இந்தியாவிற்கே அபாயம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 14:43
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென தமிழகத்தில் உள்ள சகல கட்சிகளும், மாணவர், ஆசிரியர், தொழிலாளர், வழக்கறிஞர், திரைப்படத் துறையினர் போன்றவர்களின் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து பல வகையானப் போராட்டங்களை நடத்தினர். தமிழகம் முழுவதிலும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தினர். இன்னமும் போராட்டங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக கடந்த 12-11-2008 அன்று தமிழக சட்டமன்றத்தில் இக்கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
13-11-2008 அன்று தில்லிக்கு வந்திருந்த இலங்கை அதிபர் இராசபக்சேயுடன் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அதற்குப் பிறகு தில்லியிலேயே செயதியாளர்களை அழைத்துப் பேசிய இராசபக்சே போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக அறிவித்தார். 6 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளையும் இந்திய பிரதமரின் அறிவுரையையும் மதிப்பதற்கு தான் தயாராக இல்லை என்பதை இந்திய மண்ணில் நின்றே வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.
இராசபக்சேயின் இந்தச் செயல் 1938-ஆம் ஆண்டில் இட்லர் மேற்கொண்ட நடவடிக்கையை நினைவுப் படுத்துகிறது. அன்றைக்கு பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லேன் இட்லரை தாஜா செய்யும் கொள்கையைக் கையாண்டு இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தார். அவர் அன்று செய்த தவறை இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் செய்திருக்கிறார்.
1936-ஆம் ஆண்டு நேச நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ரைன்லாண்டு மீது திடீரென படையெடுத்து இட்லர் கைப்பற்றிய போது அதைத் தடுக்க பிரிட்டன் உட்பட நேச நாடுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் துணிவுப் பெற்ற இட்லர் 1938-ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை ஆக்கிரமித்தார். பிரிட்டன் பாரா முகமாக இருந்தது. அடுத்து செக்கோசிலோவேக்கியாவின் ஒரு பகுதியான சூடேட்டன் லாண்டு மீது இட்லர் உரிமைக் கொண்டாடினார். அதை கைப்பற்றுவதற்கான ஆயத்தங்களில் இட்லர் இறங்கினார்.
அது குறித்து இட்லருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லேன் ஜெர்மனி சென்றார். மூனிச் நகரத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் சேம்பர்லேனின் அணுகுமுறை இட்லரை தாஜா செய்வதாக மட்டுமே அமைந்தது. சூடேட்டன் லாண்டு பகுதியை ஜெர்மனியுடன் இணைக்க ஒப்புக் கொண்டார் மேற்கொண்டு அய்ரோப்பாவின் எந்த பகுதி மீதும் படையெடுப்பதில்லை இட்லர் அளித்த வாக்குறுதியை நம்பி சேம்பர்லேன் அவருடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டார்.
ஆனால் இட்லர் தனது வாக்குறுதியின்படி நடக்கவில்லை. போலந்து நாட்டின் மீது படையெடுத்தார். அதைத் தடுக்கும் வலிமை பிரிட்டனுக்கோ மற்ற அய்ரோப்பிய நாடுகளுக்கோ இல்லாமல் போய்விட்டது. மூனிச் உடன்பாட்டின் மூலம் சேம்பர்லேன் செய்த தவறு இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போலந்தை பிடித்ததோடு இட்லர் நிற்கவில்லை. நார்வே, டென்மார்க், சுவீடன், பிரான்சு என அய்ரோப்பா முழுவதையுமே கைப்பற்றி இறுதியாக பிரிட்டன் மீது மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கும் அதன் விளைவாக அய்ரோப்பா மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும் பாதிப்புக்கு உள்ளானதற்கும் சேம்பர்லேன் கையாண்ட தவறான அணுகுமுறையே காரணம். வரலாறு கூறும் உண்மை இது.
இப்போது நவீன இட்லராக விளங்கும் இராசபக்சேயை திருப்தி படுத்தும் கொள்கையை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடைபிடிக்கிறார். யூதர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலைகளை நடத்திய இட்லர் இறுதியில் அய்ரோப்ப முழுமையிலுமே பேரழிவை ஏற்படுத்தினார். தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலைகளை நடத்தி வரும் இராசபக்சே எதிர்காலத்தில் தென்னாசியா முழுவதுமே பேரபாயத்தில் சிக்கிக் கொள்ள வழிவகுப்பார் என்பதில் அய்யமில்லை.
இராசபக்சே மட்டுமல்ல, 1948-ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் பதவியிலிருந்த சிங்களத் தலைவர்கள் அனைவருமே இந்தியாவுடன் நட்புறவுடன் இருப்பதாக நடித்துக் கொண்டே இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டே வந்துள்ளனர்.
1947-ஆம் ஆண்டு இலங்கை குடியுரிமைச் சட்டம், 1949-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் குடியுரிமைச் சட்டம் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பல தலைமுறைகளாகப் பாடுபட்ட இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமைகளை இலங்கை அரசு பறித்தது. இந்திய அரசின் எதிர்ப்பை அது சட்டை செய்யவில்லை.
1954-ஆம் ஆண்டு சனவரியில் இந்திய பிரதமரும் இலங்கை பிரதமரும் ஜான் கொத்தாவாலாவும் சந்தித்துப் பேசி இந்திய வம்சாவழியினர் சம்பந்தமாக செய்துக் கொண்ட உடன்பாட்டை இலங்கைஅரசு அப்பட்டமாக மீறியது. இந்திய வம்சாவழி தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்குவதிலும் இலங்கை நாடாளுமன்றத்தில் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று முடிவெடுப்பதிலும் இந்திய அரசை இலங்கை அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று உடன்பாடு கூறியது. ஆனால் அதன்படி இந்தியாவை ஒரு போதும் இலங்கை கலந்தாலோசிக்கவில்லை. அதை ஏன் என்று இந்தியாவும் கேட்கவில்லை.
1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரு அரசுகளும் செய்து கொண்ட மற்றொரு உடன்பாட்டின்படி இலங்கையிலிருந்து 5 லட்சத்து 25 ஆயிரம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் வெளியேற்றப்படுவதை இந்தியா ஒப்புக் கொண்டது.
1974-ஆம் ஆண்டு இரு நாடுகளும் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தமிழ்நாட்டிற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.
நூறாண்டு காலத்திற்கும் மேலாக தமிழர்களால் வற்புறுத்தப்பட்ட வந்த சேது கால்வாய் திட்டத்திற்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்ததின் காரணமாக அந்தத் திட்டம் நீண்ட காலமாக ஒத்திப் போடப்பட்டு வந்தது.
இவை மட்டுமல்ல பிற நாடுகளால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் இந்தியாவோடு இலங்கை நிற்கவில்லை. 1962-ஆம் ஆண்டில் இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்ரமித்த போது பெரும்பாலான உலக நாடுகள் அதைக் கண்டித்தன. ஆனால் இலங்கைக் கண்டிக்கவில்லை. நடுநிலை வகிப்பதாக நாடகம் நடத்தியது. வங்க தேசப் போர் நடந்த போது இந்தியாவின் மீது பறந்து செல்ல முடியாத பாகிஸ்தான் விமானங்கள் இலங்கை வழியாகச் செல்வதற்கு அனுமதித்தது.
ஜெயவர்த்தனா இலங்கை அதிபராக இருந்தபோது 1983-ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான ஒரு இனக் கலவரத்தைத் திட்டமிட்டு நடத்தினார். அப்போது இநதியா அளித்த நிர்பந்தத்தின் விளைவாக கலவரத்தை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் தமிழர் பிரதிநிதிகளுடன் அமர்ந்து அரசியல் தீர்வுக்கானத் திட்டம் குறித்து பேச வேண்டிய நிலையும் அவருக்கு இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு ஜெயவர்த்தனா துணிவுப் பெற்றவராகி ஈழத் தமிழரை இராணுவ ரீதியில் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 1987-ஆம் ஆண்டில் ஜெயவர்த்தனா இந்திய அரசை ஏமாற்றி கபடத்தனமான ஒரு உடன்பாட்டைச் செய்துக் கொண்டார். அதை சிங்கள தீவிரவாத அமைப்புகள் கடுமையாக எதிர்த்த போது அவர் பின் வருமாறு கூறினார் : ‘இப்போது நீங்கள் என்னை எதிர்ப்பீர்கள். பின்பு காலமெல்லாம் பாராட்டுவீர்கள். நமது இராணுவ வீரர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இந்திய வீரர்கள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார். இந்தியாவையும் ஈழத் தமிழரையும் மிகத் தந்திரமாக மோத விட்டு தனது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தினார் ஜெயவர்த்தனா.
சிங்கள அரசியல்வாதிகள் நீண்ட காலமாக ஒரு தந்திரத்தைக் கடைபிடித்து வருகிறார்கள். ஈழத் தமிழர்கள் தனிநாடு பெற்று விடுவார்களானால் இந்தியாவில் உள்ள தமிழர்களும் துணிவுப் பெற்று தனிநாடு அமைக்க போராடுவார்கள் என்று கூறி இந்திய அரசுத் தலைவர்களை நம்ப வைத்துள்ளனர். ஆனால் ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்பட்டால் சிங்கள அரசியல்வாதிகள் இந்தியாவின் எதிர் நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்துக் கொண்டு இந்தியாவை எதிர்க்க முற்படுவார்கள் என்பது திண்ணம். ஈழத் தமிழர்கள் இல்லையென்றுச் சொன்னால் இலங்கையில் இந்தியாவிற்கு எதுவுமில்லை. திரிகோணமலையிலோ அல்லது வேறு இடத்திலோ அந்நிய இராணுவத் தளம் எதுவும் இது வரை அமைக்கப்படாமல் இருப்பதற்கு ஈழத் தமிழர்களின் உறுதியானப் போராட்டமே காரணமாகும். அதற்கு நன்றி செலுத்துவதற்கு பதில் ஈழத் தமிழர்களை ஒடுக்குவதற்கு இந்தியா சிங்களருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு என்பது ஈழத் தமிழர்களின் பாதுகாப்பில்தான் அமைந்திருக்கிறது. இலங்கை ஆட்சியாளர்களால் ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்படுவது இந்தியாவின் பெயரால்தான். ஏனென்றால் ஈழத் தமிழர்களை இந்தியாவின் கைக்கூலிகள் எனவும் இந்திய விரிவாக்க வாதத்தின் கருவியாக அவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் சிங்களத் தலைவர்கள் தமது மக்களுக்கு சொல்லி வருகிறார்கள். இந்த நிலையில் ஈழத் தமிழர்கள் இரத்தம் சிந்துவதும் உயிர் துறப்பதும் சொல்லொண்ணா துன்பங்களுக்கு ஆளாவதும் இந்தியாவிற்காகத்தான் என்பதை உணர வேண்டியவர்கள் இன்னமும் உணரவில்லை. ஆனால் இலங்கை அரசின் இந்த இராஜதந்திர நகர்வுகளைத் தவறாகப் புரிந்துக் கொண்டுள்ள இந்திய அரசு இலங்கை அரசுக்கு துணையாக இருப்பதின் மூலம் அந்நாட்டை தனது பாதுகாப்பு அரணுக்குள் உள்ளடக்க முடியுமென கற்பனை செய்து கொள்கிறது.
கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்குச் செல்லும் வணிக கப்பல்களுக்கும், மேற்கு நாடுகளிலிருந்து, குறிப்பாக அரேபிய நாடுகளிலிருந்து கிழக்கேச் செல்லும் எண்ணை கப்பல்களுக்கும் முக்கிய தங்குமிடமாக இலங்கை விளங்குகிறது. வணிகம், மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடல் மார்க்கம் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென அமெரிக்கா கருதுகிறது. எனவே பாகிஸ்தான் வழியாக தனது ஆயுதங்களை இலங்கைக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது. பொருளாதார ரீதியான உதவிகளையும் செய்கிறது. மன்னாரில் உள்ள எண்ணையை எடுப்பதற்காகவும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காகவும் சீனா இலங்கை அரசுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறது. இந்தியாவிற்கு எதிரான ஒரு தளமாக இலங்கையைப் பயன்படுத்த பாகிஸ்தான் துடிக்கிறது.
ஆசியாவில் முப்பெரும் அணு ஆயுத வல்லரசு நாடுகளான சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகியவற்றிற்கு இலங்கையில் மிக ஆழமான நாட்டம் உள்ளது. இதைப் புரிந்து கொண்ட இலங்கை இந்த மூன்று நாடுகளிடமிருந்தும் அமெரிக்காவிடமிருந்தும் தனக்குத் தேவையான எல்லாவற்றையும் எளிதாகப் பெற்றுக் கொள்கிறது.
இலங்கைக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அளிப்பதில் மேற்கண்ட நாடுகள் அனைத்தும் தங்களுக்கு இடையில் எவ்வளவு பகைமை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு போட்டிப் போட்டுக் கொண்டு இலங்கைக்கு உதவி வருகின்றன.
இலங்கை அரசுக்கு ஆதரவாக சர்வதேச அமைப்புகளில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு என்பது வெட்ககரமானதாகும். இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதை பலவேறு மனித உரிமை அமைப்புகள் ஆதாரப் பூர்வமாகச் சுட்டிக்காட்டி கண்டித்துள்ளன. ஆனால் அண்மையில் அய்.நா மனித உரிமைக் குழு உறுப்பினர் தேர்தலில் இலங்கைப் போட்டியிட்ட போது இந்தியா அதை தீவிரமாக, வெளிப்படையாக ஆதரித்தது. அக்குழுவில் பேசிய இந்தியப் பிரதிநிதி இலங்கையில் மனித உரிமை நிலவரம் அவ்வளவு மோசமாக இல்லை. இராணுவமும் அரசு நிர்வாகமும் அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க தீவிரமான கவனம் செலுத்தி வருகின்றன என்று பேசினார். ஆனால் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர் நாடுகள் இக்கருத்தை ஏற்க மறுத்து இலங்கையைத் தோற்கடித்தன. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மா, ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் இராணுவ ஆட்சி அல்லது இராணுவத்தின் ஆதரவில் ஆட்சிகள் அமைந்துள்ளன. இலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் விளைவாக அங்கு இராணுவம் நாளுக்கு நாள் வலிமைப் பெற்று வருகிறது. இலங்கைப் பெயரளவுக்கு ஒரு ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் அதிகாரம் என்பது அங்கு குடியரசுத் தலைவரிடமும் இராணுவத் தளபதிகளிடமும்தான் உள்ளது. குடியரசுத் தலைவரின் அதிகாரத்திற்கு சமமான அளவில் இராணுவம் தனது அதிகார எல்லையை விரிவாக்கிக் கொண்டேப் போகிறது. இராணுவ பாதுகாப்புத் துறைதான் சகல இராணுவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக உள்ளது. செய்திகளைக் கட்டுப்பாடு செய்யும் அதிகாரமும் இராணுவத்திடமே உள்ளது. எழுத்தாளர்களும் இராணுவ விமர்சகர்களும் எப்படி எழுத வேண்டும் எதை எழுத வேண்டும் என்பதை இராணுவமே முடிவு செய்கிறது. இராணுவத்திற்கு அஞ்சி யாரும் அரசையோ இராணுவத்தையோ கண்டிக்க அஞ்சுகின்றனர். இலங்கையில் அமைச்சரவையில் நூற்றுக்கு மேற்பட்ட அமைச்சர்கள் அங்கம் வகித்தாலும் உண்மையான அதிகார மையமாக செயல்பட முடியவில்லை. நாடாளுமன்றமும் தனது அதிகாரத்தை இழந்து நீண்ட காலமாகிறது. குடியரசுத் தலைவரும் இராணுவமும் சம நிலையில் அதிகாரத்தை வகித்து வருகின்றனர். இந்த நிலையில் இராணுவம் தனது அதிகாரத்தை மேலும் பெருக்கிக் கொண்டே போகுமானால் குடியரசுத் தலைவர் வெறும் பொம்மையாகிவிடுவார். ஒரு காலக்கட்டத்தில் வல்லமை வாய்ந்த இராணுவத் தளபதி யாராவது ஒருவர் முழு அதிகாரத்தையும் கைப்பற்றிவிட முடியும். பாகிஸ்தானிலும் மியான்மாவிலும் அதுதான் நடந்தது.
பாகிஸ்தானில் அரசியல் தலைமை புறந்தள்ளப்பட்டு இராணுவம் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு அந்நாடு மிக எளிதாக அமெரிக்க வல்லரசின் கைப்பாவையாக மாற்றப்பட்டுவிட்டது. உலகம் முழுவதிலும் இராணுவ ஆட்சி நடைபெறுகிற பல நாடுகள் எளிதில் வல்லரசுகளின் வலையில் வீழ்ந்து விடுகின்றன. பாகிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரம் ஏற்பட்டப் பிறகுதான் இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுவிட்டன. நாளை இலங்கையிலும் இராணுவ ஆட்சி ஏற்படுமானால் அங்கும் ஏதாவது ஒரு வல்லரசு கால்தடம் பதிப்பது உறுதி. அது இந்தியாவிற்கு ஆபத்தாக வந்து முடியும். இத்தகைய அபாயம் குறித்து தில்லியில் உள்ள இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் கொஞ்சமும் புரிந்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
இலங்கையில் ஈழத் தமிழர்களை முற்றிலுமாக ஒடுக்கும் முயற்சியில் இராணுவம் வெற்றிபெறுமானால் அந்நாட்டில் இராணுவ ஆட்சி மலரப் போகும் நாள் அதிக தூரத்தில் இருக்காது. சிங்களப் பேரினவாத வெறி இராணுவத்திற்குள்ளும் நீக்கமற நிறைந்துள்ளது. இது ஈழத் தமிழர்களை விட இந்தியாவிற்கு பெரும் அபாயமாகும்.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.