இலவசங்கள் என்னும் இழிவும் - கொள்ளையும்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 30 நவம்பர் 2010 21:24
தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.
வேலையில்லாத் திண்டாட்டத்திலும் அறியாமையிலும் இந்தியா உலகத்தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வருமானம் பெறுகின்றன.
சப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10450 டாலர், தைவானில் 8500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மக்களின் வறுமையையும் அறியாமையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுயசார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைகளாகும். கல்வி, மருத்துவம் போன்றத் துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்றவேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கு ஏற்பவும் பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அரசோ இலவசம் என்ற பெயரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது.
இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங்களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன? என்பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.
கல்வி
காமராசர் ஆட்சிக் காலத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் இப்போது குற்ற பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்திற்குட்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கிராமப்புற பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறையும், பெரும்பாலான கல்லூரிகளில் முதல்வர்கள் பற்றாக்குறையும் உள்ளன.
பிறமாநிலங்களில் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்திய குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.
400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்புகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.
புற்றீசல் போல தனியார் பள்ளிகளும், பொறியியல் மற்றும் கல்லூரிகளும் பெருகக் காரணம் என்ன? குறிப்பிட்ட கையூட்டு கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த இரகசியமாகும். இந்தப் பள்ளிகளும், கல்லூரிகளும் கல்வியை வணிகமாக்கிக் கொள்ளையடிக்கிறார்கள். இதன் விளைவாக மத்திய அரசினால் அங்கீகாரம் நீக்கப்பட்ட 44 பல்கலைக் கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும்.
போதுமான ஆசிரியர்களும், கட்டமைப்புகளும் இல்லாமல், மாணவர்களின் கல்வி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்சினைக் குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.
விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்
1972ஆம் ஆண்டில் விவசாயிகளின் போராட்டத்தை மிகக்கடுமையான முறையில் கருணாநிதி அரசு ஒடுக்கியது. பின்னர் 1990ஆம் ஆண்டில் மீண்டும் பதவிக்கு வந்தவுடன் விவசாயிகளே கேட்காத சலுகையான இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உட்பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின்திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டுகளுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவதுதான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதுதாகும். ஆனால் ஒரு நாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 இலட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப்போவதாகவும் இந்த ஆண்டில் 2 இலட்சம் மின் மோட்டார்கள் வழங்கப்படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.
இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன் அவ்வளவுக்கும் மின்இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களை கொடுப்பது ஏமாற்றுவேலையாகும்.
மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிசனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இதை பகிர்ந்தளிக்கவேண்டுமென்று பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.
இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்
தமிழ்நாட்டில் அரசு ஒரு கோடியே 40 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகளை இலவசமாக வழங்கியுள்ளது. இவ்வளவுப் பெருந்தொகையான தொலைக்காட்சிப்பெட்டிகள் வாங்கப்பட்டதில் பெறப்பட்டக் கமிசன் எவ்வளவு?
தொலைக்காட்சிப் பெட்டியை கொடுத்தால் மட்டும் பெறுபவர்களுக்குப் பயனில்லை. அவர்கள் அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பியவற்றைப் பார்க்க முடியும். அரசுகேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அரசு நிறுவனத்தைச் செயல்படவிடாமல் முடக்கிவிட்டார்கள்.
ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் கட்டியாகவேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, இராயல் கேபிள் நிறுவனங்களுக்கு போகிறது. மக்கள் வரிப்பணத்தில் ரூ.750 கோடிக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவசமாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைகிறது முதலமைச்சரின் குடும்பமாகும். இதைவிடப் பன்படங்கு அதிகமான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது என்பது வேறு.
இலவச மருத்துவக் காப்பீடு
தமிழக அரசின் இந்தத் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூ.501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரிகளோடு இணைந்த சிறந்த மருத்துவமனைகளாகும். ஆனால் தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இந்த தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுப்பதின் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளிலிருந்து அது கிடைக்காது.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்தத் திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- ஊதியம் விகிதம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதியம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். ஆனால் விவசாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைக்காட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழைகளுக்கு ரூ.60 முதல் 80 வரை கொடுக்கப்படுகிறது. மீதம் ரூபாய் 40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுவது மட்டுமல்ல. விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.
மேற்கண்டவைகளைத் தவிர வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் விவசாயிகளுக்கு பயனளிக்காத திட்டமாகும். மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவப்படும் என அரசு அறிவித்திருப்பதற்கும் நடைமுறைக்கும் தொடர்பில்லை. ஏனெனில் இத்திட்டம் குறுவட்டம் அளவில் மட்டுமே செயற்படுத்தப்படுகிறது. கிராம அளவில் செயல்படுத்தப்பட்டால்தான் விவசாயிக்கு நட்டஈடு கிடைக்கும்.
திருமணமாகாத இளம் பெண்களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப்பட்ட சுமங்கலித் திட்டத்தின்படி தொழிற்சாலைகளில் 3 ஆண்டுகள் இளம் பெண்கள் தொடர்ந்து வேலை செய்தால் முடிவில் அவர்களுக்குக் கணிசமானத் தொகை கிடைக்கும் அதன்மூலம் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். என அரசு கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இத்திட்டம் சரிவரச் செயல்படுத்தப்படுவதில்லை. இதைப்போல கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், குடிசைகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் போன்ற பல திட்டங்கள் குறைபாடுகளுடனும், உரிய நபர்களுக்கு உதவும் வகையில் இல்லாமலும் அமைந்து ஊழலுக்கும் சீர்கேட்டிற்கும் வழிவகுக்கின்றன.
இந்தியாவில் விரைவாக வளர்ச்சிப் பெற்றுவரும் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்தி தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. ஆட்சியினர் இலவசங்களை வாரி வழங்கிவருவது பெரும் முரண்பாடு அல்லவா? விரைவாக வளர்ச்சிப்பெற்று வரும் மாநிலம் என்று சொன்னால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துதானே வந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக?
இலவசத் திட்டங்களின் விளைவாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ணவேண்டும் என்கிற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.
தொலைநோக்குத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அதனடிப்படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாகவும் கடமையாகவும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடும். மக்களின் வளர்ச்சிக்காக அரசுத் திட்டங்கள் அமையவேண்டுமே தவிர, அரசைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அமையக்கூடாது. மக்களின் நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய்கிற வகையில் திட்டங்கள் தீட்டப்படுவது இல்லை. மக்களை எப்போதும் வறுமைக்கோட்டிற்கு கீழேயே வைத்திருந்து அவ்வப்போது வாய்க்கரிசி போடுவது போல இலவசங்களை அளிப்பதன் மூலமே மட்டுமே தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று தி.மு.க. அரசு கருதுகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறைவேற்றினால் அவர்கள் சுயசார்பு உள்ளவர்களாக மாறி சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என அரசு கருதுகிறது. விழிப்புணர்வு மிக்க மக்கள் எங்களுக்கு இலவசமே தேவையில்லை எனத் தன்மானத்துடன் கூறிவிடுவார்கள் என அரசு அஞ்சுகிறது.
எதற்கெடுத்தாலும் தன்மானம் பற்றிப் பேசி வருகிற தமிழக முதலமைச்சர் மக்களின் தன்மானம் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. பழைய கால மன்னாதி மன்னனாக தன்னைக் கருதிக்கொண்டு மக்களுக்கு இலவசங்களை வாரிக்கொடுப்பதின் மூலம் அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளமுடியும் என நம்புகிறார்.
இலவசம் என்ற பெயரில் வகுக்கப்படும் திட்டங்களுக்கு பின்னணியில் ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் இரகசிய பரிமாற்றங்களின் விளைவாக தரமற்றப் பொருட்களை உற்பத்திச் செய்து தனியார் நிறுவனங்கள் மக்கள் தலையில் கட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக தொலைக்காட்சிப்பெட்டி, மிதிவண்டி, கேஸ் அடுப்பு, வேட்டி, சேலை போன்றவை என்ன தரத்தில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.
இலவசமாகப் பெறும் பொருட்கள் மனித மாண்பை சீர்குலைக்கின்றன. தங்களுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும் சொந்தக் காலில் நிற்கவும் விரும்புவர்கள்தான் தங்களின் தன்மானத்தை காப்பாற்றிக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் தன்மானத்தை மட்டுமல்ல அடிப்படை மாண்பையே இழந்து விடுகிறார்கள். இலவசத்தால் மக்களுக்கு இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால ஆதாயங்கள் கிடைக்கின்றன.
ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலேயேப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.