முனைவர் ந. அரணமுறுவல் மறைவு - பழ.நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 12:03

உலகத்தமிழ்க் கழகத்தின் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளருமான முனைவர் ந. அரணமுறுவல் அவர்கள் 6-11-2015 அன்று மாரடைப்பினால் காலமான செய்தியறிந்து சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்தேன்.

கடந்த நவம்பர் முதல் நாளன்று காரைக்குடியிலும், தேவக்கோட்டை யிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் என்னுடன் பங்கெடுத்துக்கொண்டு நெல்லை செல்வதாக விடைபெற்றுச் சென்றார். அதுதான் அவரை நான் இறுதிமுறையாகப் பார்ப்பது என்பதை அறியாமல் போனேன்.

Aranamuruval

தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழீழம் சார்ந்த தொண்டுகள் அத்தனையிலும் எனக்குத் தோள்கொடுத்து துணை நின்றவர். எனக்கு மட்டுமல்ல தமிழறிஞர்கள், தமிழ்த்தொண்டர்கள் அனைவரோடும் நெருங்கிப் பழகி அவர்களுடன் இணைந்து தொண்டாற்றிய பெருமைக்குரியவர்.

தமிழ்த்தேசிய அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும் என என்னை இடைவிடாது வற்புறுத்தி அதற்கான கூட்டத்தை கூட்டச் செய்து, 80க்கும் மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளை இணைப்பதற்கும், தமிழர் தேசிய முன்னணி உருவாவதற்கும் அடித்தளம் அமைத்தவர்.

ஓய்வு என்பது அவர் அறியாததாகும். அவருடைய பேச்சும், மூச்சும் தமிழுக்காகவே இருந்தது. தமிழகமெங்கும் அவர் தூவிய தமிழ்த் தேசிய விதைகள் முளைத்து எண்ணற்ற இளைஞர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்களை வளர்த்து செழுமைப்படுத்துவதின் மூலம் தமிழ்த் தேசிய வெற்றியைப் பெறமுடியும். அதுதான் அவருக்கு நாம் ஆற்றும் நன்றிக்கடனாகும்.

அவரது மறைவினால் வருந்தும் அவரது துணைவியார் கண்ணம்மை, மகள் இறைமொழி, மகன் அறிவுக்கனல் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2015 12:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.