"கம்யூனிஸ்டுகள் வன்முறை அரசியல் அறைகூவலுக்கு துணைபோகலாமா? கம்யூனிஸ்டுகள் வைத்த கொள்ளி பலமாநிலங்களில் மாவோயிஸ்டு தாக்குதல்களாக பரவுகிறது'' என முதலமைச்சர் கருணாநிதி 3-9-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் மிகக்கடுமையாகச் சாடியிருக்கிறார். தொடங்கிய காலத்திலிருந்து வன்முறை அரசியலிலேயே ஊறித்திளைத்த கட்சியான தி.மு.க.வின் தலைவராக இருந்துகொண்டு கருணாநிதி கம்யூனிஸ்டுகளை வன்முறையாளர்கள் எனக் குற்றம் சாட்டுவது வேடிக்கையானது.
1950களில் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த தூத்துக்குடி கே.வி.கே. சாமி அவர்களை தி.மு.க.வைச் சேர்ந்த சிலரே படுகொலை செய்தனர். அன்று தொடங்கிய தி.மு.க.வின் உட்கட்சி வன்முறை என்பது தொடர்கதையாக நீடிக்கிறதே தவிர ஒரு போதும் நிற்கவில்லை. நிறுத்துவதற்கும் அக்கட்சித் தலைவர்கள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. 1961ல் தி.மு.க.வில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது வேலூரில் கூடிய பொதுக்குழுவில் அவைத்தலைவரான ஈ.வெ.கி.சம்பத் பகிரங்கமாகத் தாக்கப்பட்டார். திருச்சியில் அதைக் கண்டித்துக் கூட்டத்தில் பேசிய கவியரசர் கண்ண தாசன் மேடையிலேயே தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலகிய நேரத்தில் பூலாவாரி சுகுமாரனில் தொடங்கி 20க்கும் மேற் பட்ட எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் தி.மு.க. குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அதைப்போல தி.மு.க.விலிருந்து வைகோ விலகிய நேரத்திலும் அவரது ஆதரவாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். திமு.க. தலைவர்களில் ஒருவரான ஏ.வி.பி. ஆசைத்தம்பி இறந்தபோது அவர் உடலுக்கு மலர் வளையம் வைக்க வந்த சட்டமன்ற மேலவைத் துணைத் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் தெருவில் தி.மு.க.வினரால் ஓடஓட விரட்டியடிக்கப்பட்டு தாக்கப் பட்ட அநாகரிகம் நடந்தது. ஏன் எனில் அப்போது ம.பொ.சி. எம்.ஜி.ஆருடன் இருந்தார். தி.மு.க. அமைச்சராகவும் சிவகெங்கை மாவட்டச் செயலாளராகவும் இருந்த தா. கிருஷ்ணன் மதுரையில் முதலமைச்சரின் மகன் அழகிரியின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் தினகரன் அலுவலகத்தைத் தாக்கி மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்தியவர்கள் தி.மு.க. குண்டர்கள் அல்லவா? உட்கட்சியில் எப்போதும் எதிர் கருத்தை தி.மு.க. தலைமை அனுமதித்ததே இல்லை. தி.மு.க. சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி அல்ல. கருத்துக்குக் கருத்தை மாற்றாக முன்வைத்து அரசியல் நடத்தி அதற்குப் பழக்க மில்லை. தி.மு.க.வை விமர்சித்த பல பத்திரிகை அலுவலங்ககள் தி.மு.க. குண்டர்களால் தாக்கப்பட்டிருக்கின்றன. செய்தியாளர்கள் பலரும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கருணாநிதியை அரசியல் ரீதியாக விமர்சித்த பழ. கருப்பையாவை வீடு புகுந்து தாக்கினர். அந்தப் பட்டியலை விவரித்தால் நீளும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கம்யூனிஸ்டு தலைவரான தா.பாண்டியன் அவர்களின் காரை யும், இயக்குநர் சீமானின் காரையும் கொளுத்திய கயவர்கள் யார்? இயக்குநர் இமயம் பாரதிராசாவின் அலுவலகத் தைச் சூறையாடியது யார்? மேலேகண்ட அட்டூழியங்கள் நடந்து பல மாதங்கள் ஆன போதிலும் யாரையும் இதுவரை கைது செய்யாமல் மறைத்து வருவது கருணாநிதி அல்லவா? இவர்களின் ஃபாசிச வெறிக்கு உச்சக்கட்டமான நிகழ்ச்சி என்பது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியைப் படுகொலை செய்ய முயன்றதாகும். 1978ஆம் ஆண்டில் மதுரை வந்த இந்திராகாந்திக்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. நடத்தியது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் வரும்போது எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க கருப்புக்கொடி காட்டுவது மரபு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவரான இந்திரா காந்தி வந்தபோது அவருக்கு தி.மு.க. மரபு மீறிய எதிர்ப்பைக் காட்டியது. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் இந்திரா காந்தி வந்த காரைச் சூழ்ந்து நின்று கற்கள், சோடாபாட்டில், இரும்புக் கம்பிகள், கம்புகள் போன்றவற்றால் தி.மு.க. குண்டர்கள் தாக்கினார்கள். நல்லவேளையாக இந்திராவின் அருகே இருந்து அவரைக் காப்பாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அடிகளை நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் இந்திராகாந்தி மதுரை நகர வீதிகளிலேயே செத்து மடிந்திருப்பார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் இந்திரா காந்தியுடன் கூட்டுச் சேர்ந்து நேருவின் மகளே வருக நிலை யான ஆட்சி தருக என முழங்கியவர் கருணாநிதி என்பதை தமிழகம் அறியும். தி.மு.க. ஒரு கடைந்தெடுத்த ஃபாசிச கட்சி, வன்முறை வெறியைத் தொண்டர்களுக்கு ஊட்டி எதிர்க்கட்சி யினருக்கு எதிராக ஏவுவதும், சொந்தக் கட்சியில் எதிர்ப்புத் தெரிவிப்பவரைத் தாக்குவதும், கொலைசெய்வதும் தி.மு.க. வினருக்கே கைவந்த கலையாகும். இட்லரின் நாஜிக் கட்சியினர் இதைத்தான் ஜெர்மனியில் செய்தார்கள். செர்மானிய நாடாளுமன்றத்திற்குத் தாங்களே தீவைத்துவிட்டு கம்யூனிஸ்டுகள் மீது பழி சுமத்தி வேட்டையாடினார்கள். இட்லர் காட்டிய வழியை கருணா நிதியின் தலைமையில் தி.மு.க.வினர் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். இந்த அழகில் கம்யூனிஸ்டுகளை வன்முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் எனக் குற்றம் சாட்ட கருணாநிதிக்கு அருகதை கிடையாது. சுதந்திரப் போராட்டக் காலத்திலும், நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் எண்ணற்ற தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள். மக்களுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அரசின் அடக்குமுறை களை மட்டுமல்ல நிலப்பிரபுக்கள் பெரும் தொழிலதிபர்கள் ஆகியோரின் சுரண்டல் களையும் கொள்ளைகளையும் எதிர்த்துப் போராடுவதில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த கம்யூனிஸ்டு மறவர்களின் வரலாறு மெய்சிலிர்க்க வைப்பதாகும். சேலம் சிறையில் அதிகாரிகளின் துப்பாக்கிகளுக்கு எதிராக நெஞ்சு நிமிர்ந்து நின்று 22 கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிரை ஈந்தனர். ஆனால் பாளையங்கோட்டை சிறையில் சில மாதங்கள் மட்டுமே பாதுகாப்புக் கைதியாக இருந்தபோது பாம்பும், தேளும் வாசம் செய்த இடத்தில் என்னை அடைத்து வைத்தார்கள் என்று புலம்பியே- அதையே பெரும் தியாகமாகக் காட்டிவரும் கருணாநிதிக்கு சிறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகி உயிர்த் தியாகம் செய்த கம்யூனிஸ்டுகளைக் குற்றம் சாட்டும் தகுதி கிடையாது. கம்யூனிஸ்டுகள் வீரத்தையே ஆரமாகவும், தியாகத்தையே அணியாகவும் கொண்ட பாரம்பரியம் மிக்கவர்கள். அவர்களைக் குறைகூறுவதற்கு முன் கருணாநிதி தன்னை கண்ணாடி முன் பார்த்துக்கொள்வது நல்லது. |