சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2012 10:53
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர்,
'விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியாபாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை!

அவர் சொல்லும் சகோதரச் சண்டையை யார் தொடங்கி வைத்தது?

1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார். எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக் குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளி யானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை. போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்.

கருணாநிதியின் அழைப்பை டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈராஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன. ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார். ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதியின் சாதனையாகும்.

1985-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர் பத்மநாபா, ஈராஸ் தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி சிங்கள ராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என முடிவுசெய்து அறிக்கையும் வெளியிட்டனர். 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திம்பு மாநாடு வரை இந்த ஒற்றுமை நீடித்தது.

திம்பு மாநாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு முன்வைத்த கோரிக்கைகளை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே, போராளி இயக்கங்களை மிரட்டி பிளவுபடுத்தத் திட்டமிட்டது. இதற்கான சதித் திட்டத்தை 'ரா’ உளவுத் துறை வகுத்தது. 'ரா’ விரித்த வலையில் முதலில் டெலோ இயக்கமும் அதற்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கமும் விழுந்தன. புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங்களுக்கு 'ரா’ உளவுத் துறை ஆயுதங்களை அளித்துத் தூண்டிவிட்டது. புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கேப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து இறுதியில் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்.

அவருக்காக சென்னையில் இரங்கல் கூட்டத்தை கருணாநிதி நடத்தினார். அதில் பேசும்படி என்னை அழைத்தபோது, 'புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கேப்டன் லிங்கத்துக்கும் சேர்த்து இரங்கல் கூட்டம் நடத்துங்கள்’ என்று நான் கூறியபோது அதைஅவர் ஏற்கவில்லை. எனவே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தேன். கருணாநிதி போன்ற ஒரு தலைவர் போராளி இயக்கங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமுகமாக்கி இருக்க வேண்டும்.

ஆனால் அவர், புலிகளுக்கு எதிராகவும் டெலோ இயக்கத்துக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டார். இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டிப் பேசுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை. ராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். புலிகளும் ஓரளவு ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால், பிற இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை 'ரா’ உளவுத்துறை கொடுத்து

நிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட ஏவிவிட்டது. 22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கையின் விளைவாக டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்கள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 'ரா’ உளவுத் துறையின் சீர்குலைப்பு வேலைகள் வெற்றி பெறவில்லை.

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., பிளாட் ஆகிய இயக்கங்களில் இருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எஃப். என்ற ஓர் அமைப்பை 'ரா’ உளவுத் துறை உருவாக்கியது. இதற்குத் தலைவராக பரந்தன்ராஜன் என்பவர் பொறுப்பேற்றார்.

இந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழீழப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும் படுகொலை செய்யவும் 'ரா’ உளவுத் துறை பயன்படுத்தியது. இதை நான் சொல்லவில்லை... அப்போது 'ரா’ உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் எழுதி உள்ளார். 'கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு உள்ள தலைமை பிரபாகரன் ஆவார். தமிழ் மக்கள் அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதது இந்தியா செய்த மாபெரும் தவறாகும். புலிகளுக்கு எதிராக போட்டிக் குழுக்களை ஊக்குவித்தது. இறுதியில் இந்திய ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்டது'' என்று அவர் சொல்லியதையும் கருணாநிதி கவனிக்க வேண்டும். இவை அவருக்குத் தெரியாதவை அல்ல.

'ரா’ உளவுத் துறையின் இந்தப் பிளவு வேலைகளை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டித்தார். சட்டமன்றப் பதிவேட்டிலும் இது பதிவாகி உள்ளது. ஆனால் இப்போது, தான் கூறியதற்கு மாறாக சகோதர யுத்தத்தினால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு புலிகளே பொறுப்பு என்ற வகையிலும் திரும்பத் திரும்பச் சொல்வது பச்சைப்பொய்!

1991-ம் ஆண்டில் இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார். பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம். ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார். மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். 'மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்’ என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புஉணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படு காயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

இதுகுறித்து, பிரபாகரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்: 'எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.''

இதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், 'மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் போலீஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக் காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந் தனர். இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான்'' என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள ராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே. அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள ராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை. யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு ராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள். ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல; மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள ராணுவத்துக்குத் தேவையான ராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன. இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள ராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார். என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.

புலிகளைக் குற்றம் சாட்டுவதற்கு அவருடைய குற்ற உணர்வே காரணம்!

- நன்றி ஜுனியர் விகடன்
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.