பூத்தது! புதிய பொதுவுடைமைப் பூ! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 12 ஜனவரி 2013 13:27
"இராமகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் தொடக்கம் முதல் என்னை வெறுப்பவர் என்று எனக்குத் தெரியும். இளம் பிராயத்தி-ருந்தே நானும் ஒரு கம்யூனிஸ்டு என்றும், அந்தக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டவன் என்றும் பலமுறை சொல்-யிருக்கிறேன். இராமகிருஷ்ணனுக்கு உண்மையான
கம்யூனிஸ்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது'' என கலைஞர் கருணாநிதி 3-1-2013 அன்று கூறியுள்ளார்.
எத்தனையோ நாடகங்களில் பலவிதமான வேடங்களில் நடித்த கருணாநிதி இப்போது கம்யூனிஸ்டு வேடம் பூண்டிருப்பதன் பின்னணி என்ன?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் மத்திய அரசு காலம் கடத்துவதைக் குறித்து அந்த அரசில் பங்கேற்றிருக்கும் தி.மு.க. தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன் படுத்தி நிர்ப்பந்தம் செய்யவில்லை. மாறாக மௌனம் காக்கிறது; அனுசரித் துப் போகிறது என மார்க்சிய கம்யூனிஸ் டுக் கட்சியின் செயலாளர் ஜி. இராம கிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்ததற்கு பதில் சொல்லும் வகையில் கம்யூனிஸ்டு வேடத்தை கருணாநிதி பூண்டிருக்கிறார்.
இராமகிருஷ்ணன் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. மாறாக வழக்கம் போல பிரச்சினையைத் திசை திருப்பும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட் டிருப்பதோடு புதிதாக செங்கொடித் தோழர் வேடம் தரித்திருக்கிறார்.
கருணாநிதி உண்மையில் யார் என்பதும் அவர் எத்தகையவர் என்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
செஞ்சீனத்தின் தலைவரான மாசேதுங் அவர்கள் உண்மையான கம்யூனிஸ்டு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி பின்வரும் இலக் கணத்தை வகுத்துள்ளார். "கம்யூனிஸ்டு என்பவர் பரந்த உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். நேர்மையும் ஊக்கமும் உடையவராக விளங்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர்போல் கருத வேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எந்தக் காலத்திலும் எந்தச் சந்தர்ப்பத் திலும் ஒரு கம்யூனிஸ்டு தனது சொந்த நலன்களை முன்னிறுத்தக்கூடாது. அவர் அவற்றை தேசத்தின் நலன்களுக்கும் மக்களின் நலன்களுக்கும் கீழ்ப்பட்ட தாக்க வேண்டும் எனவே சுயநலம், வேலையில் அசிரத்தை, ஊழல், புகழ்நாட்டம் முத-யவை எல்லாம் மிகவும் இகழத்தக்கவை. ஆனால் சுயநலமின்மை, தனது முழு சக்தியையும் கொண்டு வேலை செய்வது, பொதுக்கடமைக்கு முழுமையான விசுவாசம், அமைதியான கடினமான உழைப்பு முத-யவை அவருக்கு உரியவையாகும்'' எனக்கூறியுள்ளார்.
மாசேதுங் வகுத்த இலக்கணத்தின் எந்த அம்சமாவது இந்த உண்மையான கம்யூனிஸ்டுக்கு கடுகளவாவது பொருந்தியிருக்கிறதா? கருணாநிதியின் மனசாட்சிதான் இதற்குப் பதில்கூற வேண்டும்.
இந்தியாவின் ஏன் ஆசியாவின் முதல் கம்யூனிஸ்டான சிங்காரவேலர் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தும் எளிய வாழ்வு வாழ்ந்தார். தனது செல்வத்தையும் உழைப்பையும் மக்களுக்காக அர்ப்பணித்தார். இன்று அவரது குடும்பத்தினரின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது?
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் பதவி வகித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள் தனது சொத்து முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு கட்சி தந்த பணத்தில் வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்து இலண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று திரும்பிய தமிழகக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கே.டி.கே. தங்கமணி தனது சொத்து முழுவதையும் கட்சிக்கே அளித்தார். கட்சியின் தொண்டராக இறுதிவரை வாழ்ந்து மறைந்தார்.
தமிழ்நாட்டின் மூத்த கம்யூனிஸ் டுத் தலைவர்களான நல்லகண்ணு, சங்கரய்யா, உமாநாத் ஆகியோர் தியாகத் தழும்புகள் பல ஏற்றவர்கள். சிறைக் கொடுமைகளையும் சித்திர வதைகளையும் இன்முகத்துடன் ஏற்ற வர்கள். 90வயதை இவர்கள் எட்டியும் இன்னமும் இலட்சிய உறுதி மாறாத வர்களாக எளிய வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து ஏழை மக்களுக்காகத் தொடர்ந்து தொண்டாற்றுகிறார்கள்.
மேலே கண்ட தலைவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் மிகக் கொடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள். சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டவர்கள். எதற்காகவும் அஞ்சி ஒருபோதும் தங்கள் கொள்கை யைக் கைவிடாத தீரர்கள். இவர்கள் ஆற்றிய தியாகத்திற்கு ஈடு இணை கிடையாது. இரு கம்யூனிஸ்டு கட்சி களிலும் உள்ள தலைவர்களும் தோழர் களும் செய்த தியாகத்திற்கும் சந்தித்த அடக்குமுறைகளுக்கும் ஒப்புவமை கூறத்தக்கவர்கள் வேறு எந்தக் கட்சியிலும் இன்று கிடையாது.
மாசேதுங் வகுத்த கம்யூனிஸ்டு இலக்கணத்திற்கும் இந்திய கம்யூனிஸ்டு கள் வாழ்ந்து காட்டும் இலட்சிய வாழ்விற்கும் கருணாநிதியின் ஆரவார, ஆடம்பர வாழ்விற்கும் ஏதாவது ஒற்றுமை உண்டா?
கொடிய அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேர்ந்த போதிலும் தங்களின் கொள்கைகளைக் கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் கைவிட்டதில்லை. ஆனால், பிரிவினை கேட்பவர்கள் தேர்த-ல் போட்டிபோட முடியாது என்ற சட்டம் வந்தவுடன் திராவிட நாடு கோரிக் கையை அடியோடு கைகழுவியவர் கருணாநிதி. இன்றளவும் அதைப்பற்றி வாய்திறக்காதவர். பிரிவினை கேட்ப வர்கள் தண்டனைக்கு உள்ளாவார்கள் என சட்டம் வரவில்லை. தேர்த-ல் போட்டிபோட முடியாது என்றுதான் சட்டம் கொண்டுவரப்பட்டது. பதவி சுகத்தை அனுபவிக்க முடியாமல் போய்விடுமே என்ற பதைப்பினால் அதுவரை முரசொ-த்த கொள்கையை ஆழக் குழிதோண்டிப் புதைத்தவர் கருணாநிதி. அடைந்தால் திராவிட நாடு இல்லாவிட்டால் சுடுகாடு என மேடை தோறும் முழங்கப்பட்ட வீர முழக்கம் காற்றோடு போயிற்று.
தான்தான் உண்மையான கம்யூனிஸ்டு என கம்யூனிஸ்டுகளோடு போட்டிபோடுவதற்குப் பதில் அம்பானி, டாட்டா, பிர்லா போன்ற பெரு முதலாளி களுடன் கருணாநிதி தன்னை ஒப்பிடு வதுதான் பொருத்தமானதாகும். பொது வாழ்வில் ஈடுபட்டு அதற்குப் பொன் விழா கொண்டாடிய ஒரே தலைவரான கருணாநிதியின் குடும்பம். இந்தியாவின் முதல்தரக் குடும்பங்களில் ஒன்றாகி யிருக்கிறது.
சோச-ஸ்ட் தலைவர்களில் ஒருவரும் மத்திய பாதுகாப்பு அமைச்ச ராக இருந்தவருமான ஜார்ஜ் பெர்ணான் டசை ஆசிரியர் குழுத் தலைவராக கொண்டு வெளிவரும் "தி அதர் சைடு' என்னும் பத்திரிகை 2011ஆம் ஆண்டு சூலை இதழில் கருணாநிதி குடும்பத்தின் சொத்து பட்டியலை வெளியிட்டு இந்தி யாவையே திகைப்புக்குள்ளாக்கிற்று. கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் தமிழகத்திலும் தென்னிந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துக்களின் பட்டியல் இதுவாகும். இது முழுமையான பட்டியல் அல்ல. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப் பட்டிருக்கும் விவரங்கள் இந்தப் பட்டிய-ல் இல்லை என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. இது வரை இதை கருணாநிதி மறுக்கவில்லை.
5 முறை முதலமைச்சராக பதவி வகித்த கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் கம்யூனிஸ்டாக எப்போதாவது நடந்துகொண்டாரா? என்ற கேள்வி எழுகிறது.
இந்தப் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியில்தான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் துவக்கப்பட்டு ஏழை விவசாயிகளின் நிலங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமான முதலீடுகள் அந்நிய நிறுவனங்களால் தமிழ்நாட்டில் செய்யப் பட்டன. இவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. தமிழக அரசின் ஏராளமான சலுகைகளைப் பெற்றுத் தொடங்கப்படும் இத்தொழிற் சாலைகளின் மூலம் கிடைக்கும் ஆதாயத்திலும் தமிழகத்திற்குப் பங்கு இருக்கவேண்டும். சீனா போன்ற பொது உடைமை நாடுகளில் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்தான் உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே. அப்படியெல்லாம் செய்வாரா என்ன?
காமராசர் காலத்தில் ஏழை எளிய மாணவர்களும் கல்வியறிவு பெறும் வகையில் கல்வி இலவசமாக்கப்பட்டது. ஆனால் இவர் ஆட்சியில் கல்வி வணிகமயமானது.
இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் பெரும் விளம்பரத்துடன் இவரால் தொடங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு மட்டும் இத்திட்டத்தின் மூலம் 415.43 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. யாருக்கு என்று சொன்னால் தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளித் தரப்பட்டது. இந்தப் பணத்தை அரசு மருத்துவமனைகளுக்கு அளித்திருந்தால் அவைகள் மேலும் வசதிகளைப் பெற்று மக்களுக்கு தொண்டாற்றியிருக்கும். ஆனால் இவர்தான் உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே. அரசு மருத்து வமனைகளை ந-வடையவைத்து தனியார் மருத்துவமனைகளை ஊக்குவித்தார்.
அரசுத் துறையில் இருந்த கனிமங்களை வெட்டியெடுக்கும் உரிமை 1993ஆம் ஆண்டி-ருந்து தனியாருக்கும் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் விலை உயர்ந்த கிரானைட் போன்றவையும் ஆற்று மணலும் தங்கு தடையில்லாமலும் அனுமதி பெறாமலும் தனியாரால் சுரண்டப்படுகின்றன. இதை அரசுத் துறையில் செய்திருந்தால் ஆண்டிற்கு குறைந்த பட்சம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு கிடைத்திருக்கும். ஆனால் இவர்தான் உண்மையான கம்யூனிஸ்டாயிற்றே, அப்படியெல்லாம் செய்வாரா என்ன?
மின்சாரக் கட்டணத்தில் மீட் டருக்கு அரை பைசா குறைக்க வேண்டும் என்றுதான் விவசாயிகள் போராடினார்கள். ஆனால் 20 விவசாயி களை சுட்டுக்கொன்று பல்லாயிரக் கணக்கான விவசாயிகளை சிறையில் அடைத்த பெருமை இந்த உண்மையான கம்யூனிஸ்டுக்கே உண்டு.
சிம்சன் நிறுவனத் தொழிலாளர் கள் போராட்டம் போன்ற பல தொழிலாளர் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிய பெருமையும் இந்த உண்மையான கம்யூனிஸ்டுக்கே உண்டு.
தமிழக வரலாற்றில் மட்டுமல்ல இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லாத கொடுமை இந்த உண்மையான கம்யூனிஸ்டு ஆட்சியில் அரங்கேறியது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல்படை அனுமதி பெறாமல் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்களை விரட்டிவிரட்டித் தாக்கியது. நீதிபதிகளும் தப்பமுடியவில்லை. தலைமை நீதிபதி யின் அனுமதியில்லாமல் உள்ளே புகுந்த காவல் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தும் இறுதிவரை மழுப்பிய பெருமை இந்த உண்மையான கம்யூனிஸ்டுக்கே உண்டு.
மோதல் சாவுகள் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை இவரது ஆட்சிக்காலத்தில் காவல்துறை பெற்றது. கடந்த முறை இவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஓராண்டுக் காலத்தில் 12 பேர் மோதல் சாவுகள் மூலமும் 13பேர் காவல் நிலைய சாவுகள் மூலமும் கொல்லப் பட்டார்கள். இவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என குற்றம்சாட்டி இந்த கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க இந்த உண்மையான கம்யூனிஸ்டு முயன்றார்.
இவர் ஆட்சியில்தான் தமிழ் நாட்டில் கள்ளச்சாராயம், கந்துவட்டி, கட்டைப்பஞ்சாயத்து ஆகியவற்றின் மூலம் ஏழை எளிய மக்களும் நடுத்தர மக்களும் தொடர்ந்து ஆட்டிப்படைக் கப்பட்டார்கள். அரசியல்வாதிகள்- அதிகாரவர்க்கம்- சமூக விரோதிகள் ஆகிய முத்தரப்பு கூட்டு உருவாகி மேற்குறிப்பிடப்பட்ட மூன்று அக்கிரமங் களையும் தங்கு தடையின்றி நடத்தியது.
வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்பவை கம்யூனிஸ்டுகளின் அகராதியிலேயே கிடையாது. ஆனால் இந்த உண்மையான கம்யூனிஸ்டு அவற்றையே அப்படியே பின்பற்றுபவர்.
"நூறு பூக்கள் பூக்கட்டும் நூறு கருத்துக்கள் மோதட்டும்'' என்றார் மாசேதுங். நூற்றியோராவது பொது வுடைமைப் பூவாக கருணாநிதி பூத்திருக்கிறார்.
நன்றி : தினமணி 9-1-2013
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.