நீதிபதி சிறீகிருஷ்ணா அறிக்கைக்குக் கண்டனம். மக்கள் விசாரணைக் குழு அமைக்கப்படும். பழ. நெடுமாறன் அறிவிப்பு |
|
|
|
சனிக்கிழமை, 07 மார்ச் 2009 15:33 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் பிப், 19-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வு குறித்து விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி சிறீகிருஷ்ணா ஆணையம் அளித்துள்ள அறிக்கை, ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்த கதையாக அளிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை வழக்கறிஞர்கள் மட்டுமல்ல தமிழக மக்களும் ஏற்க மாட்டார்கள். இந்த அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது : அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி காவல்துறை தாக்குதல் நடத்தியது. எந்த வன்முறையிலும் ஈடுபடாத வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொருட்களைத் திட்டமிட்டே அவர்கள் தாக்கியுள்ளனர். நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வழக்கறிஞர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களையும் அங்கிருந்தப் பொருட்களையும் தாக்கியுள்ளனர். நீதிமன்றங்களுக்குள் புகுந்து அங்கிருந்தப் பொருட்களையும் மேசை நாற்காலிப் போன்றவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி சிறீகிருஷ்ணா கூறியுள்ளார். 300#க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களைத் தாக்கி படுகாயப்படுத்தியும் பலகோடி ரூபாய் பெறுமான சொத்துக்களை சேதப்படுத்தியும் வெறித் தாண்டவமாடிய காவலர்கள், அவர்களை ஏவிய அதிகாரிகள் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதற்கு பரிந்துரை செய்யாமல் மென்மையான சொற்களால் மட்டுமே அவர்களை கண்டித்துள்ள நீதிபதி வழக்கறிஞர்களை ரவுடிகள் என வர்ணித்துள்ளதே அவருக்கு உள்நோக்கம் உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் ஒரு மாத காலத்திற்கு மேலாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அறவழியில் போராடினார்கள் என்பதையே மறைத்து அவர்கள் மீது வீண் பழிகளைச் சுமத்தி பிரச்னையை திசைத் திருப்ப நீதிபதி சிறீகிருஷ்ணா முயற்சி செய்திருக்கிறார். தடியடிக்கு ஆணைப் பிறப்பித்த அதிகாரிகள் யார் என்பதற்கு போதுமான சான்றில்லை என்று கூறுகிறார். நீதிமன்ற வளாகத்திலேயே ஆணையாளர் இராதாகிருஷ்ணன் இறுதி வரை இருந்திருக்கிறார். அவருக்குத் தெரியாமல் யாரும் ஆணையிட முடியாது என்பது தெளிவானதாகும். ஆனால் ஆணையாளரையும் அவருடன் இருந்த அதிகாரிகளையும் பாதுகாப்பதற்கு நீதிபதி சிறீகிருஷ்ணா முயன்றிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீதிபதி கிருஷ்ணாவின் விசாரணையின் மூலம் உண்மை வெளியாகும் என நம்பி ஏமாந்தோம். எனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட இருக்கிற மக்கள் விசாரணைக் குழு விரைவில் தனது விசாரணையைத் தொடங்கும். அதற்கு ஒத்துழைப்புத் தந்து காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்த துணை நிற்குமாறு வழக்கறிஞர்களையும் மற்றவர்களையும் வேண்டிக் கொள்கிறேன். |