சனநாயகம் சிதைந்து சர்வாதிகாரம் தலைதூக்கும் அபாயம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மார்ச் 2010 15:55
இந்திய நாடாளுமன்றத்தில் சில ஆண்டு காலமாகவே கூச்சல், குழப்பம், அவையின் மய்யப்பகுதியில் குழுமி சபாநாயகரை எதிர்த்து முழக்கமிடுதல் போன்றவை அதிகமாகிவிட்டன. நாடாளுமன்ற மேலவையிலும் இதன் எதிரொலி அடிக்கடி கேட்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவையின் நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்த இயலாத நிலையில் சபாநாயகர்கள் அவையை முதலில் சில மணி நேரங்களும் பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்க நேரிட்டுவிடுகிறது.
சபாநாயகர் பொறுப்பு வகித்த பலரும் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசினாலும் எவ்விதப் பயனும் ஏற்படவில்லை. பத்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி கூட ஏதாவது ஒரு பிரச்சினையில் சபை நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று நினைத்தால் நிறுத்த முடிகிறது. அதைத் தடுக்க சபாநாயகர்களால் முடியவில்லை.
இதன் விளைவாக நாடாளுமன்ற இரு அவைகளின் நேரம் வீணாகிறது. அரசு கொண்டுவர நினைக்கிற சட்டங்கள் தடைப்படுகின்றன. உறுப்பினர்களின் பொன்னான நேரம் வெறும் குழப்பத்திலும் கூச்சலிலும் கழிகிறது.
நாடாளுமன்றம் இயங்குவதற்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.26,035 செலவிடப்படுகிறது. ஆண்டிற்கு ரூ.440 கோடி செலவிடப்படுகிறது. ஆண்டிற்கு குறைந்த அளவு நாடாளுமன்றம் 143 நாட்களாவது கூடவேண்டும். ஆனால் 2008ஆம் ஆண்டில் 46 நாட்கள் மட்டுமே கூட்டங்கள் முறையாக நடந்துள்ளன. சுமார் 100 நாட்கள் குழப்பம், கூச்சல் இவற்றின் காரணமாக கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தை முடக்குவதில் எல்லாக் கட்சிகளுக்கும் பங்குண்டு, பா.ஜ.க. கூட்டணி ஆளுங்கட்சியாக இருந்த போது காங்கிரஸ் கூட்டணிக்கட்சிகள் நாடாளுமன்றத்தை அடிக்கடி முடக்கின. காங்கிரஸ் கூட்டணி ஆளும் போதும் பா.ஜ.க. கூட்டணியும் அதே நடைமுறையைக் கையாளுகிறது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிநாயகமான வி.ஆர். கிருஷ்ணய்யர் பின்வருமாறு குறிப்பிட்டார். ""நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகள் முடக்கப்படும் ஒவ்வொரு நிமிடமும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. என்பதை உணர்வதற்கு அரசியல்வாதிகள் தவறிவிட்டார்கள் மக்கள் வரிப்பணத்தில் வாழ்வதால் அவர்கள் இதுகுறித்துக் கவலைப்படுவதில்லை'' எனக் கடுமையாக சாடினார்.
தற்போது உள்ள 14ஆவது நாடாளுமன்றத்தில் முதல் இரு கூட்டத் தொடர்களில் 38% நேரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மேலவையில் 46% நேரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மக்கள் வரிப்பணத்தில் ரூ.4.2 கோடி வீணடிக்கப்பட்டிருக்கிறது.
1983-94 காலகட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆண்டு ஊதியம் ரூ.1.58 லட்சமாகத்தான் இருந்தது. ஆனால் 2003-04ஆம் ஆண்டில் இந்த ஊதியம் ரூ.55.34 இலட்சமாகும். அதாவது 3400 சதவீதமாக இது உயர்ந்தது. ஒரு சாதாரண தொழிலாளி ஓர் ஆண்டிற்கு பெறும் ஊதியத்தை விட 20 மடங்கு அதிகமாகவும், ஒரு எளிய குடிமகனின் வருமானத்தைவிட 40 மடங்கு அதிகமாகவும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊதியம் பெறுகிறார்கள். மக்கள் வரிப்பணத்தில் இவ்வளவு அதிகமான ஊதியம் அளிக்கப்பட்டும்கூட இவர்கள் பொறுப்புடன் பணியாற்றவில்லை. ஏழை நாட்டின் எளிய மக்களின் பிரதிநிதிகள் என்ற உணர்வு இல்லாமல் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமூக பொறுப்பற்ற தன்மைக்கும், சனநாயக கடமைகளை அலட்சியம் செய்யும் போக்குக்கும் காரணம் என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள உரிமைகள் (Privileges) விடுபாடுகள் (Immunities) உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றக் குழுக்களுக்கு உள்ள அதிகாரங்கள் எவை என்பதைப்பற்றிய தெளிவான திட்டவட்டமான சட்டங்கள் எதுவும் நமது நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை. நமது நாடாளுமன்றமும் மாநில சட்டமன்றங்களும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடைமுறைகளையும், மரபுகளையுமே பின்பற்றிவருகின்றன. நமது நாடாளுமன்றத்திற்கென தனியான நடைமுறைகளும், மரபுகளும் இல்லை. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொன்று தொட்டு பின்பற்றப்படும் மரபுகளையும், நடைமுறைகளையும் மதிக்கும் பண்பாடு உள்ளது. எனவே அவர்கள் இதற்கென தனியானதொரு சட்டம் வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை பின்பற்றும் இந்திய நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் மரபுகளையோ, நடைமுறைகளையோ மதிக்கும் பண்பாடு இன்னமும் போதுமான அளவுக்கு வளர்ந்து வேரூன்றவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டபோது அரசியல் நிர்ணயசபையில் இதுகுறித்த விவாதம் நடந்துள்ளது. 1949ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதியன்று நடைபெற்ற விவாதத்தில் அரசியல் சட்டம் வகுக்கும் குழுவில் உறுப்பினராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி அவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 105 என்பதற்கு கீழ்க்கண்ட திருத்தத்தை முன்மொழிந்தார்.
"நாடாளுமன்றம் மற்றும் அதன் உறுப்பினர்கள் குழுக்கள் ஆகியவற்றுக்குள்ள உரிமைகள், விடுபாடுகள் ஆகியவை குறித்து நாடாளுமன்றம் அவ்வப்போது சட்டங்களை இயற்றிக்கொள்ளலாம். ஆனால் அதுவரை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் அதன் உறுப்பினர்கள், குழுக்கள் ஆகியவை பின்பற்றிவரும் நடைமுறைகளை நாமும் பின்பற்றலாம், என அத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.'
இத்திருத்தம் குறித்த நடைபெற்ற விவாதத்தில் கே.எஸ்.சந்தானம், பிரஜேஸ்வர் பிரசாத், ஆர்.கே.சித்வா, மகாவீர் தியாகி, எச்.வி.காமத் போன்ற பல முக்கிய உறுப்பினர்கள் பேசினார்கள். இவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்.
"இந்தப் பிரச்சினை உருவானதையொட்டி நான் ஓர் ஆய்வை மேற்கொண்டபோது தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம் உறுப்பினர்களுக்குள்ள உரிமைகள், விடுபாடுகள் குறித்து ஒரு சட்டம் இயற்றியுள்ளது. அதன் பிரதி ஒன்று என்னிடம் உள்ளது. உறுப்பினர்கள் விரும்பினால் அதை அவர்களுக்கு அளிக்கத் தயாராக இருக்கிறேன். பிற்காலத்தில் நமது நாடாளுமன்றமும் இதுபோன்ற சட்டத்தை உருவாக்கிக்கொள்ளலாம்' என்றார்.'
அரசியல் நிர்ணயசபை தலைவராக இருந்த டாக்டர் இராசேந்திரபிரசாத் குறுக்கிட்டு "உருவாகப்போகும் புதிய நாடாளுமன்றம் இதற்கான சட்டத்தை இயற்றிக்கொள்ளலாம். அதுவரை பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபுகளை நாம் பின்பற்றவேண்டும். எதிர்காலத்தில் நமது நாடாளுமன்றம் இத்தகைய சட்டத்தை இயற்றாமல் போனால் உறுப்பினர்கள் விழிப்போடு இருந்து அதை இயற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்' என்று குறிப்பிட்டார்.
டாக்டர் இராஜேந்திரபிரசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரும் மற்றும் முக்கியமான உறுப்பினர்களும் இந்தப் பிரச்சினையில் எவ்வாறு சிந்தித்தார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. விரும்பியிருந்தால் அவர்களே இதற்கான விதிமுறைகளை அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்த்தோ அல்லது தனியான சட்டமாகவோ உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைச்செய்ய விரும்பவில்லை.
இளம் சுதந்திர நாட்டின் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பல ஆண்டுகள் நடைமுறையில் பார்த்தப்பிறகு உருவாகும் சிக்கல்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் நன்கு ஆராய்ந்து தெளிந்து அதற்கேற்றவாறு சட்டம் வகுத்துக்கொள்வதுதான் சிறந்தது என அவர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் முடிவுசெய்தார்கள்.
இந்தியா விடுதலைப் பெற்று 63 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தொடக்கக்காலத்தில் நமது தலைவர்களிடம் இருந்த ஜனநாயகப் பண்புகளும், உணர்வுகளும் இப்போது உள்ளவர்களிடம் குறைந்துவிட்டன, சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டபோது பிரதமர் நேரு, தனது அமைச்சரவையில் வல்லபாய்படேல், அபுல்கலாம் ஆசாத், இராசேந்திரபிரசாத், சுப்பராயன், ஆசப் அலி போன்ற தியாகத் தலைவர்களையும் காங்கிரஸ் கட்சி அல்லாதவர்களான ஆர்.கே.சண்முகம் செட்டியார், அம்பேத்கர், சியாமப் பிரசாத் முகர்ஜி, என்.கோபால்சாமி ஐயங்கார், ஜான்மத்தாய், பல்தேவ்சிங் போன்றவர்களை அமைச்சர்களாக நியமித்தார். அறிவாற்றல் மிக்க இவர்களின் துணை புதிய அரசுக்கு இருக்கவேண்டும் என அவர் கருதினாரே தவிர, கட்சி கண்ணோட்டத்தில் மட்டும் அவர் செயல்படவில்லை. மேற்கண்ட தலைவர்களும் அதைப்போல நாட்டு நலன் ஒன்றையே மனதில் கொண்டு சிறப்பாகச் செயலாற்றினார்கள்.
அதைப்போல இரு அவைகளிலும் எதிர்க்கட்சி வரிசையில் கிருபாளினி, இராம்மனோகர் லோகியா, அசோக்மேத்தா, மதுலிமாயி போன்ற சோசலிச இயக்கத் தலைவர்களும் எஸ்.ஏ. டாங்கே, கிரேன் முகர்ஜி, புபேஷ்குப்தா, சோம்நாத்சட்டர்ஜி, ஏ.கே. கோபாலன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஏ.இராமசாமி முதலியார், எச்.வி. காமத், ஏ. கிருஷ்ணசாமி, என்.ஜி. இரங்கா, எம்.ஆர்.மசானி, பிலுமோடி, முகமது இஸ்மாயில், அறிஞர் அண்ணா, இரா.செழியன் போன்ற மக்களிடம் செல்வாக்குப்பெற்றத் தலைவர் வீற்றிருந்து ஜனநாயகத் தேரை வழிநடத்த உதவினார்கள்.
ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சிகளிலும் இத்தகைய பண்பட்ட தலைவர்கள் வீற்றிருந்து நாடாளுமன்ற நெறிகளை வழுவாது கடைப்பிடித்து உன்னதமானவையும், பிற்காலத்தவர் பின்பற்றத் தக்கவையுமான நல்ல மரபுகளை உருவாக்கித்தந்தனர்.
அன்றிருந்த தலைவர்கள் இன்று இல்லை. நிலைமை அடியோடு மாறியிருக்கிறது. யாரும் யாருக்கும் கட்டுப்படவோ நாடாளுமன்ற மரபுகளையோ நடைமுறையை மதிக்கவோ தயாராக இல்லை. தன்னலன், கட்சிநலன் போன்ற குறுகிய கண்ணோட்டங்கள் மேலோங்கி நிற்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் கேலிக்கூத்தாகிக்கொண்டிருக்கிறது இது தொடருமேயானால் ஜனநாயகம் சிதைந்து சர்வாதிகாரம் தோன்றும் அபாயம் உள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அன்றாடம் நடக்கும் குழப்பங்களையும் கலவரச் சூழ்நிலைகளையும் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை நிலை நிறுத்தியாகவேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளது. கடந்த 63 ஆண்டுகளில் நமக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ஒரு சட்டத்தை உருவாக்கிக்கொள்ள இதுவே ஏற்ற தருணமாகும்.
நமது நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் அதனுடைய உறுப்பினர்கள், குழுக்கள் ஆகியவற்றுக்குள்ள உரிமைகள், விடுபாடுகள் என்பவைக் குறித்து விரிவான சட்டம் ஒன்று வகுக்கப்படவேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் அங்கம் வகிக்கும் மூத்த உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்ட வல்லுநர்கள் போன்றவர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி இத்தகைய சட்டத்தை உடனடியாகக் கொண்டுவராவிட்டால் நாடாளுமன்ற சனநாயகம் செயலிழந்து செத்துவிடும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.