கண்டனமா? கண் துடைப்பா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:59
11-03-13 அன்று ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளை 38 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்தார். இந்த அறிக்கையில் இலங்கையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. தமிழர் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெற
வேண்டும்; இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் குறித்து நம்பகமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற முக்கியமான கோரிக்கைகள் ஆணையரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்தச் செய்தி வெளியானபோது உலகெங்கும் உள்ள தமிழர்களின் உள்ளங்களில் நம்பிக்கை ஒளி படர்ந்தது.

மனித உரிமைக் குழுவின் ஆணையரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்ட முக்கியமான விவரங்கள் வருமாறு:
இலங்கையில் போர் நடைபெற்ற வேளையில் வயதானவர்களும் சிறுமி களுமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க எவ்வித நடவடிக் கையையும் இலங்கை மேற்கொள்ள வில்லை. இந்த நிலையில் போருக்குப் பிறகும் ஆள் கடத்தல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிவில் நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக அங்கு வாழும் தமிழ்ப் பெண்கள் நடுவில் பாலியல் வன்முறை அச்சம் நிலவுகிறது.
போருக்குப் பின் செய்ய வேண் டிய நிவாரணப் பணிகள், மீள் குடிய மர்த்துதல் போன்றவை நிறைவேற்றப்பட வில்லை. இலங்கை அரசின் தேசிய செயல்திட்டத்திலும் அவை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் பல போர் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறிய இலங்கை அரசு முழுமையான விசாரணை எதுவும் நடத்தவில்லை. இடம் பெயர்ந்த மக்களைக் குடிய மர்த்தும் பணியையும் செவ்வனே செய்ய வில்லை. 2006ஆம் ஆண்டு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்னும் வெளியிட வில்லை. சிறுபான்மையினரான தமிழர் களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

தமிழர்களின் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெறவேண்டும். இலங்கை நடத்திய போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத் தன்மை வாய்ந்த சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை உள்ளடக் கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் அவ் வாறு செய்வதற்கு அமெரிக்கா தவறிவிட்டது.

இக் கூட்டத்தில் அமெரிக்கா முன்மொழிந்த வரைவுத் தீர்மானம் வெளியிடப்பட்டது. இதன் பேரில் விவாதம் நடந்து உறுப்பினர் நாடுகளால் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நான்கு முறை அந்த அறிக்கை திருத்தப்பட்டு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு அதிகாரப்பூர்வமாக இந்தியா எத்தகைய திருத்தமும் கொடுக்கவில்லை என்பது முக்கியமானதாகும்.
19-03-13 அன்று அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் ஆணையரால் குறிப்பிடப்பட்ட முக்கியமான ஆலோ சனைகள் இடம்பெறவில்லை. ஆனால் ஐ.நா. ஆணையர் நேரில் சென்று கண்ட றிந்த உண்மைகளின் அடிப்படையிலும் ஐ.நா. விசாரணைக் குழு அளித்த அறிக் கையின் அடிப்படையிலும் அமைய வேண்டிய தீர்மானத்திற்கு முற்றிலும் மாறான ஒரு நீர்த்துப்போன தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. இதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தது.

அமெரிக்கத் தீர்மானத்தில் கூறப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும்.
போரின்போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது.
இலங்கை அரசு நியமித்த நல்லிணக்கக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை.
இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி, நல்லிணக்கம் முழுமையாக செய்யப்படவில்லை.
மக்கள் நலம் சார்ந்த அமைப்பு களை இலங்கை அரசு வலுப்படுத்த வேண்டும்.
போர்க் குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும்.
உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் கள் சார்பில் இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகி வருவது குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முக்கியமாக வலியுறுத்தப்பட்டன. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையும் அமெரிக்கத் தீர் மானம் புறந்தள்ளி விட்டது மட்டுமல்ல, அதற்கு எதிராகவும் அமைந்துவிட்டது.
அமெரிக்கத் தீர்மானம் போர்க் குற்றங்கள் குறித்த சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை என்பதை ஏற்கவில்லை. மாறாக இலங்கையே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறுகிறது.
இலங்கையின் வடக்கு மாநிலத் தில் சீர்திருத்த நடவடிக்கைகளும் மனித உரிமைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்துகிறதே தவிர, கிழக்கு மாநிலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இதன் மூலம் கிழக்கு மாநிலம் சிங்களவர் களுக்குச் சொந்தமானது என மறைமுக மாக அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.
வடக்கு மாநிலத்தில் மாகாண சபைக்கான தேர்தல் சுயாதீனமாக நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுவது கொடுமையான வேடிக்கையாகும். ஏனெனில் வடக்கு மாநிலத்தில் வாழ்ந்த 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இன்னமும் அகதிகளாக அலைந்து திரிகிறார்கள். தமிழர் பகுதிகளில் வேகமாகவும் தங்கு தடையில்லாமலும் சிங்களக் குடியேற் றங்கள் நடைபெறுகின்றன. வடக்குப் பகுதி இராணுவமயமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் சுதந்திரமான தேர்தல் எப்படிச் சாத்தியமாகும்? ஒரு போலியான தேர்தலை நடத்துவதற்கு சிங்கள அரசுக்கு அமெரிக்கத் தீர்மானம் உதவுகிறது.
கடந்த ஆண்டு மனித உரிமைக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் தின்படி எவ்வித நடவடிக்கைகளும் சிங்கள அரசால் எடுக்கப்படவில்லை. இந்த அழகில் வெளிநாட்டுப் பார்வை யாளர்கள் எவ்விதமான தடையுமில்லா மல் தமிழர் பகுதிகளுக்கு வந்து உண்மைகளைக் கண்டறிய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது. ஏற்கெனவே, போருக்கு முன்னால் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதில் ஈடுபட்டிருந்த ஐ.நா. அலுவலர்கள் 17 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர். ஐ.நா. பார்வையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அலுவலர்களும் வெளியேற்றப்பட்டனர். சர்வதேசப் பத்திரிகையாளர்களும் வெளியேற்றப் பட்டனர். தான் நடத்தப் போகும் இனப் படுகொலைகளுக்கும் போர்க் குற்றங் களுக்கும் சாட்சிகள் யாரும் இருக்கக் கூடாது எனத் திட்டமிட்டு சிங்கள அரசு இவ்வாறு செய்தது. இப்போது சர்வதேசப் பார்வையாளர்கள் அங்கு போய் சுதந்திரமாக ஏதாவது விசாரணை நடத்தி உண்மைகளை அறிய முடியுமா? போகாத ஊருக்குப் புரியாத வழியைச் சொல்வதுபோல அமெரிக்கத் தீர்மானம் அமைந்திருக்கிறது.
வெற்று வாக்குறுதிகள் நிறைந்த இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டவை களை நிறைவேற்றுவதற்கு சிங்கள அரசுக்கு ஓராண்டு கால அவகாசத்தை அமெரிக்கத் தீர்மானம் அளித்திருப்பது நகைச்சுவையின் உச்சக்கட்டமாகும். கடந்த ஆண்டு நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதைப் போல ஓராண்டு கால அவகாசம் சிங்கள அரசுக்கு அளிக்கப்பட்ட போது எத்தகைய நிவாரண நடவடிக்கைகளோ அல்லது மனித உரிமை மீறல்களோ அங்கு நடைபெறவில்லை.
அமெரிக்கத் தீர்மானத்தின்படி இலங்கை அரசு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இதற்காகத் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்ட அவகாசத் தில் மேலும் மேலும் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டனவே தவிர நிலைமை சிறிதளவுகூட மாற வில்லை. இப்போது இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளிப்பது எஞ்சியுள்ள தமிழர்களை முற்றிலுமாக அழிப்பதற்கே உதவும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை எதிர்ப்புத் தீர்மானம் என அழைப்பது மிகத்தவறானதாகும். உலகக் கண்டனத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றும் தீர்மானமே அது ஆகும்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திவருகிற போராட்ட மும், தமிழக சட்டமன்றத்தில் அனைத் துக்கட்சியினரும் ஏகமனதாக நிறை வேற்றிய தீர்மானமும், தமிழக முதலமைச் சரின் கடுமையான கடிதமும் இந்தியா வெங்கிலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி அதன் காரணமாக இந்திய நாடாளுமன்றத்திலும் மேலவையிலும் காங்கிரசைத் தவிர அநேகமாக எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று இந்திய அரசின் இலங்கைக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தும் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களை இந்திய அரசின் கொள்கையில் ஏற்படுத்த வில்லை.
மார்ச் 6ஆம் தேதியன்று நாடாளு மன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் "இலங்கை நட்பு நாடு. எனவே அந்த நல்லுறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபடாது'' என்று வெளிப்படை யாகத் தெரிவித்துவிட்டார். மேலும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி சுமூகத் தீர்வை எட்டும்படி இலங்கை வெளியுற வுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிசை வேண்டிக்கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தனக்கு, எதிரான தீர்மானத்தை முன்மொழியாமல் அமெரிக்காவை தடுக்கும் வாய்ப்புகளை இலங்கை ஆராய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்திய அரசு மேற்கொள் ளப்போகும் நிலைப்பாடு என்னவா யிருக்கும் என்பது இதன்மூலம் தெளி வாகிவிட்டது.
அமெரிக்கத் தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் இந்தியாவின் பங்கு என்பது சூழ்ச்சிகரமானது. தான் நேரிடையாக சம்பந்தப்படாமல் பின்ன ணியில் இருந்து இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவின் தீர்மானத்தை வடிவ மைத்தது இந்தியாதான். இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக இலங்கை அரசு டன் பேசுவதற்கு வழக்கமாக அனுப்பப் படும் பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர மேனன் இம்முறை அனுப்பப்பட வில்லை. மாறாக அரசாங்கத்துடனோ காங்கிரஸ் கட்சியுடனோ எந்தவிதத் திலும் சம்பந்தப்படாத சுப்பிரமணிய சுவாமியை இந்திய அரசு தனது தூதுவராக இலங்கைக்கும் அமெரிக்கா வுக்கும் அனுப்பியது. அவர் சென்று இந்தியாவின் கருத்தோட்டத்திற்கு ஏற்ப அமெரிக்கா தனது தீர்மானத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தார். சுப்பிரமணிய சுவாமி தனி நபர். ஆனால் இலங்கை அதிபர் இராசபக்சே, அமெரிக் காவின் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் ஆகியோரை அவர் சந் தித்துப் பேசிய விவரங்கள் பத்திரிகை களில் வெளிவந்துள்ளன. ஒரு தனி நபருக்கு இவ்வளவு செல்வாக்கு அரசு வட்டாரங்களில் இருக்க முடியாது. இந்தியாவின் சார்பில் அவர் சென்றார் என்பதினால்தான் அவரைச் சந்தித்துப் பேச இலங்கை, அமெரிக்க அரசு உயர் மட்டத்தினர் முன்வந்தனர்.
அது மட்டுமல்ல, நாடாளுமன்றத் தில் முலாயம்சிங் யாதவ் போன்றவர்கள் இந்திய அரசின் இலங்கைக் கொள் கையைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னணி என்ன? இந்தியாவில் இலங்கைத் தூதுவராக இருக்கும் பிரசாத் கரியவாசம் முலாயம் சிங் மற்றும் பல்வேறு வட மாநில முதல்வர்கள் ஆகியோரை எல்லாம் சந்தித்துப் பேசி சிங்கள அரசின் நிலைக்கு ஆதரவாக அவர்களை மாற்றியிருக்கிறார். வெளி நாட்டுத் தூதுவர் ஒருவர் தில்லியை விட்டு வெளியே செல்ல வேண்டு மானால்கூட இந்திய அரசின் அனுமதி தேவை. மாநில முதலமைச்சர்களைச் சந்திப்பதற்கும் இந்திய அரசு அனு மதிக்க வேண்டும். ஆக, இந்திய அரசுதான் அவருக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி எதிர்க் கட்சித் தலைவர்களையும் முதல்வர் களையும் சந்தித்துப் பேசச் செய்திருக் கிறது என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.
ஒட்டுமொத்த தமிழகத்தின் கடும் எதிர்ப்பும், இதுவரை கூட்டணிக் கட்சி யாக இருந்த தி.மு.க. வெளியேறியதும் மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தவில்லை. அதைப்போல, உதட்டளவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசும் அமெரிக்காவும் இந்தப் பிரச்சினையில் இரட்டைவேடம் போடுகிறது.
அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நிலைப்பாடு என்பது, ஈழத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி இலங்கை அரசை மிரட்டி சீனாவிட மிருந்து பிரிப்பது என்பது மட்டுமே என்பது அம்பலமாகியிருக்கிறது.
இலங்கையிலும், குறிப்பாக இந்து மாக்கடலிலும் சீனாவின் ஆதிக்கம் என் பது ஏற்படுவது தன்னுடைய உலகளா விய நலன்களுக்கு எதிரானது என அமெரிக்கா கருதுகிறது. இந்தியாவும் தனது தென்னாசிய நலன்களைப் பொறுத்தவரையில் சீனாவின் தலை யீட்டை விரும்பவில்லை. எனவே, அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இந்தப் பிரச்சினையைப் பயன்படுத்தி இராசபக்சே அரசுக்கு நெருக்குதல் கொடுத்து சீனாவின் பிடியிலிருந்து அவரை மீட்பது ஒன்றையே நோக்க மாகக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், அமெரிக்காவின் இந்துமாக்கடலின் நலன்களும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளாதார நலன்களும் முக்கியமே தவிர, ஈழத் தமிழர்களின் வாழ்வு அவர்களுக்கு முக்கியமல்ல.
அம்னஸ்டி இன்டர்நேசனல் போன்ற உலக மனித உரிமை அமைப்பு களும், 10 நாடுகளின் நீதிபதிகள் அடங்கிய டப்ளின் மக்கள் தீர்ப்பாயமும், ஐ.நா. விசாரணைக் குழுவும் ஐ.நா. மனித உரிமைக் குழு ஆணையமும் இராச பக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து எவ்வளவோ உண்மைகளைக் கண்டறிந்து வெளிப் படுத்தியும்கூட அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களின் அரசியல், பொருளாதார நலன்களை மட்டுமே மனதில் கொண்டு இராசபக்சேயின் இரத்த வெறிக்கு ஈழத் தமிழர்களைக் காவுக்கொடுக்கத் துணிந்துவிட்டன என்பதைத்தான் அமெரிக்கத் தீர்மானம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
- நன்றி : ஜூனியர் விகடன்
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.