இராசபக்சே பாதையில் இந்திய அரச நீதி! |
|
|
|
புதன்கிழமை, 03 நவம்பர் 2010 12:56 |
1992ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு தடை விதித்து வருகிறது. கடந்த 18 ஆண்டு காலமாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அந்தத் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தடைக்கு கீழ்க்கண்ட முக்கியமான காரணங்களை இந்திய அரசு கூறிவருகிறது.
1. இந்தியாவில் உள்ள தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக ஒரு தாயகத்தை அமைக்க வேண்டுமென்பதே விடுதலைப் புலிகளின் குறிக்கோள் ஆகும். அதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2. இலங்கையில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டப் போதிலும் விடுதலைப்புலிகளும், அதனுடைய தலைவர்களும் தப்பி கடல் வழியாக இந்தியாவிற்குள் புகுந்து தமிழ்நாட்டில் மீண்டும் ஒருங்குகூடி தனித் தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். 3. தமிழ்நாட்டில் புகுந்துள்ள விடுதலைப் புலிகள் துரோகிகளைப் (இந்திய அரசு) பழிவாங்கவும் எதிரிகளை (இலங்கை அரசு) ஒழிக்கவும் முயற்சி செய்வார்கள் என நம்பப்படுகிறது. மேற்கண்ட காரணங்களுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட விரோதமான அமைப்பு எனத் தடை விதிக்கப்படுகிறது. மேற்கண்ட காரணங்கள் தவிர ஒவ்வொரு முறையும் தடை நீட்டிக்கப்படும்போது, புதிய காரணங்களை இந்திய- தமிழக அரசுகள் முன்வைக்கின்றன. 1992ஆம் ஆண்டில் முதல் முறை தடைவிதிக்கப் பட்ட போது, அப்போது இதற்கென அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்திற்கு முன் இந்தத் தடை அநீதியானது. அதை நீக்க வேண்டும் என நான் விண்ணப்பித்தேன். ஆனால் அவ்வாறு விண்ணப்பித்ததற்கு உங்களுக்குத் தகுதியில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் யாராவது விண்ணப்பிக்கலாமே தவிர நீங்கள் விண்ணப்பிக்க முடியாது எனக் கூறி எனது மனுவைத் தள்ளுபடி செய்தார்கள். அதற்குப் பின் 2000ஆம் ஆண்டு ஆகஸ்டு 22ஆம் தேதி விடுதலைப்புலிகளின் சார்பில் அதனுடைய சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த மனோகரன் வேலும் மயிலும் என்பவர் தடையை எதிர்த்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புத் தடைத் தீர்ப்பாயத்திற்கு முன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார். 1. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது தேசிய விடுதலை இயக்கமாகும். இலங்கையில் இனப்படுகொலைக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், மனித உரிமைகள் பறிப்புக்கும் ஆளாகி வதைக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் ஒரு இயக்கமாகும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதைத் தனது கொள்கையாக விடுதலைப் புலிகள் இயக்கம் கொண்டுள்ளது. 2. இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு முன் எங்களிடம் அதற்கான விளக்கம் எதையும் கேட்கவில்லை. சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்படுவதற்குரிய குற்றச்சாட்டுகள் குறித்தும் எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கேட்டு நாங்கள் எங்களுடைய பதிலைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.இந்தச் சூழ்நிலையில் ஒரு தலைப்பட்சமாக எங்கள் இயக்கத்தைத் தடை செய்திருப்பது இயற்கை நீதிக்கு எதிரானது ஆகும். 3. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் மூன்றாவது பிரிவில் முதலாவது துணைப்பிரிவு இந்திய அரசியல் சட்டத்திற்கும் சர்வதேசச் சட்டங்கள் உடன்பாடுகள் ஆகியவற்றுக்கும் எதிரானது ஆகும். 4. தமிழ்நாட்டில் செயல்பட்டதாகக் கூறப்படும் தமிழ்த் தேசிய மீட்புப் படை, தமிழர் பாசறை ஆகிய அமைப்புகளை உருவாக்குவதற்கான சதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்பதையும் மறுக்கிறோம். இவர்களுக்கு விடுதலைப்புலிகள் ஆயுதப் பயிற்சி அளித்து, ஆயுதங்களும் வழங்கி தமிழ்நாட்டைத் தனியாகப் பிரிப்பதற்குப் போராடுமாறு ஏவிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. ஏனெனில் தமிழ்நாட்டில் மேற்கண்ட இரண்டு அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது நடத்தப்பட்ட வழக்கில் அனைவருமே குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தினால் விடுதலைச் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடைவிதிப்பது இந்திய அரசின் உள்நோக்கத்தையே எடுத்துக்காட்டுகிறது. 5. 1998ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்திய-தமிழக அரசுகளின் கெசட்களிலும் பத்திரிகை விளம்பரங்களின் மூலமும் புலிகள் மீது அறிவிக்கப்பட்ட தடை பற்றிய பிரகடனத்தில் தமிழ்நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஈழத் தமிழர் பலர் மீது 18 வழக்குகள் தமிழக அரசால் தொடுக்கப்பட்டன. ஆனால் 18 வழக்குகளில் 17 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றம் எதுவும் செய்யாதவர்கள் என நீதிமன்றங்களினால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மீதம் இருக்கும் ஒரு வழக்கு இன்னமும் நடந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் விடுதலையான வழக்குகள் என்ற உண்மையை இந்தத் தீர்ப்பாயத்தின் முன்னால் மறைத்து புலிகள் மீது தடை விதிக்க வேண்டுமென அரசு வழக்கறிஞர் வாதாடுவது நேர்மையற்றதாகும். இதன் மூலம் இந்திய அரசு அரசியல் ஆதாயத்துக்காகவும் உள்நோக்கத்துடனும் இவ்வாறு செய்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும். 6. மேலும் தமிழகத்தில் தஞ்சம் தேடி வந்திருக்கிற ஈழத்தமிழ் அகதிகளைக் கைது செய்து விடுதலைப் புலிகள் என பொய்யானக் குற்றம் சுமத்தி தமிழக அரசின் க்யூ பிரிவு போலீஸ் தொடுத்த அத்தனை வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக சர்வதேச கடலில் சென்றுகொண்டிருந்த தளபதி கிட்டு வந்த எம்.வி. யகதா கப்பல் வழக்கிலும் டோங்கனோவா கப்பல் வழக்கிலும் கைது செய்யப்பட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே விடுதலை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டாக இந்தத் தீர்ப்பாயத்திற்கு முன்னால் வைக்கிறேன். 1967ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, இறைமை ஆகியவற்றுக்கு அபாயம் நேரிடும் வகையில் நடைபெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக மட்டுமே பிறப்பிக்கப்பட்டச் சட்டமாகும். இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி புலிகள் இயக் கத்தை இந்திய அரசு தடை செய்திருக்கிறது. இந்தியாவின் இறைமையையும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் எதிராக புலிகள் இயக்கம் ஒருபோதும் செயல்படவில்லை. இந்தியாவில் அவர்கள் இயங்கி வந்த காலத்தில் கூட உள்நாட்டு அரசியலில் ஒருபோதும் அவர்கள் தலையிட்டதில்லை. புலிகளின் சார்பில் பல உண்மைகளும், அசைக்க முடியாத ஆதாரங்களும் தீர்ப்பாயத்தின் முன் எடுத்து வைக்கப்பட்ட போதிலும் எதையும் கருத்தில் கொள்ளாது புலிகளின் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகளுக்குத் தீர்ப்பாயம் நீடித்தது. பிரதமராக இந்திராக காந்தி அவர்கள் இருந்தபோது தமிழீழம் அமைப்பதை இலட்சியமாகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த சிறப்புத் தூதுவராக ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார். பிரதமர் இந்திராவின் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் மற்ற போராளி இயக்கங்களுக்கும் இந்திய இராணுவ முகாம்களில் இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுக்கப்பட்டு அவர்கள் இலங்கையில் சிங்கள இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார்கள். மேலும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்களும் மற்ற போராளி இயக்கங்களின் பயிற்சி முகாம்களும் பல இடங்களில் நடந்தன. பல்லாயிரக் கணக்கானப் போராளிகள் தமிழக மண்ணில் பயிற்சிப் பெற்று இலங்கைக்கு திரும்பிச் சென்று தங்களது போராட்டங்களைத் தொடர்ந்தார்கள். தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் இயங்கின. பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகள் பலரும் தமிழ்நாட்டில் தங்கியிருந்து செயல்பட்டனர். தமிழகமெங்கும் ஈழப்போராட்டம் பற்றிய புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தும் புலிகள் நிதி திரட்டினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தபோது மக்களிடம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து 4 கோடி ரூபாய்களை புலிகளுக்கு அளித்தார். மேலும் வெளியே தெரியாமல் தனது சொந்தப் பணத்திலிருந்து பலகோடி ரூபாய்களை வாரி வழங்கினார். தமிழகத்தில் தங்கியிருந்த போது பிரபாகரன் தனது இயக்கத்தின் போராட்டம் குறித்தும் நோக்கம் குறித்தும் பல நாளிதழ்களுக்கும் வார இதழ்களுக்கும் தொடர்ந்து நேர்காணல்களை வழங்கினார். தமிழக மண்ணில் எவ்விதத் தடையுமில்லாமல் அவர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் இராணுவ பயிற்சி முகாம்கள் இயங்கிய போதும் புலித் தலைவர்கள் இங்கு தங்கியிருந்தபோதும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஒருபோதும் கெடவில்லை. இந்திய நாட்டின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எத்தகைய அபாயமும் நேரிட்டுவிடவில்லை. 1985ஆம் ஆண்டில் திம்புவில் இந்திய அரசின் முன்முயற்சியிலும் மத்தியஸ்தத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளும் மற்றுமுள்ள போராளி அமைப்புகளும் தமிழர் விடுதலைக்கூட்டணியும் ஒருங்கிணைந்து கீழ்க்கண்டவற்றை தங்களது அதிகாரப்பூர்வமான நோக்கமாக அறிவித்தன. 1. இலங்கையில் உள்ள தமிழர்களைத் தனித்துவம் வாய்ந்த தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். 2. இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்களைத் தமிழர்களின் பூர்வீகமானத் தாயகமாக அங்கீகரிக்கப்படவேண்டும். 3. இலங்கையில் உள்ள தமிழ்த் தேசிய இனத்திற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். 4. மலையகத் தமிழர்கள் உள்பட இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமையும் மற்ற அடிப்படை உரிமைகளும் உண்டு என்பது ஏற்கப்படவேண்டும். மேலே கண்ட 4 நோக்கங்களில் எதன் மூலமாவது இந்தியாவில் இறைமைக்கும் பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? அப்படியிருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய அரசு நடத்திய இந்த மாநாட்டிற்கு அழைத்தது ஏன்? பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது, பெங்களூரில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போதும் பின்னர் தில்லிக்கு பிரபாகரனை இந்திய அரசின் விமானத்தில் வரவழைத்து பேசியபோதும் விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாகவோ அல்லது இந்தியாவை துண்டாடுகிற இயக்கமாகவோ மத்திய அரசுக்குத் தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையில் உறுதியாக நின்றார்கள். இந்திய அரசின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து அதை கைவிட மறுத்தார்கள் என்பதினாலும், இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படாமல் நடந்துகொள்ள சிங்கள அரசைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அவர்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் இந்திய அரசு ஈடுபட்டது. அப்போதுகூட இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு புலிகளினால் அபாயம் என்று சொல்லி இராணுவ நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் சாட்சியமளித்த க்யூ பிரிவைச் சேர்ந்த துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் பேசும்போது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துத்தான் புலிகள் தமிழீழம் அமைக்கப் போராடுகிறார்கள் என்று கூறினார். புலிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான பிரசுரங்களை அவரிடம் கொடுத்து எங்கேயாவது ஓரிடத்தில் இந்தியாவில் உள்ள எந்தப் பகுதியின் மேலாவது புலிகள் சொந்தம் கொண்டாடுகிறார்களா என்பதைப் பார்த்துச் சொல்லுமாறு கேட்டோம். ஆனால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. புலிகள் வெளியிட்டுள்ள தமிழீழ வரைபடத்தில் இலங்கையில் உள்ள வடக்கு-கிழக்கு மாநிலங்கள் மட்டுமே குறிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிக் குறுக்கு விசாரணை செய்தபோது அதற்கும் அந்த அதிகாரியால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் புகுந்துள்ள விடுதலைப் புலிகள் துரோகிகளைப் பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார்கள் என்று அரசு அறிவிப்பில் குறிக்கப்படும்போதே துரோகிகள் என்பதற்கு அருகில் அடைப்புக்குறிக்குள் இந்திய அரசு என்று குறித்து பத்திரிகைகளிலும் விளம்பரமாக வெளியிட்டிருப்பது வெட்ககரமானது. ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு செய்த துரோகத்தை அரசு விளம்பரமே அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. பயங்கரவாதச் செயல்களைச் செய்த அல்லது அவை தூண்டிவிட்ட அல்லது வேறு வகையில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதான் பயங்கரவாத அமைப்பாகச் சட்டப்படி கருதப்படவேண்டும். ஆனால் இந்தியாவில் அத்தகைய பயங்கரவாதச் செயல்கள் எதிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஈடுபடவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த மிகமுக்கியமானத் தீர்ப்பு என்னவென்று சொன்னால் இந்தக் கொலைச் செயல் பயங்கரவாதம் அல்ல. இது சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் வரவேண்டிய கொலையே. பயங்கரவாதத் தடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் கொலை வழக்கைத் தொடுத்தது மிகப்பெரிய தவறு என்று சொல்லி குற்றம் சாட்டப்பட்ட 26 பேர்களில் 19 பேரை விடுதலை செய்தது. விடுதலைப் புலிகளின் இயக்கத்திற்கு தடைவிதித்ததின் மூலம் அதற்கு ஆதரவாகவும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் பேசிய பழ.நெடுமாறன், வைகோ உட்பட பலர் மீது 2002ஆம் ஆண்டு பொடாச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் 18 மாதங்களுக்கு மேல் சிறையில் வாடினார்கள். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது பொடாச் சட்டத்தின் கீழ் குற்றமல்ல என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இவர்கள் அனைவருக்கும் பிணை விடுதலை வழங்கும்படி உயர்நீதிமன்றத்திற்கு ஆணை பிறப்பித்தது. அதற்குப் பிறகே நாங்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டோம். பொடா மறு ஆய்வுக்குழு விசாரணை நடத்தியப் பிறகு இறுதியாக எங்கள் மீது பொடாச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எனவே எங்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டது. 13-08-2002 அன்று தமிழர் தேசிய இயக்கத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்தது. விடுதலைப் புலிகளை ஆதரித்து செயல்படும் இயக்கம் என்ற குற்றச்சாட்டின் கீழேயே தடைவிதிக்கப்பட்டது. இதற்கு எதிரான எங்கள் மனு உயர்நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பலவேறு மாநாடுகள், கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவானவை என்றுகூறி மீது தமிழக அரசு பலமுறை தடைவிதித்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் தலையிட்டு அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற பேச்சுரிமைக்கு இந்தத் தடை எதிரானது எனத் தீர்ப்பளித்திருக்கிறது. புலிகள் மீதான தடை நீடிப்பதின் விளைவாகவே மேலே கண்ட இடர்ப்பாடுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளன. பொய்யானக் குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தத் தடை தொடர்ந்து நீடீக்கப்படுவதினால் சனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இந்தத் தடையை காரணமாக காட்டி எதிர்க்கட்சியினரை புலி ஆதரவாளர்கள் எனக் குற்றம் சாட்டி வழக்குகளைத் தொடுக்கிறார்கள். சிறையில் அடைக்கிறார்கள். எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக மட்டுமே இந்தச் சட்டம் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல இலங்கையில் சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு இரையாகாமல் தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருக்கும் ஈழத் தமிழர்களையும் இந்தத் தடைச் சட்டம் பெருமளவு பாதித்துள்ளது. இலங்கைப் போரில் கண், கை, கால், போன்ற உறுப்புகளையெல்லாம் இழந்து மருத்துவம் பார்ப்பதற்காக தமிழ்நாட்டுக்கு வந்த பலர் இந்தச் சட்டத்தின் கீழ் புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைக்கொடுமைகளுக்கு ஆளானார்கள். சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சித்திரவதை முகாம்கள் இவர்களுக்காகத் தனியாக அமைக்கப்பட்டன. இவர்களில் சிலர் 10 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித விசாரணையும் இல்லாமல் இருட்டறைகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் விடிவு எப்போது? இலங்கையில் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்த பிறகும் இந்தியாவில் இயங்காத இயக்கம் மீது தடை இன்னமும் நீடிப்பதன் மர்மம் என்ன? புலிப்பூச்சாண்டியைக் காட்டித் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்கும் நோக்கமே தவிர வேறு இல்லை. 22-10-2010 அன்று தினமணி இதழில் வெளியான தலையங்கக் கருத்தோட்டத்தின்படி இராசபக்சே பாதையில் இந்திய அரசு நீதி தடுமாறுகிறது. - தினமணி (3-11-2010) |