படமெடுத்தாடும் பாசிசப் பாம்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 28 ஏப்ரல் 2010 15:58
மிகச்சிறந்த நீதிபதிகளும் சட்ட நுணுக்கங்களில் துறைபோகிய வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்திருக் கிறார்கள். இந்தியாவில் உள்ள பிற உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருமைக்குரிய சென்னை உயர்நீதிமன்றம் இன்று சிறுமைப்பட்டுக் கிடக்கிறது. உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காவல்படையினாலும், கட்சிக் குண்டர்களாலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள். உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் சுதந்திரமாகச் சென்றுவர அனைவரும் அஞ்சும் நிலை உருவாகிவிட்டது.
கடந்த 25-4-10 அன்று உயர்நீதிமன்றத்தில் அம்பேத் கரின் சிலைத் திறப்பு விழா நடைபெற்றது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களுக்கு அரசு தரப்பில் வெளியிடப்படும் விளம்பரங்கள் எதுவும் பத்திரிகைகளில் இடம்பெறவில்லை. அதிலும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா என்ற போதிலும் கூட மூடுமந்திரமாக நடத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 15,000 மேற்பட்ட வழக்கறிஞர்களும் இதர அலுவலர்களும் பணியாற்றி வரு கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, முதலமைச்சர், சட்ட அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளும் இதுபோன்ற விழாவில் சில ஆயிரம் வழக்கறிஞர்களாவது பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால் அன்றைய விழாவில் 50க்கும் குறைவான வழக்கறிஞர்கள் மட்டுமே பங்கேற்றனர். மிகப்பெரும்பாலான வழக்கறிஞர்கள் விழாவைப் புறக்கணித்துவிட்டனர்.
உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளும் வழக்கறிஞர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படு வார்கள். ஆனால் அன்றைய தினம் இந்தப் பரிசோதனையை நடத்தாமல் காவல்துறையினர் அமைதி காத்தனர். வழக்கறிஞர்கள் அல்லாத பலர் இவ்விழாவில் பங்கேற்பதற்கு வசதியாகவே இவ்வாறு செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.
கடந்த 19-02-09 அன்று நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும், காவல்துறையினரால் தாக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள வருகை தந்தார். எனவே காவல்துறைத் தலைவர் உட்பட உயர்காவல் அதிகாரிகள் மற்றும் சீருடை அணியாத ஏராளமான காவலர்களும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
முதலமைச்சர் பேசத்தொடங்கியதும் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த ஐந்தாறு வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்டினார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய இவர்களை அங்கிருந்த காவல்படை எத்தகைய அமளியும் இல்லாமல் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால் காவல்துறைத் தலைவர் உட்பட சீருடையில் வந்திருந்த காவலர்களும், சீருடை அணியாமல் வந்திருந்த ஏராளமான காவலர்களும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடு படாமல் அமைதி காத்தனர். ஆனால் திட்டமிட்டு உள்நுழைந் திருந்த தி.மு.க.வைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் அந்த ஐந்தாறு பேர் மீது பாய்ந்து காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் தொடுத்தனர். அதுமட்டுமல்ல நாற்காலிகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதலை படம்பிடிக்க முயன்ற ஊடகக்காரர்களின் கேமராக்கள் பறித்தெடுக்கப்பட்டு உடைக்கப்பட்டன. கேமராக்காரர்களும் தாக்குதலுக்குத் தப்பமுடியவில்லை. அவர்களுக்கு ஆதரவாக வந்த செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் கண்முன்னாலேயே நடைபெற்ற இந்தத் தாக்குதலை காவல்துறை முழுமையாக வேடிக்கை பார்த்தது. காவல் துறையின் செயலற்றத் தன்மை இத்துடன் நிற்கவில்லை. படுகாயமடைந்த வழக்கறிஞர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குகளைப் பதிவுசெய்த காவல்துறை தாக்குதலுக்குள்ளான செய்தியாளர்களின் புகாரை பதிவுசெய்யவே மறுத்தது. உடனே செய்தியாளர்கள் எழும்பூரில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்துக் குச் சென்று உயர்அதிகாரிகளை சந்தித்து முறையிட நடை பெற்ற முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. எனவே அனைத்து செய்தியாளர்களும் ஒன்றுதிரண்டு முதலமைச்சர் இல்லத்துக்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்வதாக முடிவெடுத் ததின் காரணமாக மாலை 6 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
அது மட்டுமல்ல உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்தத் தாக்குதல் நிகழ்ச்சி குறித்து பெரும்பாலான ஊடகங்களிலோ, பத்திரிகைகளிலோ எத்தகைய செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திக் கைதுசெய்து இழுத்துச்சென்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை இவ்வாறு செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல. மனித நேயமற்றதுமாகும்.
இந்நிகழ்ச்சியைக்குறித்து சட்டமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகளுக்கு முதலமைச்சரும் சட்டஅமைச்சரும் பதில்கூறிய முறை ஆணவத்தின் சிகரமாகும்.
கருப்புக்கொடி காட்டிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரை காவல்துறை அப்புறப்படுத்தியிருந்தால் இந்தப்பிரச்சினை வந்திருக்காதே என்று ஒரு உறுப்பினர் குறிப்பிட்டபோது முதலமைச்சர் கருணாநிதி அளித்த பதில் பல தகவல்களை அம்பலப்படுத்திவிட்டது.
"உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறையினர்தான் வரக்கூடாதே என முதலமைச்சர் பதிலளித்திருக்கிறார்.
காவல்துறையினர் வரமுடியாத நிலையில்தான் தி.மு.க. குண்டர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டார்கள் என்பதை முதலமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
தனக்கு வழக்கறிஞர்களின் எதிர்ப்புக் கிளம்பும் என்பதை உணர்ந்தே அந்த எதிர்ப்பை அடக்குவதற்கு கழகத் தொண்டர்களை பயன்படுத்த வேண்டும் என்பதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் அம்பலமாகியுள்ளது.
சட்ட அமைச்சர் துரைமுருகன் இன்னும் பச்சையாகவே தனது பாசிச நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். "நான்கைந்து பேர் முதல்வருக்கு திருட்டுத்தனமாக கருப்புக்கொடி காட்டுவார்கள். அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? தி.மு.க.வினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானமுள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்டமாட்டானா?' என்று அகம்பாகவமாகப் பேசியிருக்கிறார்.
தலைமை நீதிபதிகள் முன்னிலையில் வழக்கறிஞர்களைத் தாக்கியதை நியாயப்படுத்தும் வகையில் சட்ட அமைச்சர் பேசுகிறார்.
ஜனநாயகத்தில் ஆட்சியாளருக்கு கருப்புக்கொடி காட்டுவதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இந்தியாவில் முதல்முதலாக பிரிட்டிஷ் அரசின் சார்பாக அனுப்பப்பட்ட சைமன் கமிஷன் வந்தபோது காங்கிரசின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றன. ஆங்கிலேய அரசு அதை அனுமதித்தது.
பிரதமர் நேருவுக்கு எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியதை முதலமைச்சரே குறிப்பிட்டிருக்கிறார். பிரதமருக்கு மட்டுமல்ல, தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பலருக்கும் எதிராக தி.மு.க. கருப்புக்கொடி காட்டியது. அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு மீறப்படும் கட்டத்தில் கருப்புக்கொடி காட்டியவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியுள்ளது. ஆனால் நேருவுக்கே கருப்புக்கொடியா என்று காங்கிரஸ்காரர்கள் கொதித்தெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு எதிராக தாக்குதல்களை ஒருபோதும் நடத்தவில்லை.
ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டப் பிரச்சினைகளுக்காக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது மரபு. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது இதுவரை இல்லாத மரபாகும்.
1978ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தபோது அவருக்கெதிராக தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அவரை மதுரையில் கொலை செய்ய முயன்றது என்பது மறைக்கமுடியாத வரலாறு ஆகும். அந்தக் கொடூரத் தாக்குதலில் இருந்து அவரைக் காப்பாற்றியவன் என்ற முறையில் இதை நான் சொல்கிறேன். இவ்வாறு தாக்கிய தி.மு.க.வினருக்கு எதிராக எதிர்த்தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை.
முதலமைச்சரின் இந்தத் தவறான அணுகுமுறை பச்சையான பாசிசப் போக்காகும். அதுமட்டுமல்ல தங்கள் தவறை நியாயப்படுத்தும் வகையில் முதலமைச்சரும் சட்ட அமைச்சரும் பேசுவது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இத்தகைய போக்கு வளர்வதை அனுமதிப்பது என்பது ஜனநாயகத்தின் ஆணிவேரையே அறுத்தெறிந்துவிடும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் அறிஞர் அண்ணா அவர்கள் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவருக்கு முன் தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராசன் "காங்கிரஸ் அமைச்சர்களை கல்லால் அடிக்க வேண்டும்' என்று பேசியபோது அண்ணா உடனடியாக எழுந்து பகிரங்கமாக அவரைக் கண்டித்ததோடு மன்னிப்பும் கேட்கவைத்தார். அவரின் தம்பியான கருணாநிதியிடம் இந்த பண்பு இல்லை.
தனக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டிய ஐந்தாறுபேரை தாக்குவதற்கு முயன்ற தனது கட்சிக்காரர்களைத் தடுத்து அமைதிக்காக்கும்படி ஆணைப்பிறப்பித்திருந்தாலோ அல்லது காவல்படையினரை வைத்து அந்த சிறு கும்பலை பத்திரமாக வெளியே அனுப்ப முதலமைச்சர் ஆணைப்பிறப்பித்திருந்தாலோ அவருடைய மதிப்பு உயர்ந்திருக்கும். ஆனால் தனக்கெதிரான சிறு நிகழ்ச்சியைக்கூட மன்னிக்கத் அவர் தயாராக இல்லை இது இட்லரின் மனோபாவமாகும். ஜெர்மனியில் தனக்கு எதிரான கருத்துக்கொண்டவர்களையும், யூதர்களையும் காவல்படையை வைத்து இட்லர் ஒடுக்கவில்லை. மாறாக நாஜிக் கட்சியைச் சேர்ந்த எஸ்.எஸ். படை என்ற குண்டர் படையை வைத்து சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் இட்லர். இட்லர் நடத்திய பாசிச வெறியாட்டத்திற்கும் இன்று கருணாநிதி நடத்தியிருக்கும் பாசிச வெறியாட்டத்திற்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை.
தமிழ்நாட்டில் ஜனநாயகத்தையும் தனிநபர் சுதந்திரத்தையும் நிலைநாட்டுவதற்காக எண்ணற்றத் தலைவர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்கள். அவர்கள் எழுப்பிய ஜனநாயக மாளிகையை கருணாநிதியின் பாசிசப் படை தகர்க்க முயல்கிறது.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.