"எல்லோரும் இந்நாட்டு மன்னர்'' என செம்மாந்து பாடினான் பாரதி. பிரிட்டானிய சக்கரவர்த்தியின் கீழ் 600க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களும் எண்ணற்ற ஜமீன்தார்களும் இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து நடத்திய கொடுமை கண்டு கொதித்த பாரதி நாடு சுதந்திரம் பெற்றுவிட்டால் மக்கள் அனைவரும் இந்நாட்டு மன்னராகி விடுவார்கள் என கனவு கண்டான்.
காந்தியடிகள் தலைமையில் எண்ணற்றவர்கள் உயிர்த்தியாகம் செய்தும், சிறைக்கொடுமைகளைத் தாங்கியும் தொடர்ந்து போராடி அந்நிய ஆங்கிலேய சக்கரவர்த்தியின் ஆட்சிக்கு முடிவு கட்டினார்கள். இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் 600க்கும் மேற்பட்ட சுதேச மன்னர்களின் எதேச்சதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இந்தியாவுடன் இணைத்தார். முதல் முறையாக அந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள். நாட்டு மக்களுக்கு இறைமை யையும் சனநாயக உரிமைகளையும் வழங்கும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 1950ஆம் ஆண்டு சனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டது. இதன்படி வயது வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இந்திய மக்களின் பேரன்பிற்கு உரியவராக திகழ்ந்தும் இந்தியாவின் முடிசூடாத மன்னர் என மக்களால் போற்றப்பட்டும் விளங்கிய நேரு 1952ஆம் ஆண்டில் முதலாவது பொதுத் தேர்தலை நாடு சந்தித்தபோது அவருடைய சொந்த அலகாபாத் தொகுதி மக்களை நேரில் சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு வேண்டிக் கொண்ட விந்தையை நாடு முதல் முதலாக பார்த்து வியந்தது. அவர் உயிரோடு இருந்த காலம்வரை ஒவ்வொரு பொதுத்தேர்தலின்போதும் தனது சொந்த தொகுதியில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்றே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அவர் மட்டுமல்ல நாடு விடுதலை பெறுவதற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்த மற்ற தலைவர்களும் அவ்வாறே தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் ஆதரவை நாடிப்பெற்று நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். நேருவோ அல்லது மற்ற தலைவர்களோ நினைத்திருந்தால் தங்களை எதிர்த்து யாரும் போட்டி யிடாமல் தடுத்திருக்க முடியும். அல்லது திருமங்கலம் திருவிளையாடலை நடத்தி எளிதாக வெற்றிபெற்றிருக்க முடியும். நேருவின் சமகாலத் தலைவரான சுகர்ணோ இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி எண்ணற்ற தியாகத் தழும்புகளை ஏற்றவர். அந்த நாடு விடுதலை பெற்று அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது சுகர்ணோ உயிரோடு உள்ளவரை அவரே அந்த நாட்டின் நிரந்தரக் குடியரசுத் தலைவர் என்ற விதியை இடம்பெறச் செய்தார். அவரைப் போல் நேருவும் சுலபமாகச் செய்திருக்க முடியும். ஆனால் சனநாயகத்தின் மீது ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்ட நேரு அவ்வாறு செய்யவில்லை. தேசத் தந்தை காந்தியடிகள் தனது அரசியல் வாரிசாக நேருவை அறிவித்தார். ஆனால் பிரதமர் நேரு தனக்குப் பின் யார்? - என்ற கேள்விக்கு விடையளிக்க விரும்பவில்லை. மக்கள் முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் நேருவுக்குப் பின் யார்? - என்ற கேள்விக்கு விடை கண்ட விதம் அனைவரையும் வியப்புக்குள் ளாக்கிற்று. கலந்தாய்வு முறை என்பதைப் பின்பற்றி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரின் கருத்தையும் அறிந்து லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக அறிவித்தார். சாஸ்திரியின் மறைவுக்குப் பின் பிரதமர் தேர்தலுக்கான களத்தில் இந்திராவும் மொரார்ஜியும் போட்டியிட்ட போது காமராசர் சனநாயக ரீதியில் வாக்கெடுப்பு நடத்தி இந்திரா பிரதமராக வழிவகுத்தார். காந்தியடிகளின் உண்மையான சீடராக காமராசர் திகழ்ந் ததினால் தனது குருநாதர் கடைப்பிடித்த முறைகளைக் கையாண்டு சனநாயகத் திற்கு மேலும் மெருகூட்டினார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சனநாயக முறையிலேயே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காந்தியடிகள் கலந்தாய்வு முறையில் அனைவரின் கருத்தையும் கேட்டறிந்து பலவேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் அப்பதவியில் அமர்வதற்கான வழி வகைகளைச் செய்தார். ஒரேயொரு முறை மட்டும் இதற்கு விதிவிலக்காக சுபாஷ் சந்திரபோஸ் - பட்டாபி சீத்தாராமய்யா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். காந்தியடிகள் தேர்தல் போட்டியைத் தவிர்ப்பதற்கு செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சுபாஷ் போஸ் வெற்றி பெற்றும்கூட அவரால் பதவியில் தொடரமுடியாமல் போனது வேறு கதையாகும். நாடு விடுதலை பெற்ற பிறகு முதன் முறையாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டது. புருசோத்தமதாஸ் தாண்டன், ஜே.பி.கிருபாளினி, சங்கர்ராவ்தேவ் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். தாண்டன் வல்லபாய் படேலின் ஆதரவைப் பெற்றவர். கிருபாளினி நேருவின் ஆதரவைப் பெற்றார். தேர்தல் முடிவில் தாண்டன் வெற்றிபெற்றார். ஆனாலும், பிரதமர் நேருவுடன் அவரால் இணைந்து வேலை செய்ய முடியவில்லை. விலக நேர்ந்தது. பிரதமரான நேருவும் துணைப் பிரதமரான வல்லபாய் படேலும் பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள். ஆனாலும் இருவருமே சனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள். எனவே தான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தனித்தனி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை உருவானபோதி லும் கூட சனநாயக ரீதியில் அதற்கு தீர்வு கண்டார்களே தவிர தங்களுக்குள் பகைமை வெறியை வளர்த்துக் கொள்ளவில்லை. இந்தியாவின் முதலாவது குடியர சுத் தலைவர் வேட்பாளரைத் தேர்ந் தெடுப்பதிலும் சனநாயக முறையை நேரு பின்பற்றத் தவறவில்லை. கவர்னர் - ஜெனரலாக இருந்த ராஜாஜியே முதலாவது குடியரசுத் தலைவராக ஆக வேண்டும் என நேரு விரும்பினார். ஆனால் படேல், ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் பலரும் அப்பதவியில் இராஜேந்திர பிரசாத் அமர்த்தப்பட வேண்டும் என விரும்பினார்கள். காங்கிரஸ் பார்லிமெண்டரி போர்டு கூட்டம் நடத்தப்பட்டபோது இராஜேந் திர பிரசாத் அவர்களுக்குப் பெரும் பான்மையினர் ஆதரவளித்தனர். சனநாயக ரீதியில் செய்யப்பட்ட இந்த முடிவை பிரதமர் நேரு தலைவணங்கி ஏற்றுக்கொண்டார். அவர் விரும்பி யிருந்தால் அதை ஏற்க மறுத்து தனது வேட்பாளரையே வற்புறுத்தி யிருப்பாரானால் அவரை எதிர்க்கும் வலிமை யாருக்கும் கிடையாது. மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை கள் இந்தியா முழுவதும் மூண்டெழுந்த போது நேரு அதை ஏற்க மறுத்தார். மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பது தேச ஒற்றுமைக்கு ஆபத்தானது என கருதினார். ஆனால் மக்கள் போராட் டங்கள் வலுத்த போது சனநாயகவாதி யான நேரு தனது கருத்தை மாற்றிக் கொண்டு மொழிவழி மாநிலங்களை அமைக்க முன்வந்தார். படேல், ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மறைந்தபிறகு நேரு தனிப்பெரும் தலைவராக உயர்ந்தார். கட்சியிலும், ஆட்சியிலும் அவர் விரும்பியதை செய் யக்கூடிய அதிகாரம் அவரிடம் குவிந் திருந்தது. ஆனாலும் அவர் சனநாயக ரீதியில் முடிவுகளை மேற்கொண்டாரே தவிர தனது விருப்பத்தை கட்சியிலும் ஆட்சியிலும் திணிக்கவில்லை. தனக்குப் பின் தனது மகள் இந்திரா அரசியல் வாரிசாக வரவேண் டும் என அவர் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. அவருக்குப் பிறகு கட்சிகூடி லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக ஏற்றது. சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகுதான் காமராசர் தலைமையில் கட்சியில் உள்ள பெரும் பான்மையினரின் ஆதரவைப்பெற்று இந்திரா பிரதமரானார். ஆனால், தனது தந்தையைப் போல் சனநாயகவாதியாக இராமல் கொஞ்சம் கொஞ்சமாக சர்வதி காரியாக ஆனார். கட்சியிலும் ஆட்சி யிலும் அவரது விருப்பத்திற்கு மாறான வர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார் கள். எதிர்ப்புக் குரலை நசுக்குவதற்கு அவசரகால நிலையை அவர் பிரகடனம் செய்ததும் அதன் பின்விளைவுகளின் காரணமாக அவர் பதவியிழக்க நேர்ந்த தும் மறக்க முடியாத வரலாறாகும். காங்கிரஸ் கட்சியில் சனநாயகம் அடியோடு குழிதோண்டிப் புதைக்கப் பட்டதற்கு இந்திராவே பொறுப்பாவார். அதன் காரணமாக காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது தனி வரலாறு ஆகும். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்த லில் இந்திராவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி அவருக்கு சர்வதிகார சிந்த னையை ஊட்டியது. மக்கள் தன்னை நம்பி மட்டுமே வாக்களித்திருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு கட்சியும், அதன் தொண்டர்களும் நிர்வாகிகளும் காரண மல்ல. தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவில் குறுக்கிடுவதற்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என முடிவெடுத்தார். அதன் விளைவாக காங்கிரஸ் கட்சியில் மேலிருந்து கீழ்வரை நியமன முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதன் விளைவாக கட்சி கொஞ்சம் கொஞ்சமாக செயலற் றுப் போனது. 1977ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல இந்திராவே தோல்வியடையும் நிலை உருவாயிற்று. இந்திய சனநாயகத்திற்கு இந்திரா விளைவித்த பெரும்ஊறு வாரிசுரிமையாகும். தனக்குப் பின் தனது மகன் சஞ்சய் காந்தியை வாரிசாக அறிவித்து கட்சியை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு அவரை வளர்த்தார். எதிர்பாராத நிலையில் விபத்து ஒன்றில் அவர் காலமான பிறகு அரசியலில் நாட்டமில்லாத இராஜீவ்காந்தியை கட்டாயப்படுத்தி தனது வாரிசாக வளர்க்க முயன்றார். ஆனால், அது வேண்டாத விளைவுகளுக்குக் காரண மாயிற்று, காங்கிரஸ் கட்சியில் வாரிசுரிமை நோய் படர்ந்தது. அகில இந்திய அளவிலிருந்து மாவட்ட அளவு வரை பல்வேறு மட்டங்களிலிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தங்களுடைய புதல்வர்களையும் புதல்விகளையும் அரசியல் வாரிசுகளாக வளர்க்கத் தொடங்கினார்கள். இந்த நோய் மற்ற கட்சிகளுக்கும் பரவியது. இராஜீவ் காந்திக்குப் பிறகு அவரது மனைவி சோனியா காங்கிரஸ் தலைவராக்கப்பட்ட விதம் வேடிக்கை யானது. 1971ஆம் ஆண்டு காங்கிரசில் ஏற்பட்ட பிளவிற்குப் பிறகு உருவான இந்திரா காங்கிரசில் முதன்முறையாக தலைவர் தேர்தல் 1997ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. சீத்தாராம் கேசரி, சரத்பவார், ராஜேஸ் பைலட் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். அதில் சீத்தாராம் கேசரி வெற்றிபெற்றார். பிரதமர் குஜ்ரால் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவது என காங்கிரஸ் கட்சி முடிவு செய்தபோது பெரும் குழப்பம் மூண்டது. அந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோனியா காங்கிரஸ் தலைவர் பதவியைக் கைப்பற்றினார். முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சீத்தாராம் கேசரியை யாரும் நீக்கிவிடமுடியாது. ஆனால் காங்கிரஸ் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலம் அவர் பதவியைப் பறித்தார். இத்தாலியில் பிறந்த சோனியா பாசிச நடவடிக்கைகளைக் கையாண்டு காங்கிரஸ் தலைவரானார். காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தில் தலைவரான கேசரி பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் சட்டத்திட்டப்படியும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுப் பிரதிநிதி களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் சட்ட திட்டங்களைத் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்து விட்டு தலைவர் பதவியை சோனியா கைப்பற்றினார். இப்போது அதே பாணியில் இப்போது தனது மகனை காங்கிரஸ் தலைவராக்குவதற்கும் பின்னர் பிரதம ராக்குவதற்கும் அடித்தளமிட்டிருக்கிறார். காங்கிரஸ் சட்டதிட்டப்படி துணைத் தலைவர் பதவி என்பதே கிடையாது. ஆனால் ராகுல் துணைத் தலைவராக்கப் பட்டிருக்கிறார். இதற்காக கட்சியின் சட்டதிட்டத்தையே திருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. துணைத் தலைவர் பதவியை ஏற்றவுடன் பேசிய ராகுல் காந்தி "சமீப காலமாக இளைஞர்கள் கோபமாக உள்ளனர். இதற்கு காரணம் அரசியலிலிருந்து தாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட தாக அவர்கள் கருதுகிறார்கள். தங்கள் குரல் நசுக்கப்படுவதாகவும் அவர்கள் எண்ணுகிறார்கள். வருங்காலத்தில் ஆட்சி, முடிவெடுத்தல், நிர்வாகம், அரசியல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்'' எனப் பேசியிருக்கிறார். இளைஞர்கள் என அவர் குறிப்பிடுவது தன்னைப் போன்ற பெரிய இடத்துப் பிள்ளை களையே. இவர் மட்டுமல்ல, மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் மாநிலங் களில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோரின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களையே அவர் குறிப்பிடு கிறார். நேற்றுவரை பொதுத்தொண்டு என்ன என்பதையே அறியாதவர்கள் மக்களைச் சந்திக்காதவர்கள் ராகுலைப் போல இன்றைக்கு முக்கியப் பதவிகளில் அமர்த்தப்படவேண்டும் என்று அவர் விரும்புகிறார். பொது வாழ்க்கைக்கு வருகிற வர்கள் தொண்டு, துன்பம், தியாகம் ஆகிய முப்பெரும் குணங்களைக் கொண்டிருக்க வேண்டும் என காந்திய டிகள் கூறினார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் பகத்சிங், வாஞ்சிநாதன் போன்ற வீர இளைஞர்கள் எண்ணற்றத் தியாகங்கள் செய்தார்கள். காங்கிரஸ் கட்சிக்குள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், லோகியா, அசோக்மேத்தா போன்ற இளைஞர்கள் சோசலிசப் பாதையில் காங்கிரஸ் செல்ல வேண்டும் என்பதற் காக இடைவிடாமல் போராடினார்கள். இந்திரா பிரதமராக இருந்தபோது சந்திர சேகர், மோகன் தாரியா போன்ற இளைஞர்கள் கட்சி முற்போக்கான பாதையில் செல்லவேண்டும் என்பதற் காகப் போராடினார்கள். ஆனால் இன்றைக்கு பதவிகளைப் பங்கிடும் போட்டியில் இளைஞர்கள் ஈடுபட்டிருக் கிறார்கள். ராகுலைப் போன்ற ஒருவர் திடீரென காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வாரிசு உரிமை அடிப்படையில் உயர்த்தப்படுவது மேனாமினுக்கி இளைஞர்களுக்கு ஊக்கமூட்டி யுள்ளது. ராகுலைச் சுற்றியுள்ள இளைஞர்கள் பலரும் மத்திய அமைச்சர்களின் செல்லப்பிள்ளைகள். ஏழை எளிய மக்களின் துன்பங்களையோ அல்லது நாட்டு நடப்பையோ கொஞ்சமும் புரிந்துகொள்ளாதவர்கள். காங்கிரஸ் கட்சியில் ஆழமாக வேரூன்றிப் போயிருக்கும் வாரிசுரிமை அரசியல் மாநில கட்சிகள் பலவற்றுக்கும் பரவி அக்கட்சிகளிலும் வாரிசுரிமை பெருகிக்கொண்டிருக்கிறது. மன்னர் ஆட்சியில்தான் தந்தைக்குப் பிறகு மகன் என்ற நிலை இருந்தது. ஆனால், சன நாயக ஆட்சியில் வாரிசுரிமை என்பது அதன் ஆணிவேரையே அறுத்துவிடும். வாரிசுரிமை அரசியலின் விளைவாக காங்கிரஸ் கட்சியில் மட்டுமல்ல பல்வேறு மாநிலக் கட்சி களிலும் சனநாயகம் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தத்தில் காந்தியடி களும் நேருவும் மற்ற தலைவர்களும் சனநாயகப் பயிரைக் கண்ணீர்விட்டு வளர்த்தார்கள். ஆனால் இந்த சனநாய கப் பயிரை சர்வாதிகார மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கான கால் கோல் விழா தில்லியில் அரங்கேறி யிருக்கிறது. - நன்றி : தினமணி 23-1-13 |