக் கொண்டு போகப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். சிறை அதிகாரிகளும் அவர்களை உடல் பரிசோதனை செய்யாமல் அனுமதித்தது எல்லாவற்றிற்கும் மேலான பெரும் தவறாகும். மோசமான உடல் நிலையில் இருப்பவர்களை சிறைக்குள் அனுமதிக்க முடியாது என சிறை அதிகாரி மறுத்திருந்தால் வேறு வழியில்லாமல் மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டி யிருந்திருக்கும். அதன் விளைவாக ஒரு வேளை அவர்கள் உயிர்ப் பிழைத்திருக்கக் கூடும். அரசு மருத்துவர், நீதிமன்ற நடுவர், சிறை அதிகாரி ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்திருந்தால் இந்தச் சாவுகளை உறுதியாகத் தடுத்திருக்கலாம். ஆனால் சட்டப்படியும் மனித நேயத்துடனும் செயல்பட அவர்கள் தவறி விட்டனர்.

இந்தியாவெங்கும் காவல்துறையில் பரவியுள்ள இந்தக் கொடியப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? நமது நாட்டில் மட்டுமல்ல மிகவும் முன்னேறிய அமெரிக்காவில் கூட அண்மையில் ஒருவர் காவல்துறையின் அடாவடிக்கு இரையாகி உயிர் நீத்த நிகழ்ச்சி அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திற்று. உலகெங்கும் பரவியுள்ள இந்தப் போக்கினை நீக்குவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக 1984-ஆம் ஆண்டில் அய். நா. பேரவை ஒரு கூட்டத்தைக் கூட்டியது. சித்ரவதை மற்றும் கொடூர-மனிதநேயமற்ற இழிவான செயல்கள் மற்றும் தண்டனைகள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் இந்தியாவும் கலந்து கொண்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டப் பட்டயத்தின் அடிப்படையில் அனைத்து நாடுகளும் சட்டங்கள் இயற்ற வேண்டும் என ஐ. நா. வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்திய அரசு இந்தப் பட்டயத்தில் கையெழுத்திட்டதேத் தவிர அதற்கு இதுவரை ஒப்புறுதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஐ. நா. வின் அழுத்தத்தின் காரணமாக 26 ஆண்டுகள் கழித்து 2010-ஆம் ஆண்டில் சித்ரவதைத் தடுப்புச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் அய். நா. பட்டயத்திற்கு ஏற்றாற் போல செயல்படும் வகையில் இந்தச் சட்டம் அமையவில்லை. அரசுக்கு வேண்டிய விதத்தில் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும் நாடாளுமன்ற மேலவையில் இச்சட்டம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களைக் கொண்டத் தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அக்குழு இச்சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து 2012-ஆம் ஆண்டில் அரசுக்கு அனுப்பியது. ஆனால் இதுவரை அந்தச் சட்டம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குக் கொண்டுவரப் படவில்லை.

2017-ஆம் ஆண்டில் இந்தியச் சட்ட ஆணையம் அளித்த 273-ஆவது அறிக்கையுடன் சித்ரவதை தடுப்புச் சட்ட முன் வடிவு ஒன்றையும் நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் அனைத்து மாநில அரசுகளின் கருத்தறிவதற்காக இதன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இன்று வரை எந்த மாநில அரசும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன்படி கேரள மாநிலத்தில் மட்டுமே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இத்தகையச் சட்டம் இன்னமும் கொண்டுவரப் படவில்லை. காவல்துறை சட்டத்தில் சில திருத்தங்களை தமிழக அரசு செய்துள்ளதே தவிர மக்களுக்குத் தேவையானத் திருத்தங்களோ அல்லது மாற்றங்களோ இன்னமும் கொண்டுவரப்படவில்லை. சுருக்கமாகக் கூறினால் 1861-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட காவல்துறைச் சட்டம் அதே நிலையில் அப்படியே நீடிக்கிறது.

இந்திய உள்துறை அமைச்சகமோ அல்லது மாநில அரசுகளோ இத்தகையச் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து சிறிதளவு கூட அக்கறைக் காட்டாத நிலை நீடிக்கிறது. அனைத்து அரசுகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தங்களுக்கு எதிராக மக்களின் கிளர்ச்சிகளைத் தடுப்பதற்கும் ஒடுக்குவதற்கும் காவல்துறையைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த நோக்கத்தை சிதறடிக்கும் அளவுக்கு ஒரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை என்பது வெளிப்படை.

1990, 1997, 2006, 2013, 2017 ஆகிய ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் அளித்தப் பல்வேறுத் தீர்ப்புகளில் குறிப்பிட்டபடி காவல் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசுகள் தயங்குகின்றன. உச்ச நீதிமன்றம் அளித்த முக்கியமானத் தீர்ப்பின்படி மக்கள் அளிக்கும் புகார்களை பரிசீலனை செய்ய மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் குழுக்களை அமைக்க வேண்டும் என்பது இன்னமும் எட்டாக் கனியாக உள்ளது. இத்தகைய குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தால் சாத்தன்குளம் நிகழ்ச்சிப் போன்றவை நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போயிருந்திருக்கும்.

காவல்துறையைச் சீர்திருத்துவதற்காக பல ஆணையங்கள் நடுவண் அரசினாலும் தமிழக அரசினாலும் அமைக்கப்பட்டு அவைகளும் அவ்வப்போது தங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன. ஆனால் அவைகளில் எதுவும் நிறைவேற்றப்பட்டதாகத் தெரியவில்லை. காவல் துறையின் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு அவர்களின் மேலதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கீழே வரையில் கண்காணிக்கும் நிலை ஏற்படும். தவறிழைக்கும் அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்க வேண்டுமானால் அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற விதி அதிகாரிகளை பாதுகாப்பதோடு தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற எண்ணத்தையும் அவர்களிடம் ஏற்படுத்தி விடுகிறது. இந்த விதி நீக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 468-ஆவது பிரிவின்படி ஆறு மாத காலத்திற்குள் புகார் அளிக்காவிட்டால் நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது நீக்கப்பட வேண்டும். காவல் நிலையத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நிகழும் மரணம் கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். காவல் நிலையக் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவது சட்டப்பூர்வமான உரிமையாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர்களாக இருப்பவர்கள் காவல்துறையை தங்களது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். முதலமைச்சரே அத்துறைக்குப் பொறுப்பாக இருந்தால் தனது துறையில் நடைபெற்றத் தவறை திசைத் திருப்புவதற்கு உயரதிகாரிகள் செய்யும் முயற்சியை அவரால் தட்டிக் கேட்க இயலாது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

சாத்தன்குளம் நிகழ்ச்சியில் உடனடியாக உயர்நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சாத்தன்குளம் காவல்நிலைய அதிகாரிகளும் காவலர்களும் கைது செய்யப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் தலையிட்டுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலை தொடர முடியாது. அதிகார வர்க்கத்திடம் மனமாற்றம் ஏற்பட வேண்டும். காவல் துறை தலைவரிலிருந்து காவலர்கள் வரை நாம் மக்களுக்கான தொண்டர்கள்; அவர்களின் உயிர்களையும் உடமைகளையும் காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள்; என்ற உணர்வு ஊட்டப்பட்டால் ஒழிய சாத்தன்குளம் கொடுமைகள் தொடரவே செய்யும்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.