பொது வேலைநிறுத்தம் சட்ட விரோதமானதல்ல PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009 15:20
இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்திருப்பது சட்ட விரோதமானது என தமிழக அரசு தவறான பிரச்சாரம் செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உச்சநீதிமன்றம் பந்த் செய்வதற்கு எதிராகக் கூறியுள்ள கருத்தினைத் திரித்துக் கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் சுயவேலை மறுப்புப் போராட்டங்களும் கடையடைப்புப் போராட்டங்களும் நடத்திருக்கின்றன என்பதனை தமிழக அரசின் கவனத்திற்குச் சுட்டி காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்படத் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று தங்களுக்குத் தாங்களே சுயவேலை மறுப்புச் செய்து தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு மிக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.
பொது வேலை நிறுத்தத்தை முறியடிக்க தமிழக அரசு தவறான பிரச்சாரத்திலும், மிரட்டல் நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருப்பது அப்பட்டமான ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயலாகும்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துத் தமிழர்களும் பொதுவேலை நிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
போராட்டங்களின்போது எந்த இடத்திலும் சிறுஅளவு வன்முறை ஏற்படாமலும், பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் இல்லாமலும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
பொது வேலைநிறுத்தம், கறுப்புக்கொடி ஊர்வலம் ஆகியவற்றை நடத்துவது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், மற்றும் அமைப்புகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் அவசரமாகக்கூடித் திட்டங்கள் வகுத்துச் செயல்படுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.