தமிழக மீனவர்கள் சுடப்படுவதன் பின்னணி என்ன? PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2008 14:07
1983-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டு காலமாக தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் பெறுமான அவர்களின் படகுகள் வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்ரவதைகளுக்கும் சிறைவாசத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவில்லை. மாறாக அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதின் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்புவதின் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.
மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி. மு. க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி அவர்கள் திடீரென விழித்துக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். இவரது கட்சியின் ஆதரவு மத்திய ஆட்சி நீடிப்பதற்கு மிக மிக இன்றியமையாததாகும். இந்த நிலைமையில் தில்லிக்கு எச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஏமாற்றுவதாகும்.
யாருக்கு எதிராக இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை. மத்திய அரசுக்கு எதிராக என்றால் அந்த அரசில் தி. மு. க வும் ஒரு அங்கமாகும். அப்படியானால் தன்னை எதிர்த்து தானே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.
இது ஒரு புறம் இருக்க, உலகின் அய்ந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு இந்தியாவாகும். ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய ஒரு நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான இந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை இந்தியாவிற்கு விடப்பட்ட அறைகூவலாக அல்லது குறைந்த பட்சம் அவமானமாகவோ கூட இந்திய அரசு கருதவில்லை.
ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ இராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களை சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவருக்குக் கூட இந்திய அரசு நட்ட ஈடு கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னஞ்சிறிய இலங்கைக்கு இந்தத் துணிவு எங்கே இருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதற்கு நோக்கமென்ன? இதற்கு பின்னணியில் வேறு நாடுகள் உள்ளனவா? என்ற கேள்விகள் நமது உள்ளங்களைக் குடைகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால் கடந்த கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இலங்கை இனப் பிரச்னையில் கையாண்ட அணுகுமுறை என்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.
1. இந்தியாவின் செல்வாக்குக்குட்பட்ட ஒரு நாடாக இலங்கை கருதப்பட்டது.
2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்னையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.
3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர இராணுவ ரீதியான தீர்வு காண முயலுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது.
4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது இராணுவ ரீதியாக உதவி அளிக்க முன் வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.
5. திரிகோணமலை மாவட்டத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்த பகுதியிலோ அன்னிய இராணுவ தளங்கள் அமைவதை இந்தியா எதிர்க்கும்.
6. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலைப் பகுதியின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாச்சாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.
இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக இந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட சிங்கள அரச பயங்கரவாதம் செயலிழந்தது. இந்திய அரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள அரசு ஆளாக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். எனவே அந்த உடன்பாட்டினை நிறைவேற்றுவதை சிங்கள அரசு முதலில் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.
இந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்றப் பிறகு இலங்கை இனப் பிரச்னையில் இந்தியாவின் அணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராக இருந்த ரொமேஷ் பண்டாரி, இலங்கையில் இந்திய தூதுவராக இருந்த ஜே. என். தீட்சித் ஆகிய இருவரும் இராஜீவின் ஆலோசகர்களாக விளங்கினார்கள். இந்திராவின் ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத் துறை செயலாளர் ஏ.பி. வெங்கடேசுவரன் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.
இலங்கை இனப்பிரச்னையில் இராஜீவின் அணுகுமுறை என்பது சிங்கள அரசுடன் ஆதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது. சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூலிப் படைகளும் இஸ்திரேலிய மொசாட் படையினரும் பயிற்சி அளித்தனர். அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கு இலங்கையில் ஊடுருவியது.
இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்கு பதில் இராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது.
இராஜீவ் கடைபிடித்த இந்த கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.
1. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்கு சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமையத் தொடங்கின.
2. இலங்கை இனப்பிரச்னைக்கு சிங்கள அரசு கூறிய தீர்வை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.
3. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு இராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளை தடுப்பதற்கு இராஜீவ் அரசினால் இயலவில்லை.
4. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு இராஜீவின் கொள்கை இடமளித்தது.
5. திரிகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையினருக்கு தேவையான எண்ணை கிடங்குகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்ட போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய இந்தியா அந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.
இலங்கை இனப்பிரச்னையில் இராஜீவின் கொள்கையினால் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்கு துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் இராணுவ பொருளாதார உதவிகள் இக்கொள்கையின் விளைவே ஆகும். தென்னாசியாவைப் பொருத்த வரை இந்தியாவை அதனுடைய எல்லைக்குள்ளாகவே அடங்கியிருக்கும்படி செய்ய அமெரிக்க விரும்புகிறது.
டிகோ-கார்சியா தீவில் அமெரிக்க கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. அமெரிக்க கடற்படைத் தளம் தொடர்ந்து இருப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். எனவே, இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் அமெரிக்காவிற்கு தேவை. அதற்காக இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது.
மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக இலங்கைத் திகழுகிறது. எனவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.
அமெரிக்காவின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு இராஜீவின் கொள்கை துணை நின்றது. ஆனால் இதன் விளைவாக இந்தியாவுக்கு பேரபாயம் நேர்ந்து விட்டது.
தென்னாசிய நாடுகளின் அமைப்பிற்கு இயற்கையான தலைவராக இந்தியா இருந்த போதிலும் அந்த தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக இல்லை. தென்னாசியப் பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்டுவிட்டன. இந்தியாவைச் சுற்றி அந்த நாடுகள் இப்போது வியூகம் அமைத்துள்ளன. இந்த வியூகத்தின் ஒரு அங்கமே இலங்கையாகும். இந்த வியூகத்திற்கு பக்க பலமாக அமெரிக்க பிரிட்டன் சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன. இந்த வியூகம் பலம் பெறுவது இந்தியாவின் சுதந்திரத்திற்கு அபாயத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இன்னமும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணரவில்லை.
அந்நிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்பதற்கு இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது. சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவியை இலங்கைப் பெறுவதை தடுக்க வேண்டுமானால் இந்தியாவே முந்திக் கொண்டு இராணுவ ரீதியான உதவிகளை அளிக்க வேண்டும் என தில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள். அதன்படியே செயல்படுகிறார்கள். இதன் மூலம் இலங்கை மேலும் துணிவுப் பெற்று விட்டது. தன்னைத் தாஜா செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழி இல்லை என்று கருதுகிறது.
இலங்கையில் சீனாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவும் பிற நாடுகளும் இராணுவ ரீதியான உதவிகளையும் நிதி உதவிகளையும் அள்ளி அள்ளித் தருவது என்பது எதற்காக? இந்நாடுகளின் பொருட்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதுதான் இந்நாடுகளின் நோக்கமாகும்.
இந்திய கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் (The Indian Ocean - A stratagic posture for India) பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப் பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அதனால் ஆபத்து வந்து சேரும்."
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த உண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் உணர்ந்திருந்தார். அந்நிய வல்லரசுகள் எதுவும் இலங்கையில் காலூன்ற அவர் அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள இன வெறி அரசை அனுமதிக்கவும் இல்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரையில் எந்த அந்நிய வல்லரசும் இலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.
ஆனால் இராஜீவ் கையாண்ட தவறாக அணுகுமுறையின் விளைவாக இலங்கையில் அந்நிய வல்லரசுகள் தடம் பதித்தன. இதன் விளைவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படும் துணிவு சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.
இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்கள கடற்படை மிகப் பெரிய இந்திய நாட்டின் குடிமக்களை திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. அதுவும் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து செய்கிறது. அதற்கு காரணம் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.
இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களை பலி கொடுக்கவும் இந்திய அரசு தயங்கவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும் போது இந்தியக் கடற்படை ஒரு போதும் தலையிடாது என்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு உள்ளது. அதற்கேற்றாற் போல இந்திய அரசு நடந்து கொள்கிறது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையை திருப்தி செய்யலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்து கொதித்து போயுள்ளனர். அவர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இலங்கையும் அதைப் பின்னணியில் இருந்து இயக்குகிற அன்னிய நாடுகளும் விரும்புகின்றன.
சிங்களக் கடற்படைக்கும் சிங்கள அரசுக்கும் எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஒழிய இந்தியாவின் நலன்களை ஒருபோதும் பாதுகாக்க முடியாது. இலங்கை அரசை திருப்தி செய்ய இந்தியா எவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் அதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. கடந்த கால வரலாறு நமக்கு சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை.
கடந்த காலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்ற போது இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரி அதை ஏற்றுக் கொண்டார். ஏறத்தாழ அய்ந்தரை இலட்சம் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். இலங்கையை திருப்திபடுத்த நமக்கு சொந்தமான கச்சத் தீவை தாரை வார்க்கவும் இந்திய அரசு தயங்கவில்லை. இப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள அரசின் போக்கில் மாற்றம் வரவில்லை. 1962-ஆம் ஆண்டில் இந்தியா சீனா எல்லைப் போர் வெடித்த போது சீனாவை ஆக்கிரமிப்பாளர் என அறிவிக்க வேண்டுமென இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்திய போது அதற்கு இணங்குவதற்கு பிரதமர் திருமதி. பண்டாரநாயகா மறுத்துவிட்டார். 1971-ஆம் ஆண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்ற போது பாகிஸ்தான் இராணுவ விமானங்கள் இலங்கை வழியாக சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச சிங்கள அரசு அனுமதித்தது.
வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இந்தியாவிற்கு எதிரான நிலை எடுக்க சிங்கள அரசு ஒரு போதும் தயங்கவில்லை. இந்தியாவிடமிருந்து இராணுவ, நிதி உதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள அரசு சிறிதளவு நன்றி கூட இந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள இந்த உண்மைகளை எண்ணிப் பார்க்கத் தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும்.
தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதை விட சிங்கள இன வெறி அரசை திருப்தி செய்வதுதான் மேலானது என இந்திய அரசு கருதுமானால் இந்திய நாட்டின் நலன்களையும் காக்க இயலாது. தமிழ்நாட்டை மறந்துவிட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.