மகாத்மா காந்தி நினைவு நாளில் ஈழத் தமிழர்களுக்காக அமைதிப் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 28 ஜனவரி 2009 13:05
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைவதற்கான முதல் படியாக இன்று தமிழகத்தின் முக்கியத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், துணைச் செயலாளர் மகேந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மரு. இராமதாசு, தலைவர் கோ. க. மணி, ம. தி. மு. க., பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன :
1. இலங்கையில் இனப் படுகொலைக்கு உள்ளாகியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக பழ. நெடுமாறன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், தமிழ் மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் வகையிலும், இந்திய நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினமான சனவரி 30, வெள்ளிக்கிழமை அன்று, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே, கருப்புக் கொடி ஏந்தி அமைதிப் போராட்டம் நடைபெறும்.
3. சனவரி 31, சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், திரைத் துறையினர், தொழிலாளர், விவசாயிகள், மகளிர், மாணவர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், வணிகர் சங்கங்கள், மற்றும் அனைத்துத் தரப்பினரையும் அழைத்து விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கான முடிவு அறிவிக்கப்படும்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.