ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் - அணிந்துரை - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 07 டிசம்பர் 2012 11:28
ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழகமெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சதிகாரர்கள் இன்னமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
நீதி, நேர்மை, உண்மை, ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டன. ராஜீவ் கொலை வழக்குப் புலன்விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதமும், தீர்ப்பு அளிக்கப்பட்ட வரையிலும் பல உண்மைகள் ஆழக்குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் கொலை வழக்கு விசாரணையும், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை வழக்கு விசாரணையும் பகிரங்கமாகத்தான் நடத்தப்பட்டன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டபோது இரகசியமாக நடத்தப்பட்டது. அதுபற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. உண்மைக் குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்தில்தான் தொடக்கத்திலிருந்து எல்லாமே நடத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவிவிடாமல் தடுக்கும் கருவியாக ராஜீவ் கொலை வழக்கை தில்லி பயன்படுத்தியது. அதனால்தான் இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 13பேர் ஈழத் தமிழர்கள். சரிசமமான எண்ணிக்கை என்பது தற்செயலானது அல்ல. ஆழமான உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைப்பதற்காக இந்தச் சதி வகுக்கப்பட்டது. இந்த உள்நோக்கத்துடனே சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக்குழு தனது புலன்விசாரணையை நடத்தியது.
அகில இந்திய ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி அகில இந்திய செயலாளராகத் திருச்சி வேலுசாமி பதவி வகித்தார். சுப்பிரமணிய சாமி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம் உடன் பயணம் செய்பவர் வேலுசாமி ஆவார். சு.சாமியின் நம்பிக்கைக்குரிய மிகநெருங்கிய தோழராகத் திகழ்ந்தார்.
1991 மே 21ஆம் தேதி ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட நாளிலும் அதற்கு முன்பாக 2 நாட்களும் தமிழ்நாட்டில் சுப்பிரமணிய சாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நடந்து கொண்ட விதம், பேசிய பேச்சுகள் உடனிருந்த வேலுசாமியின் உள் மனத்தில் சந்தேக அலைகளை எழுப்புகின்றன. அது பற்றி விரிவாக இந்நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார். பிறகு நன்கு விசாரித்து சுப்பிரமணிய சாமிக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பதை அறிந்து கொண்ட வேலுசாமி முதலில் திடுக்கிட்டபோதிலும் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும் என முடிவு செய்து ஜெயின் கமிசன் முன் அறிக்கை அளிக்கிறார். சோனியா காந்தியைச் சந்தித்துத் தானறிந்த உண்மைகளைக் கூறுகிறார்.
தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார்.
இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார்.
சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியும்கூட புலன் விசாரணைக் குழுவினர் அவற்றைச் சட்டை செய்யாமல் புலிகளை மையமாகக் கொண்டே செயல்பட்டனர்.
உலகம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட விதத்தை நூல் நெடுகிலும் வேலுசாமி விவரிக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் யாரிடமும் விலை போகாமல் அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வேலுசாமி விடுத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை இன்னமும் கிடைத்தபாடில்லை.
அதுமட்டுமல்ல, ராஜீவ் கொலை குறித்த பல கேள்விகளுக்கும் விடை அளிக்கப்படவில்லை. அவற்றுள் சில:
1. ராஜீவ் கொலை குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அப்போதைய பிரதமர் சந்திரசேகர் ஆட்சி அமைத்தது. ராஜீவ் காந்திக்குச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா? என்பதைப்பற்றித்தான் இந்தக் கமிசன் விசாரிக்கும் என்றும் இந்தக் கொலைக்கான சதியின் பின்னணி குறித்து கமிசன் ஆராயாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரம்புக்குட்பட்டு விசாரணை நடத்திய ஜே.எஸ். வர்மா தனது அறிக்கையை 1992ஆம் ஆண்டு சூன் மாதம் மத்திய அரசிடம் அளித்தார். ஆனால் ஐந்தாண்டு காலமாக இந்தக் கமிசன் அளித்தப் பரிந்துரைகள் எதுவும் அமுலாக்கப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் பிரதமர் நரசிம்மராவ் அரசுக்கு ஏற்பட்டது. சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிசன் செய்த முக்கியமான பரிந்துரை குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் வினோத் பாண்டே உளவுத்துறைத் தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலாளர் சிரோண்மணி சர்மா பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொன்னால் இந்த நால்வரும் பதவியிலிருந்து ஓய்வுபெற்றப்பிறகே இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனடியாக அந்த நாலுபேரும் மத்திய நிர்வாக மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஓய்வுபெற்றப்பிறகு அவர்களிடம் விளக்கம் கேட்பது முறையற்றது என அது ஆணையிட்டது. இதன் மூலம் மேற்கண்ட அதிகாரிகள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார்? இந்தக் கேள்விக்கு இதுவரை விடையளிக்கப்படவில்லை.
2. ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்திருந்தார் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத். கொலை நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே யாசர் அராபத்தின் பிரதிநிதி ராஜீவைச் சந்தித்துச் சுட்டிக்காட்டி எச்சரித்தார். ஆனால் புலன் விசாரணைக்குழு யாசர் அராபத்தைச் சந்தித்து எந்த அடிப்படையில் அவர் எச்சரிக்கைச் செய்தார் என இறுதிவரை விசாரிக்கவேயில்லை. இது ஏன்?
3. ராஜீவ் கொலை பின்னணிக் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிசன் முன் ஆஜராகும்படி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி. ம.தி.மு.க. பொதுச் செலயாளர் வைகோ, கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். ஆனால், ஜெயின் கமிசன் தனது இடைக்கால அறிக்கையை அளித்தப் பிறகு இவர்களை கமிசன் அழைத்தது என்பது மட்டுமல்ல. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மட்டும் இரகசிய விசாரணையாக நடத்தப்பட்டது. ஏனெனில் இந்த நால்வரும் புலிகளின் ஆதரவாளர்கள் எனவே இவர்கள் கூறும் தகவல்கள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இரகசிய விசாரணை என்று திட்டமிட்டுச் செய்தார்கள்.
4. இந்திராகாந்தி கொலை குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தக்கர் கமிசன் தனது அறிக்கையில் இந்திரா கொலையில் அவர்களது இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. இக்கொலையில் இந்திராவின் தனி உதவியாளர் ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது. இவரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தவான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது ஏன்? இந்திராவின் அலுவலகத்தில் சாதாரண வேலையில் இருந்த ஆர்.கே. தவான், இந்திராவின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக திடீரென உயர்ந்தது எப்படி? சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த போது காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு நடைபெற்றப் பொதுத் தேர்தலில் தில்லி தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்குக் காங்கிரஸ் வேட்பாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அளவுக்கு அவர் செல்வாக்குப் பெற்றதற்கு யார் காரணம்? சோனியாவின் தயவினால்தான் இவருக்குப் பெரும் பதவிகள் கிடைத்தன. தனது மாமியாரின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு சோனியா உதவி செய்ததின் மர்மம் என்ன?
இந்திராவின் இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன என தக்கர் கமிசன் சாட்டிய குற்றச்சாட்டின் பின்னணி என்ன? இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் பொருள். இந்திரா குடும்பத்தில் ராஜீவ் காந்தி சோனியா, சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா ஆகிய மூவரும் இருந்தனர். இந்திரா உயிரோடு இருந்த காலத்திலேயே அவருடைய வெறுப்புக்கு ஆளாகி மேனகா வெளியேற்றப்பட்டார். எஞ்சியுள்ள ராஜீவ் சோனியா, ஆகிய இருவரோ இருவரில் ஒருவரோ இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி சம்பந்தப்பட்டவர் யார் என்பது? ஆர்.கே. தவானுக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அல்லது இந்தச் சூழ்ச்சியில் அவருக்கும் பங்கு இருக்க வேண்டும்? கொலைச் சதியில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிலிருந்து மீளுவதற்கும் காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவிகளை அடுக்கடுக்காக வழங்கியும் உதவவேண்டிய கட்டாயம் என்ன? உதவாவிட்டால் சூழ்ச்சிகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமா? இந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் விடை இல்லை.
5. பிரதமர் நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து முக்கியமான கோப்புகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டன என புது தில்லியில் இருந்து வெளிவரும் அவுட்லுக் வார ஏடு (24-11-97) ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது. காணாமல் போன கோப்புகளில் என்ன இருந்தது? ராஜீவ் கொலை நடந்த அன்று சந்திரசாமியும், சுப்பிரமணிய சாமியும் எங்கே போனார்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்கள் இருந்தன. கொலையாளிகளுக்குத் தேவையானப் பணத்தை சந்திராசாமியே கொடுத்தார் என்பதற்கான ஆவணங்கள் இருந்தன. என அவுட்லுக் ஏடு குற்றம்சாட்டியது. இதற்கு அரசுத் தரப்பில் இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இது ஏன்?
6. திருப்பெரும்புதூர் கூட்டத்திற்கு ராஜீவ் காந்தியைக் கட்டாயப்படுத்தி வரவழைத்த மரகதம் சந்திரசேகர் குறித்து பல புகார்கள் எழுந்தன. எத்தகைய சூழலில் ராஜீவை இக்கூட்டத்திற்கு அவர் வரவழைத்தார் என்பது குறித்தோ அல்லது இந்தப் படுகொலை குறித்தோ மரகதம் சந்திரசேகரிடம் இதுவரை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தாதது ஏன்?
7. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுக்கு ராஜீவ் கொலையில் பங்கு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது இந்த கோணத்தில் புலன் விசாரணை நடத்தப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. சிங்களத் தலைவர்களான காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரமசிங்கே போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் பிரேமதாசா இருந்தார் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டது. இந்தியப் படையைத் திரும்பப் பெறுவதற்கு ராஜீவ் மறுத்தக் காரணத்தினால் கடுங்கோபம் அடைந்திருந்த பிரேமதாசா ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடாது என்ற கேள்விக்குரிய பதிலை புலன்விசாரணைக்குழு அறிவதற்கு எத்தகைய முயற்சியும் செய்யாதது ஏன்?
8. ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சி.பி.ஐ. அதிகாரியான cகுமார் என்பவர் இலண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் இந்த வழக்குத் தொடர்பான கோப்புகள் அடங்கிய அவரது கைப்பெட்டி காணாமல் போய்விட்டதாக அந்த விமான நிலைய காவல்நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவுசெய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். முக்கியக் கோப்புகளை தொலைத்த அந்த அதிகாரிமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காணாமல் போன கோப்புகளை திரும்பப்பெற ஏன் மேற்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இதுபோன்ற பல உண்மையான சந்தேகங்களுக்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது சி.பி.ஐ. தரப்பிலிருந்தோ எத்தகைய விளக்கமும் அளிக்கப்படவில்லை. புலன் விசாரணையின் தொடக்கக் கட்டத்திலிருந்தே விடுதலைப்புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்தவர்கள் என தீர்மானித்துக்கொண்டு அந்த அடிப்படையில் விசாரணையும் பிறகு வழக்கும் நடத்தப்பட்டனவே தவிர உண்மையை அறியும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் தடா நீதிமன்றத்தில் அவர்களது வழக்கறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில் கூறமுடியாமல் சி.பி.ஐ. தரப்பு திணறிய விவரங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டன. இதற்காகத்தான் இந்த விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது.
26 பேர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்துச்சென்று நடத்திய குழுவின் தலைவர் என்ற முறையில் நான் இதைக் கூறுகிறேன். தடாச்சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என எங்கள் தரப்பு வழக்கறிஞர் என்.நடராசன் வாதாடியபோது 3 நீதிபதிகளும் திகைப்புடன் அவர் கூறியதற்குச் செவிமடுத்தார்கள். சி.பி.ஐ. தரப்போ பதறியது. இறுதியாக எங்கள் வழக்கறிஞரின் வாதம் வென்றது. தடாசட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 19 பேரை குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்தது.
அப்படியானால் தடாச்சட்டத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாததுதானே. அப்படிப்பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தானே மூவர் இன்னமும் தூக்கு மேடையின் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலே நான் குறிப்பிட்ட கேள்விகளுக்குரிய விடைகள் முழுமையாக வெளிவந்தால் இந்த மூவரும் இன்னும் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிற நான்கு பேரும் குற்றம் அற்றவர்களாக வெளிவரத்தானே செய்வார்கள்.
சி.பி.ஐ. புலன்விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக செயல்பட்ட ரகோத்தமன் எழுதிய
நூலில் புலன்விசாரணை உண்மையாகவும் முழுமையாகவும் நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டுள்ளாரே? அதற்கு முன்னாள் அதே புலன்விசாரணைக் குழுவில் ஆய்வாளராக பணியாற்றிய மோகன்ராஜ் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவிட்டு தனது பதவியில் இருந்து விலகினாரே? ஏன்? அடுக்கடுக்கான இந்த வினாக்களுக்கு இதுவரை விடை இல்லை.
மாணவர் காங்கிரசின் துடிப்புள்ள இளைஞராக வேலுசாமி இயங்கிய காலத்திலிருந்து நான் அவரை அறிவேன். தலைவர் காமராசர் மீது அளவற்ற பக்தி கொண்டு அவரது தொண்டராக அன்றும் இன்றும் விளங்கி வருகிறார். அதனால்தான் உண்மைக்காகப் போராடும் துணிவும், சத்திய ஆவேசமும் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளால் உந்தித் தள்ளப்பட்டு, தான் அறிந்த உண்மைகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்காக அவரை மனமாறப் பாராட்டுகிறேன்.
சந்திரசாமிக்கும், சுப்பிரமணியசாமிக்கும் ராஜீவ் படுகொலையில் நிச்சயமாகப் பங்கு உண்டு என்பதை பல்லாண்டு காலமாக ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிவரும் நண்பர் வேலுசாமியின் இந்த நூல் திறவாத விழிகளையும் திறக்க வைக்கும். சிந்திக்காதவர்களையும் சிந்திக்கவைக்கும் என நம்புகிறேன்.


 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.