புலிகள் மீதான தடையை நீக்குக! - கருணாநிதிக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009 15:43
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
“விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல. அவர் என்னுடைய நண்பர். புலிகள் இயக்கத்தின் இலட்சியங்கள் உன்னதமானவை. தமிழீழம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் போராடி வருகின்றனர்” என முதலமைச்சர் கருணாநிதி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்தும் அதனுடைய தலைவர் பிரபாகரன் குறித்தும் முன்னர் அவர் வெளியிட்ட கருத்துக்களை இதன் மூலம் அவர் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிய உலகத் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் கொண்டு வந்த நிறைவேற்றிய தீர்மானத்தை இரத்து செய்யும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றினை முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இப்போதைய சூழலில் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க உட்பட அனைத்துக் கட்சிகளுமே இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முன் வருவார்கள். எனவே இதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி முதலமைச்சர் கருணாநிதியை வேண்டிக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.