பலிக்கடாவாகும் ஈழத் தமிழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 14 ஜூன் 2010 12:53
2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
கடந்த ஓராண்டில் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் வெளியுறவுத்துறை செயலாளரும் பலமுறை கொழும்புவுக்கு சென்று இராசபக்சேவுக்கு நன்றிகூறி பேச்சுவார்த்தை நடத்தித் திரும்பினார்.
ஓராண்டு கழித்து வெற்றி வீரராக தில்லியில் அடியெடுத்து வைத்த இராசபக்சேக்கு இந்திய அரசு இரத்தினக் கம்பள வரவேற்பு அளித்தது. தில்லியில் அவர் தங்கிய ஒரே நாளில் ஏழு உடன்பாடு செய்துகொள்ளப் பட்டுள்ளன.
சிங்கள இராணுவத்தினருக்கும், காவல்துறையினருக்கும் இந்தியாவில் சிறப்புப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்பது முக்கியமான உடன்பாடாகும். இந்த உடன்பாட்டிற்கு அவசியம் என்ன? இலங்கைக்கு அருகில் உள்ள ஒரே நாடான இந்தியா மிகச்சிறந்த நட்பு நாடாகும். அப்படியிருக்கும் போது மேலும் மேலும் சிங்கள இராணுவத்தைப் பலப்படுத்த வேண்டிய நோக்கம் என்ன? போர் உச்சக்கட்டமாக நடந்த கடந்த ஆண்டு இலங்கையின் பாதுகாப்புச் செலவு 210 பில்லியன் ரூபாய்களாகும். போர் முடிந்து புலிகளும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2010 ஆம் ஆண்டு பாதுகாப்புச் செலவுக்காக கிட்டத்தட்ட அதே அளவு தொகையான 201 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவுவது என்பது நாளை இந்தியாவுக்கு எதிராகவே திரும்பாது என்பதற்கு உத்திரவாதம் எதுவும் இல்லை.
500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றினை அமைக்க இந்தியா ரூ.1000 கோடி வழங்க முன்வந்துள்ளது. சிங்களப் பகுதியில் ஏராளமான தரிசு நிலங்கள் உண்டு. அனல் மின்நிலையங்களை அங்குதான் அமைப்பது வழக்கம். ஆனால் திரிகோணமலைக்கு அருகே மக்கள் செறிந்து வாழும் சம்பூர் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களை எல்லாம் விரட்டியடித்து அனல் மின் நிலையம் அமைக்க ஒதுக்கியுள்ளது சிங்கள அரசு. காலங்காலமாக சம்பூரில் வாழ்ந்து சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்களின் கதி என்ன? என்பதைக் குறித்து இந்தியா கவலைப்படவில்லை.
இலங்கையின் இரயில்வே புனரமைப்புக்காக ரூ.4000 கோடியை தர இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் பல பகுதிகளில் இரயில்வே திட்டங்கள் போதுமான பணம் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழர் பகுதியில் உள்ள காங்கேசன் துறைமுகம், பலாலி விமான நிலையம் ஆகியவற்றைத் திருத்தி நவீனமயமாக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு எப்படியும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். ஆனால் இதன் மூலம் சிங்களப் படைகள் விரைவான முறையில் தமிழர் பகுதிகளில் வந்திறங்கி அவர்களைத் தாக்க முடியும். வேறு பயன் எதுவும் இல்லை. ஏனெனில் இலங்கையில் கொழும்புத் துறைமுகம் மட்டுமே சர்வதேசத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியும் இறக்குமதியும் அதன் மூலம் மட்டுமே நடைபெறவேண்டும்.
தூத்துக்குடி#கொழும்பு, தலைமன்னார்#இராமேசுவரம் ஆகியவற்றுக்கிடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்குவதற்கும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலும் வெளியில் தங்கள் சொந்த செலவிலும் தங்கியுள்ள மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களை இனிமேல் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பலாம் என்று கூறி விரட்டியடிக்கவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வேறு பயன் எதுவும் இல்லை.
2008ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு மேலும் பலப்படுத்தப்படும். என்று கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாடு கையெழுத்திட்டப் பிறகும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அதிகமாகியிருக்கிறது. இராசபக்சே தில்லியில் இருக்கும் காலகட்டத்திலேயே இராமேசுவரம் மீனவர்களை சிங்களக் கடற்படை மிகக்கடுமையாகத் தாக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
உடன்பாடுகளில் உள்ள மற்ற அம்சங்கள் அனைத்தும் சிங்கள அரசுக்குச் சாதகமானதே தவிர ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவையே ஆகும். இந்தியாவிற்கும் இதனால் எவ்விதப் பயனும் இல்லை.
கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதியன்று தமிழக முதலமைச்சர் அனுப்பிவைத்த தூதுக்குழுவிடம் இராசபக்சே பேசும்போது "இன்றிலிருந்து 15 நாட்களில் முள்வேலி முகாம்களில் மக்கள் விடுவிக்கப்படுவது தொடங்கும் மூன்று மாதத்தில் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார். ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இன்னும் 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். விடுவிக்கப்பட்டவர்களும் அவர்கள் ஊர்களுக்குத் திரும்பினாலும் வாழமுடியவில்லை. வீடுகள் எல்லாம் குண்டு வீச்சால் இடிந்து கிடக்கின்றன. இந்த நிலையில் மீண்டும் காங்கிரஸ்#தி.மு.க. தூதுக்குழுவை நமது முதலமைச்சர் தில்லிக்கு அனுப்பி இராசபக்சேயிடம் முறையீடு செய்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வெளியே வந்தபோது தனது திருப்தியின்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியா புறப்படுவதற்கு முன் சூன் 7ஆம் தேதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இராசபக்சே அழைத்துப் பேசினார். அந்தப் பேச்சில் நடந்தவைக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான சுரேசு பிரேமச்சந்திரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
"போரினால் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளைக் கட்டித்தரவேண்டும் என்றும் இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என்றும் நாங்கள் கேட்டபோது அவற்றுக்கான நிதிவசதி அரசிடம் இல்லை என்று இராசபக்சே கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து பேச முற்பட்டபோது "சிங்கள மக்கள் தனக்கு வழங்கிய ஆணைப்படிதான் எதையும் தன்னால் செய்ய முடியும். உங்கள் கோரிக்கைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை என இராசபக்சே கண்டிப்புடன் கூறினார். மக்கள் குடியிருப்பு பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து இராணுவம் கைப்பற்றியதை மீண்டும் மக்களிடம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் அவர் ஏற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து நாங்கள் முறையிட்டபோது "இலங்கை சிங்கள நாடு எங்கு வேண்டுமானாலும் குடியேற சிங்களர்களுக்கு உரிமை உண்டு' என்றும் கூறினார் எனத் தெரிவித்திருக்கிறார்.
போரில் தனக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி கூறவேண்டும் என்பதற்காக இராசபக்சே இங்கு வரவில்லை. மாறாக அவருக்கு உலக அளவில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மேற்கு நாடுகள் உட்பட பல உலக நாடுகள் இராசபக்சேயை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதிலிருந்து தாம் தப்புவதற்காக இந்தியாவின் உதவியை நாடி அவர் வந்திருக்கிறார். இந்தியாவின் துணையுடன் ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்மையில் தான் முயல்வதாக ஒரு மாயதோற்றத்தை அவர் ஏற்படுத்த விரும்புகிறார். இந்த கபட நாடகத்திற்கு இந்திய அரசும் துணைபோகிறது.
இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட சின்னஞ்சிறிய நாடான இலங்கையை எப்படியாவது திருப்தி செய்து தனது பக்கம் வைத்துக்கொள்வதற்காக இந்திய அரசு பெருமுயற்சி செய்கிறது. இந்த முயற்சிகளின் விளைவுகள் விபரீதமாகவே அமைந்துவிட்டன.
ஜவஹர்லால் நேரு வகுத்த நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கை இந்திரா காந்தி காலம் வரையில் முழுமையாகப் பின்பற்றப்பட்டது. ஆனால் இராஜீவ் காலத்தில் ஒரு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. பிரதமருக்கு அதிகாரிகள் வழிகாட்டத் தொடங்கினார்கள். நேரு, இந்திரா காலங்களில் மிகப்பெரும்பாலான ஆசிய#ஆப்பிரிக்க#தென்அமெரிக்க நாடுகள் இந்தியாவின் வழிகாட்டுதலுக்கிணங்க அணிசாரா கொள்கையைப் பின்பற்றின. இதன் விளைவாக அந்நாடுகளின் இயற்கையான தலைமை இந்தியாவை வந்தடைந்தது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போயிற்று அணிசாரா நாடுகள் மட்டும் அல்ல. அண்டையில் உள்ள தென்னாசிய நாடுகளே இந்தியாவின் தலைமையை ஏற்கவில்லை. இதன் விளைவாக அய்.நா. பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர் தேர்தல் நடைபெற்றபோது. அத்தேர்தலில் இந்தியா பரிதாபகரமான தோல்வியைத் தழுவ நேர்ந்தது.
நேரு காலத்தில் இலங்கையில் அந்நிய வல்லரசுகள் நுழையத் தயங்கின. ஆனால் ஜெயவர்த்தனா காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை அளிப்பதன் மூலம் நெருக்கமான உறவு கொண்டன. 1984ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேலிய மொசாட் படையினர் இலங்கைக்கு வந்து சிங்களப் படையினருக்குப் பயிற்சி கொடுத்தார்கள். மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர். கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கான பயிற்சிகளை அளித்தார்கள். இந்த இரண்டரை ஆண்டுகளில் சிங்கள இராணுவம் ஐந்து மடங்கு பெருகியதற்கு மேற்கு நாடுகளின் உதவியே காரணம்.. இதனால் இந்தியாவுக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை உணர்ந்த இந்திரா இதற்குப் பதிலடியாக ஈழத்தமிழரை வலுப்படுத்த திட்டமிட்டார். ஈழப்போராளிகளுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தார். ஏனெனில் சிங்களரை அவர் ஒருபோதும் நம்பவில்லை. சீனப் படையெடுப்பு, வங்க தேசப்போர் நடைபெற்ற காலங்களில் இலங்கை செய்த துரோகத்தை அவர் மறக்கவில்லை. திரிகோணமலையை அமெரிக்கக் கடற்படைத் தளத்திற்கு தாரைவார்க்க ஜெயவர்த்தனா முன்வந்தபோது அதற்கு கடும் கண்டனத்தை இந்திரா தெரிவித்தார். அதன் விளைவாக அந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
இராஜீவ் காலத்தில் நிலைமை அடியோடு மாறியது. அரசியல் அனுபவமோ, குறைந்தபட்ச இராஜதந்திர அறிவோ, தொலைநோக்குப் பார்வையோ கொஞ்சமும் இல்லாதவர் இராஜீவ் என்பதைப் புரிந்துகொண்ட அதிகாரிகள் அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கினார்கள். இதை உணர்ந்த ஜெயவர்த்தனா விரித்த வஞ்சக வலையில் இராஜீவ் விழுவதற்கு ரொமேசு பண்டாரி, ஜே.என்.தீட்சித் போன்ற அதிகாரிகள் உதவினார்கள். இராஜீவ்#ஜெயவர்த்தனா உடன்பாடு ஏற்பட்டு அதன் விளைவாக இந்திய இராணுவம் முதன்முறையாக இந்தியாவின் எல்லைக்கு வெளியே அந்நிய நாடு ஒன்றுக்கு அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தொடக்க காலத்திலிருந்து இந்தியாவை தங்களது இரண்டாவது தாயகமாகக் கருதிவந்த ஈழத்தமிழர்கள் இந்தியாவை வெறுக்கத் தொடங்கினார்கள். பிற்காலத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.
இராஜீவின் தவறான கொள்கைகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஊக்குவித்தன. ஈழத்தமிழர்களின் வலிமைக் கரமாக விளங்கிய விடுதலைப் புலிகளை ஒடுக்க உதவுவது, சிங்களப் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் என்பதையோ எதிர்காலத்தில் இந்திய எதிர்ப்பில் ஊறிப்போன சிங்களரை சீனா பக்கம் கொண்டுபோய் சேர்க்கும் என்பதையோ இராஜிவோ மேற்கு நாடுகளோ கொஞ்சமும் உணரவில்லை.
மேற்கு நாடுகள் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கு உதவ முன்வர மாட்டார்கள் என்பதை உணர்ந்தவுடன் இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நெருக்கமான உறவு பூண இலங்கை முயற்சிகளை மேற்கொண்டது.
இராஜீவிற்குப் பிறகு வந்த காங்கிரஸ் அல்லது அதன் ஆதரவு பெற்ற பிரதமர்கள் அதிகாரிகளின் வழிகாட்டலையே பின்பற்றினார்கள். சிறிது சிறிதாக சீனா, பாகிஸ்தானின் ஆதிக்கம் இலங்கையில் பெருகிவருவதைக் குறித்தும் அதனுடைய விளைவுகள் குறித்தும் அவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
பிரதமராக வாஜ்பாய் இருந்த போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இலங்கைக்கு இராணுவ ரீதியான எந்த உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது என்ற முடிவெடுப்பதற்குக் காரணமாக இருந்தார். அதே வேளையில் பிற அந்நிய நாடுகள் இலங்கையில் ஊடுருவுவதையும் கண்டிக்க அவர் தவறவில்லை.
2003ஆம் ஆண்டில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி மத்திய ஆட்சியைக் கைப்பற்றியபோது ராஜிவ் காந்தியின் செல்லாத கொள்கையையே பின்பற்றத் தொடங்கியது. இலங்கைக்கு இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டன என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.
இலங்கையில் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் ஒடுக்குவதற்கு சிங்கள அரசுக்கும் உதவுவது என்பது தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக்கொள்வதாகும் என்பதை இந்தியா உணரவில்லை. இந்தியப் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற அதிகாரிகளே வழிகாட்டிகளாக அமைந்தார்கள். இலங்கையில் இந்தியாவின் செல்வாக்கு ஓங்குவதற்குப் பதில் அவர்களின் தவறான ஆலோசனைகளின் விளைவாக இந்தியாவின் பகைநாடுகளின் செல்வாக்கு அங்கு மிகுந்தது.
இந்துமாக்கடல் மார்க்கம் சீனாவின் பிடியில் சிக்கிக்கொண்டதை உணர்ந்த மேற்கு நாடுகள் அதிர்ச்சியடைந்தன. ஈழப்போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை ஈவுஇரக்கமின்றி சிங்களர்கள் படுகொலை செய்யத் துணிந்தபோது அதைத் தடுக்கும் சக்தி மேற்கு நாடுகளுக்கோ, அய்.நா.பேரவைக்கோ இல்லாமல்போயிற்று.
இராசபக்சேயைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டுமென மேற்கு நாடுகள் அய்.நா. மனித உரிமை கமிசனில் குரல் எழுப்பியபோது இந்தியா மீண்டும் மீண்டும் தவறுக்குமேல் தவறு செய்தது. இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற சீனாவுடன் கைகோர்த்து நின்றது.
இந்த பின்னணியில்தான் இராசபக்சேக்கு இந்திய அரசு தில்லியில் இரத்தினக் கம்பள வரவேற்புக்கொடுத்து பல ஆயிரம் கோடிகளை அள்ளித் தரும் உடன்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையை எப்படியாவது தாஜா செய்து இந்தியாவின் நலன்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்களை இந்தியா கைகழுவிவிட்டது. சிங்கள பலிபீடத்தில் தமிழரைக் காவுகொடுத்தாவது இலங்கையை திருப்திப்படுத்த வேண்டும் என்பதையே தனது கொள்கையாக இந்தியா அரசு கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் சீனா பலிபீடத்தில் இந்திய நலன்களை காவுகொடுத்துவிட்டது.
சிவசங்கரமேனன், எம்.கே. நாரயணன், நிரூபமா போன்ற உலகப் பார்வையும், தொலைநோக்கும் அற்ற அதிகாரிகளால் வழிநடத்தப்படும் மன்மோகன் சிங் அரசு எதிர்காலத்தில் தெற்கே தொல்லைதரும் பகைநாடாக இலங்கை விளங்கப்போகிறது என்பதை உணரும்போது காலம் கடந்திருக்கும். எல்லாமே கைமிஞ்சிப் போயிருக்கும்
ஈழத்தமிழர்களை இந்தியா நெருக்கடியான காலக்கட்டத்தில் அடியோடு கைகழுவியது கண்டு தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல, மலேசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் உள்ள உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பெரும் கவலையும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும் கொண்டுள்ளனர். சிங்கள அரசைப் பின்பற்றி மேற்கண்ட நாடுகளின் அரசுகளும் தங்களை விரட்டியடிக்க முனைந்தால் இந்தியா தனது கண்களையும் காதுகளையும், வாய்களையும் பொத்திக்கொள்ளும் என்பதை அவர்கள் உணர்ந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
இந்தியாவின் இந்தத் துரோகம் கண்டு தமிழக மக்களின் உள்ளங்கள் எரிமலையென குமுறிக்கொண்டே இருக்கின்றன. அது வெடிக்கப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.
- தினமணி (14-06-2010)
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.