சிங்களப்படையின் கொலைவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009 15:40 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வளையப்பகுதிகளாக இலங்கை அரசு அறிவிக்கப்பட்டுள்ள அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட
மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். இப்பகுதிகளைச் சுற்றி வளைத்து இராணுவம் தீவிரத்தாக்குதல் நடத்தி நச்சுப்புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி வருகிறது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் துடிதுடித்துச் செத்து வருகின்றனர். பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் மக்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாதென ஐ.நா. பேரவையும் உலக நாடுகளும் வற்புறுத்தி வருவதை சிங்கள இராணுவம் கொஞ்சமும் மதிக்கவில்லை. இந்திய மக்களும், தமிழக மக்களும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அங்கு தமிழர்களை முழுமையாக அழிக்க சிங்கள இராணுவம் நினைப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. ஏப்ரல் 8 ம் தேதியன்று காலை 10 மணிக்கு சென்னை சிங்கார வேலர் மாளிகைக்கு முன்பாகவும், மாவட்டத் தலைநகரங்களிலும் இலங்கை அரசின் கொலை வெறியைக் கண்டிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அத்துணை கட்சித்தலைவர்களும், தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழீழ ஆதரவு அமைப்புகளும், உணர்வாளர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். |