எம்.ஜி.ஆர். கனவை நனவாக்குங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 ஜூலை 2011 18:39
"தமிழ்ப் பல்கலைக் கழகத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக இந்தப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டதோ அந்த நோக்கம் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிறைவேறவில்லை என்பதைவிட நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் நிதர்சன உண்மையாகும்'' என தினமணி 29-6-11 அன்று வெளியான செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
உலகத் தமிழறிஞர்களின் நீண்ட காலக் கனவான தமிழுக்குத் தனியானதொரு பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நனவானது. முதல் துணைவேந்தராக முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியம் அவர்கள் நியமிக்கப்பட்டு அவர் தொலைநோக்குப் பார்வையுடனும் நன்கு திட்டமிட்டும் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கான உறுதியான அடித்தளத்தை அமைத்தார். ஆனால் தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்பின்மை, திட்டங்களை நிறைவேற்றப் போதுமான நிதியின்மை போன்ற காரணங்களினால் அவர் தனது இரண்டாம் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே விலகினார். ஆனால் அவருக்குப் பின்னால் பதவியேற்றவர்கள் பலர் அவரைப் பின்பற்றி இப்பல்கலைக்கழக வளர்ச்சியில் போதுமான நாட்டம் செலுத்த முடியாத அளவிற்கு அரசியல் குறுக்கீடுகள் அதிகம் இருந்தன.
உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகமாக உருவாக வேண்டிய இப்பல்கலைக்கழகம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமாகச் சுருங்கிப்போயிற்று. இந்த நிலை அடியோடு மாற்றப்படவேண்டும். உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகமாக இது செயல்படவேண்டுமானால் முதலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். உலக நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பலரும் அங்கம் வகிக்கும் வகையில் இதன் ஆட்சிக்குழு சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும். துணைவேந்தர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பதிவாளர் போன்ற அலுவலர்கள் ஆகியோரின் தேர்விலும் நியமனத்திலும் உலகத் தமிழறிஞர்களின் கண்காணிப்பு இருக்க வேண்டும். பிறநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பதவி முதல் பேராசிரியர் பதவி வரை பொறுப்பேற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது. பலவேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களில் நடைபெற்று வரும் தமிழராய்ச்சிப் பணிகளை நெறிப்படுத்தி ஒருங்கிணைக்கும் பொறுப்பை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஏற்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசும் தமிழக அரசும் மேற் கொள்ள வேண்டும். அப்போதுதான் உலகத் தமிழர்களுக்கு உரிமையான பல்கலைக் கழகமாக இது திகழமுடியும். இப்பல்கலைக் கழகத்திற்கான நிதியினை தமிழக அரசு, இந்திய அரசு, மலேசியா-சிங்கப்பூர்-இலங்கை அரசுகள், யுனெஸ்கோ ஆகியவை அளிக்க வேண்டும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்
உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தமிழ் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் வளர்ச்சியடையச் செய்வதற்கும் தமிழுக்கென உலகளாவிய ஆராய்ச்சி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என உலகத் தமிழ் அறிஞர்கள் கண்ட கனவு 7-12-1964ல் நிறைவேறியது. தில்லியில் தனிநாயகம் அடிகள், வ.அய். சுப்ரமணியம் ஆகியோரின் முயற்சியில் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தலைமையில் நடைபெற்ற உலகத் தமிழறிஞர்களின் கூட்டத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டது.
இம்மன்றம் நிறுவப்பட்டப் பிறகு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை மலேசியா, பிரான்சு, இலங்கை, மொரீசியஸ், இந்தியாவில் சென்னை, மதுரை, தஞ்சை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடத்தியிருக்கிறது. இத்தகைய மாநாடுகளின் மூலம் தமிழாராய்ச்சி விரிவான எல்லையைத் தொட்டது. அவ்வப்போது அரசியல் குறுக்கீடுகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தமிழாய்வு வளர்ச்சிப் போக்கில் சென்றது. ஆனால் 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 16 ஆண்டுக் காலமாக இம்மாநாடுகள் நடத்தப்பெறவில்லை. உலகத் தமிழ் ஆராய்ச்சிப் பணிகள் தேக்கமடைந்தன. இது குறித்துத் தமிழக அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை. ஆனால் 18-9-09 அன்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியாளர்கள் மாநாட்டில் உரையாற்றும்போது அப்போது முதல்வராக இருந்த மு. கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவது பற்றிய திட்டத்தைத் திடீரென அறிவித்தார். இது எவ்வளவு முறைகேடானது என்பதை அவர் உணரவில்லை. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குத் தலைவரும் பிற நிர்வாகிகளும் ஆட்சிக்குழுவும் உள்ளனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்றால் அதற்கு மன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதைப்பற்றி யெல்லாம் கருணாநிதி கவலைப்படவில்லை. தன் விருப்பத்திற்கு ஏற்ப இவ்வாறு அறிவித்தார். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராக இருக்கும் ஜப்பானியத் தமிழறிஞரான நெபுரு கரோஷிமா இதற்கு உடன்படவில்லை. வெவ்வேறு வகையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டப்போதிலும் அவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தன்மதிப்பை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருந்தார். "தங்களைக் கேட்காமல் மாநாட்டை நடத்தப்போவதாக அறிவித்தது முதல் தவறு, மாநாடு நடத்துவதாக இருந்தால் குறைந்த பட்சம் 2 ஆண்டுக் கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் உலகளாவிய தமிழ் அறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க முடியும். இவற்றையெல்லாம் யோசித்துப் பாராமல் தான் நினைத்தபடியே செய்ய நினைக்கும் முதலமைச்சரின் கைப்பாவையாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் இயங்க முடியாது'' என்று உறுதிபடத் தெரிவித்தார். வேண்டுமானால் 2011ஆம் ஆண்டில் இந்த மாநாட்டைத் நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற மாநாட்டினை நடத்த வேண்டும் என்பது நமது முதலமைச்சரின் உண்மையான நோக்கமாக இருக்குமானால் அம்மன்றத்தின் தலைவர் தெரிவித்த யோசனையை ஏற்று 2011ஆம் ஆண்டில் மாநாட்டை நடத்த முன்வந்திருக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த மாநாட்டை நடத்தி முடிக்க வேண்டும் என்பது அவரது உள்நோக்கமாகும். எனவே சப்பானியத் தமிழ் அறிஞரின் யோசனையை ஏற்காமல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தையே புறக்கணித்துவிட்டு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த முற்பட்டார்.
உலகத் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி ஏறத்தாழ 50 ஆண்டுக் காலத்திற்கு மேலாக அயராத உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை புறந்தள்ளுவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் அவர் துணிந்தார். அவ்விதமே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைக் கோவையில் பெரும் ஆரவாரத்துடனும் 3000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வாரியிறைத்தும் நடத்தினார். உலக அளவில் முதன்மை பெற்ற பல தமிழ் அறிஞர்கள் மாநாட்டில் பங்குகொள்ள மறுத்துவிட்டனர். வெற்று ஆரவார மாநாடாக அம்மாநாடு நடந்து முடிந்தது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்கு இதுவரை நிரந்தரமான தலைமை அலுவலகம் எதுவும் இல்லை. எனவே உலகத் தமிழராய்ச்சி மன்றத்திற்கு நிரந்தரமான தலைமை அலுவலகம் சென்னையில் அல்லது, தமிழ்ப் பல்கலைக் கழகம் இருக்கும் தஞ்சையில் அமைக்கப்பட வேண்டும். மிக நவீனத் தொடர்பு வசதிகளுடன் கூடிய அலுவலகமும் அலுவலர்களும் இயங்க வேண்டும். தலைவர் மற்றும் நிர்வாகிகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மாறினாலும் இந்த அலுவலகம் நிரந்தரமாக ஓரிடத்தில் செயற்படுவதின் மூலம் உலகத் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை சீராகவும் செம்மையாகவும் ஒருங்கிணைக்க முடியும்.
உலகத் தமிழ்ச் சங்கத்தைச் சிதைக்கும் முயற்சி
உலகத்தின் பல நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட அமைப்பு உலகத் தமிழ்ச் சங்கமாகும்.
1981ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். அறிவித்தார். இதற்கான அரசு ஆணை 1982ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இதற்கென 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
14-4-1986 அன்று உலகத் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் எம்.ஜி.ஆர். தொடக்கி வைத்தார். அப்போது அதற்கு 10 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். சிறப்பு ஆணையராக எஸ்.டி. காசிராசன் நியமிக்கப்பட்டார்.
31-12-2002ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கப் பணியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கும் ஆணையினை அரசு வெளியிட்டது. ஆனாலும் பணிகள் சரிவர நடைபெறவில்லை.
19-3-2010 அன்று தமிழக அரசின் வரவு-செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் க. அன்பழகன் பின்வருமாறு அறிவித்தார். 1982ஆம் ஆண்டில் உலகத்தமிழ்ச் சங்கத்திற்கு என வழங்கி ஆணையிடப்பட்டுச் சமநிலைப்படுத்தப்பட்டுள்ள 14.15 ஏக்கர் நிலத்தில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் எனக் கூறினார்.
27-6-2010 அன்று கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கத்தின் வழி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.
இந்தப் பெயரும் நிலைக்கவில்லை. 21-10-2010 அன்று தமிழ் வளர்ச்சி அறநிலையங்கள் செய்தித்துறை வெளியிட்ட அரசாணையின்படி உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர் அவர்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான உலகத் தமிழ்ச் சங்கத்தை முற்றிலுமாகச் சிதைத்து அதனுடைய பெயரையும் மாற்றியிருப்பது அடாத செயலாகும்.
இரண்டாவதாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குப் போட்டியாக மற்றொரு உலகத் தமிழ் அமைப்பைத் தோற்றுவிக்கும் ஆழமான உள்நோக்கமும் இத்திட்டத்தில் அடங்கியிருக்கிறது.
தான் இழுத்த இழுப்பிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் வர மறுத்ததினால் அதற்குப் போட்டியாகத் உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவையைத் தோற்றுவித்து அதன்வழியே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைச் செயலற்றதாக்கியும், உலகத் தமிழ் போட்டி மாநாடுகளை நடத்தவுமான சீர்குலைவுத் திட்டத்திற்குக் கால்கோள் நடத்தப்பட்டுள்ளது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்
இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஒரு உறுப்பாகச் செம்மொழித் தமிழ் உயர் ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை உயர் கல்வி - மொழிகள் பிரிவின் கீழ்ச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாகச் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசால் அதற்கு ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளிக்கப்படுகிறது. ஆனால் தமிழுக்கு ரூ.12 கோடி மட்டுமே அளிக்கப்படுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு, சிலம்பு, மணிமேகலை, முத்தொள்ளாயிரம் போன்று ஐந்தாம் நூற்றாண்டு வரை எழுந்த செவ்விலக்கியங்கள் குறித்து மட்டுமே இந்த நிறுவனம் ஆய்வு நடத்தும். இது ஒரு போதும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்திற்குப் போட்டி அமைப்பாக இயங்க முடியாது. இயங்கவும் கூடாது. இரண்டிற்கும் வெவ்வேறு பணிகள் உள்ளன. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டப் பணியினை அவரவர்கள் செய்ய அனுமதிப்பதுதான் தமிழ் வளர்ச்சிக்கு உண்மையாக உதவுவது ஆகும்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அரசியல் தலையீடு இன்றிச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். தமிழ் ஆய்வுப் பணிகளில் சிறிதளவும் தொடர்பில்லாத பலரை உறுப்பினர்களாகக் கொண்டு எண்பேராயம், ஐம்பெருங்குழு போன்றவை அமைக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வைகளின் கீழ்ச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கவேண்டிய நிலை இருப்பது வருந்தத்தக்கதாகும்.
இந்நிறுவனத்திற்குக் கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இதற்கான நிதியைப் பெற்றுத் தரவேண்டிய கடமை மாநில அரசுக்குண்டு.
அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காய்களாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் போன்றவை ஆக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தமிழ் ஆய்வுப் பணிகள் சீராகவும் செவ்வனேயும் நடைபெற இந்த மூன்று அமைப்புகளின் நிருவாகத்திலும், செயல்பாடுகளிலும் புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும். இந்த அமைப்புகள் தமிழறிஞர்களின் கண்காணிப்பில் சுதந்திரமாக இயங்கவும் நிதித் தட்டுப்பாடு இன்றிச் செயல்படவும் உதவுவதற்குத் தமிழக அரசு முன்வருவதன் மூலமே தமிழறிஞர்களும், எம்.ஜி.ஆரும் கண்ட கனவை நனவாக்க முடியும்.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.