இலங்கைக்கு இந்திய இராணுவ மருத்துவக் குழு. தேர்தலுக்கான நாடகம் - பழ. நெடுமாறன் அறிக்கை |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2009 15:34 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து 52 பேர்களைக் கொண்ட இந்திய இராணுவ மருத்துவக் குழு செல்ல இருக்கிறது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடக்கு மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் புல்மோடை என்ற இடத்தில் மருத்துவமனை அமைத்து அங்கிருந்து மருத்துவ உதவி செய்யப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு இலங்கை இராணுவம் பாதுகாப்பு வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் முள்ளியவளை, வள்ளிப்புனம், விசுவமடு, உடையார்கட்டு, மல்லாவி, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலிருந்த மருத்துவமனைகளை சிங்கள இராணுவம் தாக்கி அழித்துள்ளது. ஏராளமான நோயாளிகளும், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இருந்த மருத்துவமனைகளை அழித்த நிலையில் சிங்கள இராணுவத்தின் பாதுகாப்புடன் இயங்கும் இந்திய மருத்துவமனைக்கு தமிழர்கள் யாரும் வரமாட்டார்கள். அவ்வாறு வருவது அவர்களின் உயிர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும். நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தமிழக மக்களை ஏமாற்றுவதற்கு இத்தகைய அறிவிப்புகளை இந்திய அரசு வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவி இந்தியா விரும்பினால், செஞ்சிலுவைச் சங்கம் அங்கு செயல்படுவதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றப்பட்டதையோ, மருத்துவமனைகள் அழிக்கப்பட்டதையோ இதுவரை கண்டிக்காத இந்திய அரசு இப்போது மருத்துவ உதவி செய்யப்போவதாக நாடகமாடுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். |