சனநாயகம் அழியும் - ஊழல் நாயகம் ஓங்கும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 04 நவம்பர் 2010 21:16
1957ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் மிகமுக்கியமான ஒரு பிரச்சினையை பெரோஸ் காந்தி எழுப்பி அது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் நேருவின் மகளான இந்திராவின் கணவரான பெரோஸ் காந்தி இப்பிரச்சினையை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் முழு கவனமும் அதன்பால் திரும்பியது.
பெருமுதலாளியான ஹெச்.டி. முந்திராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் செய்துள்ள முதலீடு பற்றியதே இப்பிரச்சினை ஆகும்.
பல கோடி ரூபாய்கள் முந்திராவின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக பெரோஸ் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எஸ்.ஏ. டாங்கே, சோசலிஸ்டு கட்சித் தலைவர் அசோக் மேத்தா, பிரபாத்கர், ராம் சுபாத் சிங், மகாவீர் தியாகி உட்பட பலர் குற்றம் சாட்டினார்கள். அவையிலும் நாடெங்கிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
1957ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைக்குறித்து ஒன்றரைமணி நேர விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய பெரோஸ் காந்தி பின்வருமாறு குற்றம்சாட்டினார்.
''1957ஆம் ஆண்டு சூன் 25ஆம் தேதி முந்திரா நிறுவனங்களில் ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய்களும் மற்றும் அதே நிறுவனங்களில் மேலும் ஒரு கோடியே 56 இலட்சம் ரூபாய்களும் ஆயுள் காப்பீட்டு கழகத்தினால் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நொடித்துப்போன நிதிநிலைமையில் முந்திராவின் நிறுவனங்கள் இருந்தபோது அவரை அதிலிருந்து மீட்பதற்காகவே ஆயுள் காப்பீட்டுக் கழகம் நிறுவனம் இவ்வளவு பெரும்தொகையை அந்நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. தனி ஒரு மனிதரை நிதி நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப் பிடித்திருக்கிறது. எனவே இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த அரசு முன்வரவேண்டும் என அவர் வற்புறுத்தினார்.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களும் விசாரணையை வலியுறுத்தினார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். இந்த அவைக்குப் பதில் கூற எனக்குள்ள பொறுப்பிலிருந்தோ கடமையிலிருந்தோ விலகிச்செல்லவோ வேறு சில அதிகாரிகள் மீது பழிபோடவோ நான் விரும்பவில்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை நிதியமைச்சுத் துறை நிர்வகிக்கவில்லை. அக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் நான் தலையிடுவது சரியானதாகவோ அல்லது நடக்கக்கூடியதோ அல்ல. பிற நிறுவனங்களின் பங்குகளை வாங்கும்போது அதற்கென அமைக்கப்பட்ட முதலீட்டுக் குழுவைக் கலந்தாலோசனை செய்துதான் வாங்கப்படுகின்றன.
ஆனாலும் இந்த அவையில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுவிட்டதின் விளைவாகவும் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடாது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் முதலீடுகளைக் கவனிக்கும் இயக்குநர் ஆகியோர்களின் நடவடிக்கைகள் குறித்து எல்லா விசயங்களும் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்கவேண்டும். அவர்கள் தவறு செய்திருந்தால் அது குறித்து முழுமையாக ஆராயப்படவேண்டும்.
என்று கூறி விசாரணைக் கமிசன் அமைக்க அவர் ஒப்புக்கொண்டார். அந்தக் கமிசனுக்குரிய அதிகாரங்கள் குறித்தும் அமைப்புக் குறித்தும் அரசு முடிவெடுக்கும் என்றார்.
அதற்கிணங்க 1958ஆம் ஆண்டு சனவரி 17ஆம் தேதி நீதியரசர் எம்.சி. சக்ளா தலைமையில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. அதாவது நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதம் நடந்து முடிந்த 30 நாட்களில் விசாரணைக் கமிசனை பிரதமர் நேரு அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கும் அமைச்சராக இருந்த டி.டி.கே. அவருக்கு மிக நெருக்கமானவர். குற்றம் சாட்டிய பெரோஸ்காந்தி அவரது சொந்த மருமகன். தனது மாமானர் தலைமையில் இயங்கும் அரசுக்கு இதனால் பெரும் தலைக்குனிவு ஏற்படும் என பெரோஸ் காந்தி நினைத்து அமைதியாக இருக்கவில்லை. ஊழலை யார் செய்தாலும் அதை அம்பலப்படுத்தி அதைச் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என அவர் உறுதி பூண்டிருந்தார்.
1958ஆம் ஆண்டு சனவரி 20ஆம் தேதியே அதாவது அமைக்கப்பட்ட 3 நாட்களிலேயே சக்ளா கமிசன் விசாரணையைத் தொடங்கிற்று. 1958ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி விசாரணையை முடித்து பிப்ரவரி 10ஆம் தேதி சக்ளா கமிசன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.
முந்திரா பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 30 நாட்களில் விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டு அடுத்த 20 நாட்களில் முழுவிசாரணையும் முடித்து அரசிடம் அறிக்கையை அளிக்கப்பட்டது.
விசாரணைக் கமிஷனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய குறிப்புகள்:
1. முந்திரா நிறுவனம் தன்னுடைய பங்குகளை எப்படியாவது விற்கவேண்டும் என்பதில் காட்டிய ஆர்வத்தைவிட அதை வாங்கியவர்கள் மிகுந்த அவசரம் காட்டியுள்ளனர்.
2. சந்தையில் நற்பெயரில்லாத முந்திராவுடன் எத்தகைய முறையானப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துகொள்ளாமல் இந்தப் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவை சம்பந்தமான ஆவணங்களும் சரிவரப் பரிசீலனை செய்யப்படவில்லை.
3. இந்த நிறுவனங்களின் வரவு-செலவு கணக்கு அறிக்கைகளும் இந்தப் பேரத்தில் சரிபார்க்கப்படவில்லை.
4. பலவேறு போலியான பங்கு ஆவணங்கள்
குறித்த வழக்குகளில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையும், பல வங்கிகளை மோசடி செய்துள்ளார் என்பதையும் கவனிக்காமல் இந்தப் பண பரிமாற்றம் நடந்துள்ளது.
5. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டுக் குழுவின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினைக் கொண்டுசெல்லப்படவேயில்லை.
6. நிதித்துறைச் செயலாளராக இருந்த ஹெச்.எம். படேல் அவர்களின் அறிவுரையின் பேரிலேயே முந்திரா பங்குகள் வாங்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த விவரங்களை நிதியமைச்சர் அறியாமல் இருக்க முடியாது. தனது கீழ்ப்பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு அமைச்சர் முழுமையான பொறுப்பை ஏற்றுத் தீரவேண்டும். தனது விருப்பத்திற்கும் தான் கூறியதற்கும் மாறாக அதிகாரிகள் நடந்துகொண்டதாக அவர் ஒருபோதும் கூறமுடியாது.'' என விசாரணைக் கமிசன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே பிப்ரவரி 5ஆம் தேதியன்றே நிதியமைச்சர் டி.டி.கே. தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பிரதமருக்கு அவர் அனுப்பிய விலகல் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது முக்கியமானதாகும்.
'நிதித்துறைச் செயலாளர் மேற்கொண்ட
நடவடிக்கை க்கு அமைச்சர் என்ற முறையில் நான் பொறுப்பாளி என்பது சரியானதாகும். ஏன் என்றால் நான் பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் பதில் கூற வேண்டிய பொறுப்பில் உள்ளவன். இந்தப் பிரச்சினையின் விளைவாக இந்தியாவிலும் உலகத்திலும் உருவாகியுள்ள பொதுக்கருத்தும் அதையொட்டிய பிரச்சாரங்களும் நிதியமைச்சராக நான் தொடர்ந்து செயல்படுவதில் பல நெருக்கடிகளை ஏற்படுத்திவிட்டன. இதன் காரணமாக என்னை உடனடியாக விடுவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் அதே நாளில் பிரதமர் நேரு அவர்கள் டி.டி.கே.க்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு யார் பொறுப்பாளியாக இருந்தாலும் நமது நாடாளுமன்ற மரபின் அடிப்படையில் அமைச்சர்தான் முழுபொறுப்பையும் ஏற்கவேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச்சரியானது. மற்றவர்கள் என்னசெய்கிறார்கள் என்பதைப் பற்றி அமைச்சர் எதுவும் அறிந்திருக்காவிட்டாலும் மற்றவர்களின் நடவடிக்கைகளுக்கு நேரடிப் பொறுப்பாளியாக இல்லாவிட்டாலும் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுத்தீரவேண்டிய நிலை உள்ளது. நடைபெற்ற முழுமையும் எனக்கு வேதனை தருகிறது உங்களுக்கும் அவ்விதமே இருக்கும் என நம்புகிறேன். நாம் மிகமுக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் நல்ல மரபுகளை பின்பற்றியே தீரவேண்டும். சில நேரங்களில் அதனால் அப்பாவிகள் துன்பப்பட நேரிடுவது தவிர்க்கமுடியாததாகிறது. இந்தப் பிரச்சினையில் உங்களுடைய பங்கு என்பது மிகமிகச் சிறியது என்பதில் எனக்கு எள்ளவும் அய்யமில்லை என்று எழுதிவிட்டு அவருடைய பதவி விலகலை ஏற்கும்படி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார்.
உன்னதமான சனநாயக மரபுகளை நிலைநாட்டுவதில் பிரதமராக இருந்த நேரு அவர்களும் நிதியமைச்சராக இருந்த டி.டி.கே. அவர்களும் உறுதியாக இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஆனால் 53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய இந்தியாவில் நடைபெறுவதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.
தாங்கள் நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் துச்சமாக மதிக்கப்படுவதைக் காண நல்லவேளையாக அத்தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை.
2009ஆம் ஆண்டில் 2ஆம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடு செய்வதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டின. நாடெங்கும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதுவரை இந்தியாவில் ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடியே ரூபாய்களுக்கு ஊழல் நடைபெற்றதே இல்லை. இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களில் இதுதான் மிகமிகப்பெரிய ஊழலாகும். மத்திய அரசின் ஓராண்டுக்கான நிதி வருவாயில் மூன்றில் ஒருபங்கிற்கு இது சமமானதாகும்.
ஜி2 எனப்படும் 2ஆம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் பிரதமரின் அலுவலகம், சட்ட அமைச்சகம் ஆகியவை தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு அமைச்சர் அ.இராசா தொலைத்தொடர்புத் துறையில் அனுபவம் இல்லாத புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த அலைவரிசைகளை அளிப்பதில் ஏலமுறையைப் பின்பற்றாமல் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற முறையைப் பின்பற்றி 122 நிறுவனங்களுக்கு மொத்தம் 9013 கோடி ரூபாய்களுக்கு இதற்கான அனுமதிகளை வழங்கினார். இவ்வாறு அனுமதிபெற்ற பல நிறுவனங்கள் மனை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவை என்றும் அலைவரிசை ஒதுக்கீட்டை மிகமலிவான தொகைக்குப் பெற்ற இந்த நிறுவனங்கள். அடுத்த ஒரு சில மாதங்களுக்குள்ளாக அனுபவம் வாய்ந்த தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அவற்றைப் பலமடங்கு அதிக விலையில் விற்று பலஆயிரம் கோடி அளவுக்கு ஆதாயம் பெற்றன என்பது குற்றச்சாட்டாகும். இதனால் அரசுக்கு வரவேண்டிய ஒரு இலட்சத்து 76 ஆயிரம் கோடிரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமைக் கணக்குத்துறை ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக் குறித்து உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.யை விசாரிக்குமாறு ஆணைப்பிறப்பித்தது. ஓராண்டுக் கழித்த பிறகும்கூட எந்த உண்மையும் வெளிவரவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றம் பகிரங்கமாக 'இந்த விசாரணையில் இதுவரை சி.பி.ஐ. ஒன்றுமே செய்யவில்லை. விசயம் மிகக்கடுமையானது. குற்றச்சாட்டிற்கு ஆளான அமைச்சரோ இன்றைக்கும் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார். இதுதான் அரசாங்கம் செயல்படும் அழகா? ஓராண்டு காலமாக நீங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உங்களைத் தடுப்பது யார்? என மிகக்கடுமையாகச் சாடி நவம்பர் 15ஆம் தேதியன்று விரிவான விசாரணை நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
இவ்வளவும் அப்பட்டமாக வெளியான பிறகும் அமைச்சர் இராசா தானாக முன்வந்து பதவி விலகவில்லை. பிரதமர் மன்மோகன்சிங்கும் விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகியிருக்கும்படி அவருக்கு ஆணையிடவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக்குற்றச்சாட்டை எழுப்பியவுடனே பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக்கட்சிக்குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரேயானால் உச்சநீதிமன்றம் தலையிட்டு அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யவேண்டிய அவசியமே இருந்திருக்காது. இந்தியா சுதந்திரம் பெற்றப்பிறகு மிகப்பெரிய ஊழல் நடப்பதற்கும் அதை மறைப்பதற்கும் காரணமானவர்களை மூடிமறைக்க துணைநின்ற பிரதமர் என்ற பழிச்சொல்லுக்கு மன்மோகன்சிங் ஆளாகியிருக்கிறார்.
இராசா சார்ந்திருக்கிற தி.மு.க.வின் தலைவரான முதல்வர் மு. கருணாநிதி ''இராசா ஒரு தலித் எனவேதான் அனைவரும் அவர் மீது பாய்கிறார்கள்'' எனக்கூறி ஊழலை மறைக்க சாதிச் சாயத்தைப் பூசுகிறார்.
முந்திரா ஊழலைவிட ஒரு இலட்சம் கோடி மடங்கு அதிகமாகச் செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழலில் உண்மையைக் கண்டுபிடிக்க ஓராண்டு காலமாக சி.பி.ஐ.னால் முடியவில்லை என்பதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. இந்த ஊழலிருந்து அமைச்சர் இராசாவைக் காப்பாற்ற முயலும் பெரும் தலைகள் எவை எவை? இந்தத் தலைகள் இந்தத் ஊழலினால் நிச்சயமாக ஆதாயம் அடைந்த தலைகளாகத்தான் இருக்கமுடியும் எனவே இந்த ஊழலுக்குப் பின்னணியில் உள்ள அந்தத் தலைகளையும் அம்பலப்படுத்தி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டிய கடமை சி.பி.ஐ.க்கும் உள்ளது. அதை அது செய்யத்தவறினால் உச்சநீதிமன்றம் நேரடியான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்
தான் தவறு செய்யாமல் இருந்தும் தனக்குக் கீழிருந்த அதிகாரிகள் செய்த தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு சக்ளா கமிசனின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே பதவி விலகினார் டி.டி.கே. ஆனால் இன்று மத்திய தலைமைக் கணக்குத்துறை ஆடிட்டர் ஜெனரல் குற்றம் சாட்டிய பிறகும், உச்சநீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்தப் பின்னாலும் பதவி விலக மறுக்கிறார் அமைச்சர் இராசா. பிரதமருக்குத் தெரியாமல் எதுவும் செய்யவில்லை எனக்கூறுகிறார் அப்போதும் பிரதமர் ஊமைச்சாமியாராகக் காட்சி தருகிறார். சி.பி.ஐ. தடுமாறுகிறது. அதற்குக் காரணம் அவருக்குப் பின்னணியில் உள்ள பலம் வாய்ந்த ஊழல் சக்திகளே என்பது வெள்ளிடைமலை.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.