13-11-2013 அதிகாலை 5.36. மணி தூங்கியும் தூங்காமலும் புரண்டு புரண்டு படுத்திருந்த என்னை தலைமாட்டிலிருந்த என் கைப்பேசி சிணுங்கி அழைத்தது. எதிர்முனையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறனின் மகள் உமா பேசினார். "அப்பாவை இன்னும் கொஞ்சம் நேரத்தில் கைது செய்யப்போகிறார்களாம், மணியரசன் ஐயா தகவல் சொன்னார். உடனே கிளம்பி முற்றத்திற்கு போய்ச்சேருங்கள்" என்றார்.
(கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சையில் என் மனைவி மங்கையர்க்கரசியுடன் விடுதியில் தங்கியிருந்ததால் உமா அப்படி சொன்னார். ஆனால் அன்றைய இரவு நாங்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் முத்தமிழ் மண்டபத்தில் படுத்திருந்ததை உமா அறிந்திருக்க வாய்ப்பில்லை)
உமாவிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டு எனக்குள் இருந்த தூக்கம் விலகிச் சென்றது. இரவின் மீது போர்த்தியிருந்த இருளும், மெல்ல மெல்ல விலகிச் சென்று கொண்டிருந்தது. நான் முற்றத்தில் இருக்கும் செய்தியை உமாவிடம் தெரிவித்துவிட்டு, பக்கத்து அறையில் படுத்திருந்த அய்யாவின் மகிழுந்து ஓட்டுனர் ஆனந்திடம் ஓடிச்சென்று தகவலைச் சொன்னேன். எனக்கு முன்பே உமா ஆனந்திடம் தகவல் சொல்லி விட்டிருந்ததை அறிந்தேன். இருவரும் அய்யாவின் அறைக்குச் சென்று பார்த்தோம். அறையில் வெளிச்சமிருந்தது. அய்யா புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார். பிறகு சில மணித்துளிகள் ஆனந்திடம் பேசிவிட்டு அவரவர் அறைக்குச் சென்றோம்.
உறங்கிக் கொண்டிருந்த என் மனைவியை அவசரமாக எழுப்பி உமா கூறிய செய்தியைச் சொன்னேன். ‘இப்படியும் நடக்குமா!’ என்ற வினாக்குறி என் மண்டையைக் குடைய மார்கழி மாதத்தை நினைவூட்டும் அந்த கடுங்குளிர்காலையில் நான் மீண்டும் வெளியே வந்து முற்றத்தின் முகப்பைக் கவனித்தேன். ‘அப்படி எதுவும் நடக்காது’ என்பதுபோல முற்றத்தின் முகப்பு வெறிச்சோடிக் கிடந்தது.
முள்ளிவாய்க்கால் முற்றத் திறப்பு விழாவையொட்டி வந்த எங்களை விழா முடிந்த பிறகும் இரண்டு மூன்று நாட்கள் இருங்கள் என்று அய்யா சொன்னதின் பேரில் பகலில் முற்றத்திலும், இரவில் விடுதியிலுமாக எங்கள் பொழுது கழிந்தது. முற்றத்தினைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவதாலும், அவர்களை ஒழுங்கு செய்யும் பணியிலும், முற்றம் குறித்த படக் கையேடு விற்பனை செய்யும் பொறுப்பிலும் ஈடுபட்டிருந்தோம். நவம்பர் 12ம்தேதி இரவு முற்றத்தில் அய்யா தங்கியிருந்த குடிலில் அவருடன் சேர்ந்து நானும், என் மனைவியும் ஒன்றாகச் சாப்பிட்டது மறக்கமுடியாத அனுபவம். அன்று இரவு முற்றத்தில் அய்யாவும், அவரது துணைவியாரும் இருந்தனர். வேறொரு அறையில் ஓட்டுனர் ஆனந்த் மற்றும் காவலர் தங்கதுரை மட்டுமே இருந்ததால் என் மனைவி, "இன்று முற்றத்திலேயே தங்கிக் கொள்ளலாம். அய்யாவை விட்டுப் போகவேண்டாம்" என்று என்னிடம் வலியுறுத்தினார். இதை அய்யாவிடம் கூறியபோது "இங்கு உங்களுக்கு வசதிபடாது. நீங்கள் விடுதிக்கே சென்று தங்கிக் கொள்ளுங்கள், காலையில் வந்தால் போதும்" என்றார். ஆனாலும் முற்றத்தில் தங்கும் எங்களின் பிடிவாதத்தால், எங்களுக்கு பாயும் போர்வையும் தந்தார்கள்.
இப்படி நேற்றைய உரையாடல் நினைவுகள் இன்று அதிகாலையில் என் மனக்கண் முன் வந்து போக மீண்டும் நான் முற்றத்தின் வாயிலைப் பார்த்தேன். என் கண்கள் என்னை ஏமாற்றுகிறதா? என்று ஒரு கணம் சந்தேகப்பட்டேன், இல்லை. என் கண்கள் பொய் சொல்லவில்லை. எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விடும்போல் தெரிகிறது. 5 அடி உயர சுற்றுச் சுவருக்கு மேலே மனிதத் தலைகள் 5, 10, 20, 50, 100 என தலைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. உற்றுப்பார்த்த போதுதான் தெரிந்தது அத்தனையும் காக்கிக் தலைகள். இந்த அதிர்ச்சியிலிருந்து என் கண்கள் விலகாதிருந்தபோது காவலர் தங்கதுரை தலையில் அடித்துக்கொண்டே “அய்யா.. அய்யா... முற்றத்தை இடிக்கிறாங்கைய்யா” என்று அய்யாவின் அறையை நோக்கி ஓடியவரை தடுத்து நிறுத்தினேன். தன் உயிருக்கும் மேலாக முற்றத்தை நினைக்கும் அய்யா அவர்கள் இந்தக் கொடுங்காட்சியைக் கண்டால் அவரது உடலும் உள்ளமும் என்ன பாடுபடும், இதை எப்படி அவரால் தாங்கிக் கொள்ளமுடியும்? உலகத் தமிழர்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாய்த் திகழும் அய்யாவின் உயிர் முற்றத்தைவிட பெரிதல்லவா? என்ற என் சிற்றறிவுச் சிந்தனைதான் காவலரை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தது.
ஆனாலும் இந்த அநியாயத்தை என்னால் சொல்லாமலும் இருக்க முடியவில்லை அய்யாவின் அறையை நோக்கி ஓடினேன். வாயிற்படியில் அய்யாவின் செருப்பு இல்லை. விளக்கு, வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தது. கதவு தாழிட்டிருந்தது. எங்கே சென்றிருப்பார் என்று அறையின் வலதுபக்கம் வழியாக ஓடிச்சென்று பார்த்தேன். ஏமாற்றம். மீண்டும் அறையின் திசைநோக்கி ஓடிவந்தேன். இந்த நேரத்தில் என் கைப்பேசி ஒலித்தது. அய்யாதான் அழைத்தார். “எங்கே இருக்கிறீர்கள் அய்யா” என்று கத்தினேன். ஆனால் அய்யா என்னிடம் பேசாமல் “இடிப்பதை முதலில் நிறுத்துங்கள்” என்று கத்தும் குரலைக் கேட்டேன். எனக்குப் புரிந்து விட்டது அநியாயம் நடக்கும் இடத்தில் நீதிக்காக ஒற்றை மனிதராகப் போராடிக் கொண்ருப்பதை தெரிந்து முற்றத்தின் வெளிப்புறம் நோக்கி ஓடினேன்.
காவல் அதிகாரிகள் புடைசூழ நிற்க அவர்களிடம் “இடிப்பதை நிறுத்துங்கள்” என்று அய்யா காக்கி மிருகங்களிடம் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இருள் முழுவதுமாக வெளியேறிச் சென்ற அந்தக் காலைப்பொழுதில் அந்தக் காட்சியைப் பார்த்தேன். மூன்றாண்டுகளாக அய்யாவும், மற்ற தமிழ் உணர்வாளர்களும் பொதுமக்களிடமிருந்து குருவி சேர்ப்பது போல சேர்த்த தொகையில் பார்த்துப் பார்த்து கட்டிய முற்றத்தின் முகப்புச் சுவரை ஜேசிபி வாகனத்தைக் கொண்டு இடித்துத் தள்ளினார்கள். பூங்காவில் முளைத்த புற்களும், பூச்செடிகளும் ஜேசிபி வாகனத்தின் டயரில் அரைபட்டன. அய்யாவின் கால்களைக் கவனித்தேன். செருப்பு இல்லை. ஓடிவந்த அவசரத்தில் அவரது செருப்பு பூங்காவினுள் மூலைக்கொன்றாய் கிடந்தது, கொண்டுவந்து தந்தேன். (என் மனைவியிடம் தகவல் சொல்ல நான் உள்ளே சென்ற போது அய்யா வெளியே வந்திருக்க வேண்டும்.)
"எந்த முன்னறிவிப்புமில்லாமல் இப்படி இடிப்பது சரியா?" என்று காவல்துறையினரிடம் அய்யா கேள்வி எழுப்பியபோது, "இடிக்கும்போது பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்திரவு வந்துள்ளது" என்று கூறினார்கள். "அப்படியானால் யார் இதை இடிப்பது?" என்று கேட்டதற்கு நெடுஞ்சாலைத் துறையில் உதவி பொறியாளராகப் பணிபுரியும் மாரிமுத்து என்பவர் அய்யாவின் முன்வந்து நின்றார். அவரிடம் "அரசிடம் முறையாக அனுமதி பெற்றுத்தானே, சுற்றுச்சுவர் எழுப்பி, இங்கு பூங்கா அமைத்தோம். இப்போது யாரைக்கேட்டு இடிக்கிறீர்கள்?" என அய்யா கேட்டபோது "அனுமதியை ரத்து செய்து விட்டோம். அதனால் இடிக்கிறோம். இடிக்க எனக்கு உத்திரவிட்டது PWD-யின் D.E. புகழேந்தி தான்" என்றார்.
"சரி அனுமதியை ரத்து செய்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, அதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாமா? இப்படி அநியாயமாக வந்து அதிகாலை நேரத்தில் இடிக்கிறீர்களே! இடிப்பதற்கு முன்பாக எங்களுக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுக்க வேண்டாமா?" என்று அய்யா எழுப்பிய கேள்விக்கு மாரிமுத்து விழிபிதுங்கி நின்றார். "சட்டத்தை மதிக்காமலும், விதிமுறைகளைப் பின்பற்றாமலும் இப்படி அநீதியாக நடந்து கொள்ளும் உங்களை சும்மா விடப்போவதில்லை. சட்ட நடவடிக்கை உங்கள் மீதுபாயும்" என்று கோபமாக பேசிவிட்டு, "இவர்களுடைய பெயர்களையும், பதவியையும் குறித்துக்கொள்" என்று என்னிடம் கூறினார். இப்படி அய்யா சொன்னதும், அங்கிருந்த காவல் அதிகாரிகள் தொப்பியைக் கழட்டி தங்களுடைய பெயர் பொறித்த அட்டையை (நேம் பேட்ச்) மறைத்தார்கள். ஒரு சிலர் அதைக் கழட்டி பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்கள். இந்த சம்பவத்தின் போது நான் பார்த்த பல காவல்துறை அதிகாரிகளும், இப்படியே செய்தார்கள்.
ஒரு லாரியில் பணியாட்கள், மற்றொரு லாரியில் நடுகற்கள், வேறொரு லாரி முழுக்க கம்பி வலைகள் என உடனடியாக அங்கு இறக்குமதி செய்யப்பட்டன. 3 ஜேசிபி வண்டிகள் தங்களின் கோரப்பற்களால் பூங்காவை கடித்து குதறின. ஒரு கட்டத்தில் அய்யா இதைத் தடுக்க முற்பட்டபோது காவல்துறையினர் சூழந்து கொண்டு தடுத்தார்கள். அந்த நேரத்தில் அய்யா, என்னிடம் என்ன சொன்னாலும் செய்வதற்குத் தயாராக இருந்தேனே தவிர என்னால் வேறொன்றும் செய்ய முடியாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டு, மவுனசாட்சியாக இடிக்கும் காட்சியையும், அய்யாவையும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அய்யாவின் துணைவியாரும், என் மனைவியும் இடிப்பதைக் கண்டு வேதனையில் துடித்தார்கள்.
குடும்பத்துடன் முற்றத்திற்கு சாரைசாரையாக வந்து கொண்டிருக்கும் பொதுமக்களையும், அவர்களின் குழந்தைகள் முற்றத்தின் பூங்காவினுள் ஆசையாசையாக ஓடியாடி விளையாடுவது குறித்தும், அய்யாவிடம் முந்தையநாள் இரவு நான் சொன்னபோது அய்யா சொன்னார் "குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க பூங்காவினுள் நாம் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன. குழந்தைகள் விளையாட ஊஞ்சல், ராட்டினம், சறுக்குகள் போன்ற சாதனங்களை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கான பூங்காவாக எதிர்காலத்தில் அது திகழ வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு அடுத்த நாளே இடித்து நாசம் செய்துள்ளது. சென்னையிலிருந்த உமாவும், நடப்பதுகுறித்து கேட்டவண்ணம் இருந்தார். தஞ்சை தோழர்களுக்கு தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டும், என்னையும் மற்றவர்களிடம் பேசச் சொன்னார். "பத்திரிகையாளர்களுக்கு தகவல் சொல்லுப்பா" என்று அய்யா சொன்னதும், தஞ்சை தோழர்களுக்கு தகவல் சொல்லி சொல்லச் சொன்னேன். விழாவிற்காகத் தயாரிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரமைப்பு உடையை ஓட்டுனர் ஆனந்த அணிந்திருந்ததால் காவல் துறையினர் எளிதில் அடையாளம் கண்டு அவரை தனிமைப்படுத்தி சிறை வைத்தனர்.
அதிகாரிகளுடன் தொடர்ந்து கத்தியதாலும், கண் முன்னே நடக்கும் அநியாயத்தைக் கண்டும் அய்யாவினால் அதிகம் பேசமுடியாததைக் கண்டு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன், குடித்தார். இதேநேரத்தில் தகவல் தெரிந்து திரண்ட பல்வேறு இயக்கத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தொலைதூரத்திலேயே காவல் துறையினரால் தடுக்கப்பட்டார்கள். நாகை புறவழிச்சாலை மேம்பாலத்திலிருந்து இந்தக் கொடுமையைக் கண்ட பொதுமக்களையும், நடைபயிற்சி மேற்கொண்ட அப்பகுதி மக்களையும் காவல்துறையினர் தடிகொண்டு விரட்டியடித்தனர். வெவ்வேறு திசைகளிலிருந்து காவல்துறையினர் கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டனர்.
மிகவும் தளர்ச்சியாக இருந்த அய்யாவிடம் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுமாறும், நாற்காலி கொண்டுவருமாறும் என்னிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டார்கள். இதை அய்யா விரும்புவாரா என்று நான் அய்யாவைப் பார்த்தேன். அவர் ‘எடுத்துவாப்பா’ என்றார். பிறகு நாற்காலி கொண்டுவரப்பட்டது. இந்த நேரத்தில் சுற்றுச்சுவர், பித்தளை எழுத்தில் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய பெயர்பலகை, ஹைமாஸ் விளக்கு, செயற்கை நீரூற்று, பூச்செடிகள், முற்றத்திற்குச் செல்லும் கம்பிக் கதவுகள், குடிநீர் குழாய் என அனைத்தும் உடைந்து நொறுங்கிக் கிடந்தது. இந்த நேரத்தில் பொறியாளர் கென்னடி வந்து சேர்ந்தார். அடுத்ததாக மணியரசன் அய்யா, தோழர்கள் பாரி, விடுதலைவேந்தன், சாமி.கரிகாலன், அயனாவரம் முருகேசன், வழக்கறிஞர் நல்லதுரை மற்றும் மதிமுக, இ.கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழ்தேசப் பொதுவுடமைக் கட்சி, தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் வந்து சேர்ந்தார்கள்.
எதையும் பொருட்படுத்தாது பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினரைப் போல 50க்கும் மேற்பட்ட பணியாட்கள், பூங்காவைச் சுற்றி நடுகற்கள் நட்டு, கம்பிவேலியால் தடுப்புச்சுவர் எழுப்பினார்கள். பூங்காவில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்புப் பலகையையும் நட்டுவைத்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்பார்வைப் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் ‘எதற்கும் தயாராக’ நின்று கொண்டிருந்தார்கள். உணர்வாளர்களின் கூட்டம் கூடிக்கொண்டேயிருந்தது. அப்போது முற்றத்திற்குப் போகும் வழியையும் சேர்த்து மூடிவிட முடிவு செய்தபோது மணியரசன் அய்யா உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. அழுது புலம்பியவர்களையும், ஆத்திரப்பட்டவர்களையும் சமாதானப்படுத்தி விட்டு, "முக்கியத் தலைவர்களுக்கு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. நண்பகலுக்கு மேல் கூட்டம்கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்" என்று சமாதானப் படுத்திவிட்டு, அய்யா தன் அறைக்கு வந்து காலை உணவு உண்டு கொண்டிருக்கும்போது புடைசூழ வந்த காவல்துறையினர் அய்யாவைக் கைது செய்வதாகக் கூறினார்கள். எந்த மறுப்பும் சொல்லாமல் ‘இதோ வந்து விடுகிறேன்’ என்று இரண்டு ஜோடி வேட்டிச் சட்டை, 3 வேளைக்குமான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானார்.
கடந்த 16 ஆண்டுகாலமாக அய்யா பழ.நெடுமாறனுடன் இணைந்து பயணித்து வரும் நான், ஒருநாள் மட்டுமே அவருடன் புழல் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் அவருடன் ஒன்றாக இருக்க வேண்டுமென்பது என் நீண்ட நாளைய விருப்பமாகும். இதை மனதில் கொண்டு அய்யாவிடம் ‘நானும் கைதாகிறேன்’ என்றதற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எறும்பின் உயிருக்குக்கூட ஊறு நினைக்காத அய்யாவை, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். திடீரென முளைத்த தடுப்பு வேலியை ஒரு சில தோழர்கள் ஆத்திரத்தில் தள்ளியதால் இதையே சாக்காக வைத்து கூடியிருந்த கூட்டத்தினர் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அகப்பட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் முற்றம் எங்கும் நூற்றுக்கணக்கான செருப்புகள் சிதறிக் கிடந்தன. அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது.
முற்றத்தின் சுற்றுச்சுவரையும், பூங்காவையும் இடித்தது அரசின் தமிழின விரோதப் போக்கு என்றும், அரசின் சொத்தை மீட்பத்தில் தவறில்லை என்றும் இருவேறு கருத்து நிலவுகிறது. அரசின் சொத்தை மீட்பத்தில் தவறில்லைதான். ஆனால் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கு தமிழக அரசிடமிருந்து முறையாக பெறப்பட்ட இடத்தை அரசே எடுத்துக் கொள்வதாக முன்னறிவிப்பு செய்திருந்தால் பல லட்சரூபாய் மதிப்புள்ள பொருட்களை நாமே அகற்றியிருப்போம். அதைச் செய்யாமல் திருட்டுத்தனமாக வந்து இருட்டில் இடிக்க வேண்டிய அவசியமென்ன? டில்லி காங்கிரஸ் அரசின் மிரட்டலுக்கு அஞ்சி ஜெயலலிதா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சொல்வதும் நம்பும்படியில்லை. மாநிலத்தின் உரிமைக்காக டெல்லியுடன் மல்லுக்கட்டுவதாக கூறிக்கொள்ளும் முதல்வர் இதற்கு மட்டும் டில்லிக்கு பயந்துவிட்டார் என்ற கூற்று தவறானதாகும்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக அவர் செயல்படுவதுபோல காட்டிக்கொள்வது. ஒப்புக்காகவும், ஓட்டிற்காகவும் தான். மற்றபடி அவர் அடி ஆழ்மனதில் இருக்கும் தமிழின விரோதப் போக்கின் வெளிப்பாடுதான் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிப்பும், நெடுமாறன் அய்யா உள்ளிட்ட 83 தோழர்களின் கைதும். ஆனால் இடித்தது முற்றத்தின் சுவரை அல்ல, தங்களின் அதிகாரக் கோட்டையை என்று வரும் மே மாதத்தில், இதற்குக் காரணமாவார்கள் புரிந்து கொள்ளத்தான் போகிறார்கள்.
- நன்றி கீற்று (keetru.com) |