தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 பெப்ரவரி 1997 14:08

1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.சி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.

1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.

1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.

1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.

1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.

1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின.

20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.

1990 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.