நூல் மதிப்புரை: காலத்தை வென்ற காவிய நட்பு புத்துயிர்ப்பைத் தருகின்ற பெரும்படைப்பு - விசாகன், தேனி. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 11:59

தமிழ்நாடு - இந்தியாவிற்குமான மத்திய ஆசியப் பகுதிகளின் தொடர்பின் தொடக்கங்களை, சிந்து நாகரீகத்தின் கலாச்சார பண்பாட்டுத் துறையின் எச்சங்களைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் வேரூன்றிய அர்மினி யர்கள், இந்தியாவில் காலூன்றிய ஜார்ஜியர்கள், இந்திய ரஷ்ய நாட்டிற்கிடையே மலர்ந்த, வணிக வர்த்தகப் பிணைப்புகள், ரஷ்ய அரசு முறைத் தூதுவர்கள், தனிப் பயணிகள், பூகோள அமைப்பினால் இருநாட்டிற்குமூடாக இயற்கையில் ஒருங்கிணைந்த பண்பாட்டு உறவுகள், இதனைப் பற்றிப் படர்ந்து வளர்ந்த வரலாற்று அடையாளங்கள், அந்நியப் படையெடுப்புகளின்பால் உயர்ந்த - தாழ்ந்துவிட்ட இருநாட்டு நல்லுறவுகள் மற்றும் பல்சமயத்துறைத் தொடர்புகள் போன்றவற்றை நூலின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் முறையே எட்டாகவும் ஆறாகவும் என பதினான்கு பகுதிகளாகப் பிரித்து விவரிக்கின்றார் ஆசிரியர்.

"பிற்காலத்தில் கிடைத்த பல சான்றுகள் வேறு விதமாக உள்ளன. அவற்றின் அடிப்படையில் சிந்துச் சமவெளி நாகரீக அழிவுக்கு ஆரியர்கள் காரணமல்லர் என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது' என்பதன் மூலம் அதற்கு முந்தையதாக நிலவி வந்த "ஆரியப் படையெடுப்பின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிந்து நாகரீகம் வீழ்ந்தது' என்ற கருத்தினை மறுக்கத் துவங்கும் முதல் பாகம், அதற்கான சான்றாக அஸ்கோ பர்போலா என்ற மொழியியல் அறிஞரின் ஆய்வுகள் நூலில் முன்வைக்கப்பட்டுள்ளது. அஸ்கோ பர்போலா எழுதிய ஞீஞுஞிடிணீடஞுணூடிணஞ் tடஞு ஐணஞீதண் ண்ஞிணூடிணீt என்ற நூலிற்கு மதிப்புரை எழுதிய ஐராவதம் மகாதேவன், "கருத்தியல் சார்புகளுக்கு இடமளிக்காமல், புறவயமாகப் பிரச்சனைகளை அணுகுவது அஸ்கோ பர்போலாவின் தனித்தன்மை என்றும் குறிப்பிட்டுள்ளதாக இந்நூலாசிரியர் தெரிவிக்கின்றார். "தென்னாசிய வரலாறு குறித்த நிபுணர்களாலும் இந்தோ-ஐரோப்பிய மொழியியல் நிபுணர்களாலும் பர்போலாவின் புதிய கருதுகோள் விரிவாக ஆய்வு செய்யப்படவேண்டும். சிந்துவெளிப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் இந்தப் புதிய கோட்பாடு முக்கியமாகச் சுட்டிக்காட்டுவது பின்வருமாறு: ரிக்வேதத்தின் தொடக்கப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆரியர் – தாசர் மோதல் என்பது இரண்டு ஆரியப் பழங்குடிகளுக்கிடையிலான பகைமையையும் அதனைத் தொடர்ந்து அவர்கள் ஒன்றிணைந்ததையும் பற்றியதாகும். ஆகவே சிந்துவெளி நாகரீகம் அதன் முதிர்ச்சியடைந்த கட்டத்தில் அழிந்து போனதற்கும் இதற்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை. இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இத்தகைய விளக்கங்கள், தகவல்கள், நம்மிடமிருக்கின்ற இதுநாள் வரையிலான ஆரிய, சிந்து நாகரீகங்களுக்கிடையான மோதல்கள், முரண்பாடுகள், இன்னபிற அறிதல் புரிதல்களை மீளாய்வு மேற்கொள்ளத் தூண்டுவதோடு, மத்திய ஆசியப் பகுதிகளுக்கும் சிந்து நாகரீகப் பகுதிகளுக்கு மிடையிலான பிணைப்பினை மேலும் இறுக்கிப் பார்க்க வைக்கின்றது. "சிந்து சமவெளி நாகரீகத்தின் மொழி, முன்னிலை திராவிட மொழிகளோடு ஒற்றுமையுடையது' என்ற கருத்தினை சோவியத் ஆய்வாளர்கள் தெரிவிப்பது மேற்கண்ட பார்வைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைகின்றது.

குஷான் பேரரசு மக்கள் தயாரித்த இரும்பினால் செய்த கை வாள்கள், அந்தப் பகுதியில் உள்ள ஏர்த்தாம் தூணின் சிற்பங்களில் கவர்ந்திழுக்கின்ற "வீணை வாசிப்பவனின் உருவம்' மேலும் அந்த ஓவியங்கள், மதுரா மற்றும் காந்தாரக் கலையை உருவகித்திருப்பது, இருபகுதி மக்களுக்கிடையே உறுதி செய்யப்பட்ட குருதி உறவு போன்றவைகள் இருநாட்டிற்கிடையேயான பண்டைய வரலாற்றுத் தொடர்புகளை வியப்புடனும் ஆர்வத்துடனும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. சோவியத்தின் ஸ்லாங் தேசிய இன மக்கள் இந்தியாவை எழில் குலுங்கும் பண்டைய நாடாகக் கருதியிருக்கிறார்கள். ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு கலாச்சாரப் பண்பாட்டுத் தேடலுடன் பயணம் வந்த முதல் நபர் அபநாசி நிகிதன் என்பவராவார். ஆப்பிரிக்காவைச் சுற்றி இந்தியாவிற்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பது குறித்து போர்த்துக்கீசி யரான வாஸ்கோடகாமா சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், இந்தியாவை யும், இந்தியப் பயணம் குறித்தும் "முக்கடல்களுக்கு அப்பால்' என்ற நூலினை எழுதிப் புகழ் பெற்ற அபனாசி நிகிதன் இந்தியாவில் உள்ள மலபார் கடற்கரை யில் பயணம் செய்து கொண்டிருந்தார் என்கின்ற தகவலானது எத்தனை எத்தனை பொருள் பொதிந்தது!

1795 ஜூலை 28ல் சென்னைக்கருகே தமிழ் மண்ணில் அரசு முறைப் பயணமாக, ரஷ்யச் சக்கரவர்த்தி மகா பீட்டர் ஆணையின்படி, காலடி எடுத்து வைத்த இசைவாணர், நாடகத் தயாரிப்பாளர், புவியியலாளர், மொழிபெயர்ப் பாளர், கீழை நாடுகள் பற்றிய துறையில் நிபுணர் என பல்துறை ஜாம்பவனான ஜிராசிம் லெபதெவ் – இவரின் முயற்சியால்தான் ஐரோப்பிய பாணியில் அமைத்த முதலாவது இந்திய தேசிய நாடக மன்றம் 1795 நவம்பர் 27 அன்று உருவாயிற்று. இவர், இந்திய பேச்சு மொழிகள் இலக்கணம், அயல்மொழி உரையாடல், ஆப்பிரிக்கக் குடியிருப்பு போன்ற நூல்கள் எழுதியிருக்கிறார். அதே காலத்தில் வந்த பயணி, ரபீல் தனிபெகோவ் எழுதிய பயண அனுபவம் குறித்த நூலை ரஷ்ய மக்கள் போற்றிப் பாராட்டினார்கள் என்பதும் அதற்கடுத்தாற் போல வந்த ஓவியர்களான, வாசிலி வெரஷ்சாகின் (1842--1904) மற்றும் அலெச்சி வாகின் ஆகியோர் ஓவியக் கலையின் வாயிலாக இந்திய ரஷ்ய கலாச்சாரத்தைப் பரப்பினார்கள் என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய ரஷ்ய பண்டைய வணிகத் தொடர்பான போக்குவரத்தில், 1625ல் அஸ்ட்ரக்கான் நகரில் இந்தியச் சந்தை திறக்கப்பட்டது. ரஷ்ய வரலாற்றில் மிகச் சிறந்த இடம் பெற்றவரான மகா பீட்டர் சக்கரவர்த்தி இந்த இந்தியச் சந்தைக்கு 1722ல் வருகை தந்து உரையாற்றியிருக்கிறார். இந்திய இமயமலை அடிவாரப் பகுதியில் வாழ்ந்த குஜார்களுக்கும் ஜார்ஜியர்களுக்கும் உருவ ஒற்றுமை, ஆடை ஆபரணங்கள், கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை மிகுந்து ஒத்துப் போகின்றது என்பதையும், அர்மினியர்களுக்கான இந்திய தமிழகத் தொடர்பையும், சென்னையில் வாழ்ந்த அல்மீனியரான ஜேக்கட் ஜான் என்பவர் வீட்டில் ராபர்ட் கிளைவ் குடியிருந்தார் என்கின்ற தகவலையும், அக்பரின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தவர்களாக அல்மீனியர்கள் தில்லியில் வாழ்ந்தார்கள் என்பதையும் நூலாசிரியர் இதனூடாக விவரித்து வருவதைப் பார்க்கும்போது, ஊற்றெடுக்கும் வாஞ்சையுடன் நாம் இந்திய ரஷ்ய நட்பு தோன்றி வளர்ந்துவந்த வரலாற்றை உணர வைக்கின்றது.
இந்தியாவில் உள்ள இந்து மதம், புத்த மதம் ஆகியன அதனதன் தொன்மைத் தன்மையுடன் எவ்வாறு ரஷ்யாவிற்குள் வேரூன்றின என்பதையும், இவ்விரண்டு மதங்களின் மீதான ஆய்வுகளை மேற்கொள்வதால் ரஷ்ய நாட்டு அறிஞர்களின் ஆர்வத்தையும், இம்மதங்களின் ஒட்டுமொத்த கலை வடிவங்களின் மீதான அவர்களின் பார்வையையும், ரஷ்யப் பேரரசில் இஸ்லாம் மற்றும் இந்திய ரஷ்ய திருச்சபைகளுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் இணைப்புகள் பிணைப்புகள் போன்றவற்றையும் வரிசைக்கிரமமாக இரண்டாவது தொகுதியில் வைத்திருக்கிறார் நூலாசிரியர். 1888ல் பகவத்கீதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட காலக்கட்டத்தில், கிழக்கு மேற்கு நாடுகளின் தலைசிறந்த மத இலக்கியங்கள் குறித்து பரஸ்பரம் இந்தியர்களும் ரஷ்யர்களும் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு உருவானதால் மத ஒப்பாய்வு தோன்றியது. அதே வேளையில்தான், விவேகானந்தர் குறித்தும், இந்து, பெளத்த மதக் கோட்பாடுகள், நாத்திகம், ஆத்திகம், வேதங்கள், உபநிடங்கள், மனுஸ்மிருதி உள்ளிட்டவைகள் குறித்தும் ரஷ்ய அறிஞர்கள் ஏராளமான நூல்களை எழுதி வெளியிட்டிருக்கின்றார்கள். சோவியத் ஆட்சி மலர்ந்த பிறகு நடத்தப்பட்ட முறையான தொல்பொருள் ஆய்வுகளின் விளைவாக பல இடங்களில் சிதிலமாகிப் போன பண்டைய புத்த ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற புத்த மத எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்திய இஸ்லாமியர்களில் மேல்தட்டுப் பிரிவு முஸ்லீம்கள் ரஷ்ய அரசின்மீதான முரண்பாடுகளை வெளிப்படுத்தினாலும், பெரும்பான்மை இந்திய முஸ்லீம்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து வந்த முஸ்லீம்கள் ரஷ்ய அரசுடனான ஆதரவு நிலைப்பாட்டையே முன்வைத்தனர். அதன் தொடர்ச்சியாகவே, 1913 ஜூலை 15 அன்று இந்தியாவிலிருந்து பீட்ரோகிராட் சென்ற மகமது பர்கத்துல்லா, அங்கே ரஷ்ய அரசிடம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவினைக் கோரினார். அது அப்போது தோல்வியில் முடிந்தாலும், புரட்சிக்குப் பின் தலைமை ஏற்ற லெனின் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இந்த வகையில், இந்து, புத்த, இஸ்லாம் சமய நோக்கிலான இரு நாட்டுத் தொடர்புகள் ஏற்கனவே அவை மேம்படுத்தி வந்த நட்பினை அதிகமாக கெட்டிப்படுத்தின என்பதை நிரூபணம் செய்கின்றன என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றார் நூலாசிரியர்.

மூன்றாவது பாகமாக "மன்னராட்சிக் காலத்தில் நட்புறவு' என்ற தலைப்பில் ஐந்து பகுதிகள் பிரித்தாளப்பட்டுள்ளன. 1857ல் உருக்கொண்ட முதல் இந்திய சுதந்திரப் புரட்சியின் மூளையாக செயல்பட்ட நானாசாகிப், புரட்சியின் மூலமாக பிரிட்டிஷ் அரசை வீழ்த்திட ரஷ்யாவின் உதவிகோர, அஜ்முல்கான் என்பவரை ரகசியமாகத் தூது அனுப்பிய விவரத்தினை அதன் முன்பின்னான முயற்சிகள் மற்றும் விளைவுகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, "இந்தியாவில் ஏற்பட்ட இப்புரட்சியை ரஷ்யப் பொது மக்களில் முற்போக்கானவர்கள் வரவேற்றனர். தங்கள் நாட்டிற்கு வரப்போகும் விடுதலைச் சூறாவளியின் முன்னோடியாக அதைப் பார்த்தனர். சோவியத் அறிஞர்களைப் பொருத்தமட்டில் இந்தியப் புரட்சி என்பது தனிப்பட்ட நிகழ்ச்சியே அன்று. இந்தியாவில் எழுந்த புரட்சியும், சீனாவில் தோன்றிய தைபிங் புரட்சியும், ஈரானில் எழுந்த பாபிசமும், இந்தோனேசியாவில் கிளர்ந்தெழுந்த விடுதலை இயக்கமும் ஆகிய அனைத்தும் தங்களின் தாய்நாடுகளை குடியேற்ற நாடுகளாக மாற்றும் முயற்சிகளைக் கண்ட மக்களின் எதிர் நடவடிக்கைகளையே பிரதிபலித்தன' என்று பதிவு செய்யப்பட்ட செய்தியானது, உலகைக் குலுக்கிய, உலக அரசியலையே புரட்டிப்போட்ட அக்டோபர் புரட்சிக்கான அடித்தளத்தையே இந்தியாவில் நடந்த 1857 புரட்சி அமைத்ததற்கான பெருமைமிகு தொனியை நமக்குள் உணர்த்துகிறது.
அடுத்தடுத்து சொல்லப்படுகின்ற "பனி நாட்டில் பாஞ்சாலச் சிங்கமான – துலிப்சிங்கின் வீரம் செறிந்த முயற்சிகள், குகாப் புரட்சி மற்றும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்திட்டம் தீட்டிட இந்திய மன்னர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பிய தூது முயற்சிகள் என உறைய வைக்கின்ற பல்வேறு விவரங்களை அடுக்கியிருக்கும் நூலாசிரியர், ்இந்தியாவிலுள்ள விவசாயிகள் தங்களுக்காக வாதாடக்கூடிய நண்பன் என்று ரஷ்யாவைக் கருத வேண்டும், ஏனென்றால் விவசாயிகள் சொத்துரிமைத் தத்துவத்தை ரஷ்யா வலியுறுத்துகிறது' என்ற அவர்களின் கருத்தினை வைப்பதன் வாயிலாக இருநாட்டிற்கான அரசியல் பொதுத் தன்மையையும் நமக்கு உணர்த்துகிறார். அடுத்ததாக வருகின்ற மிக முக்கியமான நான்காவது பாகம் "1905 - புரட்சிக்கு முன்பாக' என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. இதில், உலகளாவிய உயிர்களுக்கான சமத்துவத்திற்குப் பாடுபட்ட இந்தியாவின் முதல் சோசலிஸ்ட் சிந்தனையாளர் சுவாமி விவேகாநந்தர், இந்தியப் புரட்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவரும் விவேகாநந்தரின் சகோதரருமான டாக்டர் பூபேந்திரநாத் தத்தா, லாலா ஹரிதயாள் ஆகியோரின் மூவரின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னெடுப்புகள், சோசலிசம் மலரவேண்டி மேற்கொண்ட மெனக்கெடல்களை விரிவாக வைப்பதோடு மட்டுமல்லாமல், விவேகாநந்தரின் ஆன்மீக அரசியல் நடவடிக்கைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை, முற்றிலும் புதிய கோணத்தில் சமரசமின்றி அற்புதமாக வைத்திருக்கிறார் நூலாசிரியர்.

தோழர் நல்லகண்ணுவின் அணிந்துரையில் சொன்னதைப் போல, இந்த நான்காவது பாகத்தினை மேலும் செழுமைப்படுத்தி தனி நூலாகவே வெளியிடலாம் என்றால் அது சாலப்பொருத்தமான ஒன்றாகும். ஏனெனில், இந்திய ரஷ்ய உறவிற்கான மேன்மை பொருந்திய பாலத்தை இந்தத் தலைவர்கள் திறந்த மனத்தோடு உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை வருங்காலத்திற்கு சுட்டிக்காட்டிய பாங்கே அதற்கு சாட்சியாக அமைந்திருக்கிறது. விவேகாநந்தரின் எண்ண ஓட்டத்தில் மலர்ந்த ஒரு கருத்தாக ஆசிரியர் சுட்டிக்காட்டியிருப்பதில் ஒன்றை இங்கே எழுதுவது சிறப்பாக இருக்கும்,

"பெருமளவு மக்கள் இயக்கங்களை நடத்தி மக்களிடையே விழிப்புணர்ச்சியை உருவாக்கிச் சமுதாயத்தை மாற்ற முயலவேண்டும். இந்தியாவில் உருவான சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தோல்வியடைந்ததற்கு முக்கியமான காரணம் சமுதாயத்தில் உள்ள மேல்தட்டு மக்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் அடங்கிவிட்டதுதான். அடித்தளத்திலுள்ள மக்கள் சமூக மாறுதலுக்கான புரட்சிகரமான நடவடிக்கைகளில் உற்சாகமாகப் பங்குகொள்ளாமல் எந்தச் சமூகமும் புரட்சிகரமான மாற்றத்தை அடைய முடியாது'

"ரஷ்யப் புரட்சிகளும் இந்தியாவில் எதிரொலியும்' என்ற தலைப்பில் ஐந்தாவது பாகமாகவும், "கைகோர்த்த தொழிலாளி வர்க்கம்' என்ற தலைப்பில் ஆறாவது பாகமாகவும் இருக்கின்ற பதிமூன்று பகுதிகள், இதற்கு முன்னால் இருக்கின்ற நான்கு பாகங்களையும் அடுத்ததாக வரவிருக்கின்ற மீதமிருக்கின்ற எட்டு பாகஙகளையும் இணைக்கின்ற புள்ளியாக அமைந்திருக்கின்றது என்றே சொல்லலாம். கடுமையான அடக்குமுறைக்கு ஆட்பட்டுவிட்ட இந்திய - ரஷ்யத் தொழிலாளி வர்க்கமானது எவ்வாறு பரஸ்பரம் தத்தமது அன்பையும், உதவிகளையும் பரிமாறிக்கொண்டன என்பதை நெகிழ்ச்சியுடன் நாம் பார்க்க வைக்கின்ற பகுதியாக இவைகள் இருக்கின்றன. மேலும், அக்டோபர் புரட்சியின் நேர்மறை விளைவு இந்தியப் புரட்சியாளர்களுக்கு எத்தகைய வகையில் உதவியது, அதன் மூலமாக இந்தியப் புரட்சியாளர்கள் பெற்ற படிப்பினைகள், மேற்கொண்ட நடவடிக்கைகளை சுருதி பேதமின்றி புரிந்துகொள்ள உதவியாக இருக்கின்ற பகுதிகளாகவும் இருக்கின்றன. ்இந்தியாவில் ஏற்படும் புரட்சி உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், சுதந்திர இந்தியா இல்லாமல் உலகில் அமைதி இல்லை' என்ற ரஷ்யத் தரப்புக் கருத்தானது இன்றைய இந்தியாவிற்கும், சர்வதேச நாடுகளுக்கும் பொருந்திப் போகின்ற வியப்பினை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.

சோவியத் அரசு வெளியிட்ட உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதற்கான சட்டமும், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்த சட்டமும் இந்திய மக்கள் மத்தியில் மகத்தான எழுச்சியைத் தோற்றுவித்ததோடு மட்டுமல்லாது, உலகளவில் ரஷ்யாவின் மதிப்பீட்டை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த நிலை தந்த நிர்பந்தமானது, அப்போதைய அமெரிக்க குடியசுத் தலைவரான வில்சனை 14 அம்சத் திட்டம் ஒன்றை வெளியிட வைத்தது. இருப்பினும், தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமை பற்றியத் திட்டம் அதிலே இணைந்திடாத வகையில் கவனங்கொண்டுள்ளார் என்ற செய்தியானது, அமெரிக்காவின் என்றும் மாறாத ரத்த வகையை நமக்கு உணர்த்துகிறது. இந்தப் பகுதிகளில் புரட்சிக்குச் சொந்தக்காரரான லெனின் பற்றிய மகாத்மா காந்தியின் நிலைப்பாடும் மதிப்பீடும், காந்தி பற்றிய லெனினின் மதிப்பீடும் நிலைப்பாடுகளும் வைக்கப்பட் டிருப்பதையும், அவைகள் ஒன்றுக்கொன்று அடக்கத்துடன் புன்னகைத்துக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது. ஐந்தாவது பாகத்தில் உள்ள பத்தாவது பகுதியில், "வங்காளத்தில் அனுசீலன், யுகாந்தர் ஆகிய இரு அமைப்புகள் இயங்கி வந்தன. முதலாவது உலகப்போரின் போது இந்தியாவில் ஒரு புரட்சியை உருவாக்க அக்கட்சிகள் திட்டமிட்டன. ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் அக்கட்சிகளின் சார்பில் சென்ற தூதுவர்கள் ஆயுதங்கள் பெறுவதற்கும் அன்னிய அரசுகளின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சி செய்தனர், 1912ல் இவ்விரு கட்சிகளுக்கும் புகழ்பெற்ற புரட்சிக்காரரான ராஷ்விசாரிபோஸ் முதலில் தலைமை தாங்கினார். பின்னாட்களில் இவ்வியக்கத்திற்கு சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்கினார்' என்ற செய்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் ஐந்தாவது ஆறாவது என்றுள்ள இவ்விரண்டு பாகங்களும் அக்டோபர் புரட்சிக்கு முன்பும் பின்புமான இருநாட்டு நிலைகளையும், அதனூடாக இந்திய சுதந்திரப் புரட்சி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும், அதனை பிரிட்டிஷ் இந்திய அரசு அடக்கி வெற்றிகண்டதையும், பல்வேறு சதிவழக்குகள் அதன் விளைவாக பதியப்பட்டதையும், கிளர்ந்தெழுந்த புதுப்புது இந்திய சுதந்திர இயக்கங்கள் பற்றியும், அதனை வழிநடத்திச் சென்ற தன்னலமிக்க வீரர்கள் பற்றியும், ரஷ்ய இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கிடையிலே மலர்ந்த நேச உறவுகளையும் மிக விரிவாக ஆராயத்தூண்டுகின்ற வகையில் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர்.

தகவல் களஞ்சியமாக அமையப்பெற்றுள்ள பாகம் ஏழு மற்றும் எட்டில் மொத்தம் பத்து பகுதிகளில், சோவியத் நாட்டில் இந்தியப் புரட்சியாளர்கள் வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள இந்தியப் புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்கிய வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, சோவியத் நாட்டில் தஞ்சம் புகுந்து அந்நாட்டின் தத்துப்புத்திரராக ஆகிவிட்ட அபானி முகர்ஜி, 1919 மே 7ம் தேதி லெனினைச் சந்தித்த பெருமிதத்துக்குச் சொந்தக்காரர் இராஜா மகேந்திர பிரதாப், மாபெரும் தலைவர் லெனினைச் சந்தித்த முதலாவது தமிழன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான எம்.பி.டி.பட்டாச்சாரியா, பல்வேறு தடைகளைக் கடந்து ரஷ்யா நோக்கி பயணமாகி அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்ட சிலரில், மொழியியல் அறிஞராக அறியப்பட்ட தாவூத் அலி தத், மாஸ்கோவில் உள்ள கீழைத்திசையியல் கல்லூரிப் பட்டப்படிப்பு மாணவராக இருந்தபோது கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்தலக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பன்மொழி வித்தகரும், இரண்டாம் உலகப்போருக்கு முன் பாதுகாப்புக் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலேயே இறந்து போனவருமான நிஜார் முகமது, சோவியத் படைத் தோழர்களால் மாஸ்டர் என்றழைக்கப்பட்ட மாஸ்டர் அப்துல் ஹமீத், சோவியத் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய அமீன், கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் சேர்ந்து பணியாற்றிய நிஜார் அச்சோவ், மாஸ்கோவில் இருந்தபோது வாகன ஓட்டியாக இருந்துகொண்டு பட்டம் படித்த குருபத்ஷ் சிங், இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் கவிஞரும், படைப்பாளியாக அறியப்பட்டவரும் மாஸ்கோ கீழ்த்திசை மொழிக் கல்லூரியில் இந்திய மொழித்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டவருமான கவிஞர் ஊபா, மாஸ்கோவிலுள்ள அரசு இலக்கிய பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்த லூகானி, மாஸ்கோவில் வேதியல் தொழிற்சாலையில் பணியாற்றிய பிரேம்சிங் கில் என்ற மிஜேயில் ஜவ்நோவிச் குரோமோவ் மற்றும் செஞ்சேனையில் சேர்ந்து போராடிய எழுபதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் ஆகியோர்கள் குறித்த விவரங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் "சோவியத் நாட்டில் இந்திய புரட்சியாளர்கள்' என்ற ஏழாம் பாகத்தில் பதிவு செய்திருப்பது, தனித்தன்மை வாய்ந்த ரஷ்யப் புரட்சியின்பாலான ஈர்ப்பினை இந்தியப் புரட்சியாளர்கள் உள்வாங்கிக்கொண்ட உளவியல் பின்னணியையும், இது எவ்வாறு இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உதவியது என்பதையும் அழகாக உணர்த்துகிறது.

இந்திய சுரந்திரப் போராட்ட உணர்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ரஷ்யப் புரட்சியானது உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட நாட்டு மக்களின் விடுதலைச் சிந்தனையை ஒரு குடைக்குள் ஒருங்கிணைத்த அதிசயத்தைக் கண்ட அன்றையக் காலக்கட்டத்தில், ரஷ்ய மண்ணில் நிலவி வந்த சமூக இணக்கத்தினை இந்திய இடதுசாரி மற்றும் இடதுசாரி அல்லாத இஸ்லாமியர்கள் கண்டு கொண்டதை சுட்டிக் காட்டியிருக்கின்ற வகையில் அமைந்திருக்கின்றது எட்டாம் பாகம். இந்திய முஸ்லீம் லீக்கின் இடதுசாரி அணிச் சகோதரர்களான அப்துல் ஜாபர் கெய்ரி மற்றும் அப்துல் சத்தார் கெய்ரி ஆகிய இருவரும் 1918 நவம்பர் 23ல் லெனினைச் சந்தித்திருக்கிறார்கள். மேலும் இஸ்லாமியப் பேராசிரியர் பருக்கதுல்லா ரஷ்ய முஸ்லீம்களிடையே உரையாற்றும்போது, "முஸ்லீம் தோழர்களே! சோவியத் மக்களுடன் இணைந்து நின்று பாடுபடுவது உங்க ளுடைய தலையாய கடமை என்பதை நினைவில் நிறுத்துங்கள். ஏனென்றால் அவர்கள் தோல்வி அடைவார்களேயானால் கிழக்கு நாடுகளையும் உலகம் முழுவதையும் விடுவிப்பதற்குரிய கடைசி நம்பிக்கையையும் நீங்கள் இழந்து விடுவீர்கள். உங்கள் விடுதலைக்காகவும் உங்களின் நலன்களைப் பாதுகாப்ப தற்காகவும் போராடிய செஞ்சேனையில் சேர்ந்து போராடுங்கள்' என்றார்.

"லெனினும் இந்திய விடுதலைப் போரும்' என்ற தலைப்பில் நாற்பது பக்கத்திற்கும் மேல் உள்ள ஒன்பதாம் பாகம் இந்தப் புத்தகத்தின் சிறப்புக்கு மேலும் பெருமை சேர்க்கிறது எனலாம். இந்தியாவின் மீதும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மீதும் தீர்க்கதரிசியான லெனினின் பார்வை எவ்வாறு இருந்தது என்றும், இந்திய சுதந்திரப் போராட்ட முன்னகர்வுக்கு தன்னுடைய ஆலோசனைகளையும், உதவிகளையும் எந்த அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்திருந்தார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் இதில் உள்ள ஆறு பகுதிகள் இருக்கின்றன. 1915 பிப்ரவரி 15ல் சிங்கப்பூரிலிருந்த இந்திய ராணுவம் நடத்திய புரட்சியை வியந்து நோக்கிய லெனின், புரட்சிக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே தம்மைச் சந்தித்துப் பேசிய மேடம் காமாவை "ஜோன் ஆஃப் ஆர்க்' குடன் பொருத்திப் பார்த்த லெனின், "ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் தேசியவாதிகளானாலும் கம்யூனிஸ்டுகளானாலும் மிதவாதிகளானாலும் புரட்சிவாதிகளானாலும் அவர்கள் அனைவரும் தமக்குள் ஒன்றுபட்டு அய்க்கிய முன்னணி அமைத்துப் போராட வேண்டும். அடிமைப்பட்டுக் கிடக்கும் காலனி நாடுகளில் உள்ள முதலாளித்துவ ஜனநாயக தேசிய இயக்கங்களுக்குக் கம்யூனிஸ்டு அகிலம் ஆதரவு தர வேண்டும்' என்ற தன்னுடைய கருத்தை மறுத்த எம்.என்.ராயின் நிலைப்பாட்டை பொறுமையுடன் பார்த்த லெனின், இந்தியாவில் ஏவிவிடப்பட்ட அடக்குமுறைகளைக் கண்டு, "முன் எப்போதும் இல்லாத படுகொள்ளையின் எதார்த்த வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய நிலையை அங்கு காணலாம். இத்தகைய வர்க்கங்களின் கொள்கை இதுவேயாகும். இப்போது நடைபெறும் போர் அதனுடைய தொடர்ச்சியே ஆகும்' என்று தற்போதும் வேறு வடிவத்தில் நடத்திக்கொண்டிருக்கின்ற, 2015ன் இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் நடைமுறையை அப்போதே கணித்த லெனின், ஆசியாவின் விழிப்புச் சகாப்தத்தில் இந்தியா முதலிடம் வகித்திருந்ததை கண்டுணர்ந்த லெனின், தன் தலைமறைவு வாழ்க்கையை நீலக்குறிப்பேடாக வெளியிடவைத்ததைப் போல, இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டுவந்த காலனி ஆதிக்கக் கொள்கையை அம்பலப்படுத்துகின்ற வகையில் "நீலப்புத்தகம்' ஒன்றை சோவியத் அரசு வெளியிட வைத்த லெனின் என - ஒரு அகன்ற, விசாலமான தொலைநோக்குப் பார்வையை இந்தியாவின் மீது செலுத்திய லெனினை இப்பாகம் முழுமைக்கும் உலவவிட்டிருக்கிறார் நூலாசிரியர்.

உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கதாநாயகன், புரட்சிப் பாதையில் நடைபோடத் துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் மாயாஜால மந்திரச் சொல், பாட்டாளி வர்க்கத்தின் இரும்புக்கரம், தத்துவஞானிகளுக்கெல்லாம் தலைமைத் தத்துவன், சோசலிசத்திற்கான தன்னுடைய தத்துவத்தினை தன் நாட்டின் கடைக் கோடி மக்களிடமும் கொண்டு சேர்த்ததோடு அதனை நடைமுறைப் படுத்தி, செழிப்பையும், வளர்ச்சியையும் நிரூபித்துக்காட்டிய ஒரே தலைவனான, அந்த உன்னதத் தலைவனான மாமேதை லெனினைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களிலெல்லாம், "லெனின் அவர்கள்' என்று நூலாசிரியர் குறிப்பிடும்போது லெனின் பற்றி அவர் அடைந்திருக்கும் பிரமிப்பை நமக்கும் உணர்த்த வைக்கிறார். அதனூடாகவே, நூற்றாண்டைக் கடந்து நடக்கவிருக்கின்ற அரசியல் நடைமுறையை முன் கணித்த லெனின், இந்தத் தவறு நடக்கும், அந்தத் தவறினால் சோவியத் ஒன்றியம் உடையும் என்பதையும் கணித்திருக்கக் கூடாதா என்ற ஏக்கம் நமக்கு இயல்பாகவே எழுகிறது. எத்தனையோ தலைவர்கள், புரட்சியாளர்கள், அறிவியலாளர்ள், விஞ்ஞானிகள் என இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்குப் போய் லெனினைப் பார்த்திருந்தாலும், அவரிடம் ஆலோசனைகளைப் பகிர்ந்து வந்தாலும், இந்தியாவிற்கே வந்திராத லெனினின் இந்தியா மீதான பார்வையும், அனுமானமும் அக்கறையும் பிரபஞ்ச அதியங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

நூலின் பத்தாவது பாகமான அதில் உட்பிரிவாக அ,ஆ,இ,ஈ என்றும் அதில் ஒவ்வொன்றிலும் உள்ளடக்கமாக பத்தொன்பது பகுதிகளான நூறு பக்கங்களில் அமைந்துள்ள இப்பாகத்தை மகத்தான பங்களிப்பாக இந்நூலுக்குச் செய்திருக்கிறார் ஆசிரியர். ரஷ்யப் புரட்சியுடன் தன் மனதையும் ஆன்மாவையும் லயிக்கச் செய்து, அதன் காரிய விளைவாக இந்திய சுதந்திரப் புரட்சியை நடத்திய முக்கியத் தலைவர்களான விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய், திலகர், காந்தியடிகள், நேரு, இந்திரா பிரியதர்ஷினி, மாவீரன் பகத்சிங், நேதாஜி ஆகிய தலைவர்கள் பற்றியும் அவர்களுக்கான இந்திய ரஷ்ய உறவுகள் பற்றியும், அக்டோபர் புரட்சியின்பால் அவர்களது பார்வை, அந்தப் புரட்சியின் வீச்சை இந்திய சுதந்திரத்திற்காக எந்த வகையில் பயன்படுத்தினார்கள், எதிலிருந்து முரண் பட்டார்கள், எதையெல்லாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்தார்கள் என்ற விரிவான விவரணைகளைக் கொண்ட இந்த பத்தாவது பாகம் ரஷ்யப் புரட்சியின் பின்னணியில் அதன் நினைவுகளுடனும், அது சர்வதேசத்திற்கு காட்டுகின்ற அரசியல் தெளிவுடனும், மார்க்சிய லெனினியக் கோட்பாட்டைச் சுமந்துகொண்டும் (சுகமான சுமை) இந்தியா முழுமைக்கும் நம்மை பயணிக்கத் தூண்டுகிறது.

விபின் சந்திரபாலர் மகாகவி பாரதியின் அழைப்பை ஏற்று சென்னை வந்து அவரைச் சந்தித்ததையும், சென்னையில் பல கூட்டங்களில் அவர் உரையாற்றியதையும், லாலா லஜபதிராயின் வீரம் செறிந்த முன்னெடுப்புகள், "ரஷ்ய ஒடுக்குமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் சட்டபூர்வமான அரசாங்கம் என்பது இராணுவக் கொடுங்கோலாட்சியாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த முறைகளை அரசு மாற்றிக்கொள்ளாவிட்டால் ரஷ்ய முறைகளையே பிரிட்டிஷ் அரசு கடைப்பிடிக்கிறது என மக்கள் நினைப்பார்கள். இந்த அடக்குமுறைகள் நீடித்தால் ரஷ்ய அரசாங்கத்திற்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை என்று மக்கள் கருதுவார்கள்' என்று சொன்ன திலகர் பற்றியும், காந்தியடிகளுக்கும் டால்ஸ்டாயிக்குமான உறவு, அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்துப் பரிமாற்றங்கள், டால்ஸ்டாயை காந்தியடிகள் தமது குருநாதராக மதித்துவந்ததன் இலக்கிய அரசியல் பின்னணி, காந்தியடிகள் ரஷ்யப் புரட்சியின் பாலான தன்னுடைய அபிமானத்தையும் விமர்னத்தையும் லெனின் எப்படிப் பார்த்தார், காந்தியடிகள் ரஷ்யப் புரட்சியிடம் கற்றுக்கொண்ட தீரத்திற்கு எந்த மாதிரியான மறுவடிவம் கொடுத்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அஹிம்சையைக் கடைப்பிடித்தார் போன்ற எண்ணற்ற விவரங்கள் தொடர்ச்சியாக மடைதிறந்த வெள்ளமாக இப்பகுதி முழுமைக்கும் வந்துகொண்டே இருக்கின்றது.

 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.