வழக்கறிஞர்கள் போராட்டம் நீடிப்பதற்கு முதலமைச்சரே காரணம் - பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு |
|
|
|
சனிக்கிழமை, 14 மார்ச் 2009 15:36 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை வழக்கறிஞர்களின் போராட்டம் நீடிப்பதற்கு முதலமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடே காரணமாகும் என நான் குற்றம் சாட்டுகிறேன். தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல் உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உட்பட
நூற்றுக்கணக்கானவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியும் பல கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தும் காட்டு மிராண்டித் தனமாக நடந்துக் கொண்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் பிடிவாதமாக மறுத்து வருவதின் விளைவாகத்தான் போராட்டத்தை நீடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எந்த விசாரணையாக இருந்தாலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகளைக் குறைந்த பட்சம் இடம் மாறுதல் செய்யாமல் விசாரணை நேர்மையாக நடக்காது. ஆனால் முதலமைச்சர் காவல் துறை உயரதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிறார். அனுமதியின்றி உயர் நீதிமன்ற வளாகத்தில் நுழைந்து தடியடி நடத்த ஆணை பிறப்பித்தது யார் என உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு இது வரை முதலமைச்சரோ தமிழக அரசோ எத்தகைய பதிலும் அளிக்காமல் உண்மைகளை மூடி மறைக்க முயற்சி நடைபெறுகிறது. உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கே பதிலளிக்க முன் வராத முதலமைச்சர் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை மதிக்க மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டியிருப்பது பிரச்னையை திசைத் திருப்பும் முயற்சியாகும். அரசியல் கட்சி வேறுபாடில்லாமல் ஈழத் தமிழர்களுக்காகவும் நீதிமன்றத்தின் பெருமையை நிலை நிறுத்துவதற்காகவும் தொடர்ந்து ஒற்றுமையுடன் போராடி வரும் வழக்கறிஞர்களிடையே கட்சி அரசியலைப் புகுத்தி தி.மு.க வழக்கறிஞர்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் முதலமைச்சரின் நோக்கம் ஒருபோதும் வெற்றி பெறாது. வழக்கறிஞர்கள் மீது பொய்யானக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலமோ, அவர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதன் மூலமோ போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் சாணக்கிய சூழ்ச்சியை மக்கள் ஆதரவுடன் வழக்கறிஞர்கள் முறியடிப்பார்கள் என எச்சரிக்கிறேன். |