முள்ளிவாய்க்கால் - நெஞ்சம் மறக்குமோ |
|
|
|
புதன்கிழமை, 19 மே 2010 18:50 |
முள்ளிவாய்க்கால். நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. மே 16ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சிதான் என்பது உறுதியாகிறது. அன்று நள்ளிரவில் சிங்கள இராணுவம் தனது கொலைவெறித் தாக்குதலை எப்போதும் இல்லாத வேகத்துடன் தொடங்கியது.
மே 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களில் வான் வழித் தாக்குதல், கனரக ஆயுதங்களிலிருந்து பொழியும் குண்டுமழை கடலில் உள்ள போர்க் கப்பல்களிலிருந்து எறிகணை வீச்சு என மக்கள் தப்பிக்க இயலாத வகையில் தாக்குதல் தொடர்கிறது. அங்குமிங்கும் ஓடி பதறித் துடித்தபடி பெற்ற குழந்தைகளை அணைத்தவண்ணம் தாய்மார்கள் அலறிச் சாகிறார்கள். எங்கும் மரண ஓலம். அந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழக்கிறார்கள். படுகாயத்துடன் எழுந்து ஓடமுடியாத நிலையில் கீழே கிடந்தவர்கள் சிங்கள இராணுவத்தினரால் உயிரோடு புதைக்கப்படுகிறார்கள். உலக வரலாற்றில் இப்படியொரு வெறித்தனமான இனப்படுகொலை நடைபெற்றதேயில்லை. போர் குறித்த ஜெனீவா ஒப்பந்தங்களை இலங்கை இராணுவம் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்தது. குறிப்பாக போரின் இறுதி ஐந்து மாதங்களான சனவரி முதல் மே 2009 வரை ஆன காலக்கட்டத்தில் மிகக்கொடூரமான போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்கவில்லை. அரசு அறிவித்த பாதுகாப்பு வலையங்கள், இராணுவம் அறிவித்த தாக்குதல் அற்ற வலையங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும், இராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல்களும், அதன் விளைவாக மக்கள் மட்டுமல்ல, மக்களுக்குத் தொண்டு செய்ய வந்த மருத்துவர்களும், தொண்டர்களும் கொல்லப்பட்டார்கள். ஜெனீவா உடன்பாட்டின்படி தடைசெய்யப்பட்ட கொத்து குண்டுகள். வெள்ளைப் பாஸ்பரஸ் குண்டுகள், நாபாம் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது அம்பலமாயிற்று. எரிந்த காயங்களுடன் ஏராளமான மக்கள் ஓடிவந்தபோது சிகிட்சை அளித்த மருத்துவர்கள் இதை உறுதி செய்தார்கள். உயிரற்ற உடல்களில் காணப்பட்ட காயங்களும் இதை உறுதிசெய்தன. தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு மட்டும் இராணுவத்தினரின் வெறி அடங்கவில்லை. தமிழர் பகுதிகளிலிருந்த குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கோயில்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன. தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழித்ததின் மூலம் மீண்டும் அங்கு தமிழர்கள் தலையெடுக்கவிடக்கூடாது என்பதே அவர்களின் எண்ணமாகும். இது அராபியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் கையாண்டத் தந்திரமாகும். 2006ஆம் ஆண்டு லெபனான் போர் நடைபெற்ற காலத்தில் அராபியர்களின் எண்ணிக்கைக்கு பன்மடங்கு அதிகமான படைகளை ஏவி அந்த மக்களை மட்டுமல்ல, அவர்களின் கட்டமைப்புகளையும் அடியோடு நாசம் செய்தது இஸ்ரேல். தாஹியாத் தத்துவம் (உஹட்ண்ஹ உர்cற்ழ்ண்ய்ங்) என அழைக்கப்பட்ட இதே தந்திரத்தை தமிழர்களுக்கு எதிராக சிங்கள இராணுவம் கையாண்டது. போர் முடிந்த பிறகு ஐந்து மாத காலத்திற்கு மேலாக வன்னிப் பகுதியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் சிறிது சிறிதாக சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டனர். முகாம்களில் அதிகமான எண்ணிக்கையில் அடைக்கப்பட்டு பாதுகாப்பான உணவு, நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அவர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகினர். இம்முகாம்களுக்குள் நடைபெற்ற கொடுமைகள் வெளி உலகத்திற்கு தெரியாத வகையில் அடியோடு மறைக்கப்பட்டன. அய்.நா., சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இம்முகாம்களில் நுழைய அனுமதிக்கப்படவேயில்லை. முகாம்களிலும் அழிக்கப்பட்ட கிராமங்களிலும் அரசால் நடத்தப்பட்ட நலன்புரி கிராமங்களிலும் இராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை. மனித குலத்திற்கு எதிரான குற்றமாக ரோம் சட்டத்தில் குறிப்பிடப்படும் இது கருக்கலைப்பு, குடும்பப் பெருமைக்கு இழுக்கு, அவமானம், மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். உலகெங்குமுள்ள மனித உரிமை அமைப்புகளும் ஊடகங்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தபோது, அவர்களை ஏமாற்றுவதற்காக இராசபக்சே தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் துணையுடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டு இந்த முகாம்களில் பார்வையிட்டு அளித்த அறிக்கை இராசபக்சேவுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உலக ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் முகாம்களை பார்வையிட அனுமதிக்காத இராசபக்சே கருணாநிதி அனுப்பிய குழுவை மட்டும் பார்வையிட அனுமதித்ததின் இரகசியம் புரியாதது அல்ல. உலக நிர்ப்பந்தத்தின் விளைவாக முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் அவரவர் ஊர்களுக்குத் திரும்பியபோது அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் குடியிருப்புகள் தரைமட்டமாக்கப்பட்டு இருந்தன. அவர்களின் விவசாய நிலங்களில் சிங்களர்கள் பயிரிட்டுக்கொண்டிருந்தார்கள். இருக்க இடமும் இல்லாமலும் தொழில் செய்ய முடியாமலும் அவர்கள் படும் அவலம் சொல்ல முடியாதது ஆகும். தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தீவிரமாக நடைபெறுகிறது. கடற்கரையோார கிராமங்களில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு அவர்கள் மீன்பிடித் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ் மீனவர்கள் கடற்பக்கம் செல்லவிடாமலேயே தடுக்கப்பட்டுள்ளனர். சொந்த மண்ணிலேயே தமிழர்கள் வாழவழியின்றித் தவிக்கின்றனர். இலங்கையில் நடைபெற்ற கொடூர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில் 2010ஆம் ஆண்டு சனவரி 14 முதல் 16 வரை கூடி நடத்திய விசாரணையின் முடிவில் மேலே கண்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை உறுதி செய்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேசச் சட்டப் பேராசிரியரான பிரான்சிஸ் பாய்ல் பின்வருமாறு கூறியிருக்கிறார். 1948ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட இனப்படுகொலை உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள. 140 அரசுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேலானது இலங்கை மீது ஹேக் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் அந்நீதிமன்றம் அவசர விசாரணை நடத்தவேண்டும். என வற்புறுத்தியுள்ளார். இது நடக்குமா? நடக்கக்கூடியதா? என்ற அய்யம் எழுகிறது. ஏன் என்றால் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியா உட்பட பல நாடுகள் சிங்கள இராணுவத்திற்கு ஆயுத உதவியும் பொருளாதார உதவியும் செய்து வருகிற நாடுகள். இனப்படுகொலைக்கு துணை நின்ற நாடுகள். இந்த நாடுகள், இத்தகைய புகாரை இலங்கைக்கு எதிராக ஒருபோதும் செய்ய முன்வராது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது மேற்கு வல்லரசுகள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற வல்லரசுகள் சிங்கள அரசுக்கு எல்லா வகையிலும் உதவிக்கொண்டிருந்தன. இப்போது மட்டுமல்ல, கடந்த காலத்திலும் வல்லரசுகளின் நடவடிக்கைகள் இப்படித்தான் அமைந்தன. 20ஆம் நூற்றாண்டின் நெடுகிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் இனப்படுகொலைகளும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. முதலாம் உலகப் போரின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 15 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆர்மீனியர்களை ஓட்டமான் பேரரசு படுகொலை செய்தது. 1917ஆம் ஆண்டு அக்டோபரில் லெனின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் விளைவாக அமைந்த சோவியத் ஒன்றியத்தில் ஆர்மீனியர்களுக்கு விடிவு பிறந்தது. 1930ஆம் ஆண்டு முதல் 1940ஆம் ஆண்டு வரை யூதர்களை இனரீதியாக படுகொலை செய்வதை பாசிச ஜெர்மனி தனது அதிகாரப்பூர்வமான கொள்கையாகவும் வேலைத்திட்டமாகவும் கொண்டிருந்தது. ஆனால் இதைத் தடுக்க பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா போன்ற வல்லரசுகள் முன்வரவில்லை. ஹிட்லரின் நாஜிப் படைகள் இந்நாடுகளுக்கு எதிராகத் திரும்பிய பிறகே இந்நாடுகள் ஜெர்மனி மீது போர் தொடுத்தன. ஆனாலும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளைக் கைப்பற்றிய நாஜிப் படைகள் 120 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களையும் சிலேவிய இனத்தவர்களையும் படுகொலை செய்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் இருந்த வெள்ளையாட்சி நீக்ரோ மக்களை இனப்படுகொலை செய்தது. கருப்பின மக்களுக்கு எதிராக நிறவெறி ஒதுக்கல் கொள்கையைக் கையாண்டது. அமெரிக்காவும் பிரிட்டனும் இதைக் கண்டிக்கத் தவறின. கம்போடியாவில் இராணுவ சர்வாதிகாரியான போல்பாட் கும்பல் சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தது. 1994ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட துட்சி இன மக்கள் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளானார்கள். ஆனால் இதை ஒரு பொருட்டாகவே வல்லரசுகள் கருதவில்லை. 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் அப்பாவி அராபிய மக்களைக் குறிவைத்துத் தாக்கிப் படுகொலை செய்தது. இது குறித்து விசாரிக்க அய்.நா.வால் நியமிக்கப்பட்ட நீதியரசுர் ரிச்சர்ட் கோல்டு ஸ்டோன் தனது அறிக்கையில் இது மிகப்பெரிய போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் குற்றங்களை இழைத்துள்ளது என குறிப்பிட்டார். ஆனாலும் அய்.நா. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவில் போர்க் குற்றங்கள் புரிந்த நாஜித் தலைவர்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நூரம்பர்க் சர்வதேச நீதிமன்றமும் ஜப்பானிய போர்க் குற்றவாளிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட டோக்கியோ சர்வதேச நீதிமன்றமும் இனப்படுகொலை தண்டனைக்குரிய மிகப்பெரிய குற்றமாகும் எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை உட்பட கடும் தண்டனைகளை வழங்கியது. 1948ஆம் ஆண்டில் அய்.நா. பேரவையும் இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான சிறப்பு மாநாடும் இணைந்து ஒரு முடிவெடுத்தன. இந்த மாநாட்டின் இறுதியில் செய்யப்பட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகள் இனப்படுகொலை குறித்து சம்பந்தப்பட்ட அய்.நா. அமைப்புகள் முறையீடு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது. இனப்படுகொலையை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை அய்.நா. பட்டயத்தின்படி எடுக்கவேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டது. 1968ஆம் ஆண்டில் அய்.நா.வில் ஆதரவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவைகளின் கீழ் வகுக்கப்பட்ட விதிமுறைகளை இனப்படுகொலை குற்றத்திற்கும் எதிராகவும் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. 2003ஆம் ஆண்டு ஜனவரியில் சுவீடன் பிரதமர் ரிச்சர்டு பிரஸ்வர்டு என்பவர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கூடி இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அதை விசாரிப்பதற்காக உடனடியாக ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் இனப்படுகொலையைத் தடுப்பதற்கான சிறப்பு ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் அப்போது அய்.நா.வின். செயலாளர் நாயகமாக இருந்த கோபிஅன்னன் அறிவித்தார். இன்றுவரை அந்த அறிவிப்புகள் அறிவிப்போடு நின்றுவிட்டன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வல்லான் வகுத்ததே வாய்க்காலாக இருக்கிறது. ஒவ்வொரு வல்லரசும் ஒவ்வொரு சமயத்தில் இனப்படுகொலையாளருக்கு துணையாக நிற்கின்றன. எனவேதான் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டிய வல்லரசுகள் ஒப்புக்காக தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதோடு நின்று விடுகின்றன. இனப்படுகொலை உலகில் எந்த நாட்டில் நடந்தாலும் அதை தடுத்து நிறுத்தவோ அல்லது அதற்குக் காரணமானவர்களை தண்டிக்கவோ சர்வதேச சமூகம் அடியோடு தவறிவிட்டது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கண்டித்த மேற்கு வல்லரசுகள் அதைத் தடுத்து நிறுத்த முன்வராததற்கு இந்தியாவின் முட்டுக்கட்டைகள் முக்கியமான காரணமாகும். ஏனென்றால் அந்நாடுகளுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தை. இந்த சந்தையை இழந்து தங்கள் வணிக நலன் பாதிப்படையவிட மேற்கு வல்லரசுகள் தயாராக இல்லை. கடந்த 30 ஆண்டு காலமாக இலங்கையில் நடைபெற்ற போரில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் உயிரிழந்துள்ளனர். 10 இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அங்கிருந்து வெளியேறி அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். உள்நாட்டிலேயே 5 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு முகாம்களிலும் காடுகளிலும் சாலையோரங்களிலும் அவல வாழ்க்கை நடத்துகின்றனர். மொத்தத்தில் இலங்கையில் தமிழினத்தை மீண்டும் தலையெடுக்க விடாதபடி பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மக்கள் அய்.நாவையோ, உலக வல்லரசுகளையோ நம்பியிருக்கவில்லை. உலகம் முழுவதிலுமிருக்கிற தமிழர்களையே நம்பியிருக்கிறார்கள். தங்களின் சகோதரத் தமிழர்கள் ஒருபோதும் தங்களை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் குற்றுயிரும் குலைஉயிருமாக நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணில் நம்முடைய சகோதரர்கள் சிந்திய இரத்தம் வீண்போகக்கூடாது. அந்தக் கொடூரமான கொலை நிகழ்ச்சிகளை ஒருபோதும் நாம் மறக்கக்கூடாது. ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் அது சினத்தீயாக பற்றி எரியவேண்டும். அதை ஒருபோதும் அணைய விடக்கூடாது. இந்த சினத்தீ எதிரிகளையும், துரோகிகளையும் சுட்டெரிக்கும். ஈழத் தமிழர்கள் அவர்களின் சக்திக்கும் மேலான தியாகம் புரிந்துள்ளனர். அவர்கள் அனுபவித்தத் துயரங்களும் அனுபவிக்கிற துன்பங்களும் அவர்களின் உள்ளங்களில் வைரமேற்றியுள்ளன. தங்களது தலைமுறையிலேயே தங்களுக்கு விடிவு ஏற்படவேண்டுமென்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதற்காக சகல பரித்தியாகத்தையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? - தினமணி 19-05-2010
|