அறிக்கை: ஈழத் தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021 15:09 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும்.
Â
இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், அந்நாட்டு அரசுதான் முடிவெடுக்கவேண்டும்” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கையின் அதிபரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசிய பிறகு கொழும்புவில் இவ்வாறு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.
இலங்கையில் வாழும் தமிழரை இன ரீதியாகத் திட்டமிட்டுப் பலவகையிலும் ஒடுக்கியும், அவர்களின் உரிமைகளை அடியோடு பறித்தும், அநீதியை இழைத்தும் வரும் இலங்கை அரசு, ஈழத் தமிழர்களுக்கு எல்லாவற்றையும் வழங்கும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவித்திருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளியே நீதி வழங்குவார் என அமைச்சர் கூறியிருப்பது கேலிக் கூத்தாகும்.
1987ஆம் ஆண்டில் இந்திய அரசும், இலங்கை அரசும் செய்துகொண்ட உடன்பாட்டின் எந்தப் பிரிவையும் இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை, 13ஆவது சட்டத் திருத்தத்தை மதிக்கவும் இல்லை. இந்திய-இலங்கை அரசுகள் செய்துகொண்ட உடன்பாட்டை நிறைவேற்ற வேண்டும் என வற்புறுத்தவேண்டிய இந்திய அரசு, ஈழத் தமிழர்களை அடியோடு கைகழுவி விட்டது என்பதையே வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிவிப்பு எடுத்துக்காட்டுகிறது. |