ஐ.நா.விற்குச் சாவுமணி அடிக்க முயற்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 20:50
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மன்றம் மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருசுகிடருஸ்மா குழுவின் தலைவராகவும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டிவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார். இக்குழுவில் மேலும் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான உடனயே சிங்கள அதிபர் இராசபக்சே ஐ.நா. குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஐ.நா. குழுவிற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, மெக்சிகோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல நாடுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த 6-7-10 அன்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தொடங்கி, இப்போராட்டத்தில் புத்த பிட்சுகள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஐ.நா. அலுவலகத்தைச் சேர்ந்த 120 பேரை பணயக் கைதிகளாகப் பிடித்துவைப்பதுதான் தங்களது நோக்கம் என வீரவன்ச தெளிவாக அறிவித்தார். ஐ.நா. குழு பற்றிய அறிவிப்பை பான்-கீ-மூன் திரும்பப் பெற்றால் ஒழிய ஐ.நா. அலுவலகர்கள் அனைவரும் தங்களது முற்றுகையிலிருந்து தப்பமுடியாது என்றும் அவர் கூறினார். அதுமட்டுமல்ல. 8-7-10 அன்று தனது கோரிக்கை நிறைவேறும்வரை சாகும்வரை உண்ணாநோன்பு இருக்கப்போவதாக கூறி அந்தப் போராட்டத்தையும் தொடங்கினார். பான்-கீ-மூனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ஐ.நா. அலுவலர்களின் பாதுகாப்புக்குரிய நடவடிக்கையை இலங்கை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என ஐ.நா. மன்றம் எச்சரித்தது. இதன் விளைவாக மூன்று மணி நேர முற்றுகைக்குப் பிறகு இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ரமேஷ் ஜெயசிங்கே தலையிட்டு ஐ.நா. அலுவலர்களை பத்திரமாக வெளியேற்றினார்.
போர்க் குற்றம் தொடர்பான விசாரணைக் குழுவை ஒரு போதும் கலைக்க முடியாது என ஐ.நா. மன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஐ.நா.வுக்கு எதிராக இலங்கையின் அமைச்சர் ஒருவரே போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை மூடுவது என பான்-கீ-மூன் முடிவு செய்தார். இலங்கையில் உள்ள ஐ.நா.வின் பிரதிநிதியையும் திரும்பப் பெற்றுள்ளார்.
ஐ.நா.வின் விசாரணைக் குழுவுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. பான்-கீ-மூன் தமது அதிகாரங்களை மீறிச் செயல்படுவதாகத் தெரிவித்து வழக்கு தொடரும் உலகின் முதலாவது நாடு இலங்கையே ஆகும்.
இலங்கை அதிபர் இராசபக்சேயின் இந்த சலசலப்பிற்குப் பின்னணியாக இந்தியாவும் சீனாவும் நிற்கின்றன. அதுதான் ஐ.நா.வை எதிர்த்து அறைகூவல் விடுவதற்கு அவருக்குத் துணிவை அளித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்றப் போரில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை ஈவுஇரக்கமில்லாமல் கொன்றுகுவித்தும் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்தும், சித்திரவதை செய்தும் அவ்வப்போது சுட்டுக்கொன்றும், தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியும் அப்பட்டமாக மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்துள்ள இராசபக்சே மீது விசாரணை நடத்த ஐ.நா. மன்றம் முற்படும்போது அதற்கு எதிராக அவர் விடுத்துள்ள அறைகூவலைச் சந்திக்கும் துணிவினை ஐ.நா. பெறுமா? அதில் அங்கம் வகிக்கும் நாடுகள் துணை நிற்குமா? என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன.
இந்தக் கேள்விகளுக்குரிய விடையில்தான் ஐ.நா.வின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ஐ.நா.வின் முன்னோடியாக விளங்கிய சர்வதேசச் சங்கத்திற்கு ஏற்பட்ட கதி ஐ.நா.வுக்கும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
முதலாம் உலகப்போர் முடிவடைந்தபிறகு மீண்டும் போர் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்துடன் வெர்செயில்ஸ் உடன்பாட்டினைப் போரில் வெற்றிபெற்ற நாடுகள் செய்துகொண்டன. அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக இருந்த உட்ரோ வில்சன் உலகில் அமைதியை நிரந்தரமாக நிலைநிறுத்தச் செய்யவும் சர்வதேச நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கவும், சர்வதேச அமைப்பு ஒன்று தேவை என்பதை வலியுறுத்தினார். முதலாம் உலகப்போரில் ஏற்பட்டப் பேரழிவைக் கண்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்தன. அதற்கிணங்க சுவிட்சர்லாந்தின் தலைநகரான ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேசச் சங்கம் (The League of Nations) அமைக்கப்பட்டது.
ஆனால் இதற்கான யோசனையைத் தெரிவித்த உட்ரோ வில்சனின் நாடு இந்த அமைப்பில் இணைவதற்கு அமெரிக்கக் காங்கிரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். போரில் தோற்ற ஜெர்மனி இந்த அமைப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதைப்போல 1917ஆம் ஆண்டில் அக்டோபர் புரட்சியை நடத்தி ஜார் ஆட்சியை வீழ்த்தி உருவான சோவியத் ஒன்றியமும் இந்த அமைப்பில் சேருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. உலகின் மூன்று முக்கிய வல்லரசுகள் இந்த அமைப்பிலிருந்து விலகிநின்றன. மற்றும் இரு வல்லரசுகளான பிரிட்டனும், பிரான்சும் இந்த அமைப்பில் அங்கம் வகித்தன. ஆனாலும் பல்வேறு நாடுகளுக்கிடையே தகராறுகள் எழுந்தபோது அதில் தலையிட்டுத் தடுக்கவேண்டிய சர்வதேச சங்கம் அவ்வாறு செய்ய பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் ஒத்துழைக்கவில்லை.
1923ஆம் ஆண்டில் பிரான்சும் பெல்ஜியமும் இணைந்து ஜெர்மனியின் முக்கியத் தொழில் பகுதியான ரூர் என்பதை ஆக்கிரமித்தன. இதைத் தடுக்கவோ கண்டிக்கவோ சர்வதேசச் சங்கம் முன்வரவில்லை.
1935-36ஆம் ஆண்டில் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி சிறிய நாடான அபிசீனியா மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார். பிரிட்டன், பிரான்சு ஆகிய நாடுகள் இரகசியமாக முசோலினியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அபிசீனியாவின் மூன்றில் இரண்டு பகுதியை அவர் ஆக்கிரமிப்பதற்கு இசைவு தெரிவித்தன.
ஆக்கிரமிப்பாளனான இத்தாலிக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேசச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் வல்லரசுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் இத்தாலியுடன் கொண்டிருந்த வணிக ரீதியான உறவை ஒருபோதும் கைவிடவில்லை.
1931ஆம் ஆண்டில் சீனாவின் பகுதியான மஞ்சூரியா மீது ஜப்பான் படையெடுத்து ஆக்கிரமித்தது. இதை சர்வதேசச் சங்கம் கண்டித்தபோது அதிலிருந்து விலகிக்கொள்வதாக ஜப்பான் அறிவித்து வெளியேறியது.
1936ஆம் ஆண்டில் இட்லரின் ஜெர்மனி ரைன்லேண்ட் மீது படையெடுத்துக் கைப்பற்றியது. 1938ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவையும், 1939ஆம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கியாவையும் அது கைப்பற்றியது. ஆனால் வல்லரசுகளில் ஒன்றான பிரிட்டன் இட்லரை தாஜா செய்யும் கொள்கையை பின்பற்றியதே தவிர சர்வதேசச் சங்கத்தின்மூலம் அவரது ஆக்கிரமிப்புகளைத் தடுக்க முயற்சிசெய்யவில்லை. பிரிட்டிஷ் பிரதமர் சேம்பர்லேன், ஜெர்மனிக்கே சென்று இனிமேல் புதிதாக எந்த நாட்டின் மீதும் படையெடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியை இட்லரிடம் பெற்று மூனிச் உடன்பாடு செய்துகொண்டார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு போன்ற வல்லரசுகள் சர்வதேசச் சங்கத்திற்கு வலிமை சேர்ப்பதற்கு பதில் தங்களின் தன்னலத்திற்காக இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் சமரசம் செய்துகொண்டது வேண்டாத விளைவுகளுக்குக் காரணமாயிற்று, சிறிய நாடுகள் சர்வதேச சங்கத்திடம் நம்பிக்கையிழந்தன.
சர்வதேசச் சங்கத்திற்கு வல்லரசுகள் முழுமையாக ஆதரவு தந்திருந்தால் ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முைைளயிலேயே கிள்ளி எறிந்திருக்க முடியும். அவ்வாறு செய்யத் தவறியதின் விளைவாகத்தான் முசோலினி, இட்லர், டோஜோ போன்ற ஃபாசிச சர்வாதிகாரிகள் மேலும் மேலும் வலிமைபெற்றவர்களாக மாறி இரண்டாம் உலகப்போரைத் தொடங்கும் துணிவைப் பெற்றார்கள். அதன் விளைவாக வரலாறு காணாத பேரழிவை உலகம் சந்தித்தது.
1939ஆம் ஆண்டில் ஜெர்மனி பிரான்சின்மீது படையெடுப்பு நடத்தி அதைப் பிடித்து, பிரிட்டன் மீது பறக்கும் குண்டுகளை ஏவித் தாக்கியபோதுதான் தனது தாஜா கொள்கையின் தவறுகளை பிரிட்டன் உணர்ந்தது. ஆனால் காலம் கடந்துவிட்டது. 1941ஆம் ஆண்டுவரை இரண்டாம் உலகப்போரில் இருந்து விலகிநின்ற அமெரிக்காவின் பேர்ல் ஹார்பர் துறைமுகத்தை ஜப்பானிய விமானங்கள் குண்டுவீசி அழித்தபோதுதான் அமெரிக்கா தனது தவறை உணர்ந்தது.
ஃபாசிச வெறியனான இட்லர் ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளை ஆக்கிரமித்தபோது அவருடன் சோவியத் ஒன்றியம் போரைத் தவிர்க்கும் உடன்பாட்டினைச் செய்துகொண்டது. போலந்தின் மீது இட்லர் படையெடுத்தபோது சோவியத் படைகளும் போலந்தின் மீது படையெடுத்து இருநாடுகளும் போலந்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டன. பின்னர் 1941ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் மீது இட்லர் திடீரென படையெடுத்தபோது சோவியத் நாடு அதிர்ச்சியடைந்தது. அமெரிக்காவும் பிரிட்டனும் அதை வேடிக்கைப் பார்த்தன. காலங்கடந்துதான் உலகையே அடிமை ஆக்கும் இட்லரின் பேராசையை இந்நாடுகள் புரிந்துகொண்டன.
சூடான் அதிபர் அல்பஷீருக்கு எதிராக போர்க் குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து அவருக்குத் தண்டனை வழங்கியுள்ளது. அதைப்போல செர்பியாவின் அதிபராக இருந்த மிலோசேவிக் மீதான போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் விசாரித்து அவருக்கு சர்வதேச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. இதற்கு வல்லரசுகளும் இந்தியா, சீனா போன்ற நாடுகளும் துணையாக இருந்தன. ஆனால் மேற்கண்ட இருவரைவிட மிகக்கொடிய குற்றங்களைச் செய்த இராசபக்சேவைக் காப்பாற்றுவதற்கு இந்தியாவும் சீனாவும் முயற்சி செய்கின்றன. ஐ.நா அமைத்துள்ள விசாரணைக் குழுவை எப்படியும் இரத்து செய்யவேண்டும் என்பதற்கான முயற்சிகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. ஐ.நா. குழுவை தடுத்து நிறுத்தவேண்டும் என ஐ.நா. பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவருவதற்கு எகிப்தை இந்தியா தூண்டியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு சீனாவின் ஆதரவை பெறுவதற்காக இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் சீனாவுக்கு விரைந்துள்ளார்.
1952ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கொள்கையின் விளைவாக ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா. மன்றம் டாக்டர் புஞ்சே என்பவர் தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் நுழைய அந்தக் குழுவை அந்த அரசு அனுமதிக்கவில்லை. ஆனாலும் அந்தக் குழு வெவ்வேறு வகையில் விசாரணை நடத்தி தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கொள்கையைக் கண்டித்தது. இந்தியாவின் முன்முயற்சியின் பேரில் ஐ.நா.வில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கு நாடுகள் எதிராக இருந்தன. மறைமுகமாக தென்னாப்பிரிக்காவிற்கு இந்த நாடுகள் ஆயுதங்கள் உட்பட சகல பொருட்களையும் அனுப்பின. ஆனாலும் இந்தியாவின் தலைமையிலும் சோவியத் ஒன்றியத்தின் துணையுடனும் ஐ.நா.வில் உள்ள பெரும்பாலான நாடுகள் இணைந்து நின்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டன. இதன் விளைவாக அங்கு வெள்ளை நிறவெறி அரசு வீழ்ந்தது.
எகிப்திய அதிபர் நாசர் சூயஸ் கால்வாயைத் தேசியமயமாக்கியபோது அந்நாட்டின் மீது பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய வல்லரசுகள் படையெடுத்தன. இந்தியாவின் தலையீட்டின் பேரில் உலக நாடுகள் அணிதிரண்டு அதற்கெதிராகக் கண்டனம் எழுப்பியதால்தான் எகிப்தில் நாசர் ஆட்சி நிலைத்தது. வியட்நாம் பிரச்சினையிலும் அதை ஆக்கிரமித்த அமெரிக்கா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்தியா உறுதியாக நின்று உலக ஆதரவைத் திரட்டித் தந்தது.
ஆனால் அந்த இந்தியா இன்று மிகக்கொடிய சர்வதிகாரியான இராசபக்சேயைக் காப்பாற்ற பெருமுயற்சி செய்கிறது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பத்து நீதிபதிகளும் பல நாட்கள் தொடர்ந்து நடத்திய விசாரணைக்குப் பிறகு இராசபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தது உண்மை என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர். பல நாடுகளைச் சேர்ந்த இந்த பத்து நீதிபதிகளில் இந்தியாவைச் சேர்ந்த இராஜேந்தர் சச்சாரும் ஒருவராவர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ஐ.நா. மன்றம் இராசபக்சே மீது விசாரணை நடத்த குழுவை அமைத்தது.
ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து பிரச்சினையைத் திசைத்திருப்ப இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும், தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் நாடகமாடுகின்றனர். இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைக் கண்டறிய சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்ப வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதும் அக்கடித்திற்கிணங்க அவர் ஒரு தூதுவரை அனுப்ப முன்வந்திருப்பதும் இராசபக்சேயை காப்பாற்றுவதற்கே தவிர தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு அல்ல. ஐ.நா.வின் விசாரணைக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டப் பிறகு இந்தியாவின் சிறப்புத் தூதுவர் அங்குசெல்வதும் நிலைமையை அறிந்துவந்து இராசபக்சேவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையை வெளியிடச்செய்வதும்தான் சிறப்புத் துதுவர் அனுப்பப்படுவதன் நோக்கமாகும்.
சர்வதேசச் சங்கத்திற்குத் துணையாக நின்று ஆக்கிரமிப்பாளர்களையும் அநீதியாளர்களையும் அடக்கி ஒடுக்க அன்று அமெரிக்காவும், பிரிட்டனும் பிரான்சும் தவறியதன் விளைவாக சர்வதேசச் சங்கம் செத்துப்போனது.
இப்போது ஈவு இரக்கமற்ற படுகொலைகளையும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் செய்த இலங்கை அதிபர் இராசபக்சேவைக் காப்பாற்ற இந்தியாவும் சீனாவும் செய்யும் முயற்சி ஐ.நா.வுக்குச் சாவுமணி அடித்துவிடும்.
 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.