காந்தியவாதியான அன்னா ஹசாரே மேற்கொண்ட 98 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் சிறு பொறியாகக் கிளம்பி பெரு நெருப்பாக வளர்ந்து இமயம் முதல் குமரி வரை பற்றி எரிந்தது. எதற்காக அவர் போராடினார்? கடுமையான ஊழல் எதிர்ப்பு விதிமுறைகள் அடங்கிய லோக்பால் சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இச்சட்ட விதிமுறைகளை உருவாக்க அரசு மற்றும், மக்கள் தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் போராடினார்.
ஊழலை ஓழிக்க வேண்டும் என்பதற்காக அன்னா ஹசாரே மேற்கொண்ட இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடெங்கும் சகல தரப்பு மக்களும் கிளர்ந்தெழுந்தது இது வரை வரலாறு காணாத ஒன்றாகும். இதன் விளைவாக மத்திய அரசு பணிந்தது லோக்பால் சட்டம் கொண்டு வர முடிவு செய்தது இந்தச் சட்டத்தைக் கொண்டு வராமலும் போதுமான அதிகாரங்களை அதற்கு அளிக்காமலும் ஏமாற்று நாடகம் நடத்தி வந்த மத்திய அரசை தனது அறப்போராட்டத்தின் விளைவாக அடி பணிய வைத்த அன்னா ஹசாரே நாட்டு மக்களின் ஒட்டுமொத்த பாராட்டுதலுக்கும் உரியவராவார். அவரைப் பாராட்டுவதோடு நின்றுவிடாமல் உறுதியாக அவரைப் பின்பற்றவும் மக்கள் உறுதி பூண வேண்டும். அதன் மூலம் மட்டுமே நாடெங்கும் பரவிக்கிடக்கின்ற ஊழல் கள்ளிச் செடிகளை வெட்டி எறிய முடியும். அவ்வாறு நாம் செய்வதற்குரிய வழியை அன்னா ஹசாரே தனது போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளார். இலஞ்சத்தையும் ஊழலையும் அரசாங்கத்தின் நெறி முறையாக்கி அதை இந்தியா முழுமைக்குமே வழிகாட்டியாகக் கொள்ளும் வகையில் இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழலைப் புரிந்து தமிழகத்தின் பெருமையைச் சீரழித்த விதம் கண்டு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இழந்த பெருமையை மீண்டும் நிலைநாட்டவும் ஊழலை ஒழித்துக்கட்டவும் அன்னா ஹசாரே நமக்கு வழிகாட்டி இருக்கிறார். தமிழகத்தில் அதிகார பலத்தின் உதவியினால் ஊழலும், லஞ்சமும், தலைவிரித்தாடுகின்றன. இதன் உச்சக்கட்டமாக சனநாயகத்தின் குரல் வளையையே நெறிக்கும் முயற்சிகள் பகிரங்கமாக நடைபெறுகின்றன. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேசி இதைச் சுட்டிக்காட்டிப் பகிரங்கமாக பின் வருமாறு சாடி இருக்கிறார். “தமிழ்நாட்டில் பெருமளவு முறை கேடுகள் நடக்கும்போது தேர்தல் ஆணையம் கண்ணை முடிக்கொண்டிருக்க முடியுமா”? என அவர் எழுப்பி இருக்கும் கேள்வி எல்லோரின் உள்ளங்களையும் சுடுகிறது. ஆனால் சுடப்படவேண்டியவர்களுக்கு அதன் சூடு உரைக்கவே இல்லை. இந்தக் கேள்வியை அவர் எழுப்பியதோடு நிற்கவில்லை. “தேர்தல் ஆணையம் வகுத்துள்ளக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது தமிழகத்தில் மட்டுமே பெரும் சவாலாக உள்ளது” என்று கூறி இருக்கிறார். அரசு நிர்வாகத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடையாக இருப்பதால் ஆளும் கட்சி கோபம் அடைந்துள்ளது என சுட்டிக்காட்டவும் அவர் தயங்கவில்லை. மேலும் அவர் தனது கூற்றுகளுக்கு ஆதாரமாக பின் கண்டவற்றைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்: 1) தேர்தல் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலங்களில் முறை கேடாகக் கொண்டு செல்லப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டத் தொகை ரூ 53 கோடியாகும், ஆனால் இதில் தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டத் தொகை ரூ 42 கோடியாகும் (10.04.11 வரை) 2) தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக தமிழகத்தில் 59,294 வழக்குகள் இன்று வரைப் பதிவாகி உள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையாளர் வெளியிட்டுள்ள இந்த விவரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கின்றன. கடலில் மூழ்கிக் கிடக்கும் பனிப்பாறையின் சிறு முனை மட்டுமே வெளியே தெரியும், அதைப் போல முறை கேடாக பிடிபட்ட பணமும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் சிறு பகுதியே ஆகும். பிடிபடாத பணமும், பதிவு செய்யப்படாத வழக்குகளும் பல மடங்கு அதிகமானவை ஆகும். இந்தியா விடுதலை பெற்ற பிறகு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இத்தகைய பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதே இல்லை. அங்குமிங்குமாக தனிப்பட்ட சில வேட்பாளர்கள் சிறிய அளவில் முறை கேடுகளைச் செய்திருக்கலாம், ஆனால் தேர்தல் ஆணையமே திடுக்கிட்டுச் செயல் இழந்து நிற்கும் வகையில் திருமங்கலம் திருவிளையாடல்கள் நடைபெற்றதில்லை. தேர்தல் ஆணையத்தின் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளைச் சீர் குலைக்கவும், முடக்கவும் இடைவிடாத முயற்சிகளை ஆளும் கட்சியான தி.மு.க மேற்கொண்டிருக்கிறது. நேர்மையான தேர்தல் அதிகாரிகள் மீது பொய்யான புகார்களையும் வழக்குகளையும் முதலமைச்சரின் மகனும் மத்திய அமைச்சருமான அழகிரி தொடுக்கிறார். அவரது அடியாட்கள் அதிகாரிகளைத் தாக்குகிறார்கள் பொய்யான வாக்குமூலங்கள் கொடுக்கும்படி அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். நல்ல வேளையாக உயர் நீதிமன்றம் தலையிட்டுத் தேர்தல் அதிகாரிகளைப் பாதுகாக்க முன்வந்தது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தனது கட்சிக்காரர்கள் கையாளும் முறை கேடுகளுக்கு எதிராக இருப்பதால் அவற்றை அவசரகால நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு, அதற்கு எதிராகத் தனது கட்சிக்காரர்களைத் தூண்டிவிடும் வகையில் முதலமைச்சர் கருணாநிதியே பேசி வருகிறார். நேர்மையாகச் செயல்படும் காவல் துறை அதிகாரிகளைத் மறைமுகமாக கருணாநிதி மிரட்டுகிறார். தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் டி.ஜி.பி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டதாக வரலாறே கிடையாது. கூச்சநாச்சமின்றி தங்களது முறைகேடுகளுக்கு உயர் அதிகாரிகளையும் பயன்படுத்த தி.மு.க தயங்கவில்லை என்பதைத் தான் இது மெய்ப்பிக்கிறது. தனது அரசில் பணிபுரியும் அதிகாரிகள் தான் தேர்தல் காலத்தில் தேர்தல் அதிகாரிகளாகவும் பணியாற்ற நேரிடுகிறது என்பதையும் அதே அதிகாரிகள் தேர்தல் முறை கேடுகளுக்கு முற்றுப் புள்ளிவைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவது ஏன் என்பதையும் முதலமைச்சர் கருணாநிதி சிந்தித்துப் பார்க்க தவறிவிட்டார். இவரது ஊழல் மலிந்த ஆட்சிக்கு எதிராக அதிகாரிகளும் மனசாட்சியோடு கிளர்ந்தெழுந்து விட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. அதிகாரிகளுக்கு மட்டும் மனசாட்சிப்படி நடக்கும் துணிவு இருந்தால் போதாது அவர்களுக்குத் துணை நின்று ஊழலையும், முறை கேடுகளையும் தடுத்து நிறுத்தவும் எதிர்த்துப் போராடவும் மக்களுக்கு உணர்வு இருக்க வேண்டும். காந்தியத் தொண்டர் அன்னா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசமெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்தது புதிய நம்பிக்கையை ஊட்டி இருக்கிறது. தமிழகத்தில் ஊழல் ஆட்சியை சனநாயக முறையில் வீழ்த்துவதற்கான வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை நல்ல முறையில் மக்கள் பயன்படுத்த வேண்டும். தேர்தல் முறைக்கேடுகளை ஆங்காங்கே மக்களே தடுக்க முன்வருவார்களானால் அதிகாரிகள் இன்னும் முனைப்போடு செயல்படுவார்கள். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முற்படுவர்களை அந்தந்த தெரு மக்களே பிடித்துக் கொடுக்க வேண்டும். தேர்தல் சாவடிகளில் முறை கேடுகளைத் தடுக்க வேண்டிய கடமையும் வாக்காளர்களுக்கு உண்டு. ஊழலின் மூலம் குவித்துள்ள கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்து குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தவும் பாசிச வன்்முறை போக்கைத் தொடர்ந்து பின்பற்றவும் முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளவர்களை முறியடித்து சனநாயகப் பயிரை அழிய விடாமல் பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் மக்களையே சார்ந்தாகும். ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல இது பரம்பரை ஆட்சியா அல்லது மக்களாட்சியா என்பதை முடிவு செய்யும் தேர்தலும் ஆகும். களத்தில் இறங்க மக்களே முன் வாருங்கள். சிறு பொறிகள் இணைந்து பெருநெருப்பாக மூண்டு ஊழல் கள்ளிக் காட்டைச் சுட்டெரிக்கட்டும். ஊழல் காட்டில் வைக்கப்பட்ட அக்னிக்குஞ்சாக மாறுவோம். |