சசிதரூர்-சீரழிவு அரசியலின் சின்னம் |
|
|
|
வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2010 15:56 |
மத்திய இணை அமைச்சர் சசிதரூர் குறித்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பத்திரிகைகளிலும் மிகக்கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்திருக்கிறது. பதவி விலகியதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது. மிக ஆழமாகப் புரையோடிவிட்ட ஒரு புண்ணை புணுகு பூசி மறைத்துவிட முடியாது.
ஐ.பி.எல். 20/20 மட்டைப் பந்து போட்டிகளில் அடுத்த ஆண்டு முதல் பங்கேற்க விருக்கும் கொச்சி அணி கடந்த மாதம் நடத்தப்பட்ட ஏலத்தில் சுமார் 1600 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்டது. இந்த அணியை ஏலத்தில் எடுக்க பலரும் முயற்சி செய்துள்ளனர். உலகத்தின் 13வது பணக்காரரான கவுதம் அடானி ஏலம் எடுக்க செய்த முயற்சியை இரண்டஸ்வஸ் விளையாட்டு அமைப்பு என்ற நிறுவனம் முறியடித்து விலைக்கு வாங்கியுள்ளது. இவ்வளவு பெரும் பணம் புரளும் அளவுக்கு நிலைமை இருக்குமானால் இதைப் போல பல மடங்கு அதிகமான பணம் இந்த விளையாட்டையொட்டிக் கைமாறும் என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் விளையாட்டிற்கோ அல்லது கேரள மாநிலத்திற்கோ அல்லது கொச்சி அணிக்கோ எவ்வித சேவையும் செய்தறியாத சுனந்தா புஷ்கர் என்ற பெண்மணி கொச்சி அணியின் பொது உறவு மற்றும் சந்தை அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர் ஆற்றவிருக்கிற சேவைக்காக அவருக்கு 18 சதவீத பங்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இவருக்கு இத்துறைகளில் எத்தகைய முன் அனுபவமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கு சசிதரூரிடம் மட்டும்தான் தொடர்பு உண்டு. அதன் காரணமாக இந்த பங்கீடு அவருக்கு ஒதுக்கப்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டுக்குரிய அடிப்படையாகும். கேரள மாநிலத்திற்கென்று கிரிக்கெட் அணி ஒன்று வேண்டுமென்பதற்காகத்தான் கொச்சி அணியை உருவாக்க தான் பாடுபட்டதாகவும் ஆனால் அதைத் தடுத்து அகமதாபாத் அணியை உருவாக்க குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியும் # ஐ.பி.எல். ஆணையாளர் லலித்மோடியும் செய்த சதியின் விளைவாகவே தன் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுவதாக சசிதரூர் கூறினார். ஆனால் உண்மை நேர் மாறாக உள்ளது. கொச்சி அணியில் பங்குதாரராக ஒரே ஒரு மலையாளி மட்டுமே உள்ளார். அவருக்கு 1 சதவீதப் பங்கு மட்டுமே உள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13-பி பிரிவின்படி அமைச்சராக இருப்பவர் பொது ஊழியர் என்று கூறப்பட்டுள்ளது. தாங்களோ தங்களைச் சார்ந்தவர்களோ ஆதாயம் அடைவதற்காக அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால் அது குற்றமாகும். இதன்படி சசிதரூரின் செயல் ஊழல் வழக்கு தொடர்வதற்கு முற்றிலும் ஏற்றதாகும். ஏற்கனவே இவர் அமைச்சர் பதவியை ஏற்றபோது இவருக்கு வீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவே ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். புதிய அமைச்சர்கள் இப்படி செய்வது வழக்கமாகும். அதற்குரிய கட்டணத்தை அரசு செலுத்திவிடும். ஆனால் நாள் ஒன்றுக்கு ஒரு இலட்ச ரூபாய் வாடகை உள்ள ஒரு அறையில் அவர் தங்கினார். ஏழை நாட்டின் அமைச்சர் இவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்ததே குற்றச்சாட்டுக்கு ஆளானது. அதுமட்டுமல்ல அமைச்சர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்யக்கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட நேரத்தில் அப்படியானால் "ஆடு, மாடுகள் பயணம் செய்யும் வகுப்பில் பயணம் செய்வதா' என சசிதரூர் கேட்டார். அவருடைய இந்த இறுமாப்பு பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளராக தனது பெயரைப் பதிவு செய்வதற்குப் பொய்யான ஆவணங்களை சசிதரூர் தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் திருவனந்தபுரம் மாவட்டச் செயலாளர் பி. இராமச்சந்திரன் நாயர் அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா ஐ.பி.எல். அழகிப் போட்டியில் வெற்றிபெற்ற கேப்ரில்லா என்ற பெண்மணியின் இந்திய விசா 2010 பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. அவருக்கு விசாவை நீடித்து தரவேண்டாம் என ஆட்சேபணைகள் எழுந்தபோதிலும் அவற்றை சசிதரூர் ஏற்கவில்லை. விசாவை நீட்டித்துக்கொடுத்தார். இப்படி அடுக்கடுக்காண குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்துள்ளன. இந்திய அரசியல் வானில் தோன்றிய திடீர் நட்சத்திரமான சசிதரூரின் பழைய வரலாறு என்ன? அய்.நா. பேரவையின் செயலாளர் நாயகம் தேர்தலில் இவரை இந்தியா நிறுத்தியது. இவர் இதில் வெற்றிபெறவில்லை என்பது வேறு. ஆனால் இவரை இப்பதவிக்குரிய வேட்பாளராக இந்திய அரசு தேர்ந்தெடுத்ததற்குப் பின்னணி என்ன? இணை அமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தையே காக்காதவர், ஐ.நா. பதவியைத் பெற்றிருந்தால் இந்தியாவின் மானம் காற்றில் பறந்திருக்கும். அய்.நா. செயலாளர் நாயகம் பதவி என்பது உலகின் மிகஉயர்ந்த பதவியாகும். பிரதமர் நேரு காலத்தில் அவருடைய தங்கை விஜயலட்சுமி, வி.கே. கிருஷ்ணமேனன் போன்றவர்கள் அய்.நா.வில் பலகாலம் இந்தியப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள். உலகம் அறிந்த இவர்களைக் கூட செயலாளர் நாயகம் பதவிக்கு நேரு நிறுத்தவில்லை. இவ்வளவுக்கும் ஆசியா-ஆப்பிரிக்க நாடுகள் முழுமையாக நேருவின் தலைமை ஏற்றிருந்த காலம் அது. ஆனால் இந்திய மக்களே அறிந்திராத சசிதரூரை அய்.நா. செயலாளர் நாயகம் பதவி வேட்பாளராகவும் பிறகு திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகவும், மத்திய இணையமைச்சராகவும் தேர்ந்தெடுக்க உதவிய ஞானத்தாய் அல்லது ஞானத்தந்தை யார்? 2005ஆம் ஆண்டு ஈராக்கில் உணவுக்காக எண்ணெய் திட்டத்தில் நடைபெற்ற ஊழலில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உண்டு என பால்வாக்கர் அறிக்கை அம்பலப்படுத்தியது. அப்போது அய்.நா.வில் அதிகாரியாக இருந்த சசிதரூர் காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்றுவதற்கு முழுமுயற்சிகள் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு இந்தப் பதவிகள் வழங்கப்பட்டனவா? பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன், மத்திய அமைச்சரவை செயலாளர் கே.என். சந்திரசேகர், வெளியுறவுச் செயலாளராக இருந்த சிவசங்கர மேனன், தேசிய பாதுகாப்புச் ஆலோசகராக இருந்த எம்.கே. நாராயணன் போன்ற மலையாளிகளின் லாபி சசிதரூரின் வளர்ச்சிக்குக் காரணமா? மேலே கண்ட கேள்விகளுக்கு உரிய விடைகளும் உண்மைகளும் கண்டறியப்பட்டாக வேண்டும். ஏன் என்றால் மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் ஏராளமான சசிதரூர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தவறான நடவடிக்கைகள் தங்குதடையின்றி தொடர்கின்றன. அவர்களைக் காப்பாற்றும் வலிமையான சக்திகள் உள்ளன. கிரிக்கெட் விளையாட்டு சூதாட்டமாக்கப்பட்டுவிட்டது. மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களின் கட்டுப்பாட்டில் கிரிக்கெட் உள்ளது. சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். கிரிக்கெட்டுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத அரசியல்வாதிகள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தத் துடிப்பது ஏன்? அதிலும் ஐ.பி.எல். போட்டிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு பெரிதும் பயன்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. சசிதரூரை பதவி விலக வைத்து மேற்கண்ட தவறுகள் அனைத்தையும் மூடிமறைக்க முயற்சி நடைபெறுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் முழு உண்மைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும். கிரிக்கெட் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையுமே குற்றவாளிக்கூண்டில் ஏற்றவேண்டும். இந்திய அரசியலிலும் விளையாட்டுத்துறையிலும் சீரழிவு உச்சக்கட்டமாகப் பரவியிருப்பதின் சிறிய வெளிப்பாடுதான் சசிதரூர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாகும். இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டியது மக்கள் கடமையாகும். |